நமது நாட்டில், நாட்டின் உரிமையாளரான, பெருங்குடி மக்களாகிய நாம் இப்போது, அதாவது காங்கிரசில் பார்ப்பனர் ஆதிக்கமும், அவர்களுக்கு இருந்து வந்த நிபந்தனை அற்ற கூலி _- இழி மக்களான சில பார்ப்பனரல்லாத, பதவிக்கு எச்சில் பொறுக்கிகள் _- ஆதரவாளர்களின் ஆதிக்கமும், ஒரு அளவுக்கு ஒழிக்கப்பட்ட பின்பே சிறிது மான உணர்ச்சி பெற்று, ஒரு பார்ப்பனரல்லாத தமிழர் ஆதிக்கத்திற்கு காங்கிரஸ் வந்ததன் பயனாய் நாம் கல்வித் துறையில் வளர்ச்சி பெற்று வருகிறோம் என்பதை யாராலும் மறுக்க முடியாது. வளர்ச்சி எப்படி என்றால், கல்வித் துறையில் பார்ப்பான் ஆதிக்க காங்கிரஸ் காலத்தில் தமிழ்நாட்டில் ஒட்டு மொத்தம் நாம், மூன்றே கால் கோடி மக்களில் (16 இலட்சம்) பதினாரு இலட்சம் மக்களே படித்துக் கொண்டிருந்த நம் மக்கள்
இன்று (64 இலட்சம்) அறுபத்து நான்கு இலட்சம் மக்கள் படிக்கும்படியாகவும், மற்றொரு கணக்குப்படி, ஜனத்தொகையில் 100க்கு 10 விகிதமே (நூற்றுக்கு பத்து விகிதமே) படித்திருந்த மக்கள் இன்று 100க்கு 40 விகித (நூற்றுக்கு நாற்பது விகித)த்திற்கு மேல் படித்திருக்கிறவர்களாக ஆக்கப்பட்டு இருக்கிறது என்பதுடன் இனி அய்ந்து வருட காலத்திற்குள் 100க்கு 100 மக்களையும் எழுத, படிக்க கற்பித்த பிறகே உறங்குவேன் என்று நம் இரட்சகர் காமராஜர் திட்டம் வகுத்த பின், நம் நாட்டுக்கு குஷ்டரோகம் போல் புகுந்து – இருக்கிற பார்ப்பனர்கள் பலர் வயிறெரிந்து அய்யோ! அய்யோ! அய்யோ! அய்யய்யோ!! கல்வித்தரம் குறைந்து போய்விட்டதே என்று கட்டுப்பாடாக மக்கள் காதடையும்படி ஊளையிடுகிறார்கள்.
தமிழன் படித்தால் தரம் குறையுமோ?
இப்படி இந்தப் பார்ப்பனர் ஊளை இடுவதை தமிழர் சமுதாயம் இனியும் பொறுத்துக் கொண்டிருப்பது தமிழர்களுக்கு மாபெரும் மானக்கேடேயாகும். ஏனென்றால் இப்போது தமிழர் பிள்ளைகள் படித்திருக்கும் படிப்பெல்லாம் தரம் குறைந்த படிப்பு என்று தானே பொருளாகிறது?
நம் நாட்டில் அண்ணாமலை யுனிவர்சிட்டி ஏற்படும் முன்பு பச்சையப்பன் கல்லூரியில் படித்து பட்டம் பெற்ற மக்களை “இவன் பச்சையப்பன் காலேஜ் பி.ஏ.’’ என்று ஏளனம் செய்வார்கள். பிறகு அண்ணாமலை சர்வகலா சாலை ஏற்பட்ட பிறகு பச்சையப்பன் கல்லூரியை விட்டுவிட்டு “இவன் அண்ணாமலை யுனிவர்சிட்டி பி.ஏ.’’ என்று சமீப காலம் வரை ஏளனம் செய்து வந்தார்கள்.
ஏனென்றால், முன்பெல்லாம் அரசாங்க காலேஜும், கிருஸ்துவர் காலேஜும்தான் நாட்டில் இருந்து வந்தது; அவற்றில் பார்ப்பனருக்கும் கிருஸ்துவர்களுக்கும்தான் 100க்கு 90 பேர்களுக்கு இடம் கிடைக்கும். நம் பிள்ளைகளுக்கு கல்தாதான் கிடைக்கும்.
அப்போதெல்லாம் பச்சையப்பன் காலேஜ் இருந்ததால் நம் பிள்ளைகளுக்கு 100க்கு 50 இடமாவது கிடைத்து வந்தது. பிறகு அண்ணாமலை சர்வகலாசாலையில் நம் பிள்ளைகளுக்கு சிறிது தாராளமாய் இடம் கிடைத்து வந்தது. ஆகவே நம் பிள்ளைகள் அதிகமாகச் சேர்ந்து படிக்க முடிந்ததாலேயே பார்ப்பனரின் ஆத்திரமானது இந்தப்படி இழிவாய்ச் சொல்லி படித்த மரியாதையைக் குறைத்து வந்தார்கள்; இப்போது அந்தக் கூச்சல் குறைந்துவிட்டது.
கல்வி பற்றி தரம் பேசுவது மோசடியே
ஆகவே கல்வியைத் தரமுடையதாக்குவதும், தரமற்றதாக்குவதும் பார்ப்பனருடைய நோட்டத்தில் பட்டுவிட்டது. பார்ப்பனர்களின் இந்தக் கட்டுப்பாடான அயோக்கியத்தனத்தை நமது இரட்சகர் காமராஜர்தான், “இப்படிக் கூறுவது தங்களுக்குத்தான் கல்வி உரிமையானது; மற்றவர்கள் படிப்பது நம் வாழ்வுக்கு ஆபத்தானது என்று கருதும் அயோக்கியர்கள் கருதிச் செய்யும் மோசடி வேலை’’ என்று சொன்னார். அதற்குப் பிறகும் நமது அரசாங்கம், நமது கல்வி, “தரம் குறைந்த கல்வி’’ ஆகிவிட்டது என்று கருதினால் அது நமது பொல்லாத வாய்ப்புத்தான்.
நிற்க. இன்று யார்தானாகட்டும் கல்வித் தரம் குறைந்துவிட்டது என்று சொல்ல என்ன காரணம்? என்ன ஆதாரம் காட்டுகிறார்கள்? அல்லது எதைக்கொண்டு தரக்குறைவு பேசுகிறார்கள்?
தரக்குறைவு எப்படி ஏற்படும்?
பள்ளிக்கூடங்கள், காலேஜுகள் நீண்ட நாள்களாக இருந்து வந்தது போலவேதான் பார்ப்பனர்கள், கிறிஸ்துவர்கள் நிர்வாகத்தில் இன்றும் இருந்து வருகின்றன. ஆசிரியர்கள், ஹெட்மாஸ்டர்கள் (Headmasters),, புரஃபசர்கள் (Professor), செனட்டர்கள் (Senators), சிண்டிகேட்டர்கள் (Syndicaters), வைஸ் சான்ஸ்லர்கள் (Chancellores), பரீட்சை செய்பவர்கள் (Examiners), டெக்ஸ்ட்புக் எழுதுபவர்கள் (Text book writters) பலர் 100க்கு 50க்கு மேற்பட்டவர்கள் தகுதி திறமை பெற்ற, பழைய காலப் படிப்பு பட்டம் பெற்ற பார்ப்பனர்களாகவே இருந்து வருகிறார்கள்.
மற்றும் கல்வி தரமாய் இருந்த காலத்தில் கல்வி அளிப்பதற்கு அரசாங்கம் செய்து வந்த ஏற்பாடுகளில் எதில் மாறுதல் ஏற்பட்டு விட்டது?
ஆசிரியர் தகுதியைக் குறைத்துவிட்டார்களா? பாடத் திட்டத்தை மாற்றி விட்டார்களா? பரீட்சையாளர்களை மாற்றிவிட்டார்களா? பரீட்சைக் கேள்விகளின் தன்மையை மாற்றி விட்டார்களா? அல்லது பரீட்சையில் தேறவேண்டிய அளவு மார்க் எண்ணிக்கையைக் குறைத்து விட்டார்களா?
பரீட்சை பேப்பர்களைத் திருத்தும் நபர்களின் யோக்கியதையையோ அவர்களது நாணயத்தையோ குறைத்து விட்டார்களா?
கல்வி அதிகாரிகளின் யோக்கியதாம்சத்தைக் குறைத்து விட்டார்களா?
கல்லூரிகளின் கவனிப்பு குறைக்கப்பட்டு விட்டதா?
யுனிவர்சிட்டிகளின் (Universites) யோக்கியம் நாணயம் குறைந்துவிட்டதா? சிண்டிகேட் யோக்கியதை கெட்டு விட்டதா? மற்றும் எந்த விதத்தில் எந்த காரியத்தால் என்னமாறுதலால் கல்வியின் தரம் குறைந்து விட்டது என்று கூறுபவன் யோக்கியனாகவோ, நாணயஸ்தனாகவோ, மானமுள்ளவனாகவோ இருந்தால் எடுத்துக்காட்ட வேண்டாமா?
சர்டிஃபிகேட் பெற யோக்கியதை என்ன?
அரசாங்கத்தின் ஏற்பாட்டுப்படி படிப்பின் யோக்கியதை பரீட்சையில் பாஸ் செய்து சர்டிபிஃகேட் (Certificate) பெறுவதுதானா? அல்லது பாஸ் செய்தாலும் இத்தனை மார்க் வாங்க வேண்டுமென்பதா?
ஆகவே படிப்பு திறமையானதாக இருந்த காலத்தில் படிப்புக்காக செய்திருந்த ஏற்பாடுகளில், நிபந்தனைகளில் நிர்வாகங்களில் எது எதில் குறைக்கப்பட்டு விட்டது? என்று கேட்கிறேன்.
அல்லது படிப்பை ஆதாரமாக, அளவாகக் கொண்டு கொடுக்கப்பட்ட உத்யோகங்களில் மார்க் குறைவு காரணமாக எந்த உத்யோகஸ்தனால் என்ன கேடு ஏற்பட்டது? என்று கேட்கிறேன்.
பார்ப்பன உத்யோகஸ்தர்களின் யோக்கியதை தெரியாதா?
சீமைக்குப் போய் அய்.சி.எஸ். பாஸ் செய்து திறமை பெற்று வந்த கெட்டிக்கார அய்.சி.எஸ்.களில் பார்ப்பனர்களில் தலா 3 பேர் நாணயக் குறைவாக நடந்ததாக குற்றம் சாட்டப்பட்டும், தண்டிக்கப்பட்டும் இருக்கிறார்கள். மற்றும் பலர் தண்டிக்கப்படும் பதவியில் இருந்து நீக்கப்பட்டும் இருக்கிறார்கள். இவர்கள் படிப்பில் தரம் குறைந்தவர்கள் அல்ல, பரீட்சையில் குறைந்த அளவு மார்க் வாங்கி பாஸ் செய்தவர்களுமல்ல.
மற்றும் பெரிய படிப்பு, மிக மிக கெட்டிக்காரர் என்று பெயர் கொடுக்கப்பட்டு அய்க்கோர்ட் சீப் ஜட்ஜ் (High court chief judge) பதவி கொடுக்கப்பட்ட தகுதி, திறமை பெற்ற பார்ப்பனர் ஒருவர், தனது பிறந்த தேதியை பொய் தேதி கொடுத்து அரசாங்கத்தை மோசடி செய்த பார்ப்பனர் தகுதி திறமையில் குறைந்தவரா? என்று கேட்கிறேன்.
தகுதி – திறமை தமிழர்க்கு மட்டும்தான் தேவையா?
அண்மையில் சென்னை அய்க்கோர்ட்டில் பப்ளிக் பிராசிக்யூட்டராக ((High Court Public Prosecutor) நியமிக்கப்பட்ட திரு.க்ஷி.றி.ராமன் அவர்கள் அய்க்கோர்ட்டில் தொழில் நடத்தும் வக்கீல்களில், குறிப்பாக கிரிமினல் வக்கீல்களில் எத்தனையாவது வரிசை தகுதி திறமை உடையவர் என்று கேட்கிறேன்?
மற்றும் அய்க்கோர்ட்டில் முன்பு சர்க்கார் வக்கீலாக இருந்த திரு.அழகிரிசாமி அவர்களுக்கு சர்க்கார் வக்கீல் வேலை (கவர்மெண்ட் பிளீடர்) கொடுத்தபோது 100 (நூற்று)க்கணக்கான வக்கீல்கள் தகுதி, திறமை பற்றிக் கூப்பாடு போட்டு ஒரே கூச்சலாக ஊளையிட்ட வக்கீல்கள் இந்த அய்க்கோர்ட் ஜட்ஜைப் பற்றியோ, இந்த பப்ளிக் பிராசிக்யூட்டரைப் பற்றியோ தகுதி, திறமை, நாணயம் பற்றியோ யார் யார் பேசுகிறார்கள்; கேட்டார்கள்? என்று கேட்கிறேன்.
தகுதி திறமை அறிய வரம்பு என்ன?
மற்றும் இந்த தகுதி, திறமை பேசும் யோக்கியர்கள் கல்வியில் தகுதி திறமை பேசுவது; கேட்பது உத்தியோகத்தில் திறமையாய் இருக்கத் தகுந்த தகுதியான கல்வி இருக்க வேண்டியது அவசியம் என்று கேட்கிறார்களா? அல்லது ஒரு மனிதன் இன்ன அளவு கல்வி கற்றால்தான் கல்வி கற்றவன் என்று சொல்லவேண்டுமென்ற பொது நன்மையைக் குறிவைத்துக் கேட்கிறார்களா என்று கேட்கிறேன்.
– தந்தை பெரியார் 88ஆம் ஆண்டு பிறந்த நாள் மலர், 1966, பக்கம் 91 – 95