தமிழில் பேராசிரியர் முனைவர் காளிமுத்து
புகழ்பெற்ற எழுத்தாளர் ஜான் வில்சன்
எழுதிய “india three thousand year ago” என்னும் ஆங்கில நூல் 1858 அக்டோபரில் மும்பையில் வெளியிடப்பட்டது. அது தற்போது மொழியாக்கம் செய்யப்பட்டு வெளிவருகிறது.
..இவ்வாறு இப்பெரு நிலப்பரப்பின் தொல்குடி மக்களாகிய திராவிடர்களை ஆரியர்கள் ‘தஸ்யூக்கள் (தாசர்கள் _அடிமைகள்) என்றும், அரக்கர்கள் என்றும், உக்கிரர் என்றும் பெயரிட்டு இழிவுபடுத்தினர். இவர்கள் அனைவரையும் சூத்திரர் என்ற பொதுத் தலைப்பின்கீழ் ஆரிய நூல்கள் கொண்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் உக்கிரர் என்பவர் சத்திரிய ஆணுக்கும் சூத்திரப் பெண்ணுக்கும் பிறந்தவர் என்று மனுதருமம் விளக்கம் தருகிறது. ரிக் வேதத்தில் வரும் ஒரு சொல்லுக்கு மனுதரும சாத்திரம் விளக்கம் கொடுக்கிறது. இதனால் ஆரியரின் நூல்கள் அனைத்தும் ஒன்றோடொன்று நெருங்கிய உறவு கொண்டவை என்பது தெளிவாகும்.
மேலும் ‘உக்கிரன்’ எனும் சூத்திரப் பட்டத்தை ஆரியர்கள் தமிழ் மன்னர்களுக்குச் சூட்டியிருக்கிறார்கள். பண்டிய மன்னன் ஒருவன் ‘உக்கிரப் பெருவழுதி’ என்ற பெயரைத் தாங்கியிருக்கிறான். (புறநானூறு -_-21, 367). ‘சூத்திரப் பெருவழுதி’ என்பதை அவன் பெருமைக்குரிய பட்டம் என்று கருதியிருக்கிறான்.
ஆரியர்கள் நேருக்கு நேர் மோதுகின்ற போர் மரபை எப்போதும் கடைப்பிடிக்க மாட்டார்கள். மரத்தின் பின்புறத்தே மறைந்து நின்று இராமன் வாலியைக் கொன்றதைப் போல! ஆரியர்கள் மறைந்து நின்றே எதிரிகளை அழிப்பவர்கள். அவ்வகையில் தங்களின் எதிரிகளுடைய ஆயுதக் கிடங்குகளுக்கு நெருப்பிட்டுப் போர்க்கருவிகளை அழித்திருக்கிறார்கள். இதனை மழைக் கடவுளான இந்திரனே செய்தான் என்று எழுதி வைத்தார்கள். நாளந்தா பல்கலைக் கழகத்தை ஆரியர்கள் நெருப்பிட்டு அழித்ததையும் நாம் நினைவிற் கொள்ள வேண்டும். _மொ.பெ.ஆ.)
வேதங்களின் முன்பகுதிகள் தொகுக்கப்பட்ட காலத்தில், நாம் ஏற்கனவே குறிப்பிட்டுக் காட்டியதைப் போல ஆரியர்கள் இண்டஸ் ஆற்றின் கிளையாறுகளின் கரைகளிலும், இப்போது பஞ்சாப் என்று பெயரிடப்பட்டுள்ள மாநிலத்திலும் குடியேறிவிட்டார்கள். வேதங்களுக்கு உரையெழுதிய பார்ப்பனரான ‘சாயன ஆச்சார்யா’ கிறித்துவுக்குப் பின்பு பதினான்காம் நூற்றாண்டில் வளம் கொழிக்க வாழ்ந்தவர்; ‘வேதங்களில் குறிப்பிடப்படும் ஆறுகள், தற்கால இந்தியாவை வளப்படுத்திக் கொண்டிருக்கும் பேராறுகள்’ என்று ‘சாயனர்’ உரை எழுதியுள்ளார். ஆனால், வேதங்களில் உள்ள மூலப் பாடல்களில், சாயன ஆச்சார்யாவின் கருத்துக்கு எந்தச் சான்றாதாரமும் இல்லை! வேதங்களில் கூறப்படும் ஆறுகள் அனைத்தும், ‘சுக்தா’ எனப்படும் வேத இசைப் பாடல்களை எழுதியவர்களின் கண்முன் தோன்றியவை போலக் காட்டப்படுகின்றன. இந்த இசைப் பாடல்களில் இருந்துதான் ரிக் வேதம் தொகுக்கப்பட்டது.
“இந்திரனே! நீ பசு மாடுகளைக் காப்பாற்றி ஒட்டிவந்தாய்; சோம பானத்தை வெற்றி கொண்டவன் நீ! ஏழு ஆறுகளைக் கட்டவிழ்த்து விட்டுப் பாய்ந்தோடுமாறு செய்தாய்! பேராசை பிடித்தவனைப் போல ஒரு பருந்துப் பாய்ச்சலில் 99 நீரோடைகளைக் கடந்து நீ வந்திருக்கிறாய்!’’ இந்த ‘அற்புத’ வேலைகளில் அவன் (இந்திரன்) புகழ் வாய்ந்தவன். அந்த நான்கு ஆறுகளையும் அவன் இனிமையான நீரால் நிரப்புகிறான்; இந்தப் பூமியின் மேற்பரப்பில் பாய்ந்து பரவி ஓடுமாறு செய்கிறான். “பலியிடப்பட்ட உணவுப் பொருள்கள் அனைத்தும் அக்னியில் பதப்படுத்தப் படுகின்றன. ஏழு பெரிய ஆறுகளும் ஒன்றிணைந்து கடலில் கலக்கின்றன.’’ பஞ்சாப்பில் தெற்கிலிருந்து அல்லது வடக்கிலிருந்து நாம் கடந்து சென்றால், நான்கு, அய்ந்து அல்லது ஏழு அல்லது இவற்றிற்கு அதிகமான ஆறுகளைப் பார்க்க முடியும். பார்சிகளின் ‘வெண்டிடாட்’டில் இந்த மாவட்டம் ‘ஃகப்த ஃகெண்டு (Hapta Hendu)’ என்று பெயரிட்டழைக்கப்படுகிறது. இதற்கு ‘ஏழு இண்டீஸ்’ என்று பொருள். ‘ஃகெண்டு’ எனும் சொல் ‘சிந்து’ எனும் சொல்லில் இருந்து தோன்றியதாகும். ‘சிந்து’ என்பது ‘இண்டஸ்’ என்பதற்கான சமஸ்கிருதப் பெயராகும். (அதாவது ‘இண்டஸ்’ என்பதற்கு சமஸ்கிருதத்தில் ‘சிந்து’ என்று பெயர்.) வேதத்தில் குறிப்பிட்டுக் கூறப்பட்டிருக்கும் ‘இண்டஸ்’ ஆற்றின் கரைகளில்தான், வேத இசைப் பாடல்களை உருவாக்கியவர்களில் சிலர் வாழ்ந்திருக்கிறார்கள் என்பது உண்மை.
இவ்வாறு, “எங்களுடைய பரந்த வயல்வெளிகளை நீரால் நிரப்பி வளப்படுத்தி எங்களுக்குப் பெருஞ்செல்வத்தைக் கொடுக்கும் புகழ்பெற்ற சிந்து நதியே! நாங்கள் சொல்வதைக் கேட்பாயாக’’ என்று கூறப்பட்டிருப்பதைக் காண்கிறோம். “சிந்து நதிக் கரையில் வாழும் அரசனாகிய ‘பாவ்யா’வின் புகழை மனம் விரும்பி நான் மறுபடியும் கூறுகிறேன்.’’ ரிக் வேதத்தின் பாடல் ஒன்றில், வேதங்களை வழிபடுவோருடன் தொடர்புபடுத்தி _ இணைத்து மூன்று ஆறுகள் இவ்வாறு குறிக்கப்படுகின்றன:- “மனுவின் வழிவந்தோர் குடியிருப்பதற்கு இடமாகக் கொண்டுள்ள, திரிசாத்வதி, அபாயா, சரஸ்வதி அகிய ஆறுகளின் கரைகளை ஓ! அக்னியே! புகழ்மிக ஒளியூட்டு!’’ இந்த ஆறுகள் தென்மேற்குப் பகுதியைச் சேர்ந்தவை; தென்கிழக்குப் பகுதிக்கும் இவற்றிற்கும் தொடர்பில்லை. இந்திய ஆறுகளின் அமைப்பின்படி இதுவே சரியானது என்பது எனது கருத்தாகும்.
இவற்றில் இரண்டு ஆறுகள் மனுவால் கீழ்க்கண்டவாறு குறிப்பிடப்படுகின்றன. “புனித ஆறுகளாகிய சரசுவதி, திரிசாத்வதி ஆகியவற்றிற்கிடையே கடவுளர்களால் அமைக்கப்பட்ட நாட்டிற்கு ‘பிரமவர்த்தா’ என்று பெயர். பேராசிரியர் வில்சன், தம்முடைய ‘விஷ்ணு புராணம்’ என்னும் நூலில் ‘சரஸ்வதி’யை, தானேசுவரத்திற்கு (ஸ்தானேஷ்வர்) வடமேற்கில் ஓடுகிற ‘சர்சூடி’ (Sursuti) என்று குறிப்பிடுகிறார். வேதங்களில் இந்த ஆறு குறிப்பிடப்படுகின்ற முறையை நோக்கும்போது, இது ஆரியர்களின் தனிப் பாசத்திற்குரிய ஆறாக விளங்கியிருக்கிறது என்பது தெரிகின்றது. மேலும், வேர்ச்சொல் ஆய்வின்படி இது ‘ஏரி’ என்று பொருள்படுகிறது. மணலால் மூடப் பெற்று, தன்னை இழந்து கொண்டிருந்த இந்த ஆறு, அய்ரியாவின் மூலப்பகுதியிலிருந்த ‘அரகுவாய்டி’ என்பதனுடன் ஒப்புமை உடையதாக இருந்தது. (பர்னூஃப் எனும் ஆய்வாளர் சரஸ்வதி என்பதற்கும் ‘அரசுவாய்டி’ என்பதற்கும் இடையிலுள்ள ஒற்றுமைகளை விரிவாக ஆராய்ந்துள்ளார்.
‘அரகுவாய்டி’ என்பதிலிருந்து கிரேக்கர்களின் ‘அரக்கோட்டியா’ என்ற மாவட்டம் தோன்றியது என்கிறார் பர்னூஃப்.) ‘திரிசாத்வதி’ ஆறு, சரஸ்வதி ஆற்றுக்கு அருகிலேயே ஓடியதாகக் கூறப்படுகிறது. மகாபாரதத்தில் குறிப்பிடப்படுகின்ற ‘விபாபா’, ‘திரிசாத்வதி’ விபாசா ஆகியவற்றில் ஒன்றான விபாபா என்பதுதான் ‘அபாயா’வாக இருக்கலாம். ஆனால், இது எதுவென்று அடையாளம் காணப்பட்டதா என்று எனக்குத் தெரியவில்லை. ரிக் வேதத்தின் வேறு சில பாடல்களில், மகாபாரதத்தில் குறிப்பிடப்படுகின்ற ‘விபாஷா’ என்னும் ஆற்றுக்கு இணையாக _ வேர்ச்சொல் ஆய்வின்படியும் வேதத்திற்கு உரையெழுதிய பார்ப்பன உரையாசிரியர் கருத்துப்படியும் ஒப்பானதாகக் கூறப்படுகின்ற ‘விபாத்’, தற்போதைய ‘பியாஸ்’ ஆற்றின் தோற்றமும், கிரேக்கர்களின் ‘அய்பாசிஸ் அல்லது ‘பாபாசிஸ்’, சுடுட்ரி _ பிற்காலத்தில் சுடுட்ரி அல்லது சட்லெஜ் ஆகிய ஆறுகள் விசுவாமித்திர முனிவருடன் உரையாடல் நடத்திக் கொண்டிருப்பதாகக் கூறப்படுகின்றது. விசுவாமித்திரர் வேதங்களில் பல பாடல்களை இயற்றியவர். ‘விபாஷி’, விதாஸ்தாவின் அருகில் வாழ்ந்தவர்கள், அய்டாஸ்பெஸ் அல்லது ஜீலம், சரயு (இது அயோத்திக்கு அருகில் இருந்ததா இல்லையா என்பது உறுதியாகவில்லை). இவை அனைத்தும் ‘வாம் தேவா’வின் இசைப் பாடலில் குறிப்பிடப்பட்டுள்ளன. இதனால் பஞ்சாப்பும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளும் இந்திய ஆரியர்களின் மூலக் குடியிருப்பிடங்களாக அமைந்திருந்தன என்று தெரிய வருகின்றது.
தென்கிழக்கு ஆறுகளின் அமைப்பு, ரிக் வேதத்தின் இன்றியமையாத பகுதிகளில் பேசப்படுகிறது. ரிக் வேதத்தின் நான்காம் ‘அஷ்டகா’ (பிரிவு)வில் ‘அத்ரி’யின் மரபு வழியைச் சேர்ந்த ‘சாயவஷ்வா’ என்பவரால் முதன்முதலில் யமுனை கோமதி ஆறுகள் குறிப்பிடப்படுகின்றன. (விசுவாமித்திரரின் சம காலத்தவர் என்று ‘இந்து பழமரபு’ நூல்களால் குறிப்பிடப்படுகின்ற வசிட்ட முனிவராலும் யமுனை ஆறு பேசப்படுகிறது.) கங்கை ஆறு ஒரே ஓரிடத்தில் மட்டுமே, அதுவும் அதனுடைய எட்டாவது அல்லது கடைசிப் பிரிவில் பேசப்படுகிறது. (இங்கு ஆறுகளைப் புகழ்ந்து, தற்குறிப் பேற்றமாக வேதத்தில் இசைப் பாடல்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் சிந்து நதி ஆண் பாலாகவும், ஏனைய நதிகளெல்லாம் பெண் பாலாகவும் கற்பித்துக் கூறப்படுகின்றது. சிந்து நதியே தலைவன்; இதற்குக் கீழ்ப்பட்டவையே மற்ற ஆறுகள்! கீழ்க்காணும் வரிசையில் அவை அமைக்கப்பட்டுள்ளன. சிந்து _ தலைவன்; கங்கை; யமுனை; சரஸ்வதி; சுதுத்ரி; அய்ராவதி;…..)
வேதங்களில் ‘புலி’யைப் பற்றிய எந்தக் குறிப்பையும் நான் காணவில்லை. சிங்கத்தைப் பற்றி மட்டும் சில இடங்களில் கூறப்படுகிறது. இதனால் வேதங்களை உருவாக்கிய ரிசிகள் இவற்றை உருவாக்கிய காலத்தில் _ இன்னும் அவர்கள் ‘புலிகளின் பூமியை’ வந்தடையவில்லை என்பது தெரிகின்றது. ‘சரியானாவதி’ எனும் ஏரி, பக்திமானாகிய ரிஜிகா என்பவரது ஆட்சி எல்லைக்குள் அமைந்திருந்ததாகச் சில இடங்களில் சுட்டப்படுகிறது. இதுவே பிற்காலத்தில் ‘குரச்சேத்திரா’ என்ற நாடாகியது என்ற கூறப்படுகிறது.
மனுவின் ‘சட்டத் தொகுப்பு’ புத்தவியலுக்கு _ அதன் எழுச்சிக்கு முற்பட்டது எனத் தெரிகின்றது; கிறித்துவுக்கு முன் ஏழு அல்லது ஆறாம் நுற்றாண்டைச் சேர்ந்ததாக இருக்கலாம் என்று அதன் காலத்தைக் கருதுவர். மனு நூலின் பழைய பகுதிகளின் காலத்தைச் சேர்ந்த ஆரியர்கள் தங்கள் எல்லையை ‘இண்டஸ்’ ஆற்றின் எல்லைக்கு அப்பாலும் (அதனைக் கடந்து) விரிவுபடுத்திக் கொண்டார்கள். அந்த நிலையிலும் கூட அப்போது ஆரியர்கள், விந்திய மலைத்தொடர்களுக்கு வடக்கில்தான் பெரும்பான்மையும் இருந்தார்கள்.
“கிழக்குக் கடற்பகுதிக்கும் மேற்குக் கடற்பகுதிக்கும், அதாவது விந்திய மலைக்கும் ஃகிமாவாட் மலைக்கும் இடையில் அமைந்துள்ள நிலப்பரப்பை அறிஞர்கள் ‘ஆரிய வர்த்தம்’ (ஆரியர் வாழும் இடம்) என்று பெயரிட்டு அழைத்தார்கள்’’ என்று மனுநூல் கூறுகிறது. ‘ஆரிய வர்த்தம்’ என்னும் இந்தப் பொதுவான பகுதி, ‘பிரம்மார்ஷி’ என்னும் பகுதி என்று குறிக்கப்படுகிறது. குருச்சேத்திரா, மச்சயா, பாஞ்சாலம், சூரசேனா முதலான பகுதிகளை அது உள்ளடக்கியயிருந்தது. (மனு மிமி. 19). ஃகிமாவாட், விந்திய மலைகளுக்கு இடையில் அமைந்திருந்த நாடு _ கிழக்கில் ‘வினாசனா’ வரைக்கும் மேற்கில் பிரயாகை வரைக்கும் (பிரயாகை _ கங்கையும் யமுனையும் சந்திக்கும் இடம்) பரந்திருந்த அந்த நாடு ‘மத்திய தேசம்’ அல்லது ‘இடைப்பட்ட நாடு’ என்று வேறுபடுத்திக் காட்டப்பட்டது (மனு). இண்டஸ் ஆற்றின் கிளை நதிகளின் மேல் இருந்த ஆரியர்களின் குடியிருப்புக்களுடன் இப்போது நான்கு வேறுபட்ட ஆனால், முன்னேறிக் கொண்டு _நகர்ந்து சென்று கொண்டுள்ள ஆரியக் குடியேற்றங்களை வட இந்தியாவில் நாம் பார்க்கிறோம். தென்னகத்தை நோக்கி ஆரியர் முன்னேறி வந்தமையை இங்கு நான் விளக்கத் தொடங்கினால் அது மிக விரிவாகிவிடும். ஆதலின் இங்கே குழுமியிருக்கும் பார்வையாளர்களை மனத்துள் கொண்டு நான் சில செய்திகளை இங்கே குறிப்பிட விரும்புகிறேன்.
‘அயோதா’ என்னும் நகரம் சரயு நதிக்கரையில் அவர்களால் உருவாக்கப்பட்டது; இராமாயணம் எனும் புராணக் கதையால் அது பெரும்புகழ் பெற்றது. ஒரு போர்வீரன் இருப்பிடமாக அது இருந்திருக்கலாம். (ஒரு வேளை பாசறையாக இருக்கலாம்). எல்லை கடந்துவந்த தொன்மையான அய்ரியக் குடியிருப்பாளர்களுக்குத் தெரிந்ததொரு சிறப்புப் பெயர்தான் இது! (இவர்கள் குதிரைகளை அடக்குபவர்கள்; குதிரைகளோடு நெருங்கிய தொடர்பு கொண்டவர்கள்). இந்த நாட்டிலிருந்த இந்தியர்கள், தங்களது துணைக் குடியிருப்புகளில் வாழ்ந்து வந்தனர் என்பது வியப்பிற்குரியது இல்லையென்றாலும், வடக்கில், தங்கள் கடவுளரின் உறைவிடங்கள் எனக் கருதிய, விழுமியதும் கடந்து செல்ல முடியாததுமான மலை அவர்களுக்கு அப்போது தடையாக இருந்தது. வளம் மிகுந்த அந்த நாடு, தொடக்க காலத்தில் அந்த நாட்டின் தொன்மைக் குடிமக்களாக இருந்திருப்போம் என்று அவர்கள் எண்ணத் தொடங்கியிருக்க வேண்டும். தொலைவில் உள்ள ஒரு நிலத்திலிருந்து பிறிதொரு நாட்டில் சென்று குடியேறிய காட்சிகளை அவர்கள் மறந்திருக்க வேண்டும். நர்மதை ஆற்றுக்குத் தெற்கே ஆரியர்கள் முதன்முதலாக அறிமுகமானது மதம் பரப்பும் அடிப்படை நோக்கத்தில்தான்! அதன் பின்னர் வணிகத் தொடர்புகளின் மூலமாகத் தெற்கில் அவர்களுக்குத் தொடர்பு ஏற்பட்டது. (மதத்தைப் பரப்பும்போதுகூட ஆரியர்கள் வலிந்து சென்று திணிக்கும் முறையைக் கையாளவில்லை.
‘புனிதத் திருத்தலங்கள்’ என்று சில இடங்களைத் தேர்வு செய்து, கவர்ச்சியான முறையில் தீர்த்தம் தெளிப்பது போன்ற முறைகளால் தங்கள் மதச் சடங்குகளை நிகழ்த்தி மக்களைக் கவர்ந்திழுத்தனர்). இதன் பிறகு ஆரியர்களின் குடியேற்றமும் இங்கு வாழ்ந்த மக்களை வென்று அடிப்படுத்திய நிகழ்வும் நடந்தேறின. தென்னிந்தியாவில் பாண்டிய மன்னர்கள்தாம் முதன்முதலில் ஆரியர்களுக்குக் குடியிருப்புகளை (காலனிகளை) அமைத்துக் கொடுத்த இந்தப் பணியைத் தொடங்கி வைத்தவர்கள். சேரனும், சோழனும் ஒதுங்கி இருந்தனர் என்றே தோன்றுகிறது. பேராசிரியர் லாசன் அவர்கள் கருத்துப்படி இந்தப் பேரரசுகளின் சிறப்புப் பெயர், ஆதிக்கம் செலுத்திய “வெள்ளை நிறத்தவரிடமிருந்து தோன்றியிருக்கலாம்.’’
கோகோ (Ghogho)வுக்கு அருகில் உள்ள தற்போது ‘சிகார்’ என அழைக்கப்படும் ‘சின்கா’ எனும் இனத்தவரின் தலைநகராகிய சின்காபூர் எனுமிடத்திலிருந்து சின்கா (Sinhos) இனத்தவர், இந்தியாவின் மேற்குக் கடற்கரைப் பகுதியில் தங்கள் ஆட்சி அதிகாரத்தை நிறுவினர். இலங்கைத் தீவை வென்று அதனை ‘சிங்களதீபா’ என்று பெயரிட்டழைத்தனர். மேலும், கீழைக்கடல் பகுதியில் இருந்த பல இடங்களையும் கைப்பற்றித் தங்கள் ஆட்சி அதிகாரத்தை விரிவு செய்தனர். மகாராஷ்டிரா அல்லது ‘மராத்தா’ நாட்டில் ஆரியர்கள் பெருந்தொகையினராகச் சிறப்பிடம் பெற்றிருந்தனர். கிறித்துவ ஊழியிலும் அதைத் தொடர்ந்து வந்த நூற்றாண்டுகளிலும் அதன் அருகிலிருந்த மாநிலங்களிலிருந்து அதனை வேறுபடுத்திக் காட்டுவதற்காக அது ‘ஆரியகே’ (கிக்ஷீவீணீளீமீ) அதாவது ‘ஆரியர்களின் நாடு’ (Land of the aryas) என அழைக்கப்பட்டது. இவ்வாறு அழைத்தவர்கள் கி.பி. இரண்டாம் நுற்றாண்டைச் சேர்ந்த புவியியலாளரான டாலமி (Arrian) என்பவரும் அவருடைய சமகாலத்தவராகக் கருதப்படுகின்ற கடலோடியான அட்ரியன் (கிக்ஷீக்ஷீவீணீஸீ) என்பவரும் ஆவர். இதன் விளைவாக, தற்காலத்திய கன்னடியர்களில் ஒரு சில மராத்தியருக்கு ஆரியா (ஆரியர் எனும் பொருளில்) என்று பெயர் ஏற்பட்டுள்ளது. மேலும், தென்மராத்திய நாட்டில் இருக்கும் ‘மாங்’ எனும் தாழ்த்தப்பட்ட பழங்குடி மக்களுக்கும் இப்பெயர் வைக்கப்-படுகிறது. ‘பாந்தர்’ அல்லது ‘உண்மையான வெண்ணிறம்’ என்பது இன்றும்கூட மராட்டியப் பகுதிகளில் உள்ள நகராட்சிகளுக்கு உரியதாக உள்ளது. இங்குள்ள மக்கள் இந்தப் பட்டப் பெயரின் தோற்றத்தைப் பற்றிச் சிந்திக்கவில்லையென்றாலும் (‘பாந்தர்’…) இதைப் பற்றி அவர்களுக்கு நன்கு தெரியும்.
(தொடரும்)