தந்தை பெரியார்
இப்போதும் நாம் ஒரு புதிய கிளர்ச்சிக்குத் தயார் செய்து கொண்டிருக்கிறோம். அதாவது கோயில்களில் சிலை இருக்கிற கர்ப்பக்கிரகத்திற்குள் பார்ப்பனர்கள் மட்டும் தான் செல்லலாம். நாம் செல்லக்கூடாது என்று தடை வைத்திருக்கிறார்கள். காரணம் நாம் சூத்திரர்கள், கீழ் ஜாதிக்காரர்கள், இழிபிறவிகள் என்பதேயாகும். இந்த கீழ்ஜாதித்தன்மை இப்போது கோயில்களில் மட்டும் அனுசரிக்கப்பட்டு வருவதால், அதைப் போக்க நாம் அதற்குள் செல்வது என்று திட்டம் போட்டிருக்கிறோம். அதற்குள் போகிறதனாலே நமக்கு ஆகவேண்டியது ஒன்றுமில்லை. ஆனால், பார்ப்பான் மட்டும் போகலாம், நாம் போகக்கூடாது என்று நம் இழிவை நிலைநிறுத்தும் வகையில் இருப்பதால், அந்த இழிவைப் போக்கிக் கொள்ள நாம் கிளர்ச்சியில் ஈடுபட வேண்டியிருக்கிறது.
பெரிய கோவில் -_ உலகத்திலேயே பேதமில்லாத கடவுள் இருக்கிற இடம் பூரிஜெகந்நாதம். அங்குள்ள கோவிலில் முடிதிருத்துகிறவர் தான் பூசாரியாக இருக்கிறார். அங்கிருக்கிற சாமியை யார் வேண்டுமானாலும் தொட்டுக் கும்பிடலாம். அதனால், எந்தப் புனிதமும் கெட்டுப் போவதில்லை. அதுபோல தான் காசி. அங்கு நாய் செத்தால்கூட மோட்சத்திற்குப் போகும் என்பார்கள் அங்குள்ள கோயிலில் இருக்கிற சாமியை யார் வேண்டுமானாலும் தண்ணீரைக் கொண்டு போய் அபிஷேகம் செய்து, தொட்டுக் கும்பிடலாம்; பண்டரிபுரம் _ அங்கும் யார் வேண்டுமானாலும் சாமியைக் கட்டிப்பிடித்துக் கும்பிடலாம். அங்கெல்லாம் இல்லாதத் தடை இங்கு மட்டும் எதற்காக இருக்க வேண்டும்?
கர்ப்பக்கிரகத்திற்குள் செல்லக்கூடாது, சிலையைத் தொடக் கூடாது என்கிற இந்த பேதத்தை வைத்துக் கொண்டு நம்மை எல்லாம் கீழ்ஜாதி என்று ஆக்கிவைத்திருக்கிறான். ஒரு சாமி பூசை செய்கிறவன் அறையில் இருந்தால்தான் தொடக்கூடாது என்கின்றான்; அதே சாமி வெளியிலிருக்கும் போது மனிதன் தொடுவது மட்டுமல்ல, நாய்கள் கூட நக்கிவிட்டுச் செல்கின்றன.
முட்டாள்தனமாக வைத்து நம் ஜாதி இழிவை நிலைநிறுத்தி கொண்டிருக்கின்றான் என்பதைத் தவிர, வேறு எதற்குமல்ல. மற்றதை ஒழித்தது போல இதையும் ஒழித்தால் தான் சூத்திரன் _ பார்ப்பான் என்கிற பேதம் ஒழியவும் இந்தக் கிளர்ச்சியைச் சென்னை, திருச்சி, தஞ்சை, மன்னார்குடி ஆகிய நான்கு இடங்களில் ஒன்றில் ஆரம்பிக்கலாம் என்றிருக்கின்றேன். நீங்கள் எல்லாம் நிறையப் பேர் இதற்குப் போக வேண்டும். இதற்கு அரசாங்கம் என்ன செய்கிறது என்று பார்ப்போம்.
கிளர்ச்சி என்பது நமக்குப் புதிது அல்ல; சிறை செல்வதும் புதிதல்ல. சட்டம் கொளுத்தி _ பிள்ளையார் சிலை உடைத்து, இராமன் படம் எரித்துப் பலமுறை சிறை சென்றிருக்கின்றோம். அதுபோல, சமுதாயத் துறையில் நாம் சாதித்திருக்கின்றவை பல உண்டு.
நம் இழிவைப் போக்க நாம் பல கிளர்ச்சி செய்திருந்தாலும் இக்கிளர்ச்சி மிக முக்கியமானதாகும். இதில் நம் மக்கள் ஒவ்வொருவரும் பங்கேற்க வேண்டியது அவசியமாகும்.
– 12.10.1969 அன்று திருச்சியில் தந்தை பெரியார் ஆற்றிய சொற்பொழிவு.
(‘விடுதலை’ 20.10.1969)