– மஞ்சை வசண்டன்
ஆண்டுக்கொருமுறை நெல்லறுவடை செய்து, விளைவுக்கு உதவியவற்றிற்கு நன்றி சொல்லும் விழாவை தமிழர்கள் கொண்டாடி வருவதையும், அதன் சிறப்பையும் உலகறியும்.
ஆனால் 20.11.2015 அன்று பெரியார் திடலில் நடந்த அறுவடைத் திருவிழா நூற்றாண்டு விளைவின் ஆய்வுத் திருவிழா! சமூகநீதியென்னும் சரித்திர விளைவு தந்த பலன் பெரியார் திடலிலே களம் கண்டது.
பயிரிட்டவர்கள் கெட்டிக்காரர்கள் அல்லவா! கண்டுமுதல் களிப்பைத் தந்தது. அதனால் எழுந்த களியாட்டம் களைகட்டியது. சமுதாய நிலத்திலே, உரிமை விதை ஊன்றி, சுயமரியாதை உரமிட்டு, தியாக உழைப்பால் வளர்த்த நீதிக்கனி விளைக்கும் நெடுமரம், திராவிடத் தமிழ் மக்களுக்கு உழைப்புக்கேற்றப் பலனைத் தந்ததை எண்ணி மகிழ்ந்து எக்காளமிட்டு கொண்டாடப்பட்டது!
ஊடகங்களின் ஒத்துழைப்பு:
பத்திரிகைகள், தொலைக்காட்சிகள், இணைய தளங்கள் என்று பலவும் இந்த விழாவை ஏற்றிப் போற்றி நின்றன. ஏன், எதிரிகள் கூட தம்மையும் மறந்து சிறப்புச் செய்தனர். நீதியின் வெற்றியல்லவா? நிலைத்த வெற்றியல்லவா? உரிமைப் போரின் முடிவில் கிடைத்த வெற்றியல்லவா? அதன் இறுமாப்பு எல்லாவற்றிலும் தெரிந்தது.
நூற்றாண்டு சாதனைகள்
நூற்றுக்கு தொண்ணூறையும் தனதாக்கி அனுபவித்த பார்ப்பன ஆதிக்கம் அடித்து நொறுக்கப்பட்டு, இன்று தமிழர் _ தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் _ பெருவாரியானவற்றை கைப்ற்றியுள்ள மீட்சி! மருத்துவராய், வழக்கறிஞராய், பொறியாளராய், ஆட்சியாளராய், அதிகாரியாய் தமிழ் மக்கள் ஆயிரக்கணக்கில் உருவாகி பணிபுரியும் காட்சி!
தகுதி திறமை தங்களுக்கே என்று தற்செருக்குடன் தலைகால் புரியாது ஆடிய ஆரிய கூத்தை அடக்கி ஓரங்கட்டி, முதல் மதிப்பெண்ணா, முதல் தகுதியா, போட்டித் தேர்வா எல்லாவற்றிலும் தமிழர் பிள்ளைகளே முதலிடம் என்ற சாதனை மாட்சி!
இனமானம், பகுத்தறிவு, சுயமரியாதை என்று சுழன்றடித்த பெரியார் புயலினால், வேர் அற்று வீழ்ந்த மூடநம்பிக்கை, பார்ப்பன ஆதிக்கம், சாதி வெறி, மதவெறி இவற்றின் வீழ்ச்சி!
கலை, இலக்கியம், ஆட்சி, அதிகாரம், கல்வி, பதவி, விளையட்டு, அறிவியல், மருத்துவம், பொறியியல், சட்டம், ஆய்வு, பேச்சு, எழுத்து என்று எல்லாத் துறையிலும் தமிழர்களுக்கு திராவிடத்தால் எழுந்த எழுச்சி! என்ற விளைவுகள் பலப்பல.
இவை விழாகண்ட தமிழர்களுக்கு, சுயமரியாதைத் தொண்டர்களுக்கு விளக்கவொண்ணா மகிழ்வை, பூரிப்பை, பெருமையை, உற்சாகத்தை அளித்ததன் பொலிவை விழா முடியும்வரை காணமுடிந்தது.
பேராசிரியரின் பேச்சு:
காலையில் இனமானப் பேராசிரியரின் உற்சாக முழக்கத்தில் அது ஒளிவீசியது. தமிழனுக்குத் தமிழன் தடம் தோள்தந்து உதவி தமிழினத்தை உயர்த்த வேண்டும் என்ற அவரது நெறியுரை நெஞ்சை நிமிரச் செய்தது.
திராவிடத்தால் எழுந்து விட்டோம், இனி தாழோம்! வீழோம்! என்ற உறுதியை உத்திரவாதப்படுத்தினார் பேராசிரியர் தன் உரையில்!
இந்த எழுச்சிக்கும், உயர்விற்கும் காரணமான பெரியார், நீதிக்கட்சித் தலைவர்கள், கருஞ்சட்டைத் தொண்டர்கள் அனைவருக்கும் நன்றியை உணர்வு பொங்கத் தெரிவித்தார்.
தமிழர் தலைவரின் நன்றி பாராட்டு:
நன்றிக்குரிய இத்தியாகச் சீலர்கள் இன்று இல்லாத நிலையில் அவர்களின் வாரிசுகளை அழைத்து சிறப்புச் செய்து, நன்றியையும், மகிழ்ச்சியையும் தெரிவித்துக் கொண்ட தமிழர் தலைவர், வாரிசுகளின் கடமைகளையும் சுட்டிக்காட்டினார். கொள்ளுப் பேரர்கள் கொள்கை கொள்ளும் பேரர்களாக வாழவேண்டும், பணியாற்ற வேண்டும் என்று நயம்பட கேட்டுக்கொண்டார்.
சான்றோர் பெருமக்கள்
நீதியரசர் மோகன், நீதியரசர் ஏ.கே.ராஜன், பேராசிரியர் மா.நன்னன் போன்ற தகைமைசால் தமிழினப் பெருமக்கள் கலந்துகொண்டு கருத்துரையை மகிழ்வுடன், எழுச்சியுடன், பூரிப்புடன் வழங்கி இன்றைய தலைமுறைக்கு எழுச்சியூட்டி, கடமை காட்டினர்.
பட்டிமன்றம்:
மதிய உணவுக்குப்பின், பேராசிரியர் தி.இராசகோபால் நடுவராக அமர, சுப.வீ. அவர்களும், துரைசந்திரசேகரன் அவர்களும் அணித் தலைவர்களாய் நின்று வாதிட்ட பட்டிமன்ற வாதங்கள் நீதிக்கட்சியின் பெருமைகளை வெளிச்சம் போட்டுக்காட்டின.
அதனைத் தொடர்ந்து நடந்த கருத்தரங்கில் பச்சையப்பன் கல்லூரி முன்னாள் முதல்வர் ப.இரா.அரங்கசாமி, வழக்கறிஞர் அ.அருள்மொழி ஆகியோர் சிறப்பான கருத்துக்களை சிந்தைகொள்ளச் செய்தனர்.
மாணவர் முழக்கம்:
பேச்சுப் போட்டியில் பங்குகொண்ட மாணவர்கள் பேசிய பேச்சு அரங்கத்தில் உள்ளவர்களை மட்டுமல்ல அகிலமெங்கும் வாழும் தமிழர்களை ஆர்ப்பரிக்கச் செய்தது.
அனைவரின் பாராட்டையும் பெற்ற தமிழமுதன் எனது மாணவன், எம் பள்ளி மாணவர், நான் பாராட்டிப் பாராட்டி உருவாக்கிய மாணவன் என்ற நிலையில் அவனது பெற்றோரைவிட நான் பெருமகிழ்வு கொண்டேன். எதிர்கால தமிழ்ச் சமுதாய மாணவர்கள், ஆற்றலும் அறிவும் மிக்கவர்கள்; நம்மினும் மேலாக இயக்கத்திற்கு உழைப்பர், இனத்திற்கு உழைப்பர் என்ற நம்பிக்கை அவர்கள் மூலம் எழுந்தது.
கவர்ந்திழுத்த காணொலிக் காட்சி
அதனையடுத்து காட்சிப்படுத்தப்பட்ட நீதிக்கட்சி வரலாற்று நாடகம் அன்றைய நிகழ்வுகளின் சிகரமாக அமைந்தது. அளந்து அளந்து அழகாய் செதுக்கப்பட்ட நேர்த்தியான நிகழ்வு அது. அது உலகெங்கும் பார்க்கப்பட்டது என்பதறிய உவகையும் உணர்வும் பெருகுகிறது. இந்நிகழ்வு எல்லா மக்களுக்கும் காட்டப்பட வேண்டும்.
தமிழர் தலைவர் நிறைவுரை:
நிறைவாக தமிழர் தலைவர், நீதியரசர் கோகுலகிருஷ்ணன், பகுத்தறிவாளர் பகவான் ஆகியோர் ஆற்றிய உரை அனைவரையும் இன உணர்வால் இணைத்துப் பிணைத்து இலக்கு நோக்கி கிளர்ந்தெழச் செய்தது.
தன் உயிருக்குக் குறிவைக்கப்பட்ட நிலையிலும் பகவான் அவர்கள், இந்த இனமான பகுத்தறிவு விழாவில் கலந்துகொண்டு ஆற்றிய உரை எல்லோருக்கும் உணர்வும் உறுதியும் கொடுத்தது. இந்த வெற்றித் திருவிழாவில் கலந்துகொண்ட பெருமையும் மகிழ்வும் அவர் உடல் முழுவதும் தெரிந்தது. நிறை விளைச்சல் தந்த நீதிக்கட்சியின், சுயமரியாதை இயக்கத்தின் திருவிழா பெருமைமிகு பெருவிழாவாக நிறைவுற்றது; வரலாற்றில் பதிவுற்றது!