எழில் பொங்கும் விக்டோரியா நகரம்!

பிப்ரவரி 01-15

உற்சாக சுற்றுலாத் தொடர் – 23

எழில் பொங்கும் விக்டோரியா நகரம்!

– மருத்துவர்கள் சோம&சரோ.இளங்கோவன்

கானடாவின் மேற்கு எல்லையில் பசிபிக் பெருங்கடலில் அமைந்துள்ளது விக்டோரியா  என்ற அழகிய நகரம். உண்மையில் அது ஒரு தீவு  போலத்தான். சுற்றிலும் கடல். கடலில் மிதக்கும் அழகிய பல விதமானப் படகுகள். பிரிட்டிஷ் கொலம்பியா எனும் மாநிலத்தின் தலை நகரம். ஆனால் உல்லாசப் பயணிகள் தான் மிகுந்துள்ளனர். பழைய பெயரை மாற்றி விக்டோரியா பேரரசியின் பெயரை வைத்துள்ளனர். அங்கு பேரரசி விக்டோரியா வந்து தங்கியிருந்த விடுதி இன்றும் பொலிவுடன் பேரரசி விடுதி என்றே கடலோரத்தில், நகரத்தின் நடுவே மிகவும் அழகாக அமைந்துள்ளது. அதை உள்ளே சென்று பார்க்கலாமே தவிர தங்கவோ, எதுவும் வாங்கவோ மனம் இடந்தராது. அவ்வளவு விலை. விக்டோரியா பயன் படுத்தியது என்று அதே போல விற்கப்படும் பீங்கான் கோப்பைகளும், தட்டுகளும் நூற்றுக்கணக்கில் விலை. அங்கே அய்தராபாத் அறை என்ற தேநீர் அருந்தும் அறை உள்ளது. அதில் தேநீர், சில ரொட்டி போன்றவற்றுடன் அருந்துவதற்கு 300 டாலர்கள். அறை அரண்மனை போலத்தான் இருக்கின்றது.

அதனருகே கடற்கரையில் சாப்பாடு, பல விதமானப் பொருட்கள் விற்கப்படும் கடைகள் நிறைந்துள்ளன. இசை வல்லுனர்களும், பல்வேறு ஆட்டம் பாட்டம் செய்வோரும் கூட்டத்தை மகிழ்வித்து நிகழ்ச்சிகள் தெருக்கூத்து போல கலகல வென்று இருக்கும். அதன் அருகே உள்ள சாலைகளில் பல விதமான  மிகவும் பழைய மகிழ்வுந்துகள் செல்வதை வேடிக்கை பார்க்கலாம். குதிரை வண்டிகளில் உல்லாசப் பயணிகள் ஊரைச் சுற்றிப் பார்ப்பதும், அவர்களை மற்றவர்கள் வேடிக்கை பார்ப்பதுமாக அழகிய மலர்கள் எங்கு பார்த்தாலும் நிறைந்து இங்கு யாராவது வேலை செய்கிறார்களா என்ற கேள்வி மனதில் எழும். அங்கு பல வித கணினித் தொழில் மய்யங்கள் நன்றாக வணிகம் செய்து பொருளீட்டுகின்றனர். உலகின் பல நிறுவனங்களின் தலைமைச் செயலகம் அங்கே உள்ளது.

பயணிகளுக்கு வேண்டிய மாதிரி நகரத்தைச் சுற்றிப் பார்க்கவும், கடலில் படகில் சென்று திமிங்கலம் பார்க்கவும் என்று பல்வேறு வகையில் பயணிகள் மகிழ்வுறுகின்றனர். நாங்கள் உல்லாசப் பேருந்தில் நகரத்தையும் உலகின் அழகான பூந்தோட்டங்களில் ஒன்றான புட்சார்ட் தோட்டத்தையும் பார்க்கக் கிளம்பினோம்.

வெறும் சுண்ணாம்புக் காளவாய் இருந்த இடத்தை இப்போது 55 ஏக்கரில் ஒரு குடும்பம் மிக அழகிய பூந்தோட்டமாக மாற்றி விட்டது. பல வித மலர்கள், பெரிய ரோசாப்பூத்தோட்டம்,சப்பானிய மர வகைகள்,புது முறை காய்கறித் தோட்டம் என்று பல விதமாகப் பிரித்துள்ளனர். அழகான நடை பாதை வளைவுகள் அங்கங்கே செல்வதற்கு.  காடு போல உள்ள இடமான தோட்டத்தின் மேல் பகுதிக்குச் சென்று பார்த்தால் அழகிய கடல் தெரியும்.  பின்னர் வேறு வழியில் இறங்கி வந்தால் மிகவும் அழகுற அமைக்கப்பட்டுள்ள சிறிய பள்ளத்தாக்குப் போன்ற தோட்டம். நடுவில் இசைக்கு நடனமாடும் தண்ணீர் ஊற்று! அது தான் சுண்ணாம்புக் காளவாயின் நடுப்பகுதியாக இருந்ததாம்! நான்கு மணி நேரம் போனதே தெரியவில்லை. அங்கங்கே புகைப்படம் எடுத்துத் தள்ளுவோர், அவர்களை வேடிக்கை பார்ப்போர் என்று அது வாழும் மனிதர் கண்காட்சி போல இருந்தது! என்ன ஒழுங்காகவும், அடுத்தவர்க்கு இடங்கொடுத்தும், அவர்களைச் சேர்ந்து படம் எடுக்க உதவியும் மனித நேயம் தழைத்தோங்குகின்றது.

பார்க்க இன்னும் பல இடங்கள் உள்ளன. ஆயிரம் விதமான வண்ணத்துப் பூச்சிகள் 15000 சதுர மீட்டர் அளவில் உள்ள கூண்டு போன்ற தோட்டத்திலே இயற்கையாக வாழ்கின்றன.  அவை வளர்க்கப் படும் விதம் அங்குள்ள சிறப்பான பூச்செடிகள் மிகவும் மகிழ்வானக் காட்சியாக இருக்கும்.

பல அழகிய பழைய இங்கிலாந்து நாட்டைப் போன்ற அரசு கட்டிடங்கள். இரவில் ஒளி மயமாக அலங்கரிக்கப் பட்டு வருவோரை மகிழ்விக்கின்றன. பெரும்பாலும் நடந்தே சென்று பார்த்து விட்டோம்.

பின்னர் நகரின் மய்யப் பகுதிக்கு வந்து கடைவீதிகளைப் பார்த்து விட்டு அங்குள்ள பல உணவு விடுதிகளைப் பார்த்து விட்டு, ஒரு தாய்லாந்து உணவு விடுதியில் உணவு உண்டோம். அடுத்த நாள் தீவிலிருந்து கடலைக் கடந்து வான்கூவர் நகருக்குச் சென்றோம்.
நீந்திச் செல்லவில்லை அதற்கு ஒரு பெரிய படகு பேருந்து மாதிரி போய்க் கொண்டே இருக்கின்றது.

வான்கூவரில் பார்ப்போம்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *