வரதட்சணையால் விவாகரத்து, வன்கொடுமை உட்பட பல இன்னல்களுக்கு பெண்கள் ஆளாவது தொடர்பான செய்திகள் நாள்தோறும் வந்துகொண்டிருக்கின்ற நிலையில் வரதட்சணையே வாங்காத, கொடுக்கவும் செய்யாத ஒரு கிராமம் இருக்கிறது என்றால் வியப்பல்லவா? அதைவிட வியப்பு இந்தக் கிராமத்தினர் காதலுக்கு கொடுக்கும் மரியாதை. அந்தக் கிராமம் எங்கு இருக்கிறது? இவற்றிற்கு என்ன காரணம்?
சிவகங்கையிலிருந்து 25 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஆலவிழாம்பட்டி கிராமம்தான் அந்த வரதட்சணை வாங்காத, கேட்காத கிராமம். ஊருக்குள் நுழையும்போதே, ‘இங்கு வரதட்சணை வாங்குவதுமில்லை; கொடுப்பதுமில்லை’ என்ற இரண்டு பெரிய கல்வெட்டுகள் நம்மை பிரமிக்கவைத்து வரவேற்கின்றன.
எப்படி இப்படியொரு மாற்றம்? ஆலவிழாம்பட்டியைச் சேர்ந்த ஓய்வுபெற்ற அரசு ஊழியர் நல்லிக்காளை, “இதற்குக் காரணம் எங்க கிராமத்தோட ஹிஸ்ட்ரிதான். கடந்த பல நூறு வருடங்களாகவே வரதட்சணையே வாங்கினதில்லங்கிறதுதான் எங்கள் கிராமத்தோட பெருமை. அதுக்கான ஆதாரங்கள், எங்க முன்னோர்கள் எழுதி வெச்சுட்டுப் போயிருக்கும் செப்புப் பட்டயங்கள்தான். அந்தப் பெருமையைக் காப்பாற்ற வேண்டிய பொறுப்பு எங்களுக்கும் இருக்கு. இன்னைக்கு வரைக்கும் நாங்க வரதட்சணை கொடுக்கிறதோ வாங்கறதோ இல்ல.
சில நேரத்தில், எங்க ஊர் வழக்கம் பற்றித் தெரியாம பொண்ணு கேட்க வந்துட்டு, அப்புறம் ‘என்ன நகை போடுவீங்க?’ன்னு நாசூக்கா கேட்பாங்க. நாங்களும் அவங்களை கூட்டிக்கிட்டுப்போயி, ‘இந்த போர்டை படிச்சுடுங்க’ன்னு நாசூக்கா சொல்லுவோம். பலர் புரிஞ்சுக்கிட்டு பொண்ணு எடுத்திருக்காங்க. சிலர் பயந்துக்கிட்டு ஓட்டத்தை எடுத்திருக்காங்க. பொண்ணை கட்டுன புடவையோட கல்யாணம் பண்ணி வைப்போம். ‘உங்களுக்கு விருப்பம்னா கல்யாணம் பண்ணிக்கோங்க; இல்லைன்னா நாங்க கெஞ்சமாட்டோம்’னு கண்டிப்பா சொல்லிடுவோம்.
அதேமாதிரிதான், நாங்க பொண்ணு எடுக்கும்போதும் கட்டுன புடவையோடு வர்ற பொண்ணுங்களைத்தான் கல்யாணம் பண்ணி வைப்போம். இதுதான் எங்க ஊரு வழக்கம்.
என் மனைவி பார்வதியை நான் கல்யாணம் பண்ணும்போது ஒரு ரூபாய்கூட வரதட்சணை வாங்கல. அதேமாதிரி, என் மகன் பாண்டியராஜுக்கு வெளியூர்லதான் பொண்ணு எடுத்த-போது, ‘எங்களுக்கு எந்த வரதட்சணையும் வேணாம்’னு கண்டிஷனா சொல்லிட்டோம். என் பொண்ணு சரண்யாவுக்கு இப்போ மாப்பிள்ளைப் பார்த்துக்கிட்டிருக்கோம். வரதட்சணை கேட்காத மாப்பிளையா இருந்து என் மகளுக்கும் புடிச்சுப் போச்சுன்னா அந்த நிமிஷமே திருமணம்தான்’’ என்று பத்திரிகையாளரிடம் விளக்கினார்.
வரதட்சணை கொடுக்காமல் திருமணம் செய்துகொண்ட நாச்சம்மாள், “நான் கல்யாணம் பண்ணிக்கிட்டப்போ ஒரு கிராம்கூட வேணாம்னு சொல்லிட்டாங்க. எங்க வீட்டிலிருந்து எடுத்துக்கிட்டு வந்தது சாப்பிடுற தட்டுதான். அதுவும், நானே ஆசைப்பட்டு எடுத்துக்கிட்டு வந்தது. எங்க ஊர்ல ஏழைங்களும் இருக்காங்க, பணக்காரங்களும் இருக்காங்க. எல்லோருமே ஒரே மாதிரிதான் கல்யாணம் பன்றாங்க. இந்த மாதிரி ஒரு ஊர்ல வாழ்றதுக்கே பெருமையா இருக்கு’’ என்றார் உணர்வு பொங்க.
“இது மட்டுமில்லீங்க, எங்க ஊர்ல யாராவது காதலிச்சாங்கன்னா உடனே கல்யாணம் பண்ணி வெச்சிடுவோம். ஒருவேளை பெத்தவங்க ஏத்துக் கொள்ளலைன்னாலும் எங்களுக்கு காதலர்களுடைய சம்மதம்தான் முக்கியம்’’ என்கிறார் பெட்டிக்கடை வைத்திருக்கும் கண்ணன்.
ஆலவிழாம்பட்டி அனைத்து ஊர்களுக்கும் வழி காட்டுகிறது. எல்லா ஊரும் இப்படியானால் “யாதும் ஊரே யாவரும் கேளிர்’’ என்ற தமிழர் கொள்கை நிறைவேறும்!