தமிழர்களால் என்றென்றும் மறக்கப்பட முடியாத மாமனிதர் இராமராய நிங்கவாரு என்ற பனகல் அரசர். அவரது நினைவு நாள் டிசம்பர் 17 (1928).
“தேடற்கரிய, ஒப்புயர்வற்ற நமது அருமைத் தலைவர் கனம் பனகல் ராஜா சர்.இராமராய நிங்கவாரு திடீர் என்று நம்மைவிட்டுப் பிரிந்துவிட்டார் என்கிற சங்கதியைக் கேட்டவுடன் பொதுவாக இந்திய மக்களுக்கும், சிறப்பாக தமிழ்நாட்டுப் பார்ப்பனர் அல்லாத மக்களுக்கும் ஏற்பட்ட அதிர்ச்சிக்கும், துக்கத்திற்கும் அளவே இல்லை!’’
இருக்காது என்று தந்தை பெரியார் குறிப்பிட்டு எழுதினார் என்றால், பனகல் அரசரின் அருமை பெருமைக்கு வேறென்ன சான்று வேண்டும்?
ஏன் அப்படி எழுதினார்? காரணங்கள் ஏராளம்! ஏராளம்! பனகல் அரசர் சென்னை மாநில பிரதமராக இருந்த காலத்தில் பார்ப்பனர் அல்லாத மக்களுக்காக அவர் பொறித்த சாதனைகள் மகத்தானவை!
மருத்துவக் கல்லூரியில் சேருவதற்கு சமஸ்கிருதம் படித்திருக்க வேண்டும் என்றிருந்த தடையை உடைத்துத் தூக்கி எறிந்த பெருமகன் அவர்.
அந்தக் காலகட்டத்தில் கல்லூரிகளில் முதல்வர்களாக இருந்தவர்கள் எல்லாம் பெரும்பாலும் பார்ப்பனர்கள்தாம்.
பார்ப்பனர் அல்லாத மாணவர்கள் கல்லூரியில் நுழைவது என்பது குதிரைக் கொம்பாகவே இருந்தது.
அத்தகு கசப்பான சூழலில், கல்லூரிகளில் மாணவர்களைச் சேர்ப்பதற்கென்றே ஒவ்வொரு கல்லூரியிலும் குழு ஒன்றை அமைத்து, அவர்கள் மாணவர்களைச் சேர்க்க வழிவகை செய்து, பார்ப்பனர் அல்லாதார் வயிற்றில் பாலை வார்த்தார்.
பார்ப்பனர்களின் வேட்டைக்காடாக இருந்த கோயில்-களின் நிருவாகத்தை ஒழுங்குபடுத்த இந்து அறநிலையத் துறை என்ற ஒன்றைக் கொண்டுவந்தவரும் அவரே!
பறையன், பஞ்சமன் என்றிருந்த பெயர்களை மாற்றி ஆதிதிராவிடர் என்றே அழைக்க வேண்டும் என்று ஆணை பிறப்பித்தவரும் அவரே!
தமிழ், சமஸ்கிருதம், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் புலமை பெற்றவர். மகாமகா தந்திரசாலி என்று பார்ப்பனர்களாலேயே ஒப்புக் கொள்ளப்பட்டவர்.
பனகல் அரசர் பலகல் அரசர் என்ற பெருமைக்குரியவர்.
வாழ்க பனகல் அரசர் புகழ்!