கல்புர்கி! நீ எழுதிய சிவப்பு மை வாசகர்களை எழுப்பியது.
நீ சிந்திய சிவப்பு மை
எழுத்தாளர்களையும் எழுப்பி விட்டது.
இவர்கள் திரும்பக் கொடுக்கிறார்கள் என்று சொல்ல மாட்டேன்
திருந்திக் கொடுக்கிறார்கள் என்றே சொல்வேன்
நெருக்கடி நிலை சப்தர்
ஆஸ்மி கொலை மசூதி இடிப்பு தொடர்வண்டி எரிப்பு
முள்ளிவாய்க்கால் இனப் படுகொலை
முந்தா நாள் ஜாதி வெறிக் கொலை என
ஆதிக்க வெறியர்களால் அடித்துக் கொல்லப்பட்ட
இலட்சோப இலட்சம் பிணங்களின்மேல் இரக்கமற்று
நடந்து போய் இரண்டு கைகளையும் நீட்டி வாங்கிய
விருதுகள்தாமே இவை. கல்புர்கி! நல்லவேளை
உனக்காகத் திரும்பக் கொடுக்க எந்த சாகித்திய
அகாதமி விருதும் என்னிடம் இல்லை.
ஆனால் எழுத்தில் உன் வழியில் திரும்பத்
திரும்பக் கொடுக்க என்னிடம்
பெரியாரின் சிந்தனைகள் இருக்கின்றன!
அம்பேத்கரின் அறிவுரைகள் இருக்கின்றன!
பாவலர் அறிவுமதி.
நன்றி: நக்கீரன், 17.10.2015