வடமொழி என்பது சமஸ்கிருதமா?

மார்ச் 16-31

– புலவர் வெற்றியழகன்

“இயற்சொல் திரிசொல் திசைச்சொல் வடசொல்லென்று அனைத்தே செய்யுள் ஈட்டச்                     சொல்லே!’’
(தொல்.சொல்.391)

தொல்காப்பியத்தில் சொல்லப்படும் வடசொல் என்பது எதைக் குறிக்கிறது? சமஸ்கிருதத்தையா? என்பதே இங்கு ஆய்வுக்குரியது.

தொல்காப்பியத்தின் முதல் உரையாசிரியராகிய இளம்பூரணர் “வடசொல்’’ என்பதனை “ஆரியச் சொல்போலும் சொல்’’ என்று விளக்கங்கூறி நச்சு விதையினை விதைத்தார்.

“இயற்சொல், திரிசொல், திசைச்சொல், வடசொல்

“இயல்பாகிய சொல்லும் அதுதான் திரிந்துவருஞ் சொல்லுந் திசைக்கண் வழங்குஞ் சொல்லும் ஆரியச் சொல்லும் என்று கூறிய அத்துணையே ஒருபொருண்மேல் நிகழுஞ் செய்யுளை ஈட்டுதற்கு உரிய சொல்லாவன’’ என்று நச்சினார்க்கினியர் அந்த நச்சு விதைக்கு நீர் ஊற்றினார்.

“இயற்சொல்லானும் செய்யுட் சொல்லாகிய திரி சொல்லானுமே யன்றித் திசைச் சொல்லும் வடசொல்லும் இடைவிராய்ச் சான்றோர் செய்யுள் செய்யுமாறு கண்டு ஏனைப்பாடைச்  (மொழிச் சொல்லுஞ் செய்யுளுக்கு உரியவோ என்று அய்யுற்றார்க்கு ‘இந்நான்கு சொல்லுமே செய்யுட்குரியன’ பிற பாடைச் சொல் உரியவல்ல என்று வரையறுத்தவாறு.’’ என்று சேனாவரையர் ஆரியச் சொல் என்று கூறாமல் “வடசொல்’’ என்று மட்டுமே கூறினார்.

இளம்பூரணர் ஆரியச் சொல்போலும் சொல் என்றார். நச்சினார்க்கினியர் ஆரியச் சொல் என்று கூறினார். ஆனால், சேனாவரையர் “வடசொல்’’ என்று தொல்காப்பியரின் சொல்லையே பயன்படுத்தினார்.

“வடசொல்’’ என்றதும் “ஆரியச் சொல்’’ என்றதும் சமற்கிருதம் என்னும் முடிவுக்கே வந்துவிட்டனர்.
தொல்காப்பியத்துக்கு உரை எழுதிய பலரும் சமற்கிருதம் என்று கொண்டே பொருள் கூறினர்.

நன்னூலை இயற்றிய பவணந்தி முனிவர், “சீயகங்கன் என்னும் மன்னன் ‘தொல்காப்பியம் கடுமையாக இருக்கிறது. அதனை எளிமைப்படுத்திக் கொடுங்கள்’ என்று கேட்டான்; அதனால்தான் இந்த நன்னூலைப் படைத்தேன்’’ என்று கூறிவிட்டுச் சமற்கிருத மொழியின் இலக்கணம் முழுவதனையும் நன்னூலிலே விரித்துரைத்துவிட்டார்.

பவணந்தியார் காலத்தில் தமிழகத்தில் ஆரியர் நிறைந்திருந்த காலம். அது மட்டும் அன்று. பள்ளிகளில் தமிழாசிரியராக, ஆங்கில ஆசிரியராக அவரே இருந்தனர். அதனால், எல்லாப் பள்ளிகளிலும் தனிப் பயிற்சியிலும் நன்னூலே கற்றுக் கொடுக்கப் பெற்றது; தொல்காப்பியம் புறக்கணிக்கப் பெற்றது. ஓலைச் சுவடிக் காலம் முடிந்து அச்சுக் காலம் தொடங்கியதும் 1812இல் திருக்குறள் தாளில் அச்சாகியது. இலக்கண நூலுள் முதன்முதலாக 1837இல் நன்னூல்தான் அச்சாகின்றது. 1847இல்தான் தொல்காப்பியம் அச்சாகின்றது.

புறநானூறு, அகநானூறு, நற்றினை, குறுந்தொகை, சிலப்பதிகாரம், மணிமேகலை என்ற சங்க இலக்கியங்களை எல்லாம் பதிப்பித்துத் தமிழ்த் தொண்டாற்றிய தமிழ்த் தாத்தா உ.வே.சாமிநாத அய்யர் என்று வாய்வலிக்கப் புகழ்கின்றனர் தமிழறிஞர். அவர் ஏன் தொல்காப்பியத்தினைப் பதிப்பிக்கவில்லை? அவர்க்குக் கிடைத்திருக்காது என்பர். அது எவ்வளவு பொய் என்பதனை யாழ்ப்பாணம் சி.வை.தாமோதரனார் போட்டு உடைக்கின்றார். “உ.வே.சாமிநாதர் நூலகத்தில் தொல்காப்பியச் சுவடிகள் பதின்மூன்று இருந்தன. அதனைக் கொண்டுவந்துதான் நான் தொல்காப்பியத்தைப் பதிப்பித்தேன்’’ என்று கூறுகின்றார். இனத்தினது பாதுகாப்புக்கு இடைச்செருகல், இலக்கண நூலில் செய்ய முடியாது என்பதனாலும், தமிழரின் இலக்கணச் சிறப்பும் வெளிப்பட்டு விட கூடாது என்பதனாலும் அவர் தொல்காப்பியத்தினைப் பதிப்பிக்கவில்லை.

தொல்கதாப்பியத்துக்கு உரை எழுதிய ஒருவரும் சிந்தித்துப் பார்க்காத வகையில் பன்மொழிப் புலவர் கா.அப்பாதுரையார் தாம் மிகச் சரியாகச் சிந்தித்து உண்மையைக் கண்டு கூறினார். “வடமொழி என்பது சமற்கிருத-மில்லை; அது தமிழ்மொழியேதான்’’ என்று ஆணித்தரமாக எடுத்துரைத்தார் பல சான்றுகளுடன்.

கா.அப்பாதுரையார் விளக்கம்:

“ஒரு மொழியில் மக்கள் வழக்கு, இலக்கியக் கால வழக்கு, அறிஞர் இயல்நூல் வழக்கு, இயற்றுறை கடந்த மறைப் பேரறிஞர் துறை வழக்கு ஆகிய நால்வகை வழக்கிலும் ஒரே நிலையில் பரவியுள்ள சொற்களே அம்மொழியின் தாய்வளம் ஆகும். இவற்றுடன் மக்கள் வழக்கில் அருகி, இலக்கிய வழக்கில் பெருகிய சொற்களும், இலக்கிய வழக்கேறாமல் மக்கள் வழக்கில் வளர்ந்துள்ள சொற்களும், இரண்டிலும் அருகி, அறிஞர் மறைப் பேரறிஞர் வழக்கில் விளையாடும் சொற்களும், தாய்வளம், தந்தை வளம், மாமி வளம், மாமன் வளம் என்று கூறத் தக்கவையே.’’

“தொல்காப்பியர் இந்நால்வகைச் சொல் வளங்களையும் தாம் இயற்சொல், திரிசொல், திசைச் சொல், வடசொல் என்று வகுத்தனர். தமிழ் மொழிக்காகத்தான் தொல்காப்பியர் இந்தப் பாகுபாட்டை வகுத்தார். எந்த மொழிக்கும் இது பொருந்தும். உலகில் முதன்முதல் தோன்றிய மொழி நூலறிஞராகிய தொல்காப்பியர் தமிழ்மொழி ஒன்றே அறிந்தவராயினும், அத்தமிழ் மொழி ஒன்றின் இயல்பை முற்றிலும் ஊன்றி ஆராய்ந்தவர் ஆதலால், அவ்வொரு மொழி மூலமாகவே இன்றைய பன்மொழி ஒப்பீட்டறிஞர்கூட காணாத மனித இனப் பொதுமொழித் தத்துவங்களையும் இதுபோலப் பலவிடங்களில் கண்டு தமிழில் விளக்கியுள்ளார்.

“மொழி நூலின் நுண்மாண் நுழைபுல முகடு கண்ட தொல்காப்பியரின் இச் சீரிய பகுப்பு முறையின் நுட்ப நயம் காண முடியாமல் இடைக்கால, அண்மைக் கால உரையாசிரியரும் அறிஞரும் திசைச் சொல்லை இக்கால அயல்மொழிச் சொல்லென்றும் கருதி, வீணே தாமும் இடர்ப்பட்டு உலகையும் இடறி, மயங்க வைத்துள்ளனர். தொல்காப்பியர் ஒரு மொழியின் சொற்பாகுபாடு அல்லது பொதுவாக மொழியின் பாகுபாடு குறித்த ஆராய்ச்சி அறிஞர். நன்னூலார் போன்று இடைக்கால இலக்கணப் புலவர் மரபினர் அல்லர். அதனுடன் தொல்காப்பியர் காலத்தில் மனித உலகிலே இலக்கியமும், அறிவு நூலும் கலையும் மக்கள் பண்பாட்டு வழக்கும் ஒப்ப வளர்ந்து, வளம் பெற்ற மொழி தமிழ் ஒன்றுதான் வேறு   எதுவும் கிடையாது.’’

“ஆசிரியர் மறைமலை அடிகளின் தனித் தமிழுக்கு அடிப்படை தொல்காப்பியரின் இயற்சொல் என்பதில் அய்யமில்லை. ஆனால், இயற்சொல் ஒன்றே அடிகளின் தனிச் சொல்லுக்குச் சமமாகாது. இதனையறிந்தே தொல்காப்பியர் மற்ற மூன்று சொற்களையும் திரிசொல், திசைச்சொல், வடசொல் என்ற வரிசைமுறையில் வைத்தார்.

“தாய்ப்பால் குடித்தே பிள்ளை ஒன்றிரண்டாண்டு வளர்ந்தாலும், அஃது ஒன்றே பிள்ளை வாழ்வின் நலங்களுக்கு அடிப்படையானாலும், அதன்பின் தந்தை ஈட்டிய உணவும், மாமியார் அன்பு விருந்தும், மாமனார் ஆதரவும் (இம்மூவரிடைத் தவழ்ந்து வந்த அடுத்த தாய் மரபில் தொடர்பான தாரமும்) இல்லாவிட்டால், தாய் மரபின் தொடர்பு நீக்காது திரிசொல்லும் சார்ந்தே இயற்சொல்லின் தாய்வளம் புதுமரபு வளமாக வளரமுடியும். வடசொல் இயற்றுறை கடந்த மறைப் பேரறிஞர் துறை வழக்குச் சொல் பிறவற்றுக்கு வழிகாட்டுவது.’’ மேலும் விளக்குகிறார் கா.அப்பாதுரையார் “மொழிவளம்’’ என்னும் நூலில்.

பன்மொழிப் புலவர் கா.அப்பாதுரையாரின் விளக்கத்தால் நாம் அறிந்துகொள்ள வேண்டியவை. இயற்சொல் என்பது மக்கள் வழக்குச் சொல்; எந்தவிதமான புணர்ச்சி விதியும் அமையாதது. திரிசொல் என்பது இலக்கியக் கலை வழக்குச் சொல். வலித்தல் விகாரம் உள்ளிட்ட பல விகாரங்களும்; மிகுதல், வகர _ யகர உடம்படு மெய்; திரிதல் விகாரம் உள்ளிட்ட விகாரச் சொல். திசைச் சொல் என்பது அறிஞர் இயல் நூல் கடந்த வழக்குச் சொல்; அதாவது வட்டார வழக்குச் சொல்  வடசொல் என்பது இயல்துறை கடந்த மறைப் பேரறிஞர் துறை வழக்குச் சொல். அதாவது, வடசொல் என்பது மேலான _ உயர்வு பொருந்திய பேரறிஞர் பயன்படுத்திய தமிழ்ச் சொல்லே. கொடுந்தமிழ்ச் சொல்லே என்பது தெளிவாகின்றது

இயற்சொல் – எந்தவித மாற்றமும் நிகழாத                     அல்வழிச் சொல்
திரிசொல் – புணர்ச்சி விதிகளைக்                         கொண்டமைந்த சொல்.
திசைச்சொல் – வட்டார வழக்குச் சொல்.
வடசொல் – சான்றோர் பயன்படுத்திய                     கொடுந்தமிழ்ச் சொல்.

வட எழுத்து ஒரீஇ என்பது செய்யுளில் கொடுந்தமிழ்ச் சொல்லினை மட்டுமல்லை; கொடுந்தமிழ்ச் சொல்லின் ஒலிகொண்ட சொல்லினையும் பயன்படுத்துதல் வேண்டா என்று விலக்குகின்றார் தொல்காப்பியர்.

எடுத்துக்காட்டு: செய்யுளில் கடா கடாவுதல், பெருவளி, அவாவுறுதல், வெகுளி கொள்ளுதல் உள்ளிட்ட கடிய சொல்லைப் பயன்படுத்தாமல், வினா வினாவுதல், பெரும் காற்று. பேராசைப்படுதல், சினம் கொள்ளுதல் என்று எளிமையாக எழுதுதல் வேண்டும் என்பதுவே வடசொற் கிளவி; வட எழுத்து என்பது கடிய _ உச்சரிக்க முடியாத ஒலி உடைய எழுத்தைச் செய்யுளில் பயன்படுத்துதல் கூடாது என்பதாகும்.

திரு.வி.க.

திரு.வி.கலியாணசுந்தரனார் “கடா கடாவின’’ என்று எழுதியுள்ளார். “வினா விடுத்தான்’’ என்பதுவே ‘செந்தமிழ்; “கடா கடாவினான்’’ _ கொடுந்தமிழ்.

இரா.பி.சேதுப்பிள்ளை

“தமிழகம் போந்த பாதிரிமார்; தேனை மாந்தித் திளைத்தனர்; செவ்வணம் ஓதி; தமிழின் நீர்மை அறிந்து; தென்னாட்டில் வதிந்த இவை கொடுந்தமிழ். இவற்றை இரா.பி.சேதுப்பிள்ளை பயன்படுத்தியுள்ளார்.

தொல்காப்பியம் எழுந்தபோது, சமற்கிருதம் தோன்றவே இல்லை என்பதும்; தொல்காப்பியர் தமிழ்மொழிக்கு மட்டுமே உரை எழுதினார் என்பதும் அப்பாதுரையாரின் அசைக்க முடியாத உறுதிப்பாடு.

அ.மு.பரமசிவானந்தம்

“வடமொழி என்பது தமிழ்ச் சொல். தமிழகத்துக்கு வடக்கே உள்ள ஒரு மொழியை இது குறிக்கும் எனலாம். தமிழ்நாட்டு வட எல்லை சங்க காலத்துக்கு முன்பிருந்தே வேங்கடமாக அமைந்துள்ளதை நாமறிவோம். தெலுங்குதான் வடமொழி என்பதாகும்’’ என்றும்

“ஆரியம், ஆரியர் என்னும் சொற்கள் _ தமிழில் உள்ள “அரிய’’, அரியர், அறிவர், தாபதர் போன்ற நல் உணர்வாளர் இருந்தார்கள் என அறிகிறோம்.

“தமிழ்நாட்டு அரியராகிய அறிவரே ஆரியர் _ எனப்பட்டார் என்பது பொருந்தும்.

வடநாட்டு ஆரியர் சிந்துவெளிக்கு வருவதற்குப் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழ்நாட்டிலும் தமிழ் வழங்கிய பரந்த இந்தியப் பெருநிலத்திலும் வாழ்ந்தவராதல் வேண்டும்.
“வடமொழி, ஆரியம் என்பன இன்றைய சமற்கிருதத்திலும் வேறுபட்டவை என்பதும்; வடமொழி தமிழ்நாட்டு எல்லையில் வடக்கே பக்கத்திலேயே வழங்கியதாக இருத்தல் வேண்டும் என்பதும்; ஆரியம் தமிழ் நாட்டிலேயே ஒழுக்க நெறியில் உயர்ந்த அரியர்  வழங்கிய குழுஉக்குறி மொழியாகவோ அன்றி வேறு வகையாகவோ இருக்க வேண்டும் என்பதும்; இம்மொழியையும் பின் வடக்கிலிருந்து வந்த சமற்கிருதத்தையும் ஆரிய மொழி என்ற பெயரால் ஒற்றுமைப்படுத்தி இருக்க வேண்டும் என்பதும் விளங்குகின்றன’’ என்று அறிஞர் அ.மு.பரமசிவானந்தம் தமது “கொய்த மலர்கள்’’ என்னும் நூலில் கூறியுள்ளார்.

முடிவுரை

தொல்காப்பியர் “வடசொல்’’ என்று கூறுவது செய்யுளில் சான்றோர் பயன்படுத்திய கொடுந்தமிழ்ச் சொல் என்பதனையும்; தொல்காப்பியர் “வட எழுத்து ஒரீஇ’’ என்று கூறுவது _ செய்யுளில் சான்றோர் பயன்படுத்திய கொடுந்தமிழ்ச் சொல்லினையும், கொடுந்தமிழ்ச் சொல்லினது ஓசையினைத் தருகின்ற வேறு சொல்லினையும் பயன்படுத்துதல் கூடாது என்றும் கூறுகின்றார் என்பது தெள்ளத் தெளிவாகப் புலனாகின்றது.

வடமொழி, வடசொல் என்பன சமற்கிருதத்தினைக் குறிக்கா என்பவற்றை நாம் அறிந்து கொள்ளுதல் வேண்டும்.

வடசொல் _ சான்றோர் பயன்படுத்திய கொடுந்தமிழ்ச் சொல்.

வடஎழுத்து _ சான்றோர் பயன்படுத்திய கொடுந்தமிழ்ச் சொல்லின் ஒலியினைக் கொண்ட வேறு சொல்.
மொழி _ என்பதற்குச் சொல் என்றும், மொழி பாடை (பாஷை) என்றும் பொருள்தரும்.
வடமொழி _ என்பது மேலான மொழி; அந்த மேலான மொழி (சொல்) சான்றோர் பயன்படுத்திய உயர்வு நிலை பொருந்திய கொடுந்தமிழ்ச் சொல்லே ஆகும்.

ஆகையினால் வடமொழி என்பது சமற்கிருதம் இல்லை; கொடுந்தமிழ்ச் சொல்லாகும்.
சமஸ்கிருதம் மிகப் பின்னாளில் செயற்கையாக உருவாக்கப்பட்டது. தொல்-காப்பியம் மிகத் தொன்மைவாய்ந்த நூல். எனவே, அதில் சமஸ்கிருதம் பற்றிச் சொல்ல கிஞ்சிற்றும் வாய்ப்பே இல்லை என்ற உண்மையே வடமொழி என்பது சமஸ்கிருதம் அல்ல என்பதை அய்யத்திற்கிடமின்றி உறுதி செய்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *