சாதனைப் பெண் : பிரித்திகா யாஷினி

டிசம்பர் 01-15

இந்தியாவிலே முதன்முறையில் உதவி ஆய்வாளரான திருநங்கை!

கோயம்பேடு பேருந்து நிலையமே என் குடியிருப்பு!

பிரித்திகா யாஷினி என்ற திருநங்கை இந்தியாவே தன்னைப் பற்றிப் பேசும்படி சாதித்துள்ளார். அதுவும் தங்கக்கூட இடமின்றி கைச்செலவிற்கும் பணமின்றி பேருந்து நிலையத்திலே படுத்துறங்கி, பசியும் பட்டினியுமாய் இச்சாதனையைப் புரிந்துள்ளார்.

 

சேலம் கந்தம்பட்டியைச் சேர்ந்த கலையரசன் _ சுமதி தம்பதியின் இரண்டாவது மகனாகப் பிறந்தவர். ஆணாகப் பிறந்து, பெண்ணாக உணர்ந்து, திருநங்கையாக மாறியவர்.

சின்ன வயசுல இருந்தே பெண்ணாக இருக்கத்தான் எனக்கு ஆசை. ப்ளஸ் டூ-_வுலதான் எனக்குள் இருந்த பெண் தன்மையை முழுசா உணர்ந்தேன். ஆனா, என் விருப்பம்போல இருக்க முடியலை.

அப்பா, அண்ணன்கூட தினமும் சண்டை. மனரீதியா ரொம்ப டார்ச்சர் பண்ணாங்க. மந்திரவாதி, மனநல மருத்துவர்னு யாராவது ஒருத்தர்கிட்ட தினமும் கூட்டிட்டுப் போவாங்க. அங்க அனுபவிச்ச துன்பம் சொல்லி மாளாது.

மந்திரவாதிங்கக்கூட பரவாயில்லை. சேலத்துல ரெண்டு டாக்டர்களேகூட, எனக்கு ஏதோ நோய் வந்திருக்குனு ட்ரீட்மென்ட் பண்ணாங்க. அந்த டாக்டர்களுக்கு, எனக்கு நோய் எதுவும் இல்லை. நான் ஒரு திருநங்கைனு புரியவைக்கவே பல நாள் போராடினேன். திடீர்னு ஒருநாள் கீழ்ப்பாக்கம் மனநல மருத்துவமனையில் கொண்டுபோய் விட்டாங்க. என்னைச் சுற்றி மனநோயாளிகள். எப்படி இருக்கும்? கதறி அழுதேன்.

இனிமேலும் இங்கேயே, இப்படியே இருக்க முடியாதுனு தோணிச்சு. ஒரு முழுப் பெண்ணா, சுதந்திரமா இருக்கணும்னு முடிவு பண்ணினேன். யார்கிட்டயும் சொல்லாம 200 ரூபாய் பணத்தோடு சேலத்தில் இருந்து சென்னைக்கு பஸ் ஏறிட்டேன். கோயம்பேடு பஸ் நிலையம் என் வீடு. அங்கேதான் படுத்துத்  தூங்குவேன். திருநங்கைகள் சந்திக்கிற பாலியல் சீண்டல்களுக்கு நானும் தப்பலை. அப்புறம் தோழிங்கிற திருநங்கைகள் நல அமைப்புல சேர்ந்த பிறகுதான் என் வாழ்க்கையோட வலிகள் வடிய ஆரம்பிச்சது.

போலீஸ் வேலைங்கிறது என் சின்ன வயசு கனவு. அப்ளிகேஷன்ல திருநங்கைக்குனு தனியா எந்தப் பிரிவும் இல்லை. அதனால் பெண்னு டிக் அடிச்சேன். ஆனா, சர்ட்டிஃபிகேட்ல வேற பேர் இருந்ததால் என் அப்ளிகேஷனை நிராகரிச்சுட்டாங்க. அப்போ வழக்குரைஞர் பவானி சுப்பராயன் மூலம் நீதிமன்றத்துல வழக்குப் பதிவு பண்ணினேன். வழக்கை விசாரிச்ச நீதிபதி மகாதேவன், பிரித்திகா யாஷினியைத் தேர்வு எழுத அனுமதிக்க வேண்டும்னு உத்தரவிட்டார். தேர்வில் என் கட் ஆஃப் மார்க் 28.50. இந்த மார்க்குக்கு என்னைத் தேர்வு பண்ண முடியாதுனு தேர்வு வாரியம் சொல்லிருச்சு. அதிர்ந்துபோனேன். திருநங்கைகளுக்கு எனத் தனியாக எந்த ஒதுக்கீடும் தேர்வு வாரியத்தில் இல்லை. எனவே, பெண்களுக்கான கட் ஆஃப் மார்க் 25-அய் அடிப்படையாக வைத்து என்னைத் தேர்வு செய்யணும்னு மறுபடியும் நீதிமன்றம் போனேன். சென்னை உயர்நீதிமன்றம் அதை ஏத்துக்கிட்டு எனக்கு உடல்தகுதித் தேர்வு நடத்த உத்தரவிட்டது. ஆனா, அங்கேயும் பிரச்சினை.

உயரம் தாண்டுதல், பந்து எறிதலில் தேர்வாகிட்டேன். ஆனா, ஓட்டப் பந்தயத்துல 18.6 நிமிஷத்துல வந்தேன். ஒரு நிமிஷம் லேட்டுனு என்னை ரிஜெக்ட் பண்ணிட்டாங்க. இதை சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல் கவனத்துக்குக் கொண்டு போனோம். 17.5 இலட்சம் பேர் தேர்வு எழுதியதில் நான் மட்டும்தான் திருநங்கை. என்னைத் தேர்வு செய்வதன் மூலம் திருநங்கைகள் வாழ்வு மிகப் பெரிய அளவில் மேம்படும்னு சொன்னோம். எஸ்.அய். தகுதித் தேர்வுல என் செயல்பாடுகளைப் பார்த்துட்டு, தமிழ்நாடு காவல் துறையில் பணியாற்ற திருநங்கை பிரித்திகா யாஷினி முழு உடல் தகுதி பெற்றுள்ளார். அவருக்கு சட்டப்படி எஸ்.அய். பணி வழங்க வேண்டும். மேலும், எதிர்காலத்தில் மூன்றாம் பாலினத்தவர்கள் காவல் துறை தேர்வுகளில் கலந்துகொள்ளும் வகையில் தேர்வுமுறையை மாற்றியமைக்க வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார்.

இந்தத் தீர்ப்பு, எனக்கு மட்டும் சந்தோஷத்தைக் கொடுக்கலை; என்னோடு சேர்ந்து உழைச்ச அத்தனை நண்பர்களுக்கும் அவ்வளவு சந்தோஷம். ஒட்டுமொத்த திருநங்கைகள் சமூகத்துக்கும் கிடைச்ச முக்கியமான வெற்றி இது. என்னைப் பார்த்து இன்னும் பலபேர், இனிமேல் வரப்போற தேர்வுகள்ல கலந்துப்பாங்கன்னு நம்புறேன். இதுவரைக்கும் திருநங்கைகளுக்கு போலீஸ்தான் தொந்தரவா இருக்கும். இப்போ அந்த போலீஸ் வேலைக்கே நான் போகப் போறேன்னு நினைக்கும்போது மனசு முழுக்க அவ்வளவு சந்தோஷம் என்று இன்னல்களுக்கு இடையே சாதித்த மகிழ்வில் வலிகளை மறக்கிறார். சாதனை என்பதற்கு இதுதான் இலக்கணம் என்று சொல்லுமளவிற்கு சாதித்த இவர் மேலும் சாதிக்க வாழ்த்துகிறோம்.

என்னைப் பற்றி பத்திரிகைகள்ல வந்த செய்திகளைப் படிச்சுட்டு, அப்பா போன்ல பேசினார் அம்மா கதறி அழுதாங்க. ரொம்ப வருஷம் கழிச்சு என் சொந்த ஊருக்குப் போகப் போறேன் _ பிரித்திகா யாஷினியின் கண்களில் சந்தோஷ வெளிச்சம்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *