அன்னையார் பற்றி அய்யா!….
மணியம்மையார் இயக்கத் தொண்டுக் கென்றே என்னிடம் வந்த இந்த 20 ஆண்டில் எனது வீட்டு வசதிக்கான பல காரியங்களுக்கு _ தேவைக்கு உதவி செய்து வந்ததன் காரணமாக என் உடல் நிலை எப்படியோ, என் தொண்டுக்குத் தடையாயில்லாமல் நல்ல அளவுக்கு உதவி வந்ததால் என் உடல் பாதுகாப்பு, வீட்டு நிர்வாகம் ஆகியவற்றில் எனக்குத் தொல்லை இல்லாமல் இருக்கும் வாய்ப்பை அடைந்தேன்.
– “விடுதலை’’ (15.10.1962)
* * *
எனது காயலா சற்றுக் கடினமானதுதான். எளிதில் குணமாகாது. மூத்திர வழியிலே கற்கள் இருக்கின்றன. அவை கரைய மாதக் கணக்கில் காலமாகும். ஒரு சமயம் ஆப்ரேஷன் (அறுவைச் சிகிச்சை) தேவை இருந்தாலும் இருக்கலாம். ஆனாலும், நான் பயப்படவில்லை. எதற்கும் தயாராக இருக்கிறேன். மணியம்மையார் கவனிப்பும், உதவியும் அளவிடற்கரிது.
(தந்தை பெரியார் 89ஆம் பிறந்தநாள் மலர்)
– “விடுதலை’’ (17.9.1967)
* * *
ஆகஸ்ட் முடிந்தால் 93 வயது முடிந்துவிட்டது. செப்டம்பர் பிறந்தால் 94ஆம் ஆண்டு பிறக்கின்றது. தயவு தாட்சண்யம் காட்டாமல் சுதந்திரமாய் இருந்து பார்க்கலாம் என்று கருதுகின்றேன்.
நான் சென்னைக்கு வந்தால் உண்மை மாத இதழையும், சென்னைக்குக் கொண்டு வந்துவிடலாம் என்று கருதுகின்றேன்.
சென்னைக்கு வருவதில் வேறு பல சங்கடங்களும் இருக்கின்றன. திருச்சியில் பயிற்சிப் பள்ளிகள் இரண்டு இருக்கின்றன; பிரைமரிப் பள்ளி ஒன்று இருக்கின்றது; அநாதைப் பிள்ளைகள் விடுதி ஒன்று இருக்கின்றது; வரும் ஆண்டு முதல் உயர்நிலைப் பள்ளி ஒன்று ஏற்படுத்த அனுமதி பெற்று நடத்தப்படப் போகின்றது. ஈரோட்டில் ஒன்று ஏற்படுத்த உத்தேசம். இவையெல்லாம் திருமதி மணியம்மையார் முயற்சியில்தான் நடைபெறுகின்றன. 10, 12 ஏக்கர் தோட்டப் பண்ணை ஒன்றும் நடைபெறுகின்றது. பல ஆயிரக்கணக்கில் வாடகை வரும் பல கட்டடங்களும் திருச்சியில் இருக்கின்றன. ஆகவே, மணியம்மை அவர்கள் திருச்சியில் இருக்க வேண்டியிருக்கிறது.
நான் சென்னைக்கு வந்தால், மணியம்மையார் என்னைத் தனியாய் இருக்கச் சம்மதிக்க மாட்டார்கள். அவர்கள் சென்னைக்கு வந்துவிட்டால், திருச்சி நடப்புகள் பாதிக்கப்படும்.
இது ஒரு சங்கடமான நிலைமை என்றாலும் ஏதாவது செய்தாக வேண்டியிருக்கிறது.
(தலையங்கம்)
– விடுதலை (19.07.1972)
அன்னையார் பற்றி புரட்சிக்கவிஞர்…
தாம் போகும் வழிகளை மறித்துக் கொண்டிருந்த ஒரு குன்றத்தைக் குத்தி உடைத்துக் கொண்டிருந்த இரண்டு தோள்களைக் கண்டோம். தம்மை நோக்கிச் சீறிவருகின்ற நெருப்பு மழைக்குச் சிரித்துக் கொண்டிருந்த இரண்டு உதடுகளைக் கண்டோம். தமிழ்நெறி காப்பேன் _ தமிழரைக் காப்பேன் _ ஆரிய நெறியை அடியோடு மாய்ப்பேன் என்று அறையில் அல்ல _ மலைமேல் நின்று மெல்ல அல்ல, தொண்டை கிழிய முழக்கமிடும் ஓர் இருடியத்தால் செய்த உள்ளத்தைக் கண்டோம்.
அதுமட்டுமல்ல;
குன்று உடைக்கும் தோளும், நெருப்பு மழைக்குச் சிரித்த உதடுகளும் இருடிய உள்ளமும் ஒரே இடத்தில் கண்டோம். இந்த அணுகுண்டுப் பட்டறைதாம் பெரியார் என்பதும் கண்டோம்.
யாரைப் புகழ்ந்து எழுதினோம், புகழ்ந்து பாடினோம்? ஆயினும் நாம் புகழ நாம் பாட இன்னும் மேலான பொருள் வேண்டுமென்று ஆராய்ந்து கொண்டிருந்தோம்.
பெரியார் செத்துக் கொண்டிருந்தார். தமிழர் அழுது கொண்டிருந்தார்கள்.
ஆனால், பெரியாரின் உடம்பை விட்டுப் பிரிந்து போக மூட்டை முடிச்சுகளுடன் காத்திருந்த உயிரைப் போகாதே என்று பிடித்து இழுத்து வைத்துக் கொண்டிருந்தவை இரண்டு. ஒன்று அவரின் பெருந்தொண்டு; மக்கள் மீது அவர் வைத்திருந்த அருள் மற்றொன்று.
ஆயினும்,
காற்றிறங்கிய பொதிமாடு போல் பெருத்துத் தொங்கும் அவர் விதையின் ஒருபால் ஒட்டிய ஆண்குறியினின்று முன்னறிவிப்பு இன்றிப் பெருகும் சிறுநீரை உடனிருந்து கலன் ஏந்திக்காக்கும் ஓர் அருந்தொண்டு, அவர் பெருந்தொண்டால் முடியாது; அவர் மக்கள் மேல் வைத்துள்ள அருளால் முடியாது. பெரியார் வாழட்டும் என்று தன் துடிக்கும் இளமையைப் பெரியார்க்கு ஒப்படைத்த ஒரு பொடிப் பெண்ணை.
அன்னை என்று புகழாமல் நாம் வேறு என்ன என்று புகழவல்லோம்?
பெரியார் மேடை மேல் வீற்றிருப்பார். ஓர் இலக்கம் தமிழர் அவரின் தொண்டுக்காக மல்லிகை முதலிய மலர்களாலும் வெட்டிவேர் முதலிய மணப் பொருளாலும் அழகு பெறக்கூடிய மாலை ஒவ்வொன்றாகச் சூட்டிப் பெரியார் எதிரில் இரண்டு வண்டியளவாகக் குவிப்பார்கள்.
அதே நேரத்தில் எல்லாம் உடைய அன்னை மணியம்மையார் ஏதுங்கெட்ட வேலைக்காரிபோல் மேடைக்கு ஏறத்தாழ அரைக்கல் தொலைவில் தனியே உட்கார்ந்து சுவடி விற்றுக் கொண்டிருப்பார்கள்.
ஒரே ஒரு மாலையை எந்துணைவியார்க்குப் போடுங்கள் என்று அந்தப் பாவியாவது சொன்னதில்லை. எம் அன்னையாவது முன்னே குவிந்துள்ள மாலைகளை மூட்டை கட்டுவதன்றி _ அம் மாலைகளில் எல்லாம் மணக்கும் பெரியார் தொண்டை முகர்ந்து முகர்ந்து மகிழ்வதன்றி ஓர் இதழைக் கிள்ளித் தலையில் வைத்தார் என்பதுமில்லை.
(‘குயில்’ இதழ், 10.04.1960)
அன்னையார் பற்றி அண்ணா…
“அய்யா அவர்களிடம் நான் வந்து சேரும்போது, இப்போது எனக்கு என்ன வயதோ, அதே வயதுதான் அப்போது அய்யாவுக்கு. இப்பொழுது எனது உடலில் என்னென்ன கோளாறுகள் உள்ளதோ, அதைவிட அதிகமான கோளாறுகள் அய்யாவுக்கு இருந்தன. அப்படியிருந்த அய்யாவை, கடந்த முப்பது ஆண்டுகளாகக் கட்டிக் காத்து அவரை நோயின்றி உடல் நலத்தோடு பாதுகாத்து வரும் பெருமை மணியம்மையாரையே சேரும்.’’