“சாவி கொடுத்துக்கொண்டு மனிதர்கள் வானவெளியில் பறக்கப் போகிறார்கள்!
கி.பி.2000 பற்றி தந்தை பெரியார் கணிப்பு!’’
05.04.1972 விடுதலையில் 4ஆம் பக்கத் தலைப்புச் செய்தி இது.
வேதாரண்யத்தில் 16.08.1972இல் நடைபெற்ற பகுத்தறிவாளர் கழகத் துவக்க விழாவில் தந்தை பெரியார் பேசுகையில்,
“கி.பி.2000 ஆண்டில் நீங்கள் எல்லாம் சராசரி 100 வயது எட்டிப் பிடித்துவிடுவீர்கள். ஆகாயத்தில் பறவைகள் போல நீங்களே சாவி கொடுத்துக்கொண்டு ஆகாயத்தில் பறப்பீர்கள். எப்போது பூமியில் இறங்க வேண்டும் என்று கருதுகின்றீர்களோ அப்போது இறங்கி விடுவீர்கள். அந்த அளவிற்கு விஞ்ஞானம் பகுத்தறிவு காரணமாக வளர்ந்துவிடும்.’’
43 ஆண்டுகளுக்கு முன் தந்தை பெரியார் அவர்கள் இனிவரும் காலத்தில் அறிவியல் வளர்ச்சி எப்படி இருக்கும் என்பதை கணித்துச் சொன்னது இது!
இக்கணிப்பு இன்று நடந்துவிட்டது! ஆம். சிங்கப்பூர் நேஷனல் பல்கலைக்கழக பொறியியல் மாணவர்கள் அப்படியொரு கருவியை வடிவமைத்துள்ளனர்.
வானில் மகிழ்வாக பறக்க நினைக்கும் ஒரு மனிதன் இக்கருவி மூலம் பறக்கலாம். பறக்கின்ற மனிதனே அதை இயக்கிக் கொள்ளலாம். அவனே கருவியை இயக்கி தரை இறங்கிக் கொள்ளலாம்.
பயண நோக்கத்திற்கில்லாமல், களியாட்டமாக, தான் வானில் பறக்க வேண்டும் என்ற தீராத ஆசையை நிறைவேற்றிக் கொள்வதற்காக இக்கருவி வடிவமைக்கப்பட்டுள்ளது.
இதன்மூலம் வானில் தனிமனிதன் பறக்க முடியும் என்ற கனவு உண்மையாகியுள்ளது.
இக்கருவி பற்றி டைம்ஸ் ஆப் இந்தியா நாளேட்டில் வந்துள்ள செய்தி இதோ!
பறவை போல உயரே
பறக்க பறக்கும் கருவி!
சிங்கப்பூர் நேஷனல் பல்கலைக்கழக மாணவர்கள் சாதனை!
நீங்கள் பறவைபோல பறக்க விரும்பு-கிறீர்களா? உங்கள் கனவு விரைவில் உண்மையாகப் போகிறது. சிங்கப்பூர் நேஷனல் பல்கலைக்கழக (NUS) பொறியியல் மாணவர்கள் பறக்கும் இயந்திரக் கருவி ஒன்றை வடிவமைத்துள்ளனர். இது 70 கிலோ எடையைச் சுமந்து அய்ந்து நிமிடங்கள் பறக்கும்.
ஒருவர் அமர்ந்து, இந்தப் பறக்கும் கருவியை மேலெழச் செய்யவும், பறக்கவும் மீண்டும் தரை இறங்கவும் தேவையான கருவிகள் இதில் பொருத்தப்பட்டுள்ளன.
[Comprising an intricate design of motors,
propellers and inflated landing gear set within a hexagonal frame, “Snowstorm” is an electric-
powered aircraft capable of vertical take offs and landing that can be controlled by a single person seated within it.]
இப்பறக்கும் கருவி பயண நோக்கத்துக்-கல்லாது, தனிநபர் வானில் பறந்து களிப்பதற்கும் தனிநபரின் விருப்பத்தை நிறைவு செய்வதற்கும் உருவாக்கப்பட்டுள்ளது.
நமது பறக்கும் கனவை உண்மையாக்குவதை நோக்காகக் கொண்டு இக்கருவி அமைக்கப்-பட்டுள்ளது என்கிறார் இக்கருவி அமைப்பின் மேற்பார்வையாளருள் ஒருவரான Dr. Joerg Weigh.
இதில் 24 மோட்டார்கள் உள்ளன. இவை ஒவ்வொன்றும் ஒரு புரபல்லரை (Propeller) இயக்கும். இதன் சட்டங்கள் அலுமினியத்தால் ஆனவை. கார்பன், ஃபைபர் பிளேட்ஸ், குழாய்கள் கேவ்லர் கயிறுகள் இதனை அமைக்கப் பயன்படுத்தப்பட்டுள்ளன.
இதை இயக்குபவரின் இருக்கை இயந்திரத்தின் நடுவில் பொருத்தப்பட்டு ஆறு கால்கள் அதைத் தாங்கி நிற்க, தரை இறங்கும்போது அதிர்வு ஏற்படாதிருக்கவும் அதன் அடிப்பாகம் வடிவமைக்கப் பட்டுள்ளது. இயக்குகின்றவரின் முழுப் பாதுகாப்பையும் உறுதி செய்யும் வகையில் இருக்கை பொருத்தப்பட்டுள்ளது.
[The pilot seat is positioned at the centre of the machine, its weight supported by six landing gear legs, the bottom of which is an inflated ball that absorbs shock when landing. To ensure the safety of the pilot, the seat is installed with a five-point harness that secures the pilot to the centre of the machine.]
இயக்குகின்றவருக்கு அதிக வேலை தராத வகையில் பலவும் தானியங்கியாகப் பொருத்தப்பட்டுள்ளன. இது பறந்து களிக்கின்றவரின் சுமையை குறைத்து மகிழ்வைக் கூட்ட துணை செய்கிறது. இயக்குகின்றவரின் கட்டுப்பாட்டை கருவி இழக்கின்றபோது, தரையிலிருந்து இயக்கி இக்கருவியைத் தரையிறக்கவும் கட்டுப்பாட்டுக் கருவியை உருவாக்கியுள்ளனர். இது ஓராண்டு கால உழைப்பில் உருவாக்கப்பட்டுள்ளது.
இக்கருவி விரைவில் வணிக நோக்கில் விற்பனைக்கு வரும் என்று இக்குழு அறிவித்துள்ளது.
[The Times of India – 08/12/2015]
ஆம். அன்று அய்யா சொன்னது. இன்று அறிவியல் செய்தது!
இது மட்டுமா?
ஆண்_பெண் சேர்க்கையில்லாமல் சோதனைக் குழாய் வழி கருத்தரிக்கச் செய்து குழந்தை பிறக்கும் என்று தந்தை பெரியார் 70 ஆண்டுகளுக்கு முன் சொன்னது இன்று நடப்பில் உள்ளது. பலர் அப்படி குழந்தை பெற்றுக்கொள்கின்றனர்.
இன்று அய்யாவின் அடுத்த தொலைநோக்குக் கணிப்பும் உண்மையாகி-விட்டது.
தந்தை பெரியார் ஒரு தொலைநோக்காளர் என்பதை மேலும் உறுதி செய்யும் உன்னத செய்தியல்லவா இது!
பெரியாருக்கு நிகர் பெரியார் என்பதும்; அவரது சிந்தனை உலகு தொழுவதற்குரியது என்பதும்; அவர் ஓர் விந்தை மனிதர், நுண்ணோக்காளர், கூரிய சிந்தனையாளர் என்பதும் இவை மூலம் உறுதி செய்யப்படுவது உவப்பூட்டும், பெருமையூட்டும் செய்தியல்லவா?
வாழ்க பெரியாரின் புகழ்!
– நேயன்