பெண்ணால் முடியும்

ஏப்ரல் 01-15

தங்க மங்கை அனுராதா!


அண்மையில் புதுடெல்லியில் நடைபெற்ற தேசிய  ஜூனியர் பளுதூக்கும் போட்டியில், தமிழகம் சார்பில் கலந்துகொண்டு, மூன்று தங்கங்களை அள்ளி வந்திருக்கும் தமிழ் தங்க மங்கை அனுராதா!

“குக்கிராமப் பொண்ணு நான், இந்தியா சார்பா ஒலிம்பிக்ல விளையாடி தங்கம் ஜெயிக்கணும்னு இலக்கு வைக்கும் அளவுக்கு விளையாட்டில் வளர்ந்திருக்கேன். என்னை நினைச்சா, எனக்கே கொஞ்சம் பெருமையா இருக்கு!’’ என்கிறார் உணர்வுபொங்க.

 

“புதுக்கோட்டை மாவட்டம், பெங்களூர் அருகில் உள்ள நெம்மேலிப்பட்டிதான் இவரது சொந்த ஊர்’’. 21 வயது இளம்பெண் அனுராதா, இப்போது புதுக்கோட்டை ஜே.ஜே.கலை அறிவியல் கல்லூரியில் எம்.எஸ்சி., கம்ப்யூட்டர் சயின்ஸ் மாணவி.

“நான் விவசாயக் குடும்பத்த சேர்ந்தவள். ஒன்பது வருஷத்துக்கு முன்ன ஒரு விபத்தில் அப்பா இறந்ததுக்-கு அப்புறம், அண்ணன்தான் குடும்பத்தை கவனிச்சுக்கிறார். நான் பெருங்களூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் படிச்சப்போ, என் ஆர்வம் எல்லாம் கைப்பந்து (ஹேண்ட் பால்) விளையாட்டில்தான். குடும்ப நண்பர் நல்லையா, ‘நீ பளுதூக்கும் முயற்சிகளை செய். அதுல நீ தனிச்சு தெரிவே’னு ஊக்கப்படுத்தினார். ஸ்கூல் பி.இ.டி. மாஸ்டர் ராஜேஷ், பளுதூக்கறதுக்கு பயிற்சி கொடுத்தார்.

ஊருலயோ… ஸ்கூல்லயோ பளுதூக்கும் பயிற்சிக்கான வசதிகள் எதுவும் இல்லாததால, புதுக்கோட்டை ஸ்டேடியத்துக்குப் போய்தான் பயிற்சி செய்ய முடியும். என் கிராமத்தில் இருந்து புதுக்கோட்டை போறதுக்கு பஸ் வசதிகூட இல்ல. தினமும் 4 கிலோ மீட்டர் நடந்தோ, அண்ணன் உதவியோடயோ பெருங்களுர் வந்து, பிறகு பஸ்ஸில் புதுக்கோட்டை போவேன். ‘பொம்பளப் புள்ளைய எப்ப பார்த்தாலும் இப்படி வெளிய தெருவனு விடுறது சரியில்ல…’னு ஊர்க்காரங்க பேசுவாங்க. அதையெல்லாம் கண்டுக்காம, நான் விளையாட்டில் ஏதோ சாதிக்கப் போறேனு என் மேல முழு நம்பிக்கை வெச்சிருந்தாங்க அண்ணன்.

தினமும் காலையில 5 _ 8… காலேஜ் போயிட்டு வந்து சாயங்காலம் 5 _ 7.30 இந்த டயத்துலயெல்லாம் விடாம பயிற்சி செய்வேன். மூணு வருஷமா இதுதான் என் டைம்டேபிள். முதன் முதலா, 2009ஆம் வருஷம், தஞ்சாவூர்ல நடந்த பாரதிதாசன் பல்கலைக்கழக கல்லூரிகளுக்கு இடையிலான பளுதூக்கும் போட்டியில முதல் பரிசு வாங்கினேன். தொடர்ந்து சேலத்தில், மாநில அளவிலான ஜூனியர் பளுதூக்கும் போட்டியிலும், பிறகு கன்னியாகுமரியில் சீனியர் பளுதூக்கும் போட்டி, சென்னையில் மாநில அளவில் ஊரக விளையாட்டு போட்டி (பைக்கா), கேரளா, அமிர்தசரஸ் இங்கல்லாம் நடைபெற்ற போட்டிகள்னு பதக்க வேட்டை தொடருது.

சமீபத்தில், தேசிய ஜூனியர் பளுதூக்கும் போட்டியில தமிழ்நாடு சார்பா கலந்துகிட்டது பெருமையான அனுபவம். இதில் ‘ஸ்னாட்ச்’ பிரிவுல 73 கிலோ எடையைத் தூக்கி ஒரு தங்கத்தையும், ‘க்ளீன் அண்டு ஜெர்க்’ பிரிவுல 95 கிலோ எடையைத் தூக்கி ஒரு தங்கத்தையும், ஒட்டுமொத்த பெர்ஃபார்மன்ஸ் அடிப்படையில் ஒரு தங்கத்தையும் மொத்தம் மூணு தங்கப் பதக்கத்தோட ஊர் திரும்பினேன். அம்மாவுக்கும், அண்ணனுக்கும், ராஜேஷ் மாஸ்டருக்கும் அவ்வளவு சந்தோஷம்’’.

“ஒலிம்பிக்ல விளையாட இந்திய அணியில் இடம் பிடிக்கணும். அதை நோக்கிதான் இப்போ என் பயிற்சியும் பயணமும், என்னைப் போல இன்னும் எத்தனையோ கிராமப்புற மாணவிங்க, விளையாட்டில் திறமையோட இருக்கிறாங்க. கை தூக்கிவிட ஆளில்லாம, வெளிச்சத்துக்கு வராமலே தேங்குறாங்க. அவங்களுக்கு எல்லாம் அரசு ஊக்கமும், ஊக்கத்தொகையும் கொடுத்தா, இந்திய அளவில் நம்ம மாநிலமும், உலக அளவில் நம்ம தேசமும் விளையாட்டில் பல வெற்றிகளை வசப்படுத்தும்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் பளுதூக்கும் பயிற்சிக்கும், இன்னும் எத்தனையோ விளையாட்டுக்கும் பயிற்சியாளர்கள் இல்லை. பயிற்சியாளர்களை அரசு நியமிச்சா, இங்க இன்னும் நிறைய சாதனையாளர்களை நீங்க பேட்டி எடுக்கலாம் என்கிற கோரிக்கையுடன் தன் சாதனைகளைக் கூறினார் அனுராதா.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *