தற்போது சிவில், எலெக்ட்ரிக்கல் என்ஜினீயரிங் ஆகிய பாடப்பிரிவுகளில் இறுதியாண்டு படிக்கும் மாணவர்கள் இலவசமாக கன்ஸ்ட்ரக்ஷன் டெக்னாஜியில் எம்.டெக். படிக்கவும், படித்து முடித்ததும் ஆண்டுக்கு ரூ.6 லட்சம் சம்பளத்தில் வேலையும் வழங்குகிறது எல் அண்ட் டி நிறுவனம். படிக்கும் காலத்தில் மாதம் ரூ.13,400 உதவித்தொகையாக வழங்கப்படும்.
தற்போது சிவில், எலெக்ட்ரிக்கல் என்ஜினீயரிங் ஆகிய பாடப்பிரிவுகளில் இறுதியாண்டு படிக்கும் மாணவர்கள் அய்.அய்.டி.க்களிலும் என்அய்.டிக்களிலும் இலவசமாக எம்.டெக். கன்ஸ்ட்ரக்ஷன் டெக்னாலஜி படிக்கும் வாய்ப்பை வழங்குகிறது மிகப்பெரிய கட்டுமான நிறுவனமான எல் அண்ட் டி என்று அழைக்கப்படும் லார்சன் அண்ட் டூப்ரோ. இதற்காக எல் அண்ட் டி பில்ட்_இந்தியா ஸ்காலர்ஷிப் என்ற திட்டத்தைச் செயல்படுத்தி வருகிறது. திறமை வாய்ந்த மாணவர்களைத் தேர்ந்தெடுத்து அவர்களைப் பட்டை தீட்டி, புராஜக்ட் மேனேஜர்களாக்க வேண்டும் என்பதே இந்தக் கல்வி உதவித்தொகைத் திட்டத்தின் நோக்கம்.
இத்திட்டத்தின்கீழ் தேர்வு செய்யப்படும் மாணவர்கள் சென்னை, தில்லி ஆகிய இடங்களில் உள்ள அய்.அய்.டி.க்கள், சூரத்தில், திருச்சி ஆகிய இடங்களில் உள்ள என்.அய்.டி.க்களில் கன்ட்ரக்ஷன் டெக்னாலஜியில் எம்.டெக். படிக்கலாம். இந்த இரண்டு ஆண்டு காலப் படிப்பு அடுத்த ஆண்டு ஜூலையில் தொடங்கும்.
இந்தப் படிப்பில் சேர விரும்பும் மாணவர்கள் சிவில் அல்லது எலெக்ட்ரிக்கல் என்ஜினீயரிங் பாடப்பிரிவுகளை எடுத்துப் படித்திருக்க வேண்டும். 2016_ஆம் ஆண்டில் படித்து முடிப்பவர்களாக இருக்க வேண்டியது அவசியம். அத்துடன் பட்டப்படிப்பில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே இந்த எம்.டெக். படிப்பில் சேர தேர்வு செய்யப்படுவார்கள். பத்தாம் வகுப்பிலும், 12ஆம் வகுப்பிலும் குறைந்தது 60 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டியது அவசியம்.
வரும் ஜூலை 1ஆம் தேதி நிலவரப்படி, 23 வயதுக்கு மேல் ஆகி இருக்கக்கூடாது. உயரம் குறைந்தது 160 சென்டிமீட்டர் இருக்க வேண்டும். குறைந்தது 50 கிலோ எடை கொண்டவராக இருக்க வேண்டும். கண்ணாடி அணிபவராக இருந்தால், (பிளஸ் அல்லது மைனஸ் 5 டயோப்ட்ரஸ்) இருக்க வேண்டிது அவசியம்.
இந்தப் படிப்பில் சேர விரும்பும் மாணவர்களுக்கு எழுத்துத் தேர்வு இருக்கும். அதில் பாடம் தொடர்பான கேள்விகளும் திறனறிவைச் சோதனைச் செய்யும் கேள்விகளும் கேட்கப்படும். எழுத்துத் தேர்வை அடுத்து, தகுதிவாய்ந்த மாணவர்களுக்கு நேர்காணல் நடத்தப்படும். எல் அண்ட் டி கன்ஸ்ட்ரக்ஷன் நிறுவனத்துடன் இணைந்து அய்.அய்.டி.க்கள், என்.அய்.டி.கள் சார்பில் எழுத்துத் தேர்வும் நேர்காணலும் நடத்தப்படும். இதில் தகுதி பெறுபவர்களுக்கு மருத்துவச் சோதனையும் இருக்கும்.
எம்.டெக். படிப்பில் சேர தேர்வு செய்யப்படும் மாணவர்கள் படிப்புக் கட்டணம் செலுத்தத் தேவையில்லை. அதனை எல் அண்ட் டி நிறுவனமே செலுத்திவிடும். அத்துடன், இப்படிப்பில் சேரும் மாணவர்களுக்கு மாதம் ரூ.13,400 வீதம் இரண்டு ஆண்டுகளுக்கு உதவித்தொகை வழங்கப்படும்.
இந்தப் படிப்பை வெற்றிகரமாக முடிக்கும் மாணவர்களுக்கு எல் அண்ட் டி நிறுவனத்தில் நிரந்தர வேலை கிடைக்கும். தொடக்க நிலையில் ஆண்டுக்கு ரூ.6 லட்சம் வீதம் ஊதியம் வழங்கப்படும்.
இந்தப் படிப்புக்காகத் தேர்வு செய்யப்படும் மாணவர்கள், படிப்பை முடிக்கவும், அதைத் தொடர்ந்து எல் அண்ட் டி நிறுவனத்தில் பணிக்குத் தேர்வு செய்யப்பட்டால் குறைந்தது 5 ஆண்டுகள் பணிபுரிவதற்கும் ரூ.3 லட்சத்துக்-கான உத்தரவாதம் அளிக்க வேண்டும்.
எல் அண்ட் டி பில்ட் இந்தியா ஸ்காலர்ஷிப் திட்டத்தின் கீழ் எம்.டெக். படிக்க விரும்பும் மாணவர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
விவரங்களுக்கு:www.lntecc.com