அரை ஏக்கர் நிலத்தில் 3223 கிலோ நெல் விளைவித்து முதுகலைப் பட்டதாரிப் பெண் சாதனை!

மார்ச் 16-31

சமைக்கவும், துலக்கவும், கோலம் போடவும் பிள்ளை பெறவுமே பெண்கள் என்ற கட்டை அறுத்து பெண்கள் பல்வேறு துறைகளில் சாதனை புரிந்துவருகின்றனர். காவல்துறை ஆணுக்கே உரியது; பளு தூக்குதல், மல்யுத்தம், மலையேறுதல் போன்றவை ஆணுக்கே உரியவை என்ற எண்ணத்தைத் தகர்த்து அவற்றில் சாதித்துக் காட்டிவிட்டனர்.

ஆனால், வேளாண்மை ஆண்களால் மட்டுமே முடியும் என்ற உறுதியான நம்பிக்கை சமுதாயத்தில் இருந்தது. அதைத் தகர்த்து தவிடிபொடியாக்கி, சாதனை படைத்ததோடு, போட்டியிலும் வென்று காட்டியுள்ளார் பிரசன்னா. இவர் மதுரை திருப்பாலையைச் சேர்ந்தவர்.

தமிழகத்தில் அதிக நெல் விளைவிப்பதில் 150 பேர் போட்டியிட, அத்தனை பேரையும் வென்று இப்பெண் முதலிடம் பெற்றுள்ளார். 32 வயதாகும் இவர் இயற்பியலில் (physics) முதுகலைப் பட்டமும், கல்வியியலில் பட்டமும் (B.ed) பெற்றுள்ளார். முதுகலைப் பட்டதாரி ஆசிரியராகப் பணியாற்றத் தகுதியுள்ள இவர் அதைப் புறக்கணித்து வேளாண்மையை விரும்பித் தேர்வு செய்தது ஏன்? அவரே விளக்குகிறார்.

“”தலைமுறை தலை முறையாக வேளாண்மைதான் குலத்தொழில். அப்பா அம்மா வயலில் வேலை செய்வதைப் பார்த்து வளர்ந்தவள். அவர்களுடன் கழனியில் இறங்கி அவர்களுக்கு அவ்வப்போது  சிறுசிறு  உதவிகள் செய்து  உடல் முழுக்க சேறு  சகதியைப் பூசிக் கொண்டு நின்றிருக்கிறேன்.  வேளாண்மை மூலம் ஒரு முன் மாதிரியாக வேண்டும். அதற்காக  வயலை சுத்தமாகவும்  மண்ணின் வளம் கெடாமலும்  பார்த்துக் கொள்ள வேண்டும் என்பதைப் புரிந்து கொண்டேன்.

என்னைக் கல்யாணம் செய்து கொள்ள என் கணவர் பத்மநாபன் முன்வந்தது  வேளாண்மையில் எனக்கிருக்கும்  ஈடுபாட்டைப் பார்த்துத்தான்.  அவரும்  விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவர். வேளாண்மையில்  நம்பிக்கையுள்ளவர். தவிர  எங்களது  சிந்தனைகள், எண்ணங்கள் ஒரே அலைவரிசையில் அமைந்தது ஒரு அபூர்வப் பொருத்தம் என்று சொல்லவேண்டும்.

வேளாண்மை  இப்போது  ரிஸ்க்  உள்ள தொழிலாக மாறிவிட்டது. கூலி உயர்வு… உரம் அதிக விலையில் விற்கப்படுவது… பாசன நீர் பற்றாக்குறை… பெய்யக் கூடாத சமயத்தில் பெய்யும் மழை.. அவை வேளாண்மைத் தொழிலைப் பாதிக்கும் விஷயங்கள்.. ஆனால், பாரம்பரிய  வேளாண்மை  முறைகளை  ஒதுக்கிவிடாமல்,  காலத்துக்குத்  தகுந்த  புதிய கண்ணோட்டத்துடன் கூடிய  தொழில் நுட்பத்தைப் பயன்படுத்துகிற  யுக்தி  கைவரப் பெற்றால் வேளாண்மைத் தொழிலில்  ஆதாயத்தைத் தேடிக் கொள்ளலாம்.

வேளாண்மையில் சாதனை செய்ய வேண்டும் என்று தீர்மானித்த பிறகு துணிந்து வயலில் இறங்கினேன். ஒவ்வொரு ஆண்டும்  தமிழக அரசு நெல் விளைச்சலில் சாதனை புரிபவர்களுக்கு விருது  வழங்குவதுடன் அய்ந்து லட்ச ரூபாய் ஊக்கத்தொகையும் தந்து வருவது  தெரியவந்தது. அதைக் கைவசப்படுத்த வேண்டும்  என்ற முனைப்பில் எனது திட்டத்தை வடிவமைத்தேன். கணவரும் எனக்கு ஊக்கம் தந்தார். சில யோசனைகளையும்  சொன்னார்.  மூன்று முறை  நெல் விளைச்சலைக் கூட்ட  பாடுபட்டேன்…. விளைச்சல் கூடியது. ஆனால்,  விருதைப் பெரும் அளவுக்கு  சாதனை  விளைச்சலைப் பெற முடியவில்லை.  மூன்றுமுறை தொடர்ந்து தோல்விதான்….  இருப்பினும்  என் வேளாண்மை அனுபவம் பட்டை தீட்டப்-பட்டது. தொடர்ந்து முயன்றேன். “”எங்கே தவறு நடந்தது… என்ன செய்தால் அதைச் சரிசெய்யலாம்” வேளாண்மை

அலுவலர்களிடம்  யோசனை கேட்டேன்… அவர்களும் எனக்கு வழிகாட்டி ஊக்கு-வித்தார்கள்.
எனக்குச்  சொந்தமான 50 சென்ட் வயல் இருப்பது சின்னப்பட்டி கிராமத்தில். ஆரம்ப வேலையாக,  வயலில் ஆட்டுக்கிடை அமைத்து ஆட்டுப் புழுக்கைகளை  உரமாகச் சேர்த்தேன். முன்னமே  விதைத்திருந்த தக்கைப் பூண்டு செடிகளை  வயலில் மடக்கி உழுது  கூடுதல் உரமாக்கினேன். திருந்திய நெல் சாகுபடி முறைப்படி வயலில் பயிர் நட்டேன்..  மேட்டுப்பாத்தி நாற்றங்கால் அமைத்ததும்,  மண் புழு  உள்ள இயற்கை உரத்தையும்  சேர்த்தேன். விதை தேர்ந்தெடுப்பு, நாற்று-களுக்கு இடையே எவ்வளவு இடைவெளி விட வேண்டும், களைகளை நீக்குவது குறித்த  அத்தனை வேலைகளையும் ஆலோசனை கேட்டு அதன்படியே செய்தேன். களைகளை வயலிலேயே மக்கச் செய்ததால் அவையும் உரமாகின. இந்தப் பணிகள் எல்லாம்  வேளாண் அலுவலர்களின் கண்காணிப்பில் நடந்தன. விதை நெல் பயிரான போது, அவற்றை எதிர்பார்த்துக் காத்திருந்த    இலைச் சுருட்டுப் புழுக்கள்  தங்கள் தாக்குதலைத் தொடங்கின.  வேப்பெண்ணெய்  சோப்புக் கரைசல்  கலந்து தெளித்து பூச்சி தாக்குதலிலிருந்து பயிர்களைக் காப்பாற்றினேன்.

வயலில் பயிருக்கு எவ்வளவு தண்ணீர்  செலுத்த வேண்டுமோ அந்த அளவுத் தண்ணீரை  மட்டும் பாய்ச்சினேன். இதை, ‘நீர் மறைய நீர் கட்டு’ என்று பாரம்பரிய வேளாண்மையில் சொல்வார்கள். இந்த முறையில், எதிர்பார்த்த  சாதனை விளைச்சல்  சாத்தியமானது. கதிர் அறுவடையில், 50 சென்ட் வயலில் 3223 கிலோ நெல் கிடைத்தது. அறுவடை வேளாண் அதிகாரிகள் முன்னிலையில் நடந்தது” என்கிறார் பிரசன்னா.

“மாதா மாதம் நல்ல சம்பளம் தரும்  வேலை கிடைக்கவில்லை  என்று நொந்து போவதை விட, வயலில்  உழைப்பை  அறிவுபூர்வமாகவும், அறிவியல் ரீதியாகவும்  விதைத்தால்  நல்ல மகசூல் நிச்சயம்…. தேவையான வருமானத்திற்கும்    உத்திரவாதம். நிலம் சொந்தமாக  இல்லை என்றாலும், வயல்களை வாடகைக்கோ  குத்தகைக்கோ, அடமானத்திற்கோ எடுத்து  நம்பிக்கையுடன் வேளாண்மை செய்தால்  தமிழ்நாடும், இந்தியாவும் பிறரால் பேசப்படும்’’  என்றார். பெண்ணால் முடியாதது உண்டோ!
(50 சென்ட் என்பது 1/2 ஏக்கர்)

 


 

உடற்கொடைக்கு ஒப்பிய முதுபெரும் பெரியார் தொண்டர்

மானமிகு அரங்க. செல்லமுத்து 85 வயது நிரம்பிய ஓய்வுபெற்ற ஆசிரியர். உளுந்தூர்-பேட்டையில் வாழ்ந்துவரும் இவர் பணிக்காலம் முதற்கொண்டு பகுத்தறிவாளர் கழகத்தில் பங்குகொண்டு பணியாற்றி வருகிறார். தன் இளம் பருவத்திலே சுயமரியாதைத் திருமணம் செய்து கொண்டவர். தமிழ்ப் பற்று நிரம்ப உடையவர். விடுதலை, உண்மை இதழ்களின் சந்தாதாரர். பெரியார் உலகிற்கு ரூ.25,000 வழங்கியவர். திருச்சி சமூகநீதி மாநாட்டிற்கு ரூ.5,000 வழங்கியுள்ளார். இப்படி ஒரு முழுமையான பெரியார் தொண்டராய், தமிழர் தலைவர் மீது தனிப்பற்று கொண்டவராய் விளங்கும் இவர் நமது இயக்கத்தின் முக்கிய அறத்தொண்டான உடற்கொடை வழங்கவும், கண்கொடை செய்யவும் ஒப்புதல் அளித்-துள்ளார். இளைஞர்கள் பின்பற்ற வேண்டிய எழுச்சிமிகு பெரியார் தொண்டர் இவர்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *