ஜோதிபா பூலேயின் வாரிசு நீதாதாய் ஹோலோ பூலே அளித்த பேட்டி :
19ஆம் நூற்றாண்டில், மராட்டிய மாநிலத்தில் சமுதாய புரட்சியினை ஏற்படுத்திய மகாத்மா ஜோதிபா பூலே அவர்களின் அய்ந்தாவது தலைமுறை வாரிசாக உள்ள திருமதி நீதாதாய் ஹோலே பூலே தமிழ் நாட்டில் திராவிடர் கழகம் நடத்திய ஜாதி- தீண்டாமை ஒழிப்பு மற்றும் சமுக நீதி மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றினார். அந்த நிகழ்வுகளுக்கிடையில் ‘உண்மை’ இதழுக்கு வழங்கிய செவ்வி:
கேள்வி 1 : மகாத்மா ஜோதிபா பூலே அவர்களின் குடும்ப வழியிலான அய்ந்தாம் தலைமுறைப் பேத்தி என்ற உறவில் மட்டும் இருக்கிறீர்களா? அல்லது ஜோதிபா பூலே அவர்களின் கொள்கை வழியிலும் இருக்கிறீர்களா?
நான் மகாத்மா பூலே அவர்களின் அய்ந்தாவது தலைமுறை வாரிசு. மகாத்மா பூலே அவர்களின் உயிலில் அவருடைய இரண்டாவது நேரடி வாரிசாக டாக்டர் யஷ்வந்த பூலே அவர்களை மட்டுமே அடையாளம் காட்டப்பட்டுள்ளது. நான் யஷ்யவந்த் பூலே அவர்களின் மூன்றாவது தலைமுறை பேரனுடைய மனைவியாவேன். மகாத்மா பூலே அவர்களின் சிந்தனைகளும் செயல்பாடுகளும் தொடர்ந்து எங்களுக்கு தாக்கம் ஏற்படுத்தியிருப்பதின் விளைவாக சித்தாந்த ரீதியாக அவருடைய கொள்கைகளை மனித சமூகத்திற்குப் பரப்புவதையே என் வாழ்நாள் இலட்சியமாகக் கொண்டுள்ளேன்.
கேள்வி 2 : மகாத்மா ஜோதிபா பூலே நிறுவிய அமைப்பு இப்போது செயல்பாட்டில் உள்ளதா? ஆம் எனில், எவ்வாறு செயல்படுகிறது?
மகாத்மா பூலே அவர்களால் தொடங்கப்-பட்ட அமைப்பு “சத்திய சோதக் சமாஜ்” எனப்படுவதாகும். அந்த அறக்கட்டளையில் இன்று பலர் அங்கம் வகிக்கின்றனர். பூலேவின் வாரிசான எங்களை யாரும் அணுகி அந்த அமைப்பில் இணைத்துக் கொள்ள விரும்பவில்லை. எனவே மகாத்மா பூலே அவர்களின் கருத்துகளைப் பரப்புவதற்காக எங்கள் குடும்பமே ஒரு நிறுவனத்தை ஆரம்பித்து நாங்கள் அந்தப்பணியினைச் செய்து வருகின்றோம்.
கேள்வி 3 : ஜோதிபா பூலே அவர்கள் ஆற்றிய சமுதாயப் பணியால் மராட்டிய மாநிலத்தில் ஏற்பட்டுள்ள சமுதாய மேம்பாட்டுப் பணிகள் பற்றிக் கூறுங்கள்.
மகாத்மா பூலேவின் தொண்டு, மனித சமுதாயத்திற்கான உண்மையான தொண்டு ஆகும். ஆனால் இன்றைய தலைமுறையினர் மகாத்மா பூலே_சாவித்திரிபாய் பூலே ஆகியோரது சமுதாயப் பணியினால் கல்வி கற்றவர்கள் அவரைப் போற்றுகிறார்களே யொழிய அவருடைய கொள்கை சித்தாந்தங்களை முன்னெடுத்து சமூகப் பணி ஆற்ற முன் வருவதில்லை. மகாத்மா பூலேவின் வழி காட்டுதல் என்பது முதலில் ஒவ்வொருவரும் கல்வி கற்க வேண்டும். பிற மக்களுக்கும் கல்வியைச் சொல்லித் தர வேண்டும். சமூகத்தில் அடித்தள மக்கள் நல் வாய்ப்பு வசதிகளைப் பெற வேண்டும் என்பதாகும். ஆனால் இன்றைய மாணவர்கள் கல்வி கற்று தத்தம் வசதிகளைப் பெருக்கிக் கொண்டார்களே யொழிய, ஒரு சமுதாய இயக்கமாக அவருடைய சிந்தனைகளைக் கொண்டு செல்லவில்லை என்பதே வருந்தத் தக்கதாகும். அவருடைய சிந்தனைகளை முன்னெடுத்துச் செல்பவர்கள் மிகவும் குறைவாக உள்ளனர்.
பூலேவின் வீடு தற்போது ஒரு நினைவுச் சின்னமாக உள்ளது. நினைவிடத்தில் வந்து வணங்கிச் செல்கின்றனர். அதன் பின்பு வீட்டுக்குப் போய் விநாயகரை வைத்து வழிபடுகின்றனர்! இது அந்த மக்களின் அறியாமையைக் காட்டுவதாக உள்ளது. எனவே என்னுடைய முதன்மைப் பணியாக பெண்கள் மத்தியில் பகுத்தறிவுப் பிரச்சாரம் செய்கின்றேன். உதாரணமாக வாரத்தில் சில நாள்களில் பெண்கள் கடவுள் வழிபாட்டுப் பணியாக உண்ணா நோன்பு / விரதம் போன்றவற்றைக் கடை பிடிக்கிறார்கள். இலட்சுமிக்காக விரதம் இருப்பதாக சொல்கிறார்கள். இலட்சுமியின் கணவன் விஷ்ணு ஆவார். அவர் பெரிய பணக்காரர் என புராணங்கள் சொல்லுகின்றன. அந்தப் பணக்காரக் குடும்பத்திற்க்காக இவர்கள் விரதமிருந்து தன்னை நொந்துகொள்வது என்ன நியாயம்.? சில பெண்கள் தங்கள் கழுத்தில் அணிந்திருக்கும் தாலியைக் கூட கழற்றி சிலையில் வைத்து விடுகிறார்கள், இது எந்தவகையான புனிதம் என்று தெரியவில்லை. இது போன்ற செய்திகளை பெண்கள் மத்தியில் பரப்பி வருகின்றேன்.
கேள்வி 4 : ஜோதிபா பூலே – சாவித்திரிபாய் ஆகியோர் ஆற்றிய சமுதாயப் பணியால் படிப்பறிவு மற்றும் வேலைவாய்ப்பில் மராட்டிய மாநிலத்தில் மகளிர் நிலை எப்படி உள்ளது?
மகாத்மா பூலே, சாவித்திரி பாய் ஆகியோரின் தொண்டால், குறிப்பாக கல்வி கற்பதில், மராத்திய மக்கள் மத்தியில் முன்னேற்றம் கண்டுள்ளனர். ஆனால் கல்வி கற்றவர்கள் கூட மூட நம்பிக்கைகளிலிருந்து வெளிவரவில்லை. சாவித்திரி பாய் அவர்களின் உழைப்பினால் இன்று பெண்கள் கல்வியில் அளப்பரிய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. ஆனால் பெண்கள் இன்னும் ஒரு சமூக இயக்கமாக அவர்களின் போதனைகளைக் கொண்டு செல்ல போதிய அளவு முன்வரவில்லை.
கேள்வி 5 : பூலே அமைப்பிற்கு மகாராஸ்டிர மாநிலத்தில் உள்ள அரசியல் கட்சிகளின் ஆதரவு எவ்வாறு உள்ளது?
எல்லா அரசியல் கட்சிகளும் மகாத்மா பூலேவின் பெயரைப் பயன்படுத்துகின்றன. ஆனால் அவர் கொள்கைகளை முன்னெடுத்துச் செல்வதில் ஆர்வம் காட்டுவதில்லை. மராத்திய மாநில நிதி அமைச்சர் சுதிர் முங்கேட்டிவர் எனக்கு உதவியாக இருக்கிறார். அவர் எங்கள் குடும்பத்திற்கு உதவியாக இருந்திருக்கிறார். ஆனால் சித்தாந்த ரீதியாக பூலேவினுடைய ‘தீன் பந்து’ இதழை வெளியிடுவது, அவர் சித்தாந்தங்களைப் பரப்பும் வகையில் கல்விக்கூடங்கள் அமைப்பது போன்ற விடயங்களில் நான் எதிர்பார்த்த உதவிகள் எங்கிருந்தும் கிடைப்பதில்லை.
கேள்வி 6 : உங்களது முன்னோர்கள் மூத்தோர்கள் வாயிலாக நீங்களே கேட்ட பூலே -_ சாவித்ரிபாய் நினைவுகள், நிகழ்ச்சிகள் பற்றிக் கூறுங்கள்.
என்னுடைய மாமனார் பூலேவினுடைய கொள்ளுப் பேரன் ஆவார். அப்படியிருந்தும் அவரை இந்த சமூகம் உரியவாறு அடையாளம் கண்டு கொள்ளவில்லை. ஆனால் பூலேவினுடைய வாரிசு என்று அறிந்து அவருக்கு கிர்லோஸ்கர் நிறுவனத்தின் உரிமையாளர் சந்தனூர் கிர்லோஸ்கர் சகோதரரின் பங்களாவில் ஒரு காவலாளி வேலை கொடுத்தனர். இது தான் நமது நிலை என்பதை என் மாமனார் வருத்ததுடன் எனக்குக் கூறியுள்ளார்.
கேள்வி 7 : பூலேயின் கொள்கைகளுக்கு இன்றும் நிலவும் எதிர்ப்பு – சவால்கள் பற்றிக் கூறுங்களேன்.
மகாத்மா பூலேவின் கொள்கைகளை முன்னெடுத்துச் செல்வதாக பல அரசியல் கட்சிகள் சொல்கின்றன. இன்னும் தனி மனிதர்களும் மகாத்மா பூலேவின் கொள்கைகளை உள்வாங்கி சமூகத்தில் ஆங்காங்கே பரப்பி வருகின்றனர். ஆனால் அந்தக் குடும்பத்தின் நேரடி வாரிசாக இருக்கின்ற எங்களை ஏற்க மறுக்கின்றனர். இணைத்துக் கொள்ள முன் வருவதில்லை. தங்கள் பெயரை முன்னெடுப்பதில் தான் ஆர்வம் காட்டுவதாகத் தெரிகிறது. இதன் மூலம் பூலேவின் சித்தாந்தங்களை எதிர் காலத்தில் சிதைத்து விட வாய்ப்பிருக்கிறது.
கேள்வி 8 : உங்களது அமைப்பு அண்மையில் நடத்திய கூட்டங்கள், மாநாடுகள் பற்றியச் செய்திகளைக் கூறுங்களேன்.
பூலேவின் பிறந்த நாள் ஏப்ரல் 11. அந்த நாளைச் சிறப்பாகக் கொண்டாடுகின்றோம். பூலே அவர்களுக்கு மகாத்மா என்ற பட்டம் மே மாதம் 11 ஆம் நாள் சூட்டப் பட்டதாகும். இந்த இரு விழாவையும் பெரிய அளவில் கொண்டாடுகின்றோம். அவரது நினைவிடத்தில் கூடுகின்றோம். இதன் மூலம் பொது மக்கள் மத்தியில் ஒரு விழிப்புணர்வு வர வாய்ப்புள்ளது.
கேள்வி 9 : பூலே அமைப்பின் கட்டமைப்பு மராட்டிய மாநிலத்தில் எவ்வாறு உள்ளது?
புனே பல்கலைக்கழகத்திற்கு சாவித்திரிபாய் பெயர் சூட்டப்பட வேண்டும் என்று எங்கள் அமைப்பு முன்னெடுத்த கோரிக்கை 2014 ஆம் ஆண்டு சுதிர் முங்காட்டிவர் முயற்சியின் மூலம் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதை எங்கள் வெற்றியாகக் கருதுகின்றோம். ஏழைக் குழந்தைகள் பொருளாதார நிலையின் காரணமாக கல்வி கற்க இயலாத நிலையிருந்தால் அவர்களுக்கு கல்லூரியில் அனுமதிக்காக உதவுகின்றோம்.
கேள்வி 10 : பூலே அமைப்பின் செயல்பாடுகள் இளைஞர்கள், மாணவர்கள் மற்றும் இளையத் தலைமுறையினர் மத்தியில் எவ்வாறு உள்ளது? எவ்வாறு கடைபிடிக்கப்படுகிறது?
பூலே அமைப்பின் செயல்பாடுகளில் நாம் எதிர்பார்க்கின்ற முன்னேற்றம் ஏற்படவில்லை. இன்றைய தலைமுறை பூலே குறித்து பேசும் பொழுது நன்றாக உள்வாங்குகின்றனர். கல்வி பெற்றமைக்காக பூலே பற்றி பேசுகின்றனர். எங்களுக்கு ஒத்துழைப்பு தருகின்றனர். அது மகிழ்ச்சியான ஒன்று. ஆனால் சாவித்திரி பாய் பூலே சொன்ன அந்த சமுதாயச் சேவை என்பதை இன்றைய தலைமுறையினர் முன்னின்று செய்ய வருவதில்லை. தற்போதைய சமூகம் ஒரு பொருள் வழிச் சமூகமாக மாறிவிட்டதின் விளைவு இதுவாகும்.
மகாத்மா ஜோதிராவ் பூலே – சாவித்திரிபாய் பூலே குடும்ப வழி பேத்தி நீதாதாய் ஹோலோ பூலே வல்லம், பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரிக்கு 21.3.2016 அன்று வருகை தந்த போது சாவித்திரிபாய் ஜோதிராவ் பூலே பெயர் சூட்டிய பாலிடெக்னிக் கல்லூரியின் கட்டடத்தின் முன்பு எடுத்துக் கொண்ட புகைப்படம். இந்நிகழ்வில் இப்பாலிடெக்னிக் முதல்வர், துணை முதல்வர் மற்றும் பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.
கேள்வி 11 : தமிழ்நாட்டில் தந்தை பெரியார் நிறுவிய சுயமரியாதை – பகுத்தறிவு இயக்கத்தினைப் பற்றியும், அதன் இன்றையத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி பற்றியும் உங்களின் கருத்து என்ன?
தந்தை பெரியாரால் உருவாக்கப்பட்ட சுயமரியாதை இயக்கம் செய்துள்ள சாதனை மிகப் பெரியதாகும். தங்களின் தலைவர் ஆசிரியர் வீரமணி அவர்களின் அரிய செயல்பாடுகள், சுறுசுறுப்பு எனக்கு பெரும் வியப்பு அளிக்கிறது. இந்திய நாட்டின் சமுதாயச்சிற்பிகளாக விளங்கிய மகாத்மா பூலே, சாகுமகராஜ், பாபா சாகிப் அம்பேத்கர், நாராயணகுரு போன்றவர்களின் சிந்தனைகளை மக்கள் அறிந்து கொள்ளும் வகையில் இவ்வளவு பெரிய ஒரு மாநாட்டை என் வாழ்க்கையில் முதன் முதலாகப் பார்க்கின்றேன்.
தலைவர் தந்தை பெரியார் அவர்களால் தமிழ் நாட்டில் இவ்வளவு பெரிய மாற்றமா என வியந்து நோக்குகின்றேன். இங்கே படமாக வைக்கப் பட்டுள்ள 10க்கும் மேற்பட்ட தலைவர்கள் அனைவரையும் அகில இந்தியஅளவில் கொண்டு செல்வதின் மூலம் நமது பணிகள்10-15 மடங்கு இன்னும் பெரிதாகும். இதை முன்னின்று தன் வாழ்நாள் பணியாகச் செய்யும் ஆசிரியர் கி. வீரமணி ஒரு அதிசய மனிதராக எனக்குத் தெரிகின்றார்.
கேள்வி 12 : தந்தை பெரியாரின் திராவிடர் இயக்கத்தின் செயல்பாடுகளோடு மகாத்மா பூலேவின் அமைப்பு இணைந்து செயல்படுவது எந்த நிலையில் உள்ளது? அதற்கான திட்டங்கள் ஏதேனும் உங்களிடம் உள்ளதா?
மகாத்மா பூலே _- தந்தை பெரியார் ஆகியோரின் கருத்தொற்றுமை, சமூகப் பணிகளை முன்னெடுத்துச் செல்வது, இன்றைய கால கட்டத்தில் மிகவும் அவசியமாகும். நாம் இணைந்து செயல் பட வேண்டிய தருணம் இதுவாகும். தாங்கள் எப்போது அழைத்தாலும் மகிழ்வோடு வருவேன், தங்களுடன் பிரச்சாரத்தில் ஈடுபடுவேன். அது போல மராத்திய மாநிலத்தில் எங்கள் அமைப்பு நடத்தும் நிகழ்வுகளிலும் திராவிடர் கழகம் பங்கேற்க வேண்டும். இது சமூக நீதிக்காகப் போராடும் அமைப்பு ஆகும். இங்கு மனித நேயமே முதன்மை ஆகும். மொழி மாநில வேறுபாடுகள் முக்கியமல்ல.
கேள்வி 13 : தமிழ்நாட்டில் திராவிடர் கழகம் நடத்திய ஜாதி _ தீண்டாமை ஒழிப்பு மற்றும் சமூக நீதி மாநாட்டில் கலந்துகொண்டீர்களே அதைப்பற்றிய உங்களது அனுபவங்களைக் கூறுங்கள்.
தமிழ் நாட்டில் திராவிடர் கழகம் நடத்திய ஜாதி- _ தீண்டாமை ஒழிப்பு மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றியதைப் பெருமையாகக் கருதுகின்றேன். இங்கு கூடிய மக்கள் அனைவரும் ஜாதி ஒழிப்பிற்காக தங்களை அர்ப்பணித்துக் கொண்டவர்கள். இங்கு அரசியல் இல்லை. இது ஒரு சமூக இயக்கம். இது போன்ற ஜாதி மறுப்பு இயக்கங்கள் இவ்வளவு பெரிய அமைப்பாக இந்தியாவின் பிற பகுதிகளில் செயல்படவில்லை. எனவே இந்த மாநாட்டு அனுபவம் என்பது மறக்க முடியாத ஒன்று. அதற்கு நான் அய்யா வீரமணி அவர்களுக்கு நன்றி சொல்லக்கடமைப் பட்டிருக்கிறேன்.
பெரியர் மணியம்மை பல்கலைக்கழகத்திற்கு மகாராஷ்ட்டிரா
மாநில பூலே வழி பேத்தி நீதாதாய் பூலே வருகை
பூலே வழி பேத்தி நீதாதாய் பூலே தஞ்சாவூர் வல்லத்தில் உள்ள பெரியார் மணியம்மை பல்கலைக்கழகத்தில் செயல்பட்டு வரும் மண்புழு உரம் தயாரித்தல், பெரியார் புரா, மின் உற்பத்தி, நூலகம், பெரியார் கண்காட்சி ஆகியவைகளை கண்டுதான் மகிழ்ந்தாகவும் மென்மேலும் வளர தனது வாழ்த்துக்களை தெரிவித்தார்.
இந்த வாய்ப்பை அளித்த சகோதரர் தமிழர் தலைவர் பல்கலைக்கழக வேந்தர் டாக்டர் கி.வீரமணி அவர்களுக்கு நன்றி கலந்த வணக்கத்தினை தெரிவித்தார். மகாத்மா ஜோதிபா பூலே மற்றும் சாவித்திரிபாய் பூலே அவர்களை தமிழகத்திற்கு கொண்டு வந்து தமிழ் மாணவர்களிடையே அறிமுகப்படுத்தியதற்கு எனது மனமார்ந்த நன்றிகள் என கூறினார். பின்னர் தான் மரக்கன்று நட்டதற்கு மகிழ்ச்சியடைகின்றேன் என்றார் (21.03.2016).
கேள்வி 14 : பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனம் திருச்சியில் நடத்தி வரும் கல்வி நிலையங்கள் மற்றும் தஞ்சை – வல்லம் பெரியார் மணியம்மை பல்கலைக் கழகத்திற்குச் சென்று பார்வையிட்டீர்களே, அதுபற்றிய உங்களது அனுபவங்களைக் கூறுங்கள்.
தந்தை பெரியாரது இயக்கம், நடத்தி வரும் கல்வி நிறுவனங்களைப் பார்வையிட்டோம். தஞ்சை -வல்லம், பெரியார் மணியம்மை பல்கலைக் கழகத்திற்கும் சென்றிருந்தோம். மகாத்மா பூலே -_ சாவித்திரிபாய் ஆகிய புரட்சியாளர்கள் விரும்பிய கல்விப்பணி சிறப்பாக, உயர்கல்வி நிலையிலும் நடைபெறுவது குறித்து மிகவும் மகிழ்ச்சி அடைந்தோம். ஒரு சமுதாயப் புரட்சி இயக்கமான தந்தை பெரியார் நிறுவிய அமைப்பு கல்விப் பணியினை வெறும் பிரச்சார அளவில் மட்டுமல்லாமல் செயல்வடிவிலும் நடைமுறைப் படுத்தி வருவது மற்ற சமூகச் சீர்திருத்த அமைப்பினர் பின்பற்றத்தக்கதாகும். பெண் கல்விப் பணியில் பல்கலைக்கழகம் ஆற்றிவரும் பணி மிகுந்த பாராட்டுதலுக்கு உரியது. பெரியார் மணியம்மை பல்கலைக் கழக வளாகத்தில் சாவித்திரிபாய் பூலே நினைவில் ஒரு கட்டடமே உள்ளது வியப்பும் மகிழ்ச்சியுமாக இருக்கிறது. தமிழ்நாட்டில் மகாத்மா பூலே,- சாவித்திரிபாய் நினைவுநாளைப் போற்றிப் பெருமைப்-படுத்துவதில் திராவிடர் கழகம் முனைப்புடன் இருப்பதற்கு பூலே குடும்பத்தாரின் வாரிசு என்ற வகையில் எங்களது நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறோம். நிச்சயமாக எங்களது அமைப்பு அதற்கான முயற்சியினை மேற்கொள்ளும்.
திருச்சி, பெரியார் உலகில் நடைபெற்ற திராவிடர் கழக மாநாட்டில் தந்தை பெரியார் பற்றிய புத்தகங்களை நினைவுப் பரிசாக அளித்தனர். மாநாட்டில் பங்கேற்றதன் மூலம் திராவிடர் கழகம் பற்றியும், அதன் தலைவர் அய்யா வீரமணி அவர்களைப் பற்றியும், அவர் ஆற்றிவரும் பரந்துபட்ட பணிகளைப் பற்றியும் தெரிந்து கொண்டேன். மகாத்மா ஜோதிபா பூலேவும், தந்தை பெரியாரும் தனிநபர்களல்ல, அடக்கப்பட்ட மக்களை விழித்து எழச் செய்த மாபெரும் இயக்கங்கள். இரண்டு இயக்கங்களும் ரயில் தண்டவாளம் போல இணைந்தே நெடிய தூரம் பயணிக்க வேண்டும். இதற்கான நூல் எழுதும் முயற்சியினை எங்களது அமைப்பு தொடங்கிடும்.
திராவிடர் கழகத்தின் தலைவர் அய்யா வீரமணி அவர்கள் அந்தப் புத்தகத்தினை ஆங்கிலத்தில் கொண்டு வர வேண்டும் என்பது எங்களது அழுத்தமான விருப்பமாகும். கூடிய விரைவில் அந்த முயற்சிகள் விளைச்சலைத் தரும். –
(நேர்காணல்: அரசன், 20-.3.-2016, 21.-3.-2016)