உல்லாசக் கப்பல் பற்றி முன்பே பார்த்துள்ளோம். இந்தக் கப்பல் நடுக்கடலில் இல்லாமல் இரண்டு பக்கமும் மலைகள், நடுவே கடல் என்ற உள் பாதை வழி (inner passage) போனது. கனடாவின் மேற்குப் பகுதியில் ஆனால் அலாஸ்காவைச் சேர்ந்தது என்பதால் அமெரிக்காவிற்குச் சொந்தம் என்று சென்று கொண்டிருந்தது. அங்கே ஒன்றும், இங்கே ஒன்றும் என்று சில வீடுகள் தெரியும். பெரும்பாலும் மலைகளும், காடுகளுந்தான்.
முதல் இடமாக கெச்சிசியன் என்ற ஊருக்கு வந்து கப்பல் நின்றது. இதுதான் அலாஸ்காவின் தென்கோடி நுழைவாயில் என்று சொல்லலாம். பழைய சிற்றூரை அப்படியே வைத்துள்ளனர். மீன் பிடி ஊர் என்பதைப் பார்த்தாலே சொல்லி விடலாம். அங்கு வாழும் மக்கள்தொகை மிகக் குறைவுதான். ஆனால் உல்லாசப் பயணிகளால் ஊர் நிறைந்துள்ளது. பழைய கட்டிடங்களுடன் சில புதிய கடைகளும் இருந்தன. இங்கு சிறப்பான இடங்களாகப் பார்ப்பதற்கு மூன்று இடங்களைத் தேர்ந்தெடுத்திருந்தோம். ஆறு வகையான சால்மன் மீன்கள் இங்கு கதை சொல்கின்றன! ஆம்! இங்கே தெளிவான ஓடையிலே பிறக்கின்றன, இரண்டு ஆண்டுகள் போல நீண்ட கடல் பயணம் சென்று வளர்கின்றன. பின்னர் எந்த ஓடையிலே பிறந்தனவோ, அந்த ஓடைக்கே வந்து முட்டை இட்டுவிட்டு மடிகின்றன. பெற்றோர் பலர் பிறந்த மண்ணிலேயே மடிய வேண்டும் என்பதை இந்த மீன்களிடமிருந்தே கற்றனரோ? நாங்கள் சென்ற நேரம், அவை முட்டையிட வருகின்ற காலம். ஆட்டு மந்தைகள் ஓடையில் நீந்தினால் எப்படி இருக்கும்?
அதுபோல பல்லாயிரக்கணக்கில் ஓடையின் பாறைகளில் எதிர்நீச்சல் போட்டுத் தாண்டித் தாண்டி, துள்ளிக் குதித்துச் செல்வதை எங்களைப் போன்ற மனித மந்தைகள் மேலே நின்று வேடிக்கைப் பார்ப்பது அவைகளுக்கு நன்கு தெரியும் போல! அவ்வளவு ஆட்டம்! அவை பிறந்த இடத்தை அடைந்ததும், குழி தோண்டி முட்டைகள் இடும். அங்கே ஆண் மீன்கள் வந்து அந்த முட்டைகளைக் கருத்தரிக்க வைக்கும். உடனே பெண் மணலால் அந்த இடத்தை மூடி விட்டு அடுத்த இடத்திலே முட்டை இடும். இப்படி ஆறு, ஏழு இடங்களில் முட்டைகள் இட்டு அவை கருத்தரிக்கத் தயார் செய்து விட்டு இறந்து விடும். அந்த முட்டைகள் பொரித்து குஞ்சு மீன்கள் கும்பலாகத் தங்கள் பயணத்தை உலகின் மறுகோடியான சீனப் பெருங்கடல் வரை சென்று வளரும். அவற்றில் இறந்தவை போக மீதியுள்ளவை இரண்டு ஆண்டுகளில் மீண்டும் இங்கு வந்து புதிய வார்ப்புக்களைப் படைக்குமாம்! சால்மன் மீன்கள், அதுவும் அலாஸ்காவின் சால்மன் மீன்கள் மிகவும் விரும்பி உண்ணப்படுவதால், அது மிகப்பெரிய தொழிலாகவும், அது பற்றிய ஆராய்ச்சிகள் தொடர்ந்தும் நடைபெறுவது நம்மை மகிழ்விக்கின்றது. அங்கு சால்மன் நம் ஊர் கத்திரிக்காய் போலத்தான், எங்கு பார்த்தாலும் சால்மன்தான்! கறுப்பு, இளஞ்சிவப்பு சாலமன் அப்போதுதான் பிடித்தது மிகவும் ருசியாகத்தான்
இருந்தது. மீன் நல்ல மீன்தான்! அதன் கதையும் நல்ல கதைதான்!
அடுத்துக் கடல் நுழை வழி (Misty fjord) பார்க்கச் சென்றோம். அதாவது கடல் ஒரு பெரிய ஏரி போல மலைகளின் நடுவில் மாட்டிக்கொண்டுள்ளது! அதைப் பார்ப்பதற்குத் தண்ணீரிலிருந்தே பறக்கும் சிறிய விமானத்தில் ஏரி பல மலைகள், காடுகள் தாண்டி ஆளே இல்லாத நடுக்காட்டில் உள்ள அந்த ஏரியிலே விமானம் தண்ணீரிலேயே இறங்கும். அங்கே அப்படியே அமைதியாக இயற்கையுடன் இரண்டறக்கலந்து திரும்புவதா, வேண்டாமா என்று எண்ணிக் கொண்டிருக்கும் போது இனி அடுத்த விமானம் எப்போது என்பது தெரியாது என்பார்! பின்னர் என்ன? பேசாமல் ஏரி உட்கார்ந்து வந்து சேர வேண்டியதுதான்! சில சமயம் மிருகங்களைப் பார்க்கலாம். அப்படி ஒரு இடத்தை உண்மையிலேயே பார்த்தோமா என்று நம்மை நாமே கேட்டுக்கொள்ள வேண்டியதுதான். கனவு மாதிரி இருந்தது.
அடுத்து அங்கு வாழும் அமெரிக்கப் பழங்குடியினரைக் கண்டோம். போகும் வழியில் அமெரிக்காவின் சிறப்பான மிகப்பெரியக் கழுகுகள் (Bald eagles), சிறகை விரித்தால் ஆறடி நீளம். அதன் கூடுகள் மரத்தின் மீது இருப்பதைப் பார்த்தோம். சால்மனையும், அங்கு விளையும் நீல பெரி (blue eagles) பழங்களையும் விரும்பி கரடிகள் வந்து உண்ணும் இடங்களைக் காண்பித்தார். அலாஸ்கா வழியாகத்தான் மனிதன் அமெரிக்காவிற்கே வந்தான் என்கின்றனர். அதில் பல பிரிவினர் உள்ளனர். நாங்கள் பார்த்தவர்கள் மீன் பிடிப்பதிலும், மர வேலைப்பாடுகளிலும் சிறந்தவர்கள். டோடம் போல் என்ற அமெரிக்க நெடு மரம் நிறைந்த ஊர் அது. ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலான டோடம் போல் மரம் ஒன்றைக் காண்பித்தார். அதில் பல வேலைப்பாடுகளும் வண்ணங்களும் இருந்தன. மனதிற்குத் தெரியாததைக் கண்கள் காண முடியாது என்பது போல எங்களுக்கு ஒன்றும் புரியவில்லை! அந்த மரம் ஒரு புறநானூற்று ஒவியம், காவியம்! ஆம்! அதில் ஒரு வீரன் கடலில் ஒரு திமிங்கலத்தினுடன் போராடி வென்று, அதன் பல்லை மாலையாக அணிந்து காட்சி தருகிறான்.
அம்மக்கள் அங்குள்ள பறவைகளையும், மிருகங்களையும் உண்டு வாழ்ந்தனர் என்பதை வீர காவியமாகப் பல வண்ணங்களில் செதுக்கி வரைந்தது இன்றளவும் கொஞ்சம் மங்கினாலும், கதை புரியும் வண்ணமுள்ளதே என்று வியந்தோம். சிந்துவெளி முத்திரைகள் போலவே உள்ளன. அவர்களது வாழ்க்கை இயற்கையுடன் இணைந்த வாழ்க்கை. எதையுமே வேண்டிய அளவுதான் வெட்டுவதும், கொல்வதும். எதையுமே வீணாக்க மாட்டார்களாம். தோல், எலும்பு, பல், மிருகங்களின் முடி அனைத்தையும் அழகு மிக்கப் பொருள்களாக்கிப் பயன்படுத்தும் அழகே அழகு! ‘போர்வைகள், அழகு மிக்க தலை, கழுத்து, உடல் அணிகலன்கள், தங்கும் கூடார இல்லங்கள்’ என்று அனைத்திலும் கலையும், பயனும் நிறைந்திருப்பதை நன்கு உணர்ந்தோம். அவர்கள் மொழி சொல்லித் தரப்படும் பள்ளிகள் உள்ளன. அவர்களது கலைக் கூடங்கள் உள்ளன. அவர்கள் மற்றவர்களுக்காக கலை நிகழ்ச்சிகள் நடத்தும் அரங்கமும் உள்ளது. அவர்களுடன் படங்கள் எடுத்துக் கொண்டு மகிழ்ச்சியைத் தெரிவித்துக்கொண்டு விடை பெற்றோம்.