– சிகரம்
தமிழர் வாழ்வு என்பது ஆரியர் வருகைக்குமுன் தரணிக்கே வழிகாட்டும் வகையில் தரமுடையதாய், நாகரிகம் மிகுந்ததாய் இருந்தது. ஆனால், ஆரியர் வந்து கலந்து ஆதிக்கம் செலுத்தியபின் எல்லாம் தகர்ந்தது; அவர்களின் பண்பாட்டை நோக்கி நகர்ந்தது.
திருமணம்: மண வயது வந்த ஆணும் பெண்ணும் தனிமையில் சந்தித்து, காதல் வளர்த்து பின் அவர்களே கைப்படத் தொடுத்த மாலையை அணிவித்து இல்வாழ்வைத் தொடங்கினர்.
ஜாதி, மதம், உறவு என்ற எந்த வட்டத்திலும் அவர்கள் சிக்க வாய்ப்பே இல்லை. காரணம் அன்றைக்கு தமிழரிடம் அப்பாகுபாடுகள் இல்லை.
”யாயும் ஞாயும் யாரா கியரோ
எந்தையும் நுந்தையும்எம் முறைக் கேளிர்?
யானும் நீயும் எவ்வழி யறிதும்?
செம்புலப் பெயல்நீர் போல
அன்புடைய நெஞ்சம் தாம்கலந் தனவே”
(குறுந்தொகை – 40)
என்ற பாடல் இவ்வுண்மையை விளக்கி உறுதி செய்கிறது.
அதேபோல், சோதிடப் பொருத்தம் போன்ற மூடநம்பிக்கைகள் ஏதும் இன்றி, அறிவிற்குகந்த பொருத்தங்களையே கருத்தில் கொண்டனர்.
பிறப்பே, குடிமை, ஆண்மை, ஆண்டோடு,
உருவு, நிறுத்த காம வாயில்,
நிறையே, அருளே, உணர்வொடு, திருஎன
முறையுறக் கிளந்த ஒப்பினது வகையே.
(தொல் _ பொரு _ 1219)
1. நற்குடிப் பிறந்தவர்களாக இருக்க வேண்டும்.
2. பிறந்தால் போதாது. அந்நற்குடிக்கேற்ற நல்லொழுக்கம் இருவரிடமும் இருக்க வேண்டும். பிறப்பு வேறு, குடிமை வேறு எனப் பிரிக்கிறார்.
3. இருவரிடமும் ஆண்மை _ ஆளுமை ஒத்திருக்க வேண்டும்.
4. அகவை ஒப்புமை வேண்டும். காலத்திற்கு ஒப்ப வயது ஒப்புமை பார்க்க வேண்டும்.
5. உருவு _ வடிவ ஒப்புமையும் வேண்டும். பார்ப்பவர் பொருத்தமான சோடி என்னும்படி உயரம், பருமன் இருக்க வேண்டும்.
6. நிறுத்த காம வாயில் என்பது தொல்லாசான் சிந்தித்துச் சொன்ன அரிய கருத்து. உடலில் அமைந்த காம நுகர்வுக்கான உடல், உள்ளக் கூறுகள். ஒருவர் மிக்க காமவெறியுடையவராகவும் மற்றவர் அளவாகத் துய்ப்பவராகவும் இருந்தால் ஒத்துவராது.
7. நிறை _ மனத்தைத் திருமணமான பின் கண்டவாறு ஓடவிடாது தடுத்து நிறுத்துதல். நிறுத்துதல் நிறை. மறை பிறர் அறியாது நிறுத்தல். இது மன நிறை, அடக்குதல், தடுத்து நிறுத்துதல் யாவும் அடங்கும்.
8. அருளுடைமையும் அதன் அடிப்படையான அன்பும் உடையவர்களாக இருவரும் திகழ வேண்டும்.
9. உணர்வு _ ஒருவரை ஒருவர் அறிதல்; புரிந்து கொள்ளுதல்; உலகியலறிதல் வேண்டும்.
10.திரு _ செல்வம்.
இப்பொருத்தங்களே இணையர்க்கிடையே பார்க்கப்பட்டது.
பிற்காலத்தில் வந்த திருமண நிகழ்வில்கூட மூடச்சடங்குகள் எதுவும் இல்லை.
“உழுந்துதலைப் பெய்த கொழுங்களி மிதவை
பெருஞ்சோற் றமலை நிற்ப நிரைகால்
தண்பெரும் பந்தர்த் தருமணல் ஞெமிரி
மனைவிளக் குறுத்து மாலை தொடரிக்
கனையிருள் அகன்ற கவின்பெறு காலைக்
கோள்கால் நீங்கிய கொடுவெண் டிங்கள்
கேடில் விழுப்புகழ் நாடலை வந்தென
உச்சிக் குடத்தர் புத்தகல் மண்டையர்
பொதுசெய் கம்பலை முதுசெம் பெண்டிர்
முன்னவும் பின்னவும் முறைமுறை தரத்தரப்
புதல்வற் பயந்த திதலையவ் வயிற்று
வாலிழை மகளிர் நால்வர் கூடிக்
கற்பினின் வழாஅ நற்பல உதவிப்
பெற்றோற் பெட்கும் பிணையை யாகென
நீரோடு சொரிந்த ஈரிதழ் அலரி
பல்லிருங் கதுப்பின் நெல்லொடு தயங்க
வதுவை நன்மணம் கழிந்த பின்றைக்
கல்லென் சும்மையர் ஞெரேரெனப் புகுதந்து
பேரிற் கிழத்தி யாகெனத் தமர்தர
ஓரிற் கூடிய உடன்புணர் கங்குல்.”
(அகநாநூறு – மருதம் – 86)
தனிமையில் சந்தித்து காதல் வளர்த்து இல்வாழ்வில் இணைந்து வாழ்ந்த தமிழர்கள் மத்தியில் சிலர், சில காலம் வாழ்ந்து, பின் இப்பெண்ணுக்கும் எனக்கும் தொடர்பில்லை யென்று கைவிடும் நிலை வரவே பலர் அறிய மேற்கண்டவாறு திருமணத்தை நடத்தினர்.
விடியற்காலை மணற்பரப்பில் மணப்பெண்ணை அமர்த்தி, நீராட்டி, புத்தாடை அணிவித்து, இல்வாழ்வில் மணமக்களை ஈடுபடுத்தினர். உளுந்தங்களி விருந்தாக வழங்கினர். மற்றபடி தாலி, மந்திரம், நெருப்பு வளர்த்தல் போன்ற எச்சடங்கும் இல்லை.
ஆனால், ஆரியர் நுழைந்து கலந்து அவர்கள் பண்பாட்டுத் திணிப்பு நிகழ்ந்த பின், தமிழர் மணமுறை முற்றாக மாறியது.
அவர்களால் திணிக்கப்பட்ட ஜாதி, மதம், சோதிடம், சடங்கு, தீ வளர்த்தல், புரோகிதர் மந்திரம் சொல்லல் போன்றவை மணநிகழ்வில் புகுத்தப்பட்டன.
இணையர் தேர்வில் ஜாதி முதன்மையாகப் பார்க்கப்படும் அவலம் வந்து சேர்ந்தது. இன்றைக்கு ஜாதி மாறி திருமணம் செய்ய முயன்றால் பெற்ற பிள்ளையையே கொல்லும் ஜாதிவெறிக் கொலைகள் நடக்கும் அளவுக்கு ஆரியப் பண்பாட்டு நுழைவு தமிழர்களைச் சீரழித்துள்ளது.
திருமணத்திற்கு முன் ஆரியர் புகுத்திய சோதிடப் பொருத்தம் பார்க்கும் மடமை வளர்ந்தது. செவ்வாய் தோஷம், மூலம், கேட்டை என்று ஆரியர் நுழைத்த மூடநம்பிக்கைகள் பலரின் வாழ்வைப் பாழடித்து வருகிறது.
பெண்ணை பொருளாகக் கருதி தானம் கொடுக்கும் கன்னிகாதானம் என்ற ஆரிய பண்பாடு தமிழர் மத்தியில் நுழைந்து அவர்களின் பண்பாட்டை சிதறச் செய்தது.
திருமணத்தின்போது புரோகிதர் மந்திரம் கூறல், தீவலம் வருதல், நெருப்பிலே நெய்யூற்றி புகைப் பரவச் செய்து, அம்மி மிதித்து அருந்ததி பார்த்தல் போன்ற ஆரியச் சடங்குகள் தமிழர் திருமணங்களில் பின்பற்றப்பட்டன. பெண்ணுக்குத் தாலி அணிதல், மிஞ்சி அணிதல், ஆணுக்கு பூணூல் போடுதல் என்று அறிவுக்கொவ்வாத பல மண வினைகள் புகுத்தப்பட்டன.
குழந்தைத் திருமணம்: நான்கு வயது, அய்ந்து வயதில் ஆணுக்கும் பெண்ணுக்கும் திருமணம் முடிக்கும் அவலமும் ஆரியப் பண்பாட்டுப் படையெடுப்பால் வழக்கில் வந்தது. இதனால் நான்கைந்து வயதிலே விதவையாகும் கொடுமையும் வந்தது.
வளையல் காப்பு: பெண் கருவுற்றால் அவருக்கு நல்லுணவுகள் கொடுத்து தாயும் சேயும் நலமுடனிருக்க வழிசெய்த தமிழரின் வாழ்க்கைமுறையில், தாயையும் சேயையும் காக்க வளையல் காப்பு அணியும் மூடநம்பிக்கையை ஆரியர்கள் சடங்காக்கி, அந்நிகழ்வினும் மந்திரம் ஓதி பணம் பறிக்க வழிகண்டனர். இச்சடங்கு பெண்ணைப் பெற்றோருக்கு பெருஞ்செலவைத் தரும் சுமையாக மாறியுள்ளது.
கருமாதி, திதி: இறந்தவர்களைப் புதைக்கும் பண்பாடே தமிழனுடையது. அதன்வழி சுற்றுச்சூழல் மாசடைவதில்லை. அவ்வாறு உடலை அடக்கம் செய்யும்போது எச்சடங்கையும் தமிழர் செய்ததில்லை. ஆனால், இறப்பிலும் மூடச் சடங்குகளைப் புகுத்தி தமிழன் பண்பட்ட பகுத்தறிவு வாழ்க்கை முறையைப் பாழாக்கினர்.
இறந்தவர்களுக்கு நடுகல் வைத்து மரியாதை செலுத்துவது மட்டுமே தமிழரின் மரபாயிருந்த நிலையில் கருமாதிச் சடங்கையும், கருமாதி மந்திரத்தையும் புகுத்தி தமிழர் வாழ்வியலைக் கெடுத்து, தங்கள் வருவாய்க்கு வழிதேடிக் கொண்டனர்.
ஆண்டுக்கொரு முறை திதி என்ற ஒரு சடங்கை உருவாக்கி அன்றைக்கும் தமிழரிடம் வருவாய் ஈட்டினர். அதிலும் மந்திரம் படையல் என்று பலதை நுழைத்து இறந்தவர் காக்கையாக வருவார்கள் என்று கதைகட்டினர்.
ருது சடங்கு: பெண் வயதுக்கு வந்தால், அவளை மஞ்சள் கலந்த நீரில் குளிப்பாட்டி தூய்மையாக்கி புத்தாடை அணிவிப்பது தமிழர் மரபாய் இருந்ததை மாற்றி, அதில் பல சடங்குகளைப் புகுத்தி, அதற்கு ருது சாதகம் என்று ஒரு சோதிடத்தை எழுதி அதற்கு ஒரு பலாபலன் சொல்லி மக்கள் மூளையை மழுங்கடித்தனர். பெண்ணைப் பெற்றோருக்கு இச்சடங்கும் ஒரு பெருஞ்செலவாக மாறியது.
காதுகுத்தல்: காதில் துளையிட்டு அணிகலன் அணிவது தமிழர் மரபாய் இருந்தது. ஆனால், அதிலும் மூடச்சடங்கைப் புகுத்தி, கோயிலில்தான் குத்த வேண்டும், தலை-முடியைக்கூட கோயிலில்தான் மழிக்க வேண்டும் என்று ஒரு மடமையைப் புகுத்தி எல்லாவற்றிற்கும் சடங்கு, செலவு என்ற ஒரு பண்பாட்டுச் சீரழிவை உருவாக்கினர். அறிவார்ந்த தமிழர் வாழ்வியலில் அவலங்கள் புகுத்தப்பட்டன.
புதுமனை புகல்: வாழ்வதற்குரிய வீட்டை விருப்பத்திற்கு ஏற்ப அமைத்து, வாழ்ந்து வந்த தமிழரிடையே, கிரகப் பிரவேசம் என்ற ஒரு சடங்கை உருவாக்கி, அதிலும் தீ வளர்த்து, பசுமாட்டை வீட்டுக்குள் நுழையவிட்டு, பூசணிக்காயை நடுத்தெருவில் உடைத்து பல மூடச் செயல்களை செய்யச் செய்கின்றனர்.
வீட்டைக் கட்டும்போது வசதிக்கேற்ப கட்டி வாழ்ந்த தமிழனிடம் ‘வாஸ்த்து’ என்ற மடமையைப் புகுத்தி, அறிவுக்கும், வசதிக்கும், விருப்பத்திற்கும் பொருத்தமில்லா வீட்டை அமைக்கும்படிச் செய்துவிட்டனர்.
சகுனம் பார்த்தல்:
“கொக்கொக்கக் கூம்பும் பருவத்து மற்றதன்
குத்தொக்க சீர்த்த விடத்து’’
என்ற குறளுக்கு ஏற்ப அறிவுக்குகந்த வகையில் எதை, எப்போது, எப்படிச் செய்ய வேண்டும் என்று திட்டமிட்டு வாழ்ந்த தமிழர் வாழ்வில் இராகுகாலம், எமகண்டம், குளிகை, மரண-யோகம், அமிர்த்யோகம் என்று பலவற்றைப் புகுத்தி ஒவ்வொரு நாளும் பலமணி நேரம் பாழாகும்படிச் செய்தனர். குறிப்பிட்ட நேரத்தில் செய்தால் கேடு வரும்; இன்னின்ன நேரத்தில் செய்தால் நன்மை வரும் என்று, நேரந்தான் நல்லது, கெட்டது, வெற்றி, தோல்வியை நிர்ணயிக்கிறது என்ற அடிப்படையில் மூடநம்பிக்கையைத் தமிழர் மூளையில் ஏற்றி முடக்கிப் போட்டது ஆரிய பண்பாடு.
பல்லி கத்துவது, பறவை எதிர்ப்படுவது, பூனை குறுக்கே போவது, மனிதர் எதிரில் வருவது எல்லாம் நடக்கப் போவதை அறிவிக்கும் சகுனம் என்ற மூடநம்பிக்கையைத் திணித்தனர். கணவனை இழந்த பெண் எதிரே வந்தால் கேடுவரும், சுமங்கலி வந்தால் நன்மை வரும், வாணியன் வந்தால் கேடு, வண்ணான் வந்தால் நல்லது என்று காட்சியெல்லாம், காரிய முடிவைக் காட்டும் என்ற மூடக் கொள்கையை மூளையில் பதியவைத்து பூனைக்கும், பல்லிக்கும் அஞ்சும்படிச் செய்தனர்.