வந்தவர் மொழியா? செந்தமிழ்ச் செல்வமா?

மார்ச் 16-31

புரட்சிகவிஞர் பாரதிதாசன்

பகுதி

இஃது பகுரிதி என்ற வடசொல்லின் சிதைவென்று வை.மு.கோபாலகிருஷ்ணமாச்சாரி முதலிய பார்ப்பனர் எழுதியுள்ளார்கள். இது முழுப் பூசணிக்காயைச் சோற்றில் மறைக்கும் செயலுக்கு ஒப்பாகும். பகு என்ற முதனிலை அல் இறுதிநிலை பெற்றுப் பகல் என்று வரும். அப்பகல் என்பது வேறுபாட்டால் பால் எனவும் வரும். “பால்வரு பனுவலின்” (கம்ப.யுத்த.விபீ.78) என்பதிற்போல, அப் பகு என்பதே அகரச் சாரியையும், வு இறுதிநிலையும் பெற்றுப் பகவு என வரும். அதுவே பு இறுதிநிலை பெற்றும், தல் இறுதி நிலை பெற்றும், தி இறுதி நிலை பெற்றும் பகுப்பு, பகுதல், பகுதி எனவும் வரும். பகுதி முதலியவாக இங்குக் காட்டப்பட்ட அனைத்துக்கும் பிரிவு என்பதே பொருள்.
எனவே, பகுதி என்பது தூய தமிழ்ச் சொல்லாதல் வெளிப்படை. இவ்வாறுள்ள தமிழ்ச் சொற்களையும் வடசொல் என்று கூறும் வடவர் எண்ணம் நாம் அறிந்ததேயாகும். தமிழையே வடமொழிச் சேற்றில் புதைத்து அதன் வாயிலாகத் தமிழரை ஒழித்துக் கட்டுவதே அவர் எண்ணம் என்பது தெளிவு.

அவர்களின் இந்தத் தீய-கொடிய முயற்சியானது அவர்கட்குப் பயனளித்தே வந்துள்ளது. வண்ணாஸ்த்ரீ என்பது தான் வண்ணாத்தி என்றாயிற்று எனக் கூறுகின்ற மடையர்களையும் அவர்கள் உண்டாக்கி விடவில்லையா?

கடிகை

கடிகா என்ற வடசொல்லினின்று கடிகை வந்தது என்று கூறி இழுக்குவார்கள் வடவர்.
கடி என்பது கடிகை எனத் திரிந்தது.

கடி என் கிளவி விரைவை உணர்த்தும். அது நாட்காலத்தினும் விரைந்து தீர்வது என்ற பொருளில் அமைந்துள்ளது. இதனையும்,

“கடிகைக் கிளவி நாழிகை கபாலத்திருநாள்
கண்டமும் துண்டமும் இசைக்கும்’’

என்ற பிங்கலந்தை நூற்பாவையும் நோக்குக. கடிகை என்பது நாட்காலத்தின் நண் பகுதிக்கும் ஆகும் என்பதை இதனின்று அறியலாம்.

இனி, கடி என்பது கடிகை எனத் திரிதலுண்டா என்பார்க்கு தொல் 383ஆம் நூற்பாவின் உரையே பதில் கூறும்.

எனவே கடிகை என்பது தூய தமிழ்ச் சொல்லே எனக் கடைபிடிக்க.
– (குயில்: குரல்: 1, இசை: 28, 9-12-58)

பிச்சை

இது பிக்ஷா என்ற வடசொற் சிதைவு என்று பார்ப்பனர் எழுதியும் பேசியும் வருகின்றனர்.
பித்தை_-ஊண் நிலையில் ஏற்பட்ட தவறுதலையும், மன நிலையில் ஏற்பட்ட தவறுதலையும் குறிப்பது.

பித்தை என்பது பிச்சை ஆனது போலி. ஆதலின் பிச்சை என்பது வந்தவர் மொழியன்று.
– (குயில்: குரல்: 1, இசை: 29, 16-12-58)

தச்சன்

இது தக்ஷன் என்ற வடசொல்லின் சிதைவென்று கம்பர் மாரீசன் வதைப்படலம் 2ஆம் பாட்டின் விரிவுரையில் விரிக்கின்றார் வை. மு. கோ.

தைத்து முதனிலைத் தொழிற்பெயர். அது தச்சு என்று ஆனபோது, அன் ஆண்பால் இறுதிநிலை பெற்றுத் தச்சன் ஆனது.

இனித் தச்சு = தைத்து – என்பது ஒன்று சேர்த்தல். பொருத்தல் என்னும் பொருளு-டையது. ஓர் உருவின் பல்லுருப்புகளையும் சேர்ப்பது- பொருத்துவது-என்ற காரணத்தால் அப்பெயர் வந்தது. இதை வடசொல்லார் சிற்பம் என்பார்.

எனவே தச்சு, தச்சன் செந்தமிழ்ச் செல்வங்களே எனக் கடைபிடிக்க.
– (குயில்: குரல்: 1, இசை: 29, 16-12-58)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *