தமிழர்க் கொரு திருநாள் – அது தைத்திங்கள் முதல் நாள்
சமயத்துறை அறவே – உயர்
தமிழ் வாழ்த்தும் பெருநாள்.
நமை ஒப்பார் யாவர்? – நம்
தமிழ் ஒப்பது யாது?
கமழ் பொங்கல் நன்னாள் – புதுக்
கதிர் கண்ட பொன்னாள்!
ஏரோட்டும் இரு தோள் – ஒரு
சீர் போற்றும் திருநாள்!
ஆரோடும் உண்ணும் – நெல்
அறுவடை செய் பெருநாள்!
போராடும் கூர் வாள் – பகை
போக்குவ தோர் பெருநாள்!
ஊரோடும் உறவோ – டும்
உள மகிழும் திருநாள்.
மாடுகளும் கன்று – களும்
வாழியவே என்று
பாடுகின்ற நன்னாள் – கொண்
டாடுகின்ற பொன்னாள்!
வீடுதெரு வெங்கும் – எழிற்
சோடனை விளங்கும்
நீடுதமிழ் நாடு – புகழ்
நீட்டுகின்ற திருநாள்!
– குயில்: 12.1.60