விபத்தில் காலையிழந்தாலும் விடாது சிகரம் தொட்டவர்!

மார்ச் 16-31

அருணிமா சின்ஹா, எவரெஸ்ட் சிகரம் தொட்ட முதல் பெண் மாற்றுத்திறனாளி.

உத்திரப்பிரதேசத்தைச் சேர்ந்த அருணிமா, தேசிய அளவிலான வாலிபால் வீராங்கனை. 2011ஆம் ஆண்டு ஏப்ரல் 11ஆம் தேதி இரவு அருணிமா லக்னௌவிலிருந்து தில்லிக்கு பத்மாவதி எக்ஸ்பிரசில் சென்றபோது, சில திருடர்கள் அருணிமாவின் கைப்பையையும், தங்கச் சங்கிலியையும் திருட முயற்சித்தனர். அவர்களோடு இவர் போராடியபோது திருடர்கள் ரயிலிலிருந்து இவரை வெளியே தள்ளிவிட்டார்கள்.

பக்கத்துத் தண்டவாளத்தின் அருகில் வந்து விழுந்த அருணிமா கால் மீது, எதிர்திசையில் அந்தத் தண்டவாளத்தில் வந்த இன்னொரு ரயில் ஏறியதால், ஒரு கால் துண்டாகி விட்டது. இரவு முழுக்க வலியால் துடித்தார். பொழுது விடிந்தவுடன், உள்ளூர் மக்கள் இவரை மருத்துவமனையில் சேர்த்தனர். டாக்டர்கள் இவருடைய ஒரு காலை வெட்டி எடுத்தனர்.

ஆனால், சோர்ந்து போகவில்லை. உள்ள உறுதியோடு, தன் கனவை நனவாக்கினார். ஆம்! கடந்த வருடம் மே மாதத்தில் இமயம் ஏறி, எவவெஸ்ட் சிகரம் தொட்டு சாதனை புரிந்தார். அண்மையில், அர்ஜென்டினா நாட்டின் ஆகன்குவா சிகரத்தின் மீது ஏறி இன்னொரு சாதனை. இவருடைய வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தை பிரதமர் மோடி வெளியிட்டார். இந்திய அரசு அருணிமாவின் சாதனையை பெருமைப்படுத்தியது. ‘பத்மஸ்ரீ’ விருதளித்துப் பாராட்டிப் பெருமைப்படுத்தியது.

லக்னௌவில் வசித்து வரும் அருணிமா சின்ஹா, தன் சாதனை பற்றிக் கூறுகையில், “அந்த ரயில் பயண நிகழ்வை இன்று நினைத்தாலும், எனக்கு உடம்பு அதிரும். எப்படி நான் என் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு அந்த இரவைக் கழித்தேன் என்பது இன்னமும் எனக்கு ஆச்சரியம்தான்.’’

‘தில்லி மருத்துவமனையில், டாக்டர்கள், “இனிமேல் வாலிபால் விளையாட முடியாது’’ என்று சொன்னபோது, பெரும் அதிர்ச்சிக்குள்ளானேன். ஆனாலும், என் வாழ்க்கை இருண்டு போய்விட்டதாக நினைக்கவில்லை. “வாலிபால் விளையாட முடியாமல் போனால் என்ன? வாழ்க்கையில்வேறு எதையாவது சாதிக்க வேண்டும்’’ என்று நினைத்தேன். என் அம்மா அளித்த ஊக்கமும் என்னை சகஜ நிலைக்குக் கொண்டுவந்தது. பச்சேந்திரி பால்தான் எனக்கு ரோல் மாடல். செயற்கைக் காலுடன் எவரெஸ்ட் சிகரத்தை அடைவது என்ற இலக்கை நிர்ணயித்துக் கொண்டதும், அவரை சந்தித்துப் பேசினேன். அவர் அளித்த ஊக்கம் எனக்குள்ளே புது ரத்தம் பாய்ச்சியது.’’

“எவரெஸ்ட் பயணத்துக்கு முன்பாக, கடுமையான பனிப்புயல் வீசியது. என்னுடைய குழுவின் கைடு, நாம் பயணத்தை ஒத்திவைக்க வேண்டியதுதான் என்று சொன்னபோது, நான் துணிவோடு பயணம் தொடங்கலாம் என்று உறுதியாகச் சொன்னேன். செயற்கைக் கால் கொண்ட என் உறுதி அவருடைய குழப்பத்தைப் போக்கியது. மரணம் அனைவரும் சந்திக்க வேண்டிய ஒன்று. ரயிலில் அடிபட்ட அன்றே  அதை நான் சந்தித்து, மீண்டுவிட்டேன்.  மலையேற்றத்தின்போது, மூன்று முறை என் செயற்கைக் கால் கழன்று வந்துவிட்டது. அதை சரியாகப் பொறுத்திக் கொண்டு, முன்னிலும் அதிக முனைப்போடு மலையேறினேன்.

முதல் முறை மலையேற்றம் என்னால் முடியும் என்று எனக்கே நிரூபித்துக் கொள்வதற்கானது. அடுத்தது, மற்றவர்களுக்காக நான் மேற்கொண்டது உலகில் உள்ள எல்லா கண்டங்களிலும் இருக்கும் மலைச் சிகரங்களில் ஏறி இந்தியக் கொடியை நாட்டுவது என் லட்சியம்.’’

“என் வாழ்வின் மகிழ்ச்சி தருணங்கள் அவை. புத்தக வெளியீட்டின்போது, நிகழ்ச்சித் தொகுப்பாளர் முதல் பிரதமர்வரை அனைவரும் “இன்று அருணிமாவின் நாள்’’ என்று திரும்பத் திரும்ப சொன்னபோது எனக்கு பெரும் சந்தோஷமாக இருந்தது. நான் என் வாழ்க்கையில் பட்ட அத்தனை கஷ்டங்களுக்கும் ஒரு பரிகாரம் போல அவை அமைந்தன’’ என்று கூறியவர், “இளைஞர்கள் இலக்கை நிர்ணயித்துக்கொண்டு, பயணம் தொடங்க வேண்டும். கவனம் சிதறாமல், இலக்கை அடைய வேண்டும். நான், ஆட்டோகிராஃப் கேட்பவர்களுக்கு ‘ஜெய் ஹிந்த்’ என்று எழுதி, கையெழுத்துப் போட்டுத் தருவேன். காரணம், இந்தியன் என்பதில் என்னைப் போலவே எல்லோரும் பெருமை கொள்ள வேண்டும்’’ என்று இளைஞர்களுக்குத் தன் அறிவுரையை வழங்கினார்.ஸீ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *