– சு.அறிவுக்கரசு
கற்றுக்கொண்டு செய்யும் தொழில்கள் அத்தனையும் கலை என்பார்கள். தமிழ்நாட்டில் விளங்கிய தொழில்கள் அறுபத்து நான்கையும் ஆயகலைகள் அறுபத்து நான்கு என்று “சுக்ரநீதி’’ எனும் நூலில் எழுதிவைத்துக் கொண்டு, அவற்றைக் கற்பிக்க ஒரு கடவுள், அதுதான் சரஸ்வதி என்றும் ஏற்படுத்திவிட்டனர். மற்போரும் கலை, நெய்வதும் கலை, சிலை செய்வதும் கலை, ஓயியம் வரைவதும் கலை, செருப்பு தைத்தல், உடை வெளுத்தல், மயிர் மழித்துத் திருத்தல், பாடுதல், ஆடுதல் என அனைத்துமே கலைகள்தாம்! இதை அறியாது இசை, நடனம், இசைக் கருவிகளை இசைத்தல் போன்ற சிலவற்றை மட்டுமே கலைகள் எனக் கொண்டாடிவரும் அவலம் தற்போது!
“விண்பொர நிவந்த வேயா மாடத்து…’’ எனப் பெரும்பாணாற்றுப்படை கூறும் வானுயர் கட்டடங்களைக் கட்டுவதும் கலையே! நெசவாளர் நெய்வதும் கலை! செய்வதும் (துணி) கலை! “பாம்பு உரி அன்ன’’ பருத்தித் துணியும் “நூலாக் கலிங்கம்’’ எனப்படும் பட்டுத்துணி “கொட்டைக் கரைய பட்டு உடை’’ செய்தலும் கலையே! “சோறு அமைவு உற்ற நீர் உடைக் கலிங்கம்’’ என மதுரைக் காஞ்சி பேசும் உடை, கஞ்சி போட்டுக் காய்ந்த உடை என்பதாகும். இதனைச் செய்யும் _ உடை வெளுக்கும் _ தொழில் கலைகளிலே ஒன்று!
இவ்வாறெல்லாம் வகைப்படுத்திய தமிழர், தம் மொழியையும் வகைப்படுத்தி இயல், இசை, கூத்து என்றனர்.
பண்ணோடு இசைத்தது பாடல். இசைக் கருவிகளின் துணையோடு பாடுதலும் இசைத்தமிழ் வகையே! பாட்டு, பாடல் என்பவை பாடப்படுபவை. இனிய ஓசையுடன் இசைக்கப்படும் பண்ணோடு கூடிய பாடல் படிக்கப்படுவதல்ல. “பாட்டுப் படித்தேன்’’ எனும் திரைப்படப் பாடல் சரியல்ல! பண்பாடியோர் பாணர் எனப்பட்டனர். பாணர் வீட்டுப் பெண்டிர் பாடினிகள். இவர் தவிர, ஏர்க்களம் பாடுவோர், போர்க்களம் பாடுவோர், பரணி பாடுவோர் என்போரும் உண்டு. இவர்கள் பொருநர் எனப்பட்டனர். பொருநர் குடும்பப் பெண்கள் விறலியர் ஆவர். விறல் என்றால் வெற்றி, திறமை எனப் பொருள்.
கூத்தர் என்போர் இருவகை. கூத்து ஆடுபவர் கூத்தர். ஒரு வகையினர் ஏதேனும் ஒரு கதையை ஆடிக்காட்டுவர். மற்றொரு வகையினர் ஒரு பாடலைப் (பாடாமலே) உடல் அசைவுகளாலேயே உணர்த்துவர். முந்தைய வகைக் கூத்து நாடகம் எனப்படுகிறது. பிந்தைய வகையை நடனம் என்கின்றனர்.
“கூத்தரும், பாணரும், பொருநரும், விறலியும் ஆற்றிடைக் காட்சி உழறத் தோன்றிப் பெற்றப் பெருவளம்…’’ என்று தொல்காப்பியம் இவர்கள் பற்றிக் கூறும். (பொருள்_புறத்திணை 36) இசையையும் கூத்தையும் வாழ்க்கையாகக் கொண்ட தமிழர் பரிபாட்டு, கலிப்பாட்டு ஆகிய இருவகைப் பாடல்களால் பாடி, ஆடினர் என்பதையும் தொல்காப்பியம் (பொருள் _ அகத்திணை) 53ஆம் பாடல் தெரிவிக்கிறது. பரிபாடலில் இசைக்கூறான பண்ணும் மறுகூறான தாளம் எனும் துள்ளல் கலிப்பாவிலும் நிறைந்து வெளிப்படுகின்றன என்பர் ஆய்வாளர்கள்.
தாளம் ஏழு வகைகள், அய்ந்து இனங்கள், அய்ந்து நடைகள் என்று 175 பெருக்கங்கள் உள்ளன எனவும் மேலும் பின்னங்கள் உள்ளன என்பதும் தமிழ் இசைப் பேரறிஞர் தம் கூற்றாகும்.
நிலப்பகுதியை நான்காகப் பிரித்து, முல்லை, குறிஞ்சி, மருதம், நெய்தல் எனப் பெயரிட்ட தமிழர், நிலத்துக்குரிய பண்களையும் வகைப்படுத்தினர். யாழின் பகுதி என்றனர். முல்லை யாழ், குறிஞ்சி யாழ், மருத யாழ், நெய்தல் யாழ் என்றனர். நிலவகைகளுக்குரிய கருப்பொருளைக் கூறும் தொல்காப்பியம் யாழையும் பறையையும் குறிப்பிடுகின்றது. கைகளால் தட்டுவதை பாணி என்றும் கால்களால் தட்டுவதை தாளம் (தாள் +அம்) என்றும் பாடினர்.
தமிழரின் இசை இன்னிசை எனப்பட்டது. “நாளும் இன்னிசையால் தமிழ் பரப்பும் ஞான சம்பந்தன்’’ எனும் பாடல் வரியால் அறியலாம். ஞானசம்பந்தனும் கூட இன்னிசை என்றே ஏழு இடங்களில் பாடியுள்ளான். தனியாகப் பாடுவது இன்னிசை (மெலடி). கூட்டாகவோ பல்வேறு கருவிகளின் இசையுடனோ இசைந்து பாடுவது கூட்டிசை (ஹார்மனி). இவ்வகை இங்கில்லை. மேலை நாடுகளில்தான்.
ஆரியர்கள், “தமிழரிடத்தில் இருந்த பல அரிய விஷயங்களையும் மொழிபெயர்த்துத் தமிழர் அறியும் முன்னரே அவற்றைத் தாம் அறிந்தவர் போலவும் வடமொழியில் இருந்தே தமிழுக்கு அவை வந்தன போலவும் காட்டினர்’’ என்று தமிழ் மொழியின் வரலாறு எழுதிய பரிதிமால் கலைஞர் எனும் சூரிய நாராயண சாஸ்திரியார் எழுதினார். இன்றைய இந்திய இசை முறைகள் யாவும் ஆரியர்களின் சாம வேதத்திலிருந்து தோன்றியவை எனக் கதை கட்டினர். நம் தமிழ் இசையின் குரல், துத்தம், கைக்கிளை, உழை, இளி, விளரி, தாரம் எனும் ஏழு இசை வகைகளுக்கு மாற்றாக ஷட்ஜம், ரிஷபம், காந்தாரம், மத்யமம், பஞ்சமம், தைவதம், நிஷாதம் என ஸப்த ஸ்வரங்கள் என்றாக்கினர். இதனை நாராயண சாஸ்திரி விளக்கினார்.
தொல்காப்பிய காலத்திலிருந்தே வடநாட்டுக்கும் சென்று இசைக்கலையைப் பரப்பிய பாணர்களின் இசையை, “மார்க்க இசை’’ என மாற்றினர். பாணரை ‘கந்தர்வர்’ எனக் கூறி ஏமாற்றினர். பாணர் யாழ் இசைத்துப் பாடியதால் யாழோர் எனப் பெயர் பெற்றதை மறைத்துவிட்டனர். யாழை மறைத்து வீணை என்றாக்கினர். செங்கோட்டி யாழ்தான் வீணை எனப்பட்டது என்று நிறுவினார் க.வெள்ளைவாரணர்.
தக்கணப் பீடபூமி எனப்படும் பகுதியில் உள்ள தவ்லதாபாத் எனும் ஊரைச் சேர்ந்த சாரங்கதேவர் என்பார் 13ஆம் நூற்றாண்டில் எழுதிய சங்கீத ரத்னாகரம் எனும் நூலை அடிப்படையாகக் கொண்டு கர்நாடக சங்கீதம் எனும் இசையை உண்டாக்கினர். தமிழ்ப் பண்களை ஆரியர்கள் மேளகர்த்தாக்கள் என்றாக்கினர் என்கின்றார் ஆய்வாளர் தி.இலக்குமணப் பிள்ளை. ஆளத்தியை ஆலாபனையாகவும் பண், சம்பூர்ணம் எனவும் பண்ணியல் திறம் ஷாடவம் எனவும் திறம் அவ்டவம் எனவும் திறத்திறம் சதுர்த்தம் என்றும் சமஸ்கிருதத்தில் மாற்றப் பட்டுள்ளதை ரசிகமணி டி.கே.சி. அவர்களின் கருத்து உறுதி செய்கிறது.
தமிழ் இசையில் தொடக்க இசைகள் 11 ஆயிரத்து 900 இருந்தன என்பதை அகத்தியம், தொல்காப்பியம் போன்றவற்றிலிருந்து அறியலாம். இவ்வகையில் ஆழ்ந்த அறிவும் ஆராய்ச்சியும் இல்லாதவர்கள் அவசர கோலத்தில் எதையோ எழுதி வைத்துவிட்டு ஆரோகணம் என்று சரிகமபதநிச என்கிறார்கள். அதையே திருப்பிச் சொல்லி அவரோகணம் என்று கூறிவிடுகிறார்கள். சாரங்கதேவர் எழுதிய தேவாரவர்த்தனீ எனும் நூலில்கூடத் தேவாரத்தில் காணப்படும் பண்களைக் குறித்துள்ளார். 12 சுரங்களுக்கு 22 சுருதிகள் (அலகு) என்று தவறாகக் குறிப்பிட்டுள்ளார் என்று தமிழ் இசைவாணி டாக்டர் சேலம் ஜெயலட்சுமி குறிப்பிடுவார். இந்த அம்மையார் தமிழச்சி என்பதால் எவ்வாறெல்லாம் புறக்கணிப்பு செய்யப்பட்டார் என்பது வரலாறாகியுள்ளது.
பழமையானவையாகவும் சிறப்பானவையாகவும் அமைந்தவற்றைத் தமக்குச் சொந்தம் எனக் காட்டிடும் சுயநலப் பேராசையால் மொழிமாற்றம் செய்து சமஸ்கிருதப் பெயர்களைச் சூட்டியதால் பல அருமையான தமிழ் வழக்குகள் சுவடின்றி அழிக்கப்பட்டன.
இதைத்தான் புரட்சிக்கவிஞர் பாரதிதாசன், “எந்நூலும் தமிழ் நூலே எனல் மறைக்க இழிநூலால் கலப்படத்தைச் செய்தோம்’’ எனப் பார்ப்பனர் இறுமாப்புடன் கூறினர் என்று கண்ணகி புரட்சிக் காப்பியத்தில் பாடி வைத்துள்ளார்.
நாயக்கர்கால ஆட்சியில் 13, 14ஆம் நூற்றாண்டுகளில் தெலுகு மொழிக்காரர்களின் ஆதிக்கமும் ஆட்சியும் நடைபெற்றபோது இத்தகையத் தில்லுமுல்லுகள் அரங்கேறின. தமிழ் ஆண்டுக் கணக்குமுறை முதற்கொண்டு மாற்றப்பட்டு 60 ஆண்டுச் சுழற்சி ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. (சின்னமனூர் செப்பேடு காண்க).
தமிழிசைப் பாடல்களுக்கு அண்மைக்கால முன்னோடிகளான தமிழிசை மூவர்களான முத்துத் தாண்டவர், மாரிமுத்தாப் பிள்ளை, அருணாசலக் கவிராயர் ஆகியோர்க்குப் பதில் தெலுகு மொழிப் பாடல்களை எழுதிய தியாகையர், முத்துசாமி தீட்சிதர், சியாமா சாஸ்திரி என்போர் முன்னிறுத்தப்பட்டமை, தமிழர் இசை மேன்மையை ஒதுக்கி, ஆரியரைப் புகுத்தி முன்னிறுத்திய மோசடியாகும். பொருள் விளங்காத மொழியில் மூக்கடைத்துப் பாடும் சங்கீதம், கச்சேரிகள் திருவையாறிலும், சென்னையில் திருவையாறு என்றும் மார்கழிக் குளிரில் பாடப்படுகின்றன. குளிர்காலத்தில் வெள்ளைத்துரைமார்களைக் குஷிப்படுத்தக் கையாண்ட முறை இன்னும் நீடிக்கிறது. கடல் கடக்கக் கூடாது என்று சாஸ்திரத்தில் எழுதிவைத்துக் கொண்டு, அதை முதலில் மீறிய பார்ப்பனர்கள்.
சிலப்பதிகாரம் எனும் காப்பியம் தமிழின் அய்ம்பெரும் காப்பியங்களில் ஒன்று. இயற்றப்பட்ட காலம் கி.பி.2ஆம் நூற்றாண்டு. நடனமாடும் முறை, நடன வகைகள் போன்ற பலவற்றைச் சிறப்புடன் பாடிய நூல். இருவகைக் கூத்துகள் எனப்படும் அகக்கூத்து, புறக்கூத்து. இதில் விளக்கப்பெறும் ஆடல்கள் பதினோரு வகைப்படுமாம். அவை 1.(மாயவன்) ஆட்டம், 2.(சிவனின்) கொடு கொட்டி, 3.(கந்த
னின்) குடை ஆட்டம், 4.(கண்ணனின்) குடக்கூத்து, 5.(சிவனின்) பாண்டரங்கம், 6.(திருமாலின்) மல்லாடல், 7.(முருகனின்) துடியாடல், 8.(இந்திராணியின்) கடையக்கூத்து, 9.(மன்மதனின்) பேடு ஆட்டம், 10.(துர்க்கையின்) மரக்கால் கூத்து, 11.பாவைக்கூத்து என்பன. கொட்டு, அசை, தூக்கு, அளவு எனத் தாளம் அல்லது பாணி நான்கு வகை. பிண்டி என்பது ஒற்றைக்கை அவிநயம். பிணையல் என்பது இருகை இணைதல். எழில் விளங்கக் காட்டுதல் எழிற்கை. தொழில் விளங்கக் காட்டுதல் தொழிற்கை. ஒற்றைக் கை கூடை எனப்படும். இரட்டைக்கை வாரம் எனப்படும். மகளிர் கைகளைப் பிணைத்து ஆடும் ஆட்டம் குரவைக் கூத்து. நானிலங்களில் முல்லை நிலமக்கள் ஆடுவது ஆய்ச்சியர் குரவை. குறிஞ்சி நிலமக்கள் ஆடுவது குன்றக் குரவை.
மருதநிலத்தார் ஆடுவது ஊர்சூழ்வரி எனப்படும். நெய்தல் நிலத்தார் ஆடுவது கானல்வரியாம். திரிந்த நிலமான பாலை சார்ந்தோர் ஆடுவது வேட்டுவ வரி எனவும் கூறப்பட்டுள்ளது. வரி என்றால் வரிக்கூத்து. இவற்றின் வகை எட்டு என்கிறது காப்பியம். கண்கூடுவரி, கானல்வரி, உள்வரி, புறவரி, கிளர்வரி, தேர்ச்சிவரி, காட்சிவரி, எடுத்துக்கோள் வரி ஆகியன இவற்றையெல்லாம் நன்கு பயின்று, பின் பயிற்றுவிக்கும் ஆசான்தான் நடனக்கலை ஆசிரியன்.
நடனத்திற்குரிய யாழிசையும் குழலிசையும் பாடலிசையையும் மத்தள ஓசையையும் ஓங்கி இணையப் புரிபவர் நடன ஆசிரியரே! குரல், இளி என்கிற இருவகைச் சுரத்தில் இசைக்கவல்லவராகப் புல்லாங்குழல் இசைப்பவர் இருக்க வேண்டும். சுட்டு விரல் முதலாக விட்டுப் பிடிப்பதை வர்த்தனை எனவும் சிறுவிரல் முதலாக விட்டுப் பிடிப்பதை அவரோகணம் எனவும் காப்பியம் கூறுகிறது. யாழ் மீது இளி எனும் நரம்பினை வைத்து இசைத்தல் வண்ணப்பட்டை என்கிறது. யாழ் வாசித்தலுக்கான இலக்கணமாக பதினான்கு கோவை குறிப்பிடப்படுகிறது. செம்பாலை, படுமலைப் பாலை, செவ்வழிப்பாலை, அரும்பாலை, கோடிப்பாலை, விளரிப்பாலை, மேல் செம்பாலை ஆகியவற்றின்படி ஏழு சுரங்களைக் கலந்து மேவி மெலிவு நான்கு, சமம் ஏழு, வலிவு மூன்று என்பனவே கோவையாகும் என்கிறது சிலப்பதிகாரம். நடனத்திற்கான இசை எவ்வாறிருக்க வேண்டும் என விரித்துரைத்துள்ளது.
பின்னர் நடன அரங்கின் அமைப்பு கூறப்படுகிறது. ஏழுகோல் அகலம், எட்டுக்கோல் நீளம், ஒரு கோல் உயரம் உள்ளது நடன அரங்கு, கோல் என்பது 24 பெருவிரல் கொண்ட அளவு. அரங்கின் நான்கு பக்கமும் தூண்கள், மேல்வரை நான்கு கோல் உயரத்தில் எனவும், உள்ளே வரவும் வெளியே போகவும் தனித்தனி வாயில்கள் கொண்டும் இருக்க வேண்டும் என்கிறது காப்பியம்.
மாதவி அந்தரக்கொட்டு, முகம் எனும் வகைக் கூத்தாடினாள்; உக்கிரம், துருவை, ஆபோகம், பிரகலை எனும் நான்கு உறுப்புகளில் மூன்றினை எடுத்து ஏகதாளத்தில் முடித்து, அழகிய மண்டில நிலையால் கை குவித்து அவிநயம் பிடித்து ஆடினாள். பஞ்சதானப் பொலிவின்படி ஆடினாள். இயல்தமிழின் அய்ந்து பாகுபாடுகளையும் நால்வகை பண்களையும் பதினோரு வகைக் கூத்துகளையும் ஆடினாள் என்கிறது சிலப்பதிகாரம்! “கடல் ஆடுகாதை’’யில் இப்பதினோரு வகைக் கூத்துகளையும் பட்டியல் இடுகிறது.
“கானல்வரி’’யில் இசைக்கலைபற்றி விளக்கப்படுகிறது. நுட்பங்கள் எட்டு வகையாம். பண்ணல், பரிவட்டணை, ஆராய்தல், தைவரல், செலவு, விளையாட்டு, கையூழ், குறும்போக்கு ஆகியன.
இசையும் எட்டு வகையாம். வார்தல், வடித்தல், உந்தல், உறழ்தல், உருட்டல், தெருட்டல், அள்ளல், பட்டடை என்பனவாம். பதினான்கு கோவை உடைய சகோட யாழில், இசைக்கும்போது இசை கெடுக்கும் பகை நரம்புகள் புகும் என எச்சரித்து அவற்றை செம்பகை, ஆர்ப்பு, அதிர்வு, கூடம் எனவும் விவரிக்கிறது. “வேனிற்காதை’’யில் மாதவியின் இசைச் சிறப்பைப் பாடும்போது, அகநிலை மருதம், புறநிலை மருதம், அருகியல் மருதம், பெருகியல் மருதம் ஆகிய நால்வகைப் பண்களைப் பற்றியும் ஏற்றம், இறக்கம், விளம்பல் எனும் மூன்று நிலைகளைப் பற்றியும் குறிப்பிடுகிறது.
“புதஞ்சேரி இறுத்த காதை’’யில் யாழின் வகைகள் கூறப்படுகின்றன. 21 நரம்புடையது பேரியாழ், 19 நரம்புடையது மகரயாழ், 14 நரம்புடையது சகோடயாழ், 7 நரம்புடையது செங்கோட்டு யாழ் எனப்படுமாம். இசைத்தலையே தொழிலாகக் கொண்ட பாணர்கள் பயன்படுத்திப் பண்பாடியது செங்கோட்டு யாழ்!
“…. பாடலும் எழாலும் பண்ணும் பரணியும் அரங்கு விலக்கே ஆடல் என்று அனைத்தும் ஒருங்குடன் தழீஇ உடம்படக் கிடந்த வரியும் குரவையும் சேதமும் என்ற இவை தெரிவுறு வகையான் செந்தமிழ் இயற்கையில் ஆடிநல் நிழலின் நீடு இருங்குன்றம் காட்டுவார் போல்…’’ எழுதப் பெற்ற சிலப்பதிகாரக் காப்பியம் இசையும் நடனமும், பாடலும் ஆடலும் தமிழர்க்கே உரியன என்பதைச் சிறப்பித்துக் கூறியிருப்பினும் ஆரியர் தமதென்று தமிழ் மன்னர்கள் துணைகொண்டு கூறினர்.
கூடலூர் ஞானியார் அடிகள் கூறியவாறு “பண்டைத் தமிழர்களிடமிருந்துதான் இசையின் நுணுக்கங்களும் பாகுபாடுகளும் தோன்றி வளர்ந்து ஆரியர் கைப்படலாயின…’’ என்பதையும் நோக்க வேண்டும். சிலப்பதிகாரம் கி.பி.இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்தது. கி.பி.அய்ந்தாம் நூற்றாண்டைச் சமஸ்கிருதத்தில் எழுதப்பட்ட “நாட்டிய சாஸ்திரம்’’ எனும் நூலில்தான் சங்கீதம், நாடகம் பற்றிய குறிப்புகள் உள்ளன. இதனை தஞ்சை இசைப் பேரறிஞர் பொன்னையா (பிள்ளை) அவர்கள் ஒப்பிட்டுக் காட்டியுள்ளார். “இந்திய இசையின் கதை’’யை எழுதிய அறிஞர் கோசுவாழி, “ஆரிய இசைத் துறையில் ஏற்பட்ட வளர்ச்சி மாற்றங்கள் அவர்களுடைய சொந்தக் கண்டுபிடிப்புகள் அல்ல; பலரும் இதில் பங்களிப்பு செய்துள்ளனர். அடுத்தவர் கண்டு பிடிப்புகளைக் கற்பதும் கடைப்பிடிப்பதும் ஆரியர் பழக்கம்தான்’’ என்கிறார். கற்றது சரி, கடைப்பிடிப்பதும் சரியே! தன்னைப் பார்த்துதான் தமிழர் பின்பற்றினர் என்பது சரியல்லவே! மோசடியாகுமே!
எதையெடுத்தாலும் ரிஷி சொன்னது, முனிவர் கூறியது என்று சொந்தம் கொண்டாடுவது பார்ப்பனர் பழக்கம்! சிந்து வெளிப்பகுதியில் கண்டெடுத்த உருவங்களில் ஒன்று, மூச்சுப் பயிற்சி செய்யும் உருவம். இதனை யோகா எனப் பெயர் சூட்டி, இதனைச் சொன்னவர் பதஞ்சலி எனும் ரிஷி எனக் கூறிப் பதஞ்சலி யோகா என்றாக்கிவிட்டனர். அதைப்போலவே கிடைத்த மற்றொரு உருவம் நடன மங்கை. கோயில்களில் நடனமாடும் மங்கையர்போல இது உள்ளது என்கிறது புதிய என்சைக்-ளோபீடியா பிரிட்டானிகா தொகுப்பு 17. பார்ப்பனர் இதனைப் பரதமுனிவரின் பரதநாட்டியமாடும் மாது எனச் சொந்தம் கொண்டாடிப் பார்த்தனர். பரத முனிவரால் கற்பிக்கப்பட்டது பரத நாட்டியம் என்றார் பத்மாசுப்ரமணியம் என்கிற பார்ப்பனப் பெண். பரதநாட்டியம் என்று சொல்லிக் கொடுத்தார் ருக்மணி அருண்டேல் எனும் பார்ப்பன நடனமாது. இதனைச் சொல்லிக்கொடுத்து உலகப் புகழ் அடைந்தார் பாலசரஸ்வதி! தஞ்சை நால்வர் மறைக்கப்பட்டனர். தமிழரின் ஆடற்கலைபற்றி மூவாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட தொல்காப்பியம் கூறுகிறது. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட குறளில் கூத்து பற்றிய செய்திகள் உள்ளன. பார்ப்பனரின் நாட்டிய சாஸ்திரத்தின் வயது 1500 ஆண்டுகள்தானே!
நன்செய் நிலத்தையும் வேளாளர், வணிகர், மன்னர் முதலியோரை ஏற்றிப் போற்றிப் பாடும் ஏர்க்களப் பாட்டு பார்ப்பனரிடத்தில் உண்டா? உழுவதையே பாபத் தொழில் என்று கூறி, யாரோ விளைவித்ததை ஊரை ஏமாற்றி உண்டு ஏப்பமிடும் பார்ப்பனர் எப்படி அறிவர்?
போர்க்களத்தைப் போற்றிப் பாடுதல் போர்க்களம் பாடுதல் எனும் வகை. இவ்வகை கர்னாடக சங்கீதத்தில் உண்டா? போரில் வெற்றி பெற யாகம் நடத்தித் தம் வருமானத்தைப் பெருக்கிக் கொள்வர், அவ்வளவே!
அதைப்போல, போரில் வெற்றிபெற்ற மன்னரைப் புகழ்ந்து பாடும் பரணி பாடுதல் உண்டா? தமிழிசையிலே இருப்பதைப் போலவோ, மேலைநாட்டு இசையில் இருப்பதைப் போலவோ சாந்தம், கோபம், காதல், சோகம் எனப் பலப்பல உள்ள உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் இசை வகைகள் கர்னாடக சங்கீதத்தில் இல்லை என்பதை காலஞ்சென்ற ஜெயகாந்தன் தனது “பாரிசுக்குப் போ’’ எனும் கதையில் பட்டவர்த்தனமாக எழுதிப் பார்ப்பனரின் கோபத்துக்கு ஆளானாரே! ஆக, புனைகதை மாந்தர்களைப் பற்றிய புளுகுகளை விவரிக்கும் பாடல்களைக் கிழங்கள் கூடும் நாலுகால் மண்டபத்தில் பாடுவதும் பதினாறுகால் மண்டபத்தில் தையா, தக்கா என்று ஆடுவதும்தான் பார்ப்பனரின் சாஸ்திரீய சங்கீதமும் நிருத்ய சாஸ்திரமும்! மனிதகுலம் முழுமைக்கும், எல்லாப் பிரிவினர்க்கும், இன்பம் அளிக்கும் நோக்குடனும், பொழுதை மகிழ்ச்சியுடன் கழிக்கும் நோக்குடனும் களிப்படையச் செய்திடவும் கையாண்டவை இசை, நாட்டிய வகைகள் தமிழர்களின் சிறப்புக்குரிய கண்டுபிடிப்பே!
ஒருவனை விரும்பும் ஒருத்தி. அவளை மணக்கும் நோக்கில் பரிசப் பணத்துடன் வருகிறான் வேறொருவன். வந்தவனை மணக்கத் தாம் தயாரில்லை எனத் தெரிவிக்கும் அவள், “மன்னர் குழீஇய விழவினாலும் / மகளிர் தழீஇய துணங்கையானும் யாண்டும் காணேன்’’ எனக் கூறுவதாகக் குறுந்தொகை (பாடல் 31) கூறுகிறது. ஆண்களும் பெண்களும் கூடிக் கூத்தாடும் இடம் இருந்தை இதன்மூலம் அறியலாம். “யானும் ஓர் ஆடுகள மகளே / பீடுகெழ குரிசிலும் ஓர் ஆடுகள மகனே’’ என்றும் அப்பாடல் கூறுகிறது. இவர்கள் இருவரும் ஆடிப்பாடி மகிழும் இணைதான் என்பதையும் கூறி ஆடலும் பாடலும் தமிழர் வாழ்வில் ஓர் அங்கம் என்பதனைத் தெரிவிக்கிறது. ஆரிய வாழ்க்கை முறையில் இச்சீரிய முறை உண்டா? தூங்கும்போது தூக்கிச் செல்வதும், மயக்கம் கொடுத்து உறவு கொள்ளுதலும் தானே ஆரிய மணமுறைகளில் அசிங்கம் பிடித்தவை! பேசியோ, பழகியோ இணையும் முறை அவர்களுக்கு அன்னியம்தானே! பின் எப்படி ஆடலும் பாடலும் அவர்களின் வாழ்வில் இடம்பெறும்?
தொல்காப்பியப்படி, ஒவ்வொரு நிலத்துக்குமான தாளக் கருவியாகப் “பறை’’ வருகிறது.
தோல்கருவியான பறை புனிதமற்றதா-யிற்றே! இசைப்பவரும் புனிதமற்றவர்தானே! இவற்றுக்கு இடம் கர்நாடக சங்கீதத்தில் கிடையாதே! “எழுவகைக் கூத்தும் இழிகலத்தோரை ஆட வகுத்தனன்’’ எனறுதானே அகத்தியம் கூறுகிறது? அத்தகு குலத்தோர் ஆடலுக்கும் பாடலுக்கும் இவர்கள் ஏன் சொந்தம் கொண்டாடுகிறார்கள்? சொந்தம் கொண்டாடிடக் கூடாது என்பதற்காகவே தங்களது நூல்கள் முதல் நூல்கள் எனவும் தமிழர்தம் நூல்கள் வழி நூல்கள் எனவும் கரவாகக் கற்பித்து வைத்துவிட்டனர் எனவே, தமிழருடையவை எவை? ஆரியம் எப்படி அபகரித்தது? அவற்றை மீட்டு, ஆரிய மோசடியை வெளிப்படுத்தி, தமிழர் சிறப்பை மீண்டு காலத்திற்கேற்ப, தேவைக்கேற்ப செம்மை செய்து பயன்படுத்துவதே நமது சிறப்புகளை நிலைநிறத்துவதற்கான வழியாகும்.