மாடு மேய்க்கும் எம்.பி.பி.எஸ் மாணவர்கள்!

ஏப்ரல் 01-15

அரசின் அலட்சியத்தால் 113 மாணவர்களின் வாழ்வு நாசம்!

விழுப்புரம் மாவட்டம், கள்ளக்குறிச்சி அருகே செயல்பட்டு வந்த எஸ்.வி.எஸ் யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லூரியில் படித்த மூன்று மாணவிகளின் மரணம் தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. எந்தவித அடிப்படை வசதியும் இல்லாத அந்தக் கல்லூரியில் படிக்கும் மாணவ – மாணவிகளின் எதிர்காலம் கருதி அவர்களை அரசுக் கல்லூரிக்கு மாற்றம் செய்ய முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

 

ஊடக வெளிச்சம் பட்டதால் இந்த நடவடிக்கை. ஆனால், இன்னும் தீர்க்கப்பட வேண்டிய எத்தனையோ இருட்டில் உள்ளன.

சில வருடங்களுக்கு முன் திருவள்ளூர் டி.டி தனியார் மருத்துவக் கல்லூரியில் இதுபோன்ற பிரச்சினை வந்தது. அந்தக் கல்லூரியின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டது. அங்கு படித்த மாணவ, மாணவிகளின் எதிர்காலம் கேள்விக்குறியானது. ‘எங்களை அரசு மருத்துவக் கல்லூரியில் சேர்த்துக் கொண்டு, தொடர்ந்து படிக்க வாய்ப்பு அளிக்க வேண்டும், அல்லது டி.டி மருத்துவக் கல்லூரியை அரசே ஏற்று நடத்த வேண்டும்’ என்று கோரி தலைமைச் செயலகம், மருத்துவப் பல்கலைக்கழகம், மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் என படையெடுத்து மாணவர்கள் தொடர் போராட்டங்களை நடத்தினர். அவர்களை யாரும் கண்டுகொள்ளவே இல்லை. அந்தக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ் படித்த ராம்குமார் என்ற மாணவர், மாடு மேய்க்கும் நிலைமைக்குத் தள்ளப்பட்டுள்ளார்.

திருச்சி மாவட்டம் அதவத்தூரை அடுத்த மேலப்பேட்டையைச் சேர்ந்த ராம்குமாரின் அவலத்தை அவரே விவரிக்கிறார். “டாக்டர் ஆகவேண்டும் என்பது சிறு வயதில் இருந்தே என்னுடைய ஆசை. 10ஆம் வகுப்பில் 460 மார்க், 12ஆ-ம் வகுப்பில் 1,025 மார்க் எடுத்தேன். கட்-ஆப் மார்க் 170 எடுத்தேன். அரசுக் கல்லூரியில் இடம் கிடைக்கவில்லை. என் அப்பா, எங்களுக்குச் சொந்தமான இடத்தை விற்று, ரூ.20 லட்சம் ‘நன்கொடை’ கொடுத்து டி.டி கல்லூரியில் என்னைச்  சேர்த்துவிட்டார். நண்பர்களிடம் கடன் வாங்கி எட்டு லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் கட்டணம் கட்டினார். என்னுடன் 113 பேர் படித்தனர். இரண்டாம் ஆண்டில் 113 பேர் படித்தனர். 2013-இல் முதல் ஆண்டுத் தேர்வு எழுதினோம். அப்போது, எங்கள் கல்லூரி சேர்மன் கைது செய்யப்பட்டார். அப்போதுதான், அந்தக் கல்லூரிக்கான அனுமதி ரத்தான விஷயமே எங்களுக்குத் தெரிந்தது.

நீதிகேட்டுப் போராடினோம். ஒரு கட்டத்தில், எங்கள் சீனியர் 100 பேரை அரசுக் கல்லூரியில் சேர்த்துக் கொண்டனர். எங்களைச் சேர்க்கவில்லை. காரணம் கேட்டதற்கு, ‘அவர்கள் படித்தபோது கல்லூரிக்கு அனுமதி இருந்தது. நீங்கள் படித்தபோது கல்லூரிக்கு அனுமதி இல்லை. அது தெரியாமல் சேர்ந்தது உங்கள் தவறு. அதனால், உங்களை அரசுக் கல்லூரியில் சேர்க்க முடியாது’ என்று சொல்லிவிட்டார்கள். எங்கள் வாழ்க்கையே கேள்விக்குறியாகிவிட்டது. கட்டிய பணத்தை வாங்கவும் வழியில்லை. இது சம்பந்தமான வழக்குக்கும் முடிவு தெரியவில்லை. ஒரு வருடம் படிப்பு… மறு வருடம் போராட்டம்… இந்த வருடம் மாடு மேய்க்கிறேன். நான் மட்டுமல்ல… என்கூட படித்த 113 பேருடைய வாழ்க்கையும் திசை மாறிப் போய்விட்டது.

எஸ்.வி.எஸ் கல்லூரியில் படித்த மாணவிகள் மரணம் அடைந்ததால், அங்கீகாரப் பிரச்சினை விஸ்வரூபம் எடுத்தது. அதன்பிறகு, அந்தக் கல்லூரி மாணவர்களை அரசுக் கல்லூரியில் சேர்க்க முதல்வர் உத்தரவிட்டார். முதல்வர் நல்லது செய்ய விரும்பினால், எல்லா மாணவர்களுக்கும் நல்லது செய்ய வேண்டும். ஆனால், எங்களுக்கு மட்டும் பாரபட்சம் காட்டுவது ஏன்? முதல்வர் எங்களுக்கும் வழிகாட்ட வேண்டும். கடந்த இரண்டு வருடங்களாகப் போராடிக்கொண்டுதான் இருக்கிறோம். ஆனால், எங்களை அரசு கண்டுகொள்ளவில்லை. தேர்தல் நெருங்குவதால் எஸ்.வி.எஸ் கல்லூரி மாணவர்களுக்கு மட்டும் உதவ நினைக்கிறார்கள். இந்த உலகத்தில் போராடினால் கண்டுகொள்ள மாட்டார்கள். செத்துப்போனால்தான் கருணை காட்டு-வார்கள்’’ என்று ஆதங்கத்தோடு பேசினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *