விளம்பரமில்லா வியத்தகு பெரியார் தொண்டர்.. 11
குன்றத்தூர் கிருஷ்ணமூர்த்தி
– கி.வீரமணி
பழைய செங்கற்பட்டு மாவட்டத்தில் உள்ள குன்றத்தூரில் (அப்போது காஞ்சிபுரம் மாவட்டம் உதயமாகவில்லை.) கழகப் பணியை தனது இறுதி மூச்சுள்ளவரை ஓயாது செய்து, வரலாறானவர். தனது முதுமைக்காலத்திலும், நலிவுற்ற, உடல்நிலை தளர்வுற்ற நிலையிலும் தொடர்ந்து தொண்டாற்றிய முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர் தோழர் கிருஷ்ணமூர்த்தி அவர்கள்.
அவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்திய தொழுநோய் பற்றி அவர் கவலைப்படவே இல்லை; ஆனால் அது அவரை ஓரளவே பாதித்தது. பெரியார் தொண்டர்கள் எவ்வளவு நோய் உபாதைகளும், வலிகளும், தாக்கினாலும், தாங்கிக் கொண்டே தளராது கொண்ட கருமமே கண்ணாயினவர்கள் ஆவார்கள்!
தனது 95 வயதிலும் மூத்திரச் சட்டியைச் சுமந்துகொண்டே, மறைவதற்கு நான்கு நாள்களுக்கு முன்புகூட முழக்கமிட்ட ஈரோட்டு சிங்கத்தின் குட்டிகள் அல்லவா அவர்கள்? சலிப்பார்களா? சளைப்பார்களா?
தோழர் குன்றத்தூர் கிருஷ்ணமூர்த்தி அவர்கள் குள்ளமான உருவம், முழுக்கை கறுப்பு ஜிப்பா, கூட்டங்களுக்கு ஒலிபெருக்கி வாடகைக்கு தரும் தொழிலைச் செய்து, சுமாரான நடுத்தர வாழ்க்கை வாழ்ந்தவர். பெரியாரின் ஒற்றைத் தனிமனித ராணுவமாக சேக்கிழார் ஊரில் சுயமரியாதைச் சூறாவளியாக வீசி இன எதிரிகளையும், பழமையில் ஊறிய பக்தர்ளையும் நடுநடுங்க வைத்தவர். அச்சம் என்பதை அறியாத மாவீரர் அவர்.
தந்தை பெரியார் அவர்களையும் அவருக்குப் பின் அய்யாவால் அடையாளம் காட்டப்பட்டு, இயக்கத்திற்குச் செய்த ஏற்பாட்டின் ஏந்தலாம் நம் அன்னையாரின் தலைமையையும் ஏற்று குன்றத்தூர் பகுதியில் இயக்கத்தின் பிரச்சாரத்தை வேகமாக முடுக்கி விடத் தவறாதவர்.
தனிநபர்தான் என்றாலும், அவருக்கு அத்துணைக் கட்சியினரும் தனி மரியாதை அளித்துப் பாராட்டவே செய்வர்; காரணம், அவருடைய நேர்மையான கொள்கை உணர்வும்; நேர்மையான உழைப்புமே!
தந்தை பெரியார் அவர்களை அழைத்து ஆண்டு தவறாமல், ஆண்டுக்கொரு முறை குன்றத்தூரில் கூட்டம் ஏற்பாடு செய்வார்.
பெரியார் திடலுக்கு வந்து தேதி வாங்கும்போது உடனடியாக அய்யாவிடம் ரூபாய் அய்ம்பது (அவ்வளவுதான் அப்போது வழிச் செலவுத் தொகை) கொடுத்து, அய்யா மாலை வந்து விடுங்கள் என்று அழைப்பார். எல்லாப் பணிகளையும் அவரே விளம்பரம் உட்பட செய்யத் தவறமாட்டார்!
ஒலிபெருக்கி இவருடையதுதானே! மேடைபோட்டு அழைப்பார்; அய்யாவுக்கு குன்றத்தூர் தோழர்கள் நாகப்பன் மற்றும் இயக்கப் பிரமுகர்கள் இல்லத்தில் இரவு விருந்தும் செய்து அனுப்புவார்கள்.
சென்னையில் கழகத்தால் அறிவிக்கப்பட்டு நடைபெற்ற பல ஜாதி ஒழிப்புப் போராட்டங்களிலும் ஈடுபட்டு சிறைச்சாலைக்குச் சென்று திரும்பியவர். திருவல்லிக்கேணி முரளீஸ் கஃபே பிராமணாள் பெயர் அழிப்புப் போராட்டம், சட்ட எரிப்புப் போராட்டம் முதலியவற்றில் கலந்துகொண்டு சிறையேகித் திரும்பிய தீரர்களில் கிருஷ்ணமூர்த்தியும் முக்கியமானவர்.
பலமுறை என்னை அழைத்துக் கூட்டம் நடத்தியவர்¢; அய்யா மறைவுக்குப் பின் அன்னையாரையும் என்னையும் அழைத்தும்கூட கூட்டம் நடத்திய செயல்வீரர் அவர்.
அய்யாவை சில படங்களில் தலையில் மாட்டும், இரண்டு காதுகளுக்கும் ஒலி சிறப்பாகக் கேட்கச் செய்யும் கருவியோடு (பிமீணீபீ றிலீஷீஸீமீ) பார்த்திருப்பீர்கள்.
அந்த பிமீணீபீ றிலீஷீஸீமீ–_-அய் மானமிகு தோழர் குன்றத்தூர் கிருஷ்ணமூர்த்திதான் தந்தை பெரியாருக்குக் கொடுத்து, “அய்யா இதை மாட்டிக்கொண்டு ஒலியைக் கேட்டால் நன்றாகக் கேட்கும்’’ என்று சொல்லிக் கொடுத்து அய்யாவின் மீது அன்பைப் பொழிந்த அருந்தொண்டர் அவர்!
தொழுநோய் பாதிப்பு சற்று உடலில் இருந்தும், ஜாதி, தீண்டாமை நோய் ஒழிப்பதிலேயே தங்களது தொண்டறத்தைத் தொடர்ந்த இயக்கச் செயல்வீரர்கள் நாடு முழுவதிலும் சில ஊர்களில் உண்டு.
கடலூர் முதுநகரிலே தோழர் என்.தம்பு அவர்கள், தனது தொண்டுக்கு கடைசிக் காலத்தில் துரோகக் காற்றில் சிக்கியவர் அவர். என்றாலும், அவர் செய்த கழகப் பணி அளப்பரியது. இறுதிவரை மாறாத உணர்வுடன், கட்டுப்பாடான கழகப் பணி செய்தவர்.
திருக்கோயிலூர் அருகில் உள்ள அரகண்டநல்லூர் மகாலிங்கம் அவர்களும் குறிப்பிடத்தக்கவர். இவர் தனது நோய்பற்றி கவலைப்படாது, விடுதலை செய்தியாளராகவும், முகவராகவும் அரகண்டநல்லூரில் மூச்சுள்ளவரை பணியாற்றியவர்.
திருக்கோயிலூர் சோடா ஃபாக்டரி உரிமையாளரான முதுபெரும் பெரியார் தொண்டர் அய்யா பத்மநாபன் அவர்களும், அரகண்டநல்லூர் டெயிலர் பரசுராமன் அவர்களும் தோழர் மகாலிங்கத்திற்கு மிகவும் உதவி, பணிபுரிய உற்சாகமூட்டியவர்கள் ஆவார்கள்!
அத்தகைய பாசறை வீரர்களின் மகத்தான தியாகச் சுடரைத் தான் தொடர்ந்து கழகம் இன்றும் ஏந்தி தனது அயராத கொள்கைப் பயணத்தை மேற்கொள்கிறது!