கொடைக்கானல் பிரதான சாலையில் உள்ள உட்காடு ஆரோக்ய மாதா தேவாலயத்தின் ஜன்னல் கம்பிகளை உடைத்து, உண்டியலில் இருந்த சுமார் 50,000 ரூபாய் திருடப்பட்டுள்ளது. இதுபற்றி காவல் நிலையத்தில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிருவாகக் குழு பெண் உறுப்பினர் ஒருவர், பல வருடங்களுக்கு முன்பு இங்குள்ள புனித சலேத் மாதா கோயிலில் பல லட்ச ரூபாய் மதிப்புள்ள வைரக்கிரீடமும் நகைகளும் திருடப்பட்டன. செண்பகனூர் தேவாலயத்தில் உண்டியல் திருடப்பட்டது. காவல்துறையில் புகார் பதிவு செய்தும் இதுவரை திருடிய யாரையும் கண்டுபிடிக்க முடியவில்லை என்று கூறியுள்ளார்.
***********
சிறீபெரும்புதூர் அடுத்த போந்தூர் வி.ஆர். நகரைச் சேர்ந்த மூத்தி, இரவில் கோயில் அருகேயுள்ள குடிசைக்குள் தூங்கியபோது அடையாளம் தெரியாத நபர்கள் கோயில் உண்டியலை உடைத்துள்ளனர். உண்டியல் உடைத்தவர்களைத் தடுக்கச் சென்ற மூர்த்தி அந்த நபர்களால் தாக்கப்பட்டு இறந்துள்ளார். மூர்த்தியின் உடலை, அருகிலிருந்த முள்செடியினுள் வீசிவிட்டு, உண்டியலில் இருந்த பணம், கோயிலில் இருந்த வெள்ளிச் சாமான்களைத் திருடிச் சென்றுள்ளனர். இந்தச் சம்பவம் காவல்துறையில் புகாராகத் தெரிவிக்கப்பட, காவல் துறையினர் கொலை செய்து திருடிச் சென்றவர்களைத் தேடி வருகின்றனர்.
***********
ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு குடும்பத்தினர் திருப்பதி ஏழுமலை யானைத் தரிசிக்கச் சென்றபோது கூட்டத்தில் பெற்றோரை விட்டுவிட்டு சிறுமி மட்டும் தனியாக நின்று அழுதுள்ளார். இதனைப் பார்த்த பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தவர் (செக்யூரிட்டி) சிறுமியை அழைத்து விசாரித்துள்ளார். பின்பு, தான் ஓய்வு எடுக்கும் அறைக்கு அழைத்துச் சென்று வன்கலவி செய்துள்ளார்.
வெளியில் வந்த சிறுமி பலத்த காயங்களுடன் இருப்பதைப் பார்த்தவர்கள், அங்கிருந்த மருத்துவ மனையில் சேர்த்துள்ளனர். மேலும், சிறுமி திருமலை _ 2 டவுன் காவல் நிலையத்தில் புகார் தெரிவிக்க, சம்பந்தப்பட்ட நபரைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனராம்.
திருமலை _ திருப்பதி தேவஸ்தானம் சார்பில் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ 2 லட்சம் உதவித்தொகையும், திருமலையில் கடை வைக்க அனுமதியும் வழங்கப் பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.