2011ஆம் ஆண்டு தேசிய விளையாட்டுப் போட்டியில் கலந்துகொண்ட தீபா, அய்ந்து தங்கப் பதக்கங்கள் வென்று சாதனை படைத்தார். இந்த வெற்றிதான் தீபாவின் மீது கவனத்தைக் கொண்டுவந்தது. 2014ஆம் ஆண்டு ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் நடைபெற்ற காமன்வெல்த் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றார்.
“காமன்வெல்த் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றதும் என்னுடைய ஊர் மக்கள் என்னை பெரிய செலிபிரிட்டி ஆக்கிவிட்டனர். நான் வெளியே போகும்போது எல்லாம், என்னை போட்டோ எடுப்பார்கள்; என்னிடம் ஆட்டோகிராஃப் வாங்குவார்கள். திரிபுரா மக்கள், எனக்கு அதிகமான அன்பைக் கொடுத்துள்ளனர். அவர்களுக்கு அதே அன்பைத் திருப்பிக் கொடுக்க வேண்டும் என விரும்புகிறேன். அது ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவின் சார்பில் தங்கப் பதக்கம் வாங்குவதாகத்தான் இருக்கும்’’ என்கிறார் தீபா.
இந்தியர்களும் ஜிம்னாஸ்டிக்ஸ் சாதனை புரிய முடியும் என்பதை உறுதி செய்திருக்கிறார் தீபா கர்மாக்கர் என்ற 22 வயது இளம்பெண். இந்த ஆண்டு பிரேசிலில் நடக்கவிருக்கும் ஒலிம்பிக்கில் ஜிம்னாஸ்டிக் விளையாட்டுப் போட்டியில் கலந்து-கொள்ளத் தகுதி பெற்றிருக்கும் முதல் இந்தியப் பெண்.
ஜிம்னாஸ்டிக்கில், புரோடுனோவா பிரிவு மிகவும் சவாலானது. அந்தரத்தில் இரண்டு முறை பல்டி அடித்து, தரையில் நிலையாக கால் ஊன்றி நிற்க வேண்டும். உலகிலேயே இதுவரை அய்ந்து பேர் மட்டுமே இதைச் சரியாகச் செய்திருக்கின்றனர். அதில் ஒருவர் தீபா, ‘தவறான ஒரு மூவ்மென்ட் உயிரையே பறித்துவிடும். ஆனாலும், நான் அந்தச் சவாலை ஏற்றுக்கொண்டு பயிற்சி எடுத்தேன். இன்று ஒலிம்பிக் போட்டிக்குத் தகுதி பெற்றிருக்கிறேன்’ என்கிறார் தீபா. ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்வதுதான் அவரது குறிக்கோள்.
மிகவும் பின்தங்கிய வடகிழக்கு மாநிலமான திரிபுரா, அகர்தலாவைச் சேர்ந்தவர் தீபா. இவரின் அப்பா துலால், பளு தூக்குதல் பயிற்சியாளர். அகர்தலா பெண்களிடையே, ஜிம்னாஸ்டிக் விளையாட்டு மிகவும் பிரபலம். எனவே, தன் மகளை ஜிம்னாஸ்டிக்ஸில் சேர்த்தார்.
“நான் முதல்முறை சென்ற பயிற்சி மய்யத்தில், ஜிம்னாஸ்டிக் பயிற்சிக்கான எந்த ஓர் உபகரணமும் இல்லை. ஜிம்னாஸ்டிக் டேபிள்கூட அங்கு கிடையாது. ஒரு பாயின் மீது மற்றொரு பாயை வைத்து ஜிம்னாஸ்டிக் டேபிள் செய்து பயிற்சிபெறுவோம். மழைக்காலங்களில், பயிற்சி மய்யம் வெள்ளத்தில் மிதக்கும். சுற்றிலும் எலிகளும், கரப்பான் பூச்சிகளும் சுற்றும். அந்த நிலையிலும் நாங்கள் பயிற்சியை விட்டுவிடவில்லை.
என் பயிற்சியாளர் நந்தியும், என் அப்பாவும் என்மீது மிகப் பெரிய நம்பிக்கை வைத்திருந்தார்கள். நான் செய்யும் சிறிய விஷயங்களைக்கூட பெரிதாகப் பாராட்டுவார்கள். என் மீதே எனக்குப் பெரிய நம்பிக்கையை வரவைத்தார்கள். அதுதான் என்னை இன்று சர்வதேச விளையாட்டு வீராங்கனையாக மாற்றியிருக்கிறது’’ என்கிறார் தீபா கர்மாக்கர்.
இந்தப் போட்டியில் ஜிம்னாஸ்டிக் பிரிவில் இந்தியா வென்ற ஒரே பதக்கம் தீபாவுடையது. ஜப்பானில் 2015ஆம் ஆண்டு நடைபெற்ற ஆசிய ஜிம்னாஸ்டிக் வாகையர் பட்டப் போட்டியில் மீண்டும் வெண்கலப் பதக்கம். கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடந்த உலக ஜிம்னாஸ்டிக் போட்டியில் இவருக்கு 5ஆவது இடம்தான் கிடைத்தது. பிரேசில் ஒலிம்பிக்குக்குத் தகுதிபெற, உலக வாகையர் பட்டப் போட்டியில் ஏதாவது ஒரு பதக்கம் வென்றாக வேண்டும். தீபா 5ஆவது இடம் பிடித்ததால், ஒலிம்பிக்குக்கு நேரடியாகத் தகுதிபெறும் வாய்ப்பை இழந்தார். ‘வைல்டு கார்டு’ முறையில் வாய்ப்பு கிடைத்தால் மட்டுமே ரியோ ஒலிம்பிக்கில் பங்கேற்க முடியும் என்கிற சூழல். இந்த நிலையில்தான் கடந்த ஏப்ரல் 17ஆம் தேதி ரியோ டி ஜெனிரோவில் நடைபெற்ற இறுதி தகுதிப் போட்டியில் வெற்றிபெற்று ஒலிம்பிக் போட்டிக்குத் தகுதி பெற்றிருக்கிறார் தீபா.
“
2014ஆம் ஆண்டு காமன்வெல்த் போட்டிக்கு நான்கு மாதங்களுக்கு முன்னர்தான் பயிற்சியாளர் நந்தி என்னிடம் புரோடுனோவா பிரிவு பற்றி சொன்னார். நான் எங்களுடைய பயிற்சி மய்யத்தில் ஆண்கள் இந்த ஜிம்னாஸ்டிக் பிரிவில் பயிற்சி பெறுவதைப் பார்த்திருக்கிறேன். இது மிகவும் கஷ்டம். அந்தரத்தில் இரண்டு பல்டிகள் அடித்து கீழே இறங்கும்போது உடலின் எடை இரு மடங்காக இருக்கும். உதாரணத்துக்கு உடல் எடை 45 கிலோ என்றால், பல்டி அடித்து இறங்கும்போது 90 கிலோ எடை கால்களுக்கு வரும். அப்போது பேலன்ஸ் செய்து நிற்பது மிகவும் சிரமம். கொஞ்சம் தவறினாலும் கழுத்துதான் முதலில் பாதிக்கும். இது உயிருக்கே ஆபத்தில் முடியும். ஆனால், பயிற்சியாளர் சொன்னபோது, எனக்கும் ‘ஏன் முயற்சி செய்யக் கூடாது? எனத் தோன்றியது. ஓ.கே. சொல்லிவிட்டேன். ஆனால், பயிற்சியாளர் நந்தி, எனக்கு இதில் பயிற்சியே கொடுக்கவில்லை. தயங்கியபடியே இருந்தார். நாங்கள் காமென்வெல்த் போட்டிக்கு இங்கிலாந்து செல்வதற்கு 15 நாட்களுக்கு முன்னர்தான் நந்தி புரோடுனோவாவில் பயிற்சி கொடுத்தார்’’ என்கிறார் தீபா கர்மாக்கர்.
“முறையான பயிற்சிகளுக்குப் பிறகு காமென்வெல்த் போட்டிகளுக்குப் போனோம். இறுதிப் போட்டியில் கலந்துகொள்வதற்கு முன்னர் புரோடுனோவா ஜிம்னாஸ்டிக்கை என்னுடைய மற்ற வீரர்கள் முன்னர் தீபாவைச் செய்து காட்டச் சொன்னேன்-. அப்போது தரையில் தீபாவால் சரியாக நிற்க முடியவில்லை. கணுக்காலில் சுளுக்கும் ஏற்பட்டது. வலிநிவாரணி மருந்துகள் எடுத்துக்கொண்டு களத்தில் இறங்கினார் தீபா. அப்போது என்னிடம் ‘கவலைப்படாதீங்க. நான் நிச்சயம் ஜெயிப்பேன்’ எனச் சொன்னார். முதல் ஓட்டத்திலேயே அங்கு இருந்தவர்கள் எல்லோரையும் வியக்க வைத்தவர், இரண்டாவது ஓட்டத்தில் புரோடுனோவாவை பெர்ஃபெக்ட்டாகச் செய்துமுடித்தார். இந்தியப் பெண் ஒருவர் இந்தப் பிரிவில் சாதனை படைத்திருக்கிறார் என்பதை, அங்கு இருந்தவர்களால் மட்டும் அல்ல, என்னாலும் நம்ப முடியவில்லை. தீபாவின் தன்னம்பிக்கை-தான் அவரை ஒவ்வொரு கட்டத்திலும் உயர்த்தியிருக்கிறது’’ என்கிறார் பயிற்சியாளர் நந்தி.
இப்போது புரோடுனோவா பிரிவில், உலகிலேயே அதிகமான ஸ்கோர் வைத்திருப்பவர் தீபா.
300 ஆண்டு புதிரை விடுவித்த பேராசிரியர்
300 ஆண்டுகளுக்கு முந்தைய கணிதப் புதிர் ஒன்றிற்கு விடை கண்டுபிடித்த இங்கிலாந்து பேராசிரியருக்கு, நார்வே நாட்டு அறிவியல் அகாடமி ரூ.4.5 கோடி பரிசு வழங்க உள்ளது. சுமார் 300 ஆண்டுகளுக்கு முன்னர் கணிதப் புதிர் ஒன்று உருவாக்கப்பட்டது. ஆனால், அதற்கு யாராலும் விடை காண இயலவில்லை. தொடர்ந்து மூன்று நூற்றாண்டுகளாக அந்தக் கணிதப் புதிருக்கு விடை தேடப்பட்டு வந்தது. இந்தப் கணிதக் புதிருக்கு விடை கண்டுபிடித்தால் பெரிய அளவில் பரிசு வழங்கப்படும் என்று 1994ஆம் ஆண்டு நார்வே நாட்டு அறிவியல் அகாடமி அறிவித்திருந்தது.
இந்நிலையில், இங்கிலாந்து ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் ஆண்ட்ரூ வில்ஸ், தற்போது இந்தப் புதிருக்கு விடையைக் கண்டுபிடித்துள்ளார். இதனால், அறிவித்தபடி, இந்தப் பேராசிரியருக்கு நார்வே நாட்டு அறிவியல் அகாடமி ரூ.4.5 கோடி பரிசு வழங்க முடிவு செய்துள்ளது.