பகலில் அரைமணி நேரத்திற்கு மேல் தூங்கக்கூடாது:
இரவில் நன்றாகத் தூங்கினாலும், பகலில் அரைமணி நேரம் நன்றாகத் தூங்கி எழுவதினால் மூளை புத்துணர்ச்சி பெறும். இரத்த அழுத்தம் குறையும். இருதயம் வலுப்பெறும். உடல் சுறுசுறுப்படையும். ஆனால், அரைமணி நேரத்திற்கு மேல் அதிகம் தூங்கக் கூடாது. இரவில் தூங்கவில்லையென்றால், அதை ஈடுசெய்ய பகலில் அதிகம் தூங்கலாம். மாறாக, இரவிலும் நன்றாக 7 மணி நேரம் தூங்கிவிட்டு, பகலிலும் மணிக்கணக்கில் தூங்குவது சர்க்கரை நோய்க்கும் வழிவகுக்கும்.
ஆறிய பாலில் பொறை ஊற்றக்கூடாது:
காய்ச்சிய பால் நன்றாக ஆறிய பின் பொறை ஊற்றக் கூடாது. அவ்வாறு ஊற்றினால் தயிர் பக்குவமாக இருக்காது. பால் இளஞ்சூட்டோடு இருக்கும்போது பொறை ஊற்ற வேண்டும். அவ்வாறு கிடைக்கும் தயிர் நன்றாகவும் சுவையுடனும் இருக்கும். தயிரை அப்படியே சாப்பிடாது, அதிலுள்ள கொழுப்பை நீக்கிவிட்டு, தயிருடன் நிறைய நீர் சேர்த்து மோராக்கி அதிக அளவில் குடிப்பது, சோற்றுடன் சேர்த்து உண்பது உடலுக்கு நல்லது.
தண்ணீர்கூட அருந்தாமல் உண்ணா நிலைக்கூடாது:
வாரம் ஒருவேளை உண்ணாமல் இருப்பது அதுவும் இரவில் உண்ணாமல் இருப்பது நல்லது. ஆனால், தண்ணீர்கூடக் குடிக்காமல் நாள் முழுவதும் உண்ணாமல் இருப்பது சரியன்று. உடலிலுள்ள கழிவுகள் நீங்கவும், இரத்தவோட்டம் நிகழவும், சுரப்பிகள் சரியாக இயங்கவும் தண்ணீர் கட்டாயம் தேவை. ஒரு வேளைக்கு மேல் ஒருநாள் முழுக்க உண்ணாவிரதம் இருக்கக் கூடாது. 15 வயதிற்குக் குறைந்தவர்கள், 70 வயது கடந்தவர்கள், கருவுற்றப் பெண்கள், உழைப்பாளிகள், நோயாளிகள், மருந்து சாப்பிடுவோர் உண்ணாவிரதம் இருக்கக் கூடாது. ஒருநாள் முழுக்க உணவைத் தவிர்க்க வேண்டுமானால், பழச்சாறு அடிக்கடி பருக வேண்டும். இது உடல் நலத்திற்கும் இளமையுடன் இருக்கவும் உதவும். உடல் எடை குறைய உண்ணாமல் இருப்பது கூடாது. உடல் எடை குறைய வேண்டும் என்பதற்காக அடிக்கடி பட்டினி கிடப்பர். இது சரியன்று. கொழுப்பு உணவுகளையும், அளவிற்கு அதிக உணவையும், நொறுக்குத் தீனியையும் குறைத்து, சத்தான கீரை, காய்கறி, பழங்களை எடுத்துக் கொண்டு உடலுழைப்பு, உடற்பயிற்சி செய்தாலே உடல் எடை குறையும். பட்டினியாய் இருப்பதற்குப் பதில் உணவைக் குறைத்து உண்ணலாம். வாழைத்தண்டு, கொள்ளு, பூண்டு, இஞ்சி போன்றவற்றை உணவில் அடிக்கடிச் சேர்த்தால் உடல்எடை குறையும்.
அதிக நாள் உண்ணாநிலை கூடாது
நாம் உண்ணும் உணவு குளுகோஸாகவும், கொழுப்பாகவும், அமினோ அமிலங்களாகவும் பிரிக்கப்படுகிறது. இதில் குளுகோஸ்தான் நமக்கு அன்றாட செயல்பாட்டிற்கு முதன்மையானது.
உண்ணாமல் இருக்கும்போது, உடலில் உள்ள குளுகோஸிலிருந்து உடல் தனக்குத் தேவையான சக்தியைப் பெறும். சேமிப்பில் இருந்த குளுகோஸ் முழுவதும் தீர்ந்தபின், உடலில் உள்ள கொழுப்பு எடுக்கப்படும். கொழுப்பும் தீர்ந்தபின் அதிகம் பசி எடுக்கும். அப்போது கட்டாயம் உண்ண வேண்டும். அதன் பின்னும் உண்ணாமல் இருந்தால், உடலின் வளர்சிதை மாற்றம் பாதிக்கப்படும். தோல் சுருங்கும். முகம் கருக்கும், வாடும். உடலில் எலக்ட்ரோ துடிக்கத் தொடங்கும். சிறுநீரகச் செயல்பாடு பாதிக்கப்படும். உடல் உறுப்புகள் பாதிக்கப்படும். அதற்கு மேலும் உண்ணாம-லிருந்தால் இறக்க நேரிடும்.
காபியுடன் மாத்திரையைச் சாப்பிடக் கூடாது
மாத்திரை சாப்பிடக் கூடியவர் காபியுடன் சேர்த்து மாத்திரை சாப்பிடுவர். காபி மாத்திரையின் வீரியத்தைக் குறைத்துவிடும். அதனால், நீரில் அல்லது மிதமான வெந்நீரில் மாத்திரை சாப்பிட வேண்டும்.
கூந்தல் உலர்த்தியால் உலர்த்தக் கூடாது
ஈரக் கூந்தலை மின்விசிறி அல்லது பருத்தித் துணியால்தான் உலர்த்த வேண்டும். மாறாக சூடேற்றி உலர்த்தினால் முடி வலுவிழந்து கொட்டும். முதலில் பருத்தித் துணியால் மாற்றி மாற்றி துவட்டி, பின் மின்விசிறியில் உலர்த்த வேண்டும். சூடேற்றி உலர்த்துவது முடியின் உறுதியைக் குலைத்துவிடும். ஸீ