மனிதக் கழிவுகளை கைகளால் அகற்றுவது மிகவும் கொடூரமான நடைமுறை. இந்த நடைமுறையை 6 மாதத்தில் ஒழிக்க நாட்டின் மூலை முடுக்கெல்லாம் மக்கள் சபதம் ஏற்க வேண்டும். மலம் அகற்றும் பணியில் தலித், பழங்குடியின மக்களை ஈடுபடுத்துபவர்களை எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் 3 ஆவது பிரிவில் தண்டிக்கலாம் என்று மத்திய உள்துறை அமைச்சகம் சமீபத்தில் அறிவுறுத்தியது. இதை எல்லா மாநில அரசுகளும், முழு வீச்சில் அமல்படுத்த வேண்டும்.
– மன்மோகன்சிங், பிரதமர், இந்தியா
இலங்கைப் போரை இறுதிக் கட்டத்துக்குக் கொண்டுசெல்லும்போது மிகவும் கவலையளிக்கக்கூடிய சம்பவங்கள் நிகழ்ந்துள்ளதாகத் தெரியவருகிறது. இது தொடர்பான விரிவான விசாரணையை இலங்கை மேற்கொள்ள வேண்டும் என உலகின் மற்ற அரசுகளுடன் இணைந்து இங்கிலாந்து அரசும் வலியுறுத்துகிறது. மேலும், இறுதிக்கட்டப் போரின்போது நடைபெற்ற சம்பவங்கள் தொடர்பாக அய்.நா. விசாரணை அவசியம் என்றும் இங்கிலாந்து அரசு வற்புறுத்துகிறது. அப்போதுதான் எதிர்காலங்களில் அதுபோன்று நடைபெறாமல் தடுப்பதற்கு நாம் பாடம் கற்றுக்கொள்ள முடியும்.
– டேவிட் கேமரூன், பிரதமர், இங்கிலாந்து
இன்று எதிர்க்கட்சி வரிசையிலேகூட உட்கார்ந்து பணியாற்ற முடியாத நிலை உருவாகியுள்ளது. இதை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம். இதற்காக நாங்கள் வெட்கப்படவில்லை. எதிர்க்கட்சியாகப் பணியாற்றக்கூடிய வாய்ப்பு தி.மு.க.வுக்கு இல்லாவிட்டாலும் மக்கள் மன்றத்திலே நின்று பணியாற்றும் கட்சியாக தி.மு.க. விளங்கும் என்று கூறிக்கொள்கிறேன். ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் நாட்டு மக்களுக்காகத் தொண்டாற்றக்கூடிய கழகமாகத்தான் அண்ணா இந்த இயக்கத்தை உருவாக்கித் தந்தார்கள். வெற்றி தோல்வியை ஒன்றாகக் கருதிச் செயல்படும் கட்சியாகத்தான் தி.மு.க. செயல்பட்டு வந்துள்ளது.
– மு.க.ஸ்டாலின், தி.மு.க. பொருளாளர்
அ.தி.மு.க தலைமையின் உள் மனதுக்குள் ஒரு ரகசியமான அஜெண்டா இருந்தது. நானோ அல்லது என்னைச் சார்ந்தவர்களோ தமிழ்நாடு சட்ட மன்றத்திற்குள் நுழைந்துவிடக் கூடாது என்று அவர்கள் நினைத்தார்கள். இப்போது அ.தி.மு.க. கூட்டணியிலிருந்து விலகியது நல்லதாப் போச்சு என்றுதான் நினைக்கிறேன். முதல்வரின் செயல்பாடுகள் அப்படித்தானே இருக்கின்றன.
– வைகோ., ம.தி.மு.க. பொதுச்செயலாளர்
வீட்டுக்கு அருகிலேயே கபாலீஸ்வரர் கோயில். தோழர்களுடனான எங்களுடைய மாலை நேரச் சந்திப்புகள் கபாலீஸ்வரர் கோயில் படிக்கட்டுகளில்தான் நடக்கும். இப்படி, சுற்றிலும் வழிபாட்டுத் தலங்கள் சூழ வாழ்ந்தாலும் நான் நாத்திகனாகவே வளர்ந்தேன்.
எல்லா வழிபாட்டுத் தலங்களுக்கும் போய் வந்தாலும் எப்போதும் எனக்கு இறை நம்பிக்கை ஏற்பட்டதே இல்லை. அது ஏன் என்பதும் தெரியவில்லை. எங்கள் வீட்டிலும் பூஜைகள் நடந்ததாக நினைவில் இல்லை. திராவிட இயக்கச் சூழலில் வளர்ந்ததால் ஏற்பட்ட பாதிப்பாக இருக்கலாம்.
– ஜனநாதன், இயக்குநர்