பெரியார் சுயமரியாதை இயக்கம் கண்டார் – ஏன்?

பிப்ரவரி 01-15

சிறந்த நூலிலிருந்து சில பக்கங்கள் :

பெரியார் சுயமரியாதை இயக்கம் கண்டார் – ஏன்?

நூல்:
மனித உரிமைப்போரில்
பெரியார் பேணிய அடையாளம்
ஆசிரியர்:
பேராசிரியர் கு.வெ.கி.ஆசான்
பக்கங்கள்: 192
விலை: 80/-
வெளியீடு:
பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனம், பெரியார் திடல்,  வேப்பேரி, சென்னை-7

காங்கிரசுக்காரர் என்ற வகையில் காந்தியின் ஒத்துழையாமைக்கும் ஆக்கப்-பணிக்கும் சுமார் ஏழாண்டுக்காலம் முழுமூச்சுடன் உழைத்தவர் பெரியார். 1925ஆம் ஆண்டு நவம்பர் 25இல் அக்கட்சியை விட்டு வெளியேறி, அதை உரத்தோடு எதிர்த்து சுயமரியாதைக் கட்சி எனும் புதிய இயக்கம் கண்டதேன்? காங்கிரசின் எந்தெந்தப் போக்குகள் பெரியாருக்கு வெறுப்பை யூட்டின? காந்தியார் மீது ஏன் கசப்புக் கொண்டார்?

நாட்டு மக்களின் நிலையை மறந்து, தேசமே பெரிது எனக் காங்கிரசுத் தலைவர்கள் கூறியதைப் பெரியார் ஒப்பவில்லை. மக்களின் பொது உரிமையை மறுக்கும் அரசியல் உரிமை பொருளற்ற தென்பதைக் கண்டார். மனிதநேயம் சமஉரிமை, சமூகநீதி எனும் ஆதார இலக்குகளை மனதிற்கொண்டு, பொது அறிவு, உலக ஞானம், ஆராய்ச்சி, பட்டறிவு ஆகியவை காட்டும் உண்மையைக் கெட்டியாகப் பற்றி நடப்பதே முறையெனக் கொண்டார். இந்த நெறிக்கு முரண்படும் வகையில் காந்தியின் இயக்கம் சென்றதால் அதை அவர் புறக்கணித்தார்.

நாட்டின் முன்னேற்றமென்பது அதிலுள்ள பொது மக்களின் முன்னேற்றமாகும். அஃது அல்லாமல் சதுர்வருணியச் சாதியமைப்பின் கீழ், எப்பொழுதும் போலப் பார்ப்பனரின் மேலாதிக்கத்திற்கு நாட்டுரிமைக் கிளர்ச்சி துணை போகுமாயின் அதனால் என்ன பயன்? பண்டு தொட்டு வரும் பெருஞ் சமுதாயக் கேட்டிற்குத் துணையாவதாக அல்லவா முடியும்?

இத்தகைய கருத்தைப் பின்புலமாகக் கொண்டு காங்கிரசின் நடப்புகளையும் காந்தியாரின் தலைமையையும் அணுகிய பெரியாருக்கு அடுத்தடுத்து அவை ஏமாற்றத்தையே தந்தன. அவற்றை நாம் இங்கு நினைவு கூர்தல் தேவையாகிறது.

முதலில், தமிழர் தலைவர் என்ற நூலில் சாமி சிதம்பரனார் கூறுவதைப் பார்ப்போம்: கதர் போர்டு நிர்வாகத்தில் ஈ.வெ.ரா. தலைவராக இருந்தபோதிலும், கே. சந்தானம் என்கிற ஒரு பார்ப்பனர் காரியதரிசியாக இருந்ததால், அதில் பார்ப்பனர்களே மிகுதியாக இருந்து வந்ததும், அதன் உருபாய் முழுதும், அதற்காகச் செலவிடும் பொருளும், பெரும்பாலும் பார்ப்பனர்களுக்கே பயன்பட்டு வந்ததும் இவருக்குப் பிடிக்கவில்லை. அதற்காகச் செய்த பல போராட்டங்களில் காந்தியார் தலையிட்டதால் ஈ.வெ.ரா. வெற்றி பெற முடியவில்லை.

இரண்டாவதாக, காந்தியின் ஒத்துழை-யாமைக்கும் ஆக்கப்பணிக்கும் மாறாக, 1923இல் சட்டசபை நுழைவை வற்புறுத்திய சுயராச்சியக் கட்சியை நேரடியாகவும், மறைமுகமாகவும் கிட்டத்தட்ட அனைத்துச் செல்வாக்குள்ள பார்ப்பனரும் ஆதரித்தனர். சட்டசபை நுழைவு கூடாது என்று மாறுதல் வேண்டாத பெரியாரை ராஜாஜி போன்ற மிகச் சிலரே ஆதரித்தனர்.

1922ஆம் ஆண்டு இறுதியில் நடந்த கயை காங்கிரசில் இருந்து, சுயராச்சியக் கட்சி தோன்றிய நாள்தொட்டு, இராமசாமி நாயக்கருக்கு அரசியல் உலகில் ஒருவித மருட்சி உண்டாயிற்று எனவும், அக்கட்சியின் தோற்றத்தால் பிராமணர்க்கு ஏற்றமும் மற்றவர்க்கு இறக்கமும் உண்டாகும் என்று இராமசாமியார் கூறுவார் எனவும் எழுதும்
திரு. வி.க. ஒரு செய்தியைச் சொல்கிறார்: தென்னாட்டில் மாறுதல் வேண்டாமைக்குப் போதிய பிரசாரஞ் செய்யப்படவில்லை. அப்பிரச்சாரத்தில் முனைந்து நிற்பவர் ராமசாமி நாயக்கர் உள்ளிட்ட சிலரே.

1923 மே மாதத்தில், சுயராச்சியக் கட்சி, காங்கிரசுக்குள் இருந்து கொண்டே சட்டசபைக்குப் போட்டியிட அனுமதிக்கலாம் என்ற சமாதானத் தீர்மானத்தை அகில இந்தியக் காங்கிரசுக் குழு நிறைவேற்றியது. 1924 பிப்ரவரியில் சிறையிலிருந்து வந்தபின், ஒரு கட்டத்தில் காந்தியாரும் அக்கட்சியுடன் சமாதானம் செய்து கொள்ள வேண்டிவந்தது. வகுப்புரிமையை எதிர்த்துக் கொண்டு, அதே நேரத்தில் சட்டசபை பதவிக்குத் திட்டம் தீட்டிய தேசபக்த வருண தருமிகளின் செயல் பெரியாருக்கு ஏமாற்றமாயிற்று.

மூன்றாவதாக, வைக்கம் மகாதேவர் ஆலயத்தைச் சுற்றியுள்ள தெருக்களில் தீண்டாமையை விலக்க நடந்த போராட்டத்தில் தமிழ்நாட்டின் சதுர்வருணிகள் ஒத்துழைப்புத் தரவில்லை. அண்டை மாநில விவகாரத்தில் தலையிட வேண்டாம் என ராஜகோபாலாச்சாரி எழுதினார். சீனிவாச அய்யங்கார் வைக்கத்திற்கே நேராக வந்து திரும்பிவரக் கோரினார். கேரளத்துக் காங்கிரசாரில் இந்துக்களைத் தவிர, சீக்கிய அகாலிகள் உட்பட, வேறு மதத்தவரோ, மாநிலத்தவரோ எவரும் கலந்து கொள்ளக் கூடாது என, காந்தியார் தடுப்புச் சுவர் எழுப்பினார். தீண்டாமையில் தீவிர ஆர்வம் காட்டிய ஆரிய சமாஜத் தலைவர் சுவாமி சிரத்தானந்தர், லீடர் எனும் ஆங்கில இதழில் 1924 ஜுன் 8இல், காந்தியார் தலையிடாமலிருந்திருந்தால் அதற்குள் வைக்கம் கிளர்ச்சி வெற்றியடைந்திருக்குமென எழுதினார். ஜார்ஜ் ஜோசப், பெரியார், அவர் மனைவி, இராமநாதன், கோவை அய்யாமுத்து, பிற்காலத்துப் பெருந்தலைவராய் வளர்ந்த,

கு. காமராசர் முதலியவர்கள் இந்தத் தடுப்பைத் தாண்டியே வைக்கம் கிளர்ச்சியில் பங்கேற்றனர். தொடங்கி ஓராண்டிற்குப் பின்பு, வெற்றியடையும் தருவாயில், ஒப்பந்தம் செய்வதற்குக் காந்தியாரைப் பார்ப்பனர்கள் பயன்படுத்தினர்.

நான்காவதாக, 1924 பிற்பகுதியிலும் 1925 முற்பகுதியிலும், திருநெல்வேலி மாவட்டம் சேரன்மகாதேவியில் வ.வே.சு. அய்யர் பொறுப்பில் இருந்த குருகுலத்தை எதிர்த்து நடந்த போராட்டத்தைக் குறிப்பிடலாம். இதன் வளர்ச்சிக்குக் கானாடுகாத்தான் வய்.சு. சண்முகம் செட்டியார், திரு.வி.க., பெரியார், டாக்டர்

பி. வரதராசுலு போன்றவர்கள் உழைத்தனர். ஆனால், அக்கல்விக் கூடத்தில் பார்ப்பனருக்கும் பிறருக்கும் தனித்தனியே உணவு கொடுத்தனர். செயலாளரான பெரியார் விருப்பத்திற்கு மாறாகத் தமிழ்நாடு காங்கிரசுப் பணத்தை அதற்குப் பயன்படுத்தினர். ஆகையால், மேற்சொன்னவர்களோடு எஸ். இராமநாதன், என். தண்டபாணி பிள்ளை முதலியவர்கள் சேர்ந்து எதிர்ப்பைக் காட்டினர். காந்தியார் தலையிட்டும் நல்ல தீர்வு பிறக்க வ.வே.சு. அய்யரும், பார்ப்பனரும் ஒப்பவில்லை. குருகுலத்தை மூடிவிட்டனர்.

அய்ந்தாவதாக, பார்ப்பன வெறுப்புப் பிரச்சாரம் செய்வதாக, அக்காலத்தில் காங்கிரசுத் தலைவராக இருந்த டாக்டர் வரதராசுலு மீது, திருச்சிராப்பள்ளியில் நடந்த காங்கிரசுக் குழுக் கூட்டத்தில் தீர்மானம் கொண்டு வந்தது நினைவு கொள்ளத்தக்கது. தீர்மானத்தைப் பெரியாரின் எதிர்ப்புரை தோற்கடித்தது. உடனே, டாக்டர் டி.எஸ்.எஸ். ராசன், சி. ராசகோபாலாச்சாரி, என்.எஸ். வரதாச்சாரி, கே. சந்தானம், டாக்டர். சாமிநாத சாஸ்திரி ஆகிய அய்ந்து பேரும் குழுவிலிருந்து விலகினர். ஆக, வருண தரும ஏற்பாட்டிற்குச் சிறிது மாற்றம் வந்தாலும் பார்ப்பனர் ஒத்துழைக்க மறுப்பதைப் பெரியார் கண்டார்.

ஆறாவதாக, பார்ப்பனருக்கும் பிற காங்கிரசாருக்கும் இடையில் இன்னொரு காரியத்தாலும் பிளவு வெளிப்பட்டது. 1924இல் பனகல் அரசர் ராமராயநிங்கார் தலைமையில் நடந்த சென்னை மாகாண நீதிக்கட்சி அரசு, அறநிலையப் பாதுகாப்புச் சட்டத்தைக் கொண்டு வந்தது. மதத்தில் தலையிடுவதாகச் சனாதனிகளும், மடாதிபதிகளும், காங்கிரசுப் பார்ப்பனரும் குரல் எழுப்பினர். பெரியாரும் அவருடைய தோழர்களும், கட்சி வேற்றுமை பாராட்டாது சட்டத்திற்கு ஆதரவு தரவேண்டும் என்றும், அதனால் அறநிலையச் செல்வங்கள் கொள்ளை போகாமல் ஒழுங்குறப் பயன்பட வழிபிறக்கும் என்றும் உண்மையைப் பரப்பினர்.

இதனோடு தொடர்புடைய ஒரு முக்கியச் செய்தி உண்டு. குறிப்பிட்ட சாதியைச் சேர்ந்த பெண்கள் சிலருக்குப் பொட்டுக் கட்டிவிட்டு, கோயிலோடு சேர்ந்த தேவதாசிகள் ஆக்கும் பழக்கத்தை வேத ஆகமங்களின் பெயரால் நிறுவியிருந்தனர். அப்பழக்கத்தைப் போக்கு-வதற்காக, சட்டசபையின் துணைத் தலைவராக இருந்த திருமதி டாக்டர். முத்துலட்சுமி ரெட்டி அவர்கள் (1886-_1966). 1928_-29இல் டாக்டர். சுப்பராயன் அவர்கள் காலத்தில் முயன்ற பொழுது, தேசபக்த சீலரான சத்தியமூர்த்தி உள்ளிட்ட சனாதனப் பார்ப்பனர்கள், அப்படிச் செய்வது மத விவகாரத்தில் தலையிடுவதாகும் என்றனர். இருப்பினும், பனகல் அரசர் காலத்தில் நிறைவேற்றப்பட்ட அறநிலையப் பாதுகாப்புச் சட்டத்தை எடுத்துக்காட்டி அதன்படியே இதையும் ஏற்கலாம் எனச் சட்டம் செய்தனர். தன்னுடைய சட்டசபை அனுபவங்களைக் குறித்து 1930 எழுதிய முத்துலட்சுமியவர்கள் இவ்வாறு குறிப்பிடுகிறார்கள்: “புனிதம் என்ற பெயரில் தன்நலக்காரர்கள் கோயில் உரிமைகள் எனப்படுவனவற்றைத் தீவிரமாகக் காத்து வந்திருக்கிறார்கள். அதே நேரத்தில் தங்களுடைய புனிதமற்ற செயல்களாலும், கோயில் நிதியைத் தகுதியற்ற காரியங்களுக்குப் பயன்படுத்துவதன் வழியே நிகழும் தன்னலச் சுரண்டலாலும், அதை மாசுபடுத்தி யிருக்கிறார்கள். பார்ப்பனரல்லாதார் கட்சியின் தலைவராயிருந்த காலஞ்சென்ற பனகல் அரசர், இந்த உரிமைகள் என அழைக்கப்பட்டவைகளை எதிர்த்து அறைகூவல் விடும் அஞ்சாமையைப் பெற்றிருந்தார். பொதுமக்களின் நலனுக்காக கோயில் நிருவாகத்தைக் கட்டுப்படுத்தவும் ஒழுங்காக நடத்தவும் இந்து அறநிலையப் பாதுகாப்புச் சட்டத்தை நிறைவேற்றி யிருந்தார். மேற்சொன்ன சட்டம் நடைமுறைக்கு வந்திருந்ததாலும், அதனால் மதத்தில் நடுநிலை வகிக்கப் போவதாகக் கூறி அரசு தப்ப முடியாத நிலை ஏற்பட்டிருந்ததாலும், அந்தச் சட்டத்திற்கு ஒரு திருத்தமாக நான் என்னுடைய மசோதாவை நுழைவிக்க முடிந்தது.’’

மதத்தின் பெயரால் தங்களுடைய நலத்தை வளர்த்துக் கொள்வதில் வேதியர்கள் எவ்வளவு தொலைநோக்கோடு இருக்கிறார்களோ, அதைவிடத் தொலைப் பார்வையோடு மனித உரிமையைப் பாதுகாக்கத் தந்தை பெரியார் மதத்தை மறுத்தார் என்பதற்கு இஃது ஒரு சிறந்த எடுத்துக்காட்டு.

ஏழாவதாக, தொடர்ந்து வற்புறுத்தியும் வகுப்புரிமைத் திட்டத்தைக் காங்கிரசு ஏற்க மறுத்தது பெரியாருக்குப் பெரும் ஏமாற்றத்தையும் நியாயமான சினத்தையும் தந்தது. 1919இல் தொடங்கி 1925 நவம்பர் முடிய ஒவ்வொரு ஆண்டும் முறையே திருச்சிராப்பள்ளி, நெல்லை, தஞ்சை, திருப்பூர், மதுரை, திருவண்ணாமலை, காஞ்சி ஆகிய இடங்களில் நடந்த காங்கிரசு மாநாடுகளில் வகுப்புரிமைத் தீர்மானத்தைக் கொண்டு வந்தார். ஒவ்வொரு முறையும் அது பார்ப்பனரின் எதிர்ப்பாலும் சூழ்ச்சியாலும் தள்ளப்பட்டது.

1922இல் திருப்பூரில் நடந்த மாநாட்டில் வகுப்புரிமை மற்றும் கோயில் நுழைவுத் தீர்மானங்களை எதிர்த்தவர்களுக்குப் பாடம் புகட்டவேண்டும் என்பதற்காக, மனுதர்ம நூலையும், இராமாயணத்தையும் கொளுத்த வேண்டும் என்ற கிளர்ச்சித் திட்டத்தை வெளிப்படுத்தினார். திரு.வி.க.வின் வாழ்க்கைக் குறிப்புகள் இது தொடர்பாகத் தரும் செய்தி சுவையானது. “திருப்பூரிலே வாசுதேவ அய்யர் தலைமையில் தமிழ்நாட்டுக் காங்கிரசு கூடியது. நாடார் முதலியோர் கோயில் நுழைவைப்பற்றி இராமசாமி நாயக்கரால் ஒரு தீர்மானம் கொண்டு வரப்பட்டது. அவர் பெரும் புயலைக் கிளப்பினார். அத்தீர்மானம் என்னால் ஆதரிக்கப்பட்டது. அதை எதிர்த்தவர் மதுரை வைத்தியநாத அய்யரும், கிருஷ்ண அய்யங்காருமாவர். பின்னே காங்கிரசு ஆட்சியில் (1937_-39) மதுரையில் தீண்டாமையைப் போக்க முயன்றவர் வைத்தியநாத அய்யர் என்று கேட்டு மகிழ்வெய்தினேன். சீர்திருத்த முன்னணிக்குத் தூற்றலும் பின்னணிக்குப் போற்றலும் நிகழ்தல் இயல்பு போலும்.’’

1924இல் திருவண்ணாமலையில் நடந்த தமிழ்நாடு காங்கிரசு மாநாட்டுத் தலைமையுரையில் பெரியார் இவ்வாறு குறிப்பிட்டார்: “காங்கிரசுவாதியாக இருந்த டாக்டர் நாயர், திடீரென ஒரு கட்சியைத் தோற்றுவிக்கக் காரணங்களாய் நின்றவைகள் எவைகளோ அவைகள் இன்னும் நிற்கின்றனவா, இல்லையா? என்பதை நேயர்கள் கவனிப்பார்களாக. அக்காரணங்கள் அழிந்துவிட்டதாக எனக்குத் தோன்றவில்லை. அவைகள் தமிழ்நாட்டில் ஊர்ந்து கொண்டிருக்கும் வரை தமிழ்நாட்டில் பிராமணர், பிராமணர் அல்லாதார் ஒற்றுமை நிலவுதல் அரிதே. தேச சேவையில் ஈடுபட்டுத் தமிழ்நாட்டுக் காங்கிரசில் காரியதரிசியாகவும் தலைவராகவும் இருந்து பெற்ற அனுபவத்தை ஆதாரமாகக் கொண்டே நான் இங்கே பேசுகிறேன்.’’ எஸ். சீனிவாச அய்யங்கார் சென்னையிலிருந்து ஏராளமான ஆட்களை இம் மாநாட்டிற்குக் கூட்டி வந்து, பெரியாரின் வகுப்புரிமைத் தீர்மானத்தைத் தோற்கடித்தார்.

நவம்பர் 1925 இல் காஞ்சிபுரம் மாநாட்டில் வகுப்புரிமைத் தீர்மானத்தை அனுமதிக்க மறுத்ததால், காங்கிரசை ஒழிப்பதே தன் பணி என அறிவித்து அதனின்றும் வெளியேறினார், பெரியார்.

அதே சமயத்தில் கோவை இராமலிங்கம் செட்டியார் தலைமையில் காஞ்சியிலேயே கூடிய பார்ப்பனர் அல்லாதார் மாநாட்டில், தேசத்தை உடலாகவும், பார்ப்பனர்-மற்றவர் பிணக்கைப் புண்ணாகவும் உருவகப்படுத்திப் பெரியார் பேசியதில் கசப்புணர்வு காணப்படவில்லை; மிகப் பொறுப்புணர்வும் மெய்ம்மை நோக்கும் வெளிப்பட்டன: பிரிவினை இல்லையென்று எவ்வளவுதான் மூடிவைத்த போதிலும் காங்கிரசிலுங்கூட இத்தகைய பேதம் உண்டென்பதை யாரும் மறுக்க முடியாது. பிராமணர் பிராமணரல்லாதார் பிரிவினை இல்லையென்பது, உடலில் உள்ள புண்ணைமூடி வைத்து அழுகவிடுவதற்கு ஒப்பாகும். அதற்கேற்ற பரிகாரம் செய்து, உடல்நலத்தைக் கெடுக்கும் புண்ணை ஆற்ற முயல்வதே பொது நோக்குடைய அறிஞர் கடமையாகும்.

தீண்டாமை சாதி ஏற்றத்தாழ்வு முதலியன ஒழிவதற்கான சமூக சீர்திருத்தத்திற்கும் வகுப்புரிமைக்கும் இடையறாது குரல் கொடுத்துவந்த பெரியார், காங்கிரசுக் கட்சியை விட்டு வெளியேறிய செயல் பச்சை அரசியல்வாதிகளுக்கும் சனாதனிகளுக்கும் மகிழ்ச்சியை உண்டாக்கியிருக்கும்; தலைவலி விட்டது எனக் கருதியிருப்பர். காங்கிரசை வளர்ப்பதில் தனது ஆற்றல் முழுவதையும் செலவழித்த பின்பு, தனியராய்ச்சென்று எத்தகைய எதிர்ப்பையும் உருவாக்க இயலாது என்றும், காந்தியாரின் செல்வாக்கிற்கு மாறாக எதிர்நீச்சல் போட்டு மூழ்கிவிடுவார் என்றும் கணித்திருப்பர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *