’நாங்கள் பெரியாரின் தொண்டர்கள்” உச்சநீதிமன்ற மேனாள் நீதிபதிகள் உணர்ச்சி உரை!

ஜனவரி 01-15

 

நான் பெரியாரின் தொண்டன்!

எனது தீர்ப்பிலே பெரியாருக்கு மரியாதைச் செலுத்தினேன்!

உச்சநீதிமன்ற நீதியரசர் (ஓய்வு) ரத்தினவேல் பாண்டியன்  உரை

1948 ஆம் ஆண்டு நான் திராவிடர் கழகத்தில் உறுப்பினராகி யிருக்கிறேன். இந்தக் கழகத்தில் நடைபெற்ற பல போராட்டங்களில் நான் கலந்து கொண்டிருக்கிறேன். பெரியார் அவர்கள் இந்தி எதிர்ப்புப் போராட்டத்திற்காக, கட்சியிலுள்ள அத்துணை பேரும் பாடுபடவேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

நான் மாணவனாக இருக்கும்பொழுது, என்னுடன் 10 மாணவர்களைச் சேர்த்துக்-கொண்டு, கல்லக்குறிச்சி பள்ளியின்முன்பு மறியல் செய்தோம். அம்பாசமுத்திரத்தில் உள்ள இன்ஸ்பெக்டர் எங்களையெல்லாம் கைது செய்தார். பிறகு மாலையில் எங்களையெல்லாம் விட்டு விட்டார். அதன் பிறகு நடைபெற்ற எத்தனையோ போராட்டங்களில் நான் கலந்து கொண்டிருக்கிறேன். நான் பெரியார் அவர்களை அதிகமாக மதிப்பேன், வணங்குவேன். என்னுடைய 60 ஆம் ஆண்டு விழாவிற்கு பெரியார் அவர்கள் வந்தார்கள். என்னுடைய பிள்ளைகள் பெரியாரின் மடியில் உட்கார்ந்திருக்கும் படம் எங்கள் வீட்டில் உள்ளது. பெரியார் அவர்கள், கும்பிடவேண்டாம், உட்காரச் சொல்லுங்கள் என்றார்.

என்னுடைய பிள்ளைகள் அவருடைய படுக்கையில் உருண்டார்கள்; அதனைப் பார்த்து பெரியார் அவர்கள் மகிழ்ந்தார்கள். நான் உச்சநீதிமன்ற நீதிபதியானவுடன், பெரியாருக்கு என்ன செய்திருப்பேன் என்று நினைக்கிறீர்கள், நீங்கள் எல்லாம் மாலை வைப்பீர்கள், பூ வைப்பீர்கள். நான் என்ன செய்தேன் தெரியுமா? மண்டல் ஆணைய வழக்கின் விசாரணையை 9 நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரித்தது. அந்த 9 நீதிபதிகளில் நானும் ஒருவன். அந்த வழக்கு முடிவில் தீர்ப்பு எழுதும்போது நான் பெரியாரைப்பற்றி எழுதினேன். நான் செய்யவேண்டிய கடமையை பெரியாருக்குச் செய்தேன். அந்த நீதிமன்றத் தீர்ப்பு இன்னும் நூறாண்டுகள் இருந்தாலும் பெரியார்பற்றிய அந்தத் தீர்ப்பு மறையாது.

* * *

நான் பெரியாரின் சமூகநீதிப் போராளி!
திராவிட இயக்கத்தில் நானும் ஒருவன்!

உச்சநீதிமன்ற நீதியரசர் (ஓய்வு) ராமசாமி உரை பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களின் உயர்வுக்கு இன்றியமையாதது இட ஒதுக்கீட்டுக் கொள்கை என்பது திராவிடர் இயக்கத்தின் முக்கிய கருத்தாக இருந்திருக்கிறது. தந்தை பெரியாரின், இந்த இட ஒதுக்கீடு கொள்கையை தீவிரமாகப் பற்றிக் கொண்டவர்களில் நானும் ஒருவன்.

சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதியாக இருக்கும்பொழுது, சந்தர்ப்பம் கிடைத்த நேரத்தில் எல்லாம், இட ஒதுக்கீட்டினை உறுதி செய்து தீர்ப்பளித்திருக்கிறேன். அதேபோல்,  பஞ்சாப் – அரியானா உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதியாக நான் சென்றபொழுது, அங்கே இட ஒதுக்கீடு இல்லை. முதன்முதலாக இந்த இட ஒதுக்கீட்டுக் கொள்கையை அங்கேயுள்ள உயர்நீதிமன்றப் பணியாளர்-களுக்கும், நீதிபதிகளுக்கும் பொருந்தும் என்று உத்தரவுப் போட்டேன். அப்படி உத்தரவுப் போட்டதோடு அல்லாமல், அதனை நடைமுறையும் படுத்தினேன்.

ஒன்றைச் சொல்லி நான் பெருமைப்பட விரும்புகிறேன்.

ஒரு சமயம் டில்லிக்குச் சென்றிருந்தபோது, அப்போது இருந்த சட்ட அமைச்சர் சங்கரானந்த் அவர்களைச் சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. அவர் என்னைப் பார்த்தவுடனேயே, என்னைப் பாராட்டி, பெருமையாகப் பேசினார். இட ஒதுக்கீடு கொள்கையைக் கொண்டு வந்ததற்காக என்னை கவுரவப்படுத்தி மகிழ்வித்தார்.

மேலும் அவர் ஒன்றைச் சொன்னார், உங்களைப் போன்ற தைரியமான நீதிபதிகள் இருந்தால்தான், தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்-பட்ட மக்கள் முன்னேற முடியும் என்று சொல்லி என்னை வாழ்த்தினார். என்னுடைய இந்தப் பற்றினாலே, திராவிட இயக்கத்தில் நானும் ஒருவனாக இருக்கிறேன் என்று மனதார நம்புகிறேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *