நவீன கொலம்பஸ்கள் மறைமலையடிகளார் நூலைப் படிக்கட்டும்!
கேள்வி : மதத்தில் புரட்சி செய்வதும், மலத்தில் அரிசி பொறுக்குவதும் ஒன்றுதானே பெரியார் மொழியில்?
– ஈ.வெ.ரா. தமிழன், சீர்காழி
பதில் : ‘போப்பாண்டவர் புரட்சியாளனாக முடியாது! புரட்சியாளன் போப் ஆக முடியாது!’ என்பது டாக்டர் அம்பேத்கரின் சிந்தனை. மதத்தில் சீர்திருத்தம் பலர் செய்தும் இதுவரை இறுதியில் வெற்றி பெற்றவர் எவருமிலர்!
கேள்வி : திராவிடக் கட்சிகள் தேர்தலில் தனித்தனியாக நின்று சாதிக்கப் போவதென்ன?
– நெய்வேலி க.தியாகராசன், கொரநாட்டுக்கருப்பூர்
பதில் : கொள்கையால் ஒன்றுபட்டு பதவியால் ஈர்க்கப்பட்டால் இந்நிலை தவிர்க்க இயலாததுதானே?
கேள்வி : பக்தியோடு கோயிலுக்கு வருபவர்கள் விபத்தில் பலியாவது எதைக் காட்டுகிறது?
– மாயவன், பாப்பாபட்டி
பதில் : ‘கடவுள் கருணையே வடிவானவன்’ என்பது பொய் _ கற்பனை _ ஆதாரமில்லாதது’ என்பதைக் காட்டுகிறது! அவர்களுக்கு நம் ஆழ்ந்த இரங்கல் _ மனிதாபிமான அடிப்படையில்!
கேள்வி : நாடாளுமன்றத்தில் அனைத்தையும் விவாதிக்கத் தயார் என்னும் பிரதமர் மோடி அவசரச் சட்டம் இயற்றத் துடிப்பது ஏன்?
– சா.கோ., பெரம்பலூர்
பதில் : இப்படி இரட்டை நாக்கு, இரட்டை வேடம் அங்கே பல உண்டே!
கேள்வி : கட்டுரை, கதை, கவிதை எழுதவும், பேசவும் ஆர்வமுள்ள இளைஞர்களைத் தேர்வு செய்து, அவர்களுக்குத் தகுதியானவர்கள் மூலம் கொள்கை வழிப் பயிற்சியளிக்கத் தாங்கள் ஏற்பாடு செய்தால் என்ன?
– மணி, வேலூர்
பதில் : நிச்சயமாக. மே மாதத்திற்குப் பிறகு, இந்த நல்ல யோசனை _ செயலாக்கப்படும் ‘பெரியார் சிந்தனைப் பட்டறை’ மூலம்
கேள்வி : அரியானாவில் பேருந்தில் வந்த கல்லூரிப் பெண்களைக் கடத்திச் சென்று வன்புணர்ச்சி செய்தவர்களின் நோக்கம் என்ன? இதை ‘விடுதலை’ தவிர மற்ற ஊடகங்கள் செய்தி வெளியிடாத பின்னணி என்ன?
– கதிரவன், திண்டுக்கல்
பதில் : ஹரியானாவில் பா.ஜ.க., (ஆர்.எஸ்.எஸ்.) ஆட்சியல்லவா நடைபெறுகிறது. மறந்து விட்டீர்களா?
கேள்வி : கர்னாடக முதல்வர் சித்தராமையா அவர்களின் கைக்கடிகாரம் சர்ச்சைக்கு உள்ளாகியுள்ளது பற்றி உங்கள் கருத்து என்ன?
– சீ.லட்சுமி, சென்னை-63
பதில் : வருந்தத்தக்கது. பகுத்தறிவுவாதிகளும் இப்படி ஆசைக்குப் பலியாகலாமா?
கேள்வி : தமிழர்களுக்காக பிறந்து வந்ததாய்ப் பேசும் “அக்மார்க் தமிழர்கள்’’ சமஸ்கிருத திணிப்பு பற்றி வாய் திறக்காதது ஏன்?
– இல.சங்கத்தமிழன், செங்கை
பதில் : பார்ப்பனரும் வீட்டில் தமிழ் பேசுவதால் தமிழர்களே என்று கண்டு-பிடித்துள்ள ‘நவீன கொலம்பஸ்கள்’. மறைமலை அடிகளார் நூற்களையாவது _ பெரியாரைப் பிடிக்காவிட்டாலும் _ படிக்கட்டும்.
கேள்வி : இராஜீவ் கொலையுடன் தொடர்புடைய 7 பேர் விடுதலைக்கு, தீர்ப்பு வந்து 3 மாதங்கள் கழித்து திடீரென இப்போது மத்திய அரசுக்கு கடிதம் எழுதுவது ஏன்? நல்லவிதமான விளைவை எதிர்பார்க்கலாமா?
– அனலரசு, அரியலூர்
பதில் : 100க்கு 100 எதிர்பார்க்க முடியாது! ஏதோ தம் பொறுப்பைத் தட்டிக் கழித்து, கிடைத்த வாக்கு வங்கி வரை லாபம் என்பதுதான் யதார்த்தம். பொறுத்துப் பார்ப்போமா?
கொடியின் இலட்சியம்
திராவிட நாடும், திராவிட சமுதாயமும் இந்திய நாடு, இந்திய சமுதாயம் என்பது போன்ற ஒரு கற்பனை நாடும், கற்பனைச் சமுதாயமும் அல்ல; கற்பனைச் சொற்களும் அல்ல. வேத – புராண – இதிகாசங்களுக்கு முன்பிருந்தே திராவிட நாடும், திராவிட சமுதாயமும், திராவிடத் தனி ஆட்சியும் இருந்து வந்திருக்கிறது. வேதத்தில் மீனக் கொடியைப் பற்றியும், இராமாயண இதிகாசங்களிலும் மீனக் கொடியைப் பற்றியும் குறிப்புகள் இருக்கின்றன.
ஆகவே, சரித்திர காலத்திற்கு முன்பிருந்தே வெகு காலமாக இருந்து வந்ததான நம் நாடும், சமுதாயமும், ஆட்சியும் மறைவு பட்டு, அன்னியர் ஆதிக்கத்திற்கும், சுரண்டுதலுக்கும், ஏவல் கொள்ளுதற்கும் ஆளாகி ஈன நிலையில் இருக்கும் நம் நாடும், சமுதாயமும் அடியோடு மறைந்து அழிந்து போன நம் அரசும் மறுபடியும் புத்துயிர் பெற்று எழ வேண்டுமானால் அவற்றிற்-கேற்ற இலட்சியத்தையும், உணர்ச்சியையும், ஊக்கத்தையும் குறிக்கும்-படியான சின்னமாக நம் திராவிடக் கொடியை திராவிட மக்கள் யாவரும் கருத வேண்டும்.
-_ கோபி மாநாட்டில் கொடியேற்றி அன்னை மணியம்மையார் பேசிய உரையிலிருந்து குடிஅரசு 13.6.1944.