அய்யாவின் அடிச்சுவட்டில் – 143

டிசம்பர் 01-15

அதிகாலை வரை அணியணியாய் வந்து வரவேற்றார்கள்!

கேள்வி: திரு. வீரமணி அவர்களே தங்களுடைய இலக்கியத்துறை வாழ்க்கை பற்றி தெரிந்து கொள்ள விரும்புகிறோம். தாங்கள் இலக்கியத் துறையில் எந்த அளவு ஈடுபாடு கொண்டு இருக்கின்றீர்கள்.

பதில்: இலக்கியம் என்பது என்ன? என்பதில் பிறருக்கும் எங்களுக்கும் கருத்து வேறுபாடுகள்கூட இருக்கலாம்.

இலக்கியத்திற்காகத்தான் இலக்கியம் இருக்க வேண்டும் என்று சொல்லுகின்ற பண்டித மனப்பான்மை கொண்டவன் அல்ல நான்.

இலக்கியம் என்பது சமுதாயத்தினுடைய தேவைக்குப் பயன்பட வேண்டும். குடி இருப்பதற்குத்தான் வீடு கட்டுகின்றோம் என்பதைத் தவிர வெளியில் இருந்து வேடிக்கை பார்க்க அல்ல என்பது எங்களது உறுதியான கருத்து.

எந்த உயர்ந்த சிந்தனையாக இருந்தாலும் அது அருமையான இலக்கியம் என்று கொள்ளப்பட வேண்டும்.

அந்த வகையில் பார்க்கும்போது அந்த இலக்கியங்கள் மக்களுக்குப் பயன்படக் கூடிய வகையிலும் புதுமைக் கருத்துக்களை உருவாக்கக்கூடிய ஆயுதங்களாகவும், கருவிகளாகவும் அது அமைய வேண்டும் என்று நினைத்து அந்த வகையிலே நாங்கள் தொண்டாற்றிக் கொண்டு இருக்கின்றோம்.

பழமைக்கு புதிய வியாக்கியானங்கள் புதிய பொருள்கள், விளக்கங்கள் தருவதுதான் இலக்கியம் என்றால் அது நிச்சயமாக நம்முடைய சமுதாய தேவைக்குப் பயன்பட முடியாது. எதிர்கால ஓட்டத்திற்கு முன்னாலே நிற்க முடியாது என்று கருதித்தான் புதிய இலக்கியங்கள் என்றால் புதிய உலகத்தினை சமைக்கின்ற கருவிகளாக அமைய வேண்டும், என்கின்ற கண்ணோட்டத்தோடு எங்களுக்குத் தெரிந்த வகையிலே, எங்களுக்கு முடிந்த வகையிலே எளிய வகையிலே, நாங்கள் எழுத்துப் பணிகளை, பேச்சுக்களை நிகழ்த்திக் கொண்டு இருக்கின்றோம்.

இலக்கியம் என்பது நல்ல அறிவியல் கருத்தின் தொகுப்பாக, சிந்தனையாக இருக்க வேண்டும். நில உலகத்தில் இருந்து நிலா உலகத்திற்கு மனிதன் போய்விட்ட பிற்பாடும் இன்னமும் நாம் பழமையையே சொல்லிக் கொண்டும் பாடிக் கொண்டும் இருப்போமானால் அந்தப் பழைய பாட்டு எந்த அளவுக்குப் பயன்படும் என்பதை எல்லோரும் எண்ணிப் பார்க்க வேண்டும்.

எனவே, நம்முடைய தமிழ் அறிஞர்களும் தமிழ் படிக்கின்ற இளைஞர்களும் நிலா உலகம் எப்படிப்பட்டது என்பதனையும் கூட இலக்கியத்தில் செய்யுள் மூலமாகத் தெரிந்து கொள்ளும்படி இருக்க வேண்டும். இது யாருக்கோ பாத்தியப்பட்டது நமக்குரியது அல்ல என்று நினைப்பது இலக்கிய முறையாகாது.

எனவே, இலக்கியமானாலும் பகுத்தறிவுக் கண்ணோட்டத்தோடு புதுமையினை சமைக்கக் கூடியதாக இருக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் நாங்கள்.

எனவே, அந்த வகையில் நாங்கள் எங்களுக்கு ஏற்பத் தொண்டாற்றிக் கொண்டு வருகின்றோம் எழுத்துப் பணிகளின் மூலமாக, பத்திரிகைகளை, ஏடுகளை அந்த வகையிலே நடத்திக் கொண்டு வருகின்றோம்.

கேள்வி: அண்மையில் தாங்கள் கோலாலம்பூரில் நிகழ்த்திய உரையின் பொழுது தங்களுடைய கழகத்தின் வழியாக மலேசியாவில் இருந்து தமிழகத்திற்கு வரும் மாணவர்களுக்கு உபகாரச் சம்பளம் வழங்க இருப்பதாகவும் தெரிவித்தீர்கள். அதுபற்றி விவரமாகக் கூற வேண்டுகின்றேன்.

பதில்: ஆம்! இதனை தெரிவிப்பதற்குக் கூட மிகுந்த மகிழ்ச்சி அடைகின்றேன். தந்தை பெரியார் அவர்கள் பொதுமக்களிடம் இருந்து வசூலித்த சிறிய நிதியானாலும், அவருடைய சொந்த பணமானாலும் அவைகளை எல்லாம் ஒன்றாக்கி அது மக்களுக்கே பயன்பட வேண்டும் என்ற வகையிலே  பெரியார் அறக்கட்டளையை உருவாக்கி இருக்கின்றார்கள்.

தந்தை பெரியார் அவர்களுக்கு வாழ்நாள் பூராவும் துணையாக இருந்து அவர் வாழ்நாளுக்குப் பின்னாலே அவர் கண்ட கழகத்திற்கும் துணையாக இருந்து மறைந்த அன்னை மணியம்மையார் அவர்கள் அவருக்கு என்று தந்தை பெரியார் தந்துவிட்டுப்போன ஓரிரு சொத்துக்களையும், தம் சொந்த சொத்துக்களையும் இணைத்து பெரியார் மணியம்மை கல்வி அறக்கட்டளை என்ற ஒன்றை உருவாக்கி அதையும் அவர்கள் மக்களுக்கே வைத்து விட்டுப் போய் இருக்கின்றார்கள்.

இந்த இரு அறக்கட்டளைகளும் கல்விப் பணிகளையும் பொதுப் பணிகளையும் ஏராளம் செய்துகொண்டு வருகின்றன.

எங்களுடைய நாட்டிலே (தமிழ்நாட்டில்) நாங்கள் ஆதரவற்ற அனாதைக் குழந்தைகள் என்று அழைக்கப்படுகின்ற குழந்தைகளை, மருத்துவமனையில் கைவிடப்பட்ட குழந்தைகளை எல்லாம் எடுத்து அவர்களை நல்முறையில் வளர்த்து உருவாக்க குழந்தைகள் காப்பகம், குழந்தைகள் இல்லம் ஆகியவைகளை நடத்தி வருகின்றோம்.

பல மாணவ மாணவிகளுக்கு உதவி செய்து வருகின்றோம். பல வகையான அந்த உதவிகளை பெருகின்ற மாணவர்களின் எண்ணிக்கை தமிழக எல்லையில் மட்டும் என்று குறுகிவிடக் கூடாது என்று கருதி மலேசிய நாட்டில் இருந்து தமிழகத்துக்கு வந்து கல்வி பயில வாய்ப்பினை பெற்றவர்களுக்கும் அங்கே பொருளாதாரச் சிக்கல்கள் இருக்கக் கூடாது என்ற காரணத்தினால் மேற்படி அறக்கட்டளை மூலமாக நாங்கள் அவர்களுக்கு உதவ முன்வந்து இருக்கின்றோம்.

இந்த வகையிலே ஒரு மாணவர், ஒரு மாணவிக்கு வருகின்ற கல்வி ஆண்டு முதல் உதவுவது என்று நாங்கள் முடிவு செய்து அதைத்தான் சில நாள்களுக்கு முன் கோலாலம்பூரில் நான் பேசிய கூட்டத்தில் அறிவித்தேன். அதைப்பற்றி முழுவிவரம் விரிவாக பின்னர் அறிவிக்கப்படும்.

கேள்வி: திரு. வீரமணி அவர்களே! இதுவரைக்கும் மலேசிய வானொலி நேயர்களுக்கு தாங்கள் அளித்த பேட்டிக்காக நேயர்கள் சார்பில் நன்றியினைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
பதில்: மலேசிய வானொலி நேயர்களை உங்கள் மூலமாக சந்திக்க ஒரு வாய்ப்பினை கொடுத்தமைக்கு எங்கள் இயக்கத்தின் சார்பாகவும் என் சார்பாகவும் நன்றியினைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

13.01.1979 அன்று தொடங்கி 12.02.1979 வரையிலான எங்கள் பயணத்தில் அனைத்தும் சிறப்பாக நடைபெற்றன.

இப்பயணத்தில் என்னுடன் வந்த கழகப் பொருளாளர் கா.மா.குப்புசாமி அங்கும் பொருளாளராகவே நடந்து கொண்டார். நமது குழந்தைகள் இல்லத்திற்கு கிடைத்த அன்பளிப்புகளையெல்லாம் இரவு வெகு நேரமானாலும் எழுதி வைத்துவிட்டுதான் தூங்கச் செல்வார். அதேபோல் இயக்க நூல்களை பரப்பும் பணிகளில் ஏ.டி. கோபால் அவர்கள் ஈடுபட்டார்.

வெற்றிகரமான முறையில் எங்கள் மலேசிய (கொள்கை) பயணம் முடிந்து 13.02.1979 அன்று காலை 10 மணியளவில் மாஸ் விமானம் மூலம் திரும்புவதாக திட்டமிட்டு பின்னர் அத்திட்டம் மாற்றப்பட்டு அன்று இரவு 12.40 மணியளவில் ஏர் இந்தியா விமானம் மூலம் வரமுடிந்தது. இதன் காரணமாக 13.02.1979 அன்று மாலை சிந்தாதிரிப்பேட்டையில் நடைபெறவிருந்த வரவேற்புக் கூட்டம் மறுநாள் தள்ளிவைக்கப்பட்டது.

நள்ளிரவு 12.40 மணிக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தாலும் நாங்கள் அதிகாலை 2.30 மணிக்குத் தான் வெளியில் வரமுடிந்தது. அதுவரை காத்திருந்த  கழகக் குடும்பத்தவர்கள் அலையலையாக இரவு 11 மணி முதல் குவிந்து இருந்து உற்சாக வரவேற்பளித்தனர். மலர் மாலைகளும் சால்வைகளும் குவிந்தன, பலர் இவற்றுக்குப் பதிலாக பணமும் அளித்தனர்.

மீனம்பாக்கம் விமான நிலையத்தின் வெளிப்புற சாலைகளில் கொடிகளும் தோரணங்களும் கட்டப்பட்டு ஒரே விழாக் கோலமாக இருந்தது. இந்த வரவேற்பு நிகழ்ச்சி முடிய மணி 3.30 ஆகிவிட்டது. நிகழ்ச்சி முடிந்து தோழர்களும் திரும்புவதற்கு வசதியாக விமான நிலையம் முதல் பெரியார் திடல் வரை பல்லவன் போக்குவரத்துக் கழகம் தனி பேருந்து ஏற்பாடு செய்திருந்தது. மறுநாள் காலை கலைஞர் அவர்கள் தொலைபேசியில் தொடர்பு கொண்டு சுற்றுப்பயணம் குறித்து கேட்டறிந்தார். விடுதலை அலுவலகத்திற்கு நேரில் வருவதாக அவர் தெரிவித்தார். நான் சட்டமன்றம் நடக்கும் நேரத்தில் இதற்காக நேரத்தை செலவழிக்காதீர்கள், அங்கே செல்லுங்கள் என்று கூறினேன். பின்னர் முரசொலிமாறன் எம்.பி அவர்களும், மு.க. ஸ்டாலின் அவர்களும் விடுதலை அலுவலகத்திற்கு வந்து வாழ்த்திச் சென்றனர்.

பின்னர், இராம அரங்கண்ணல் எனது இல்லத்தில் வந்து சந்தித்து பாராட்டினையும் வாழ்த்தையும் தெரிவித்தார். மாலையில் சிந்தாதிரிப்பேட்டை சிங்கண்ண செட்டிச் தெருவில் பாராட்டுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு சென்னை மாவட்டத் தலைவர் எஸ்.பி. தட்சிணாமூர்த்தி தலைமை வகித்தார். கழக மாநில பொறுப்பாளர்களும் மாவட்டப் பொறுப்பாளர்கள் பலர் பங்கேற்று உரையாற்றினார்கள் பின்னர் நான் உரையாற்றுகையில், இந்த இயக்கத்தை அய்யா அவர்கள் உருவாக்கியதோடு மட்டுமல்ல, இதையாரும் அழிக்க முடியாத அளவிற்கு வளர்த்துவிட்டுச் சென்றிருக்கிறார்கள். உலகம் முழுவதும் இந்த இயக்கம் ஒளிவீசுகிறது. அந்தப் பெருஞ்சுடரின் ஒளியிலே நாமெல்லாம் மகிழும் வண்ணம் கடமையாற்றி வருகிறோம். தந்தை பெரியார் என்ற உலகளாவியத் தத்துவத்தில் நான் கற்றுக்கொள்ள வேண்டியது இன்னும் ஏராளமாக உள்ளது. அய்யா கொள்கை கற்றது கைமண் அளவு கல்லாதது உலகளவு என்று சொல்லக்கூடிய நிலையிலே நான் இருக்கிறேன். என்று கூறிவிட்டு, நான் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த நேரத்தில் இயக்கப்-பணிகளை சிறப்பாக ஆற்றியமைக்கு நன்றி தெரிவித்தேன்.

மேலும் பேசுகையில் இக்கூட்டம் நடைபெறுவதற்கு சில நாட்களுக்கு முன் உத்திர பிரதேசத்தில் வழங்கப்பட்டு வந்த இட ஓதுக்கீடு செல்லாது என்று அலகாபாத் உயர் நீதிமன்றம் ஆணையிட்டது. அதனை உச்சநீதி மன்றத்திற்கு அப்பில் செய்ய முடிவெடுத்தார் அம்மாநில முதலமைச்சர் திரு. ராம் நரேஷ் யாதவ். அதற்கு முட்டுகட்டை பேட்ட பார்ப்பன அமைச்சர்களை நீக்கினார். இதனால் ஆத்திரமடைந்த ஆர்.எஸ்.எஸ். பார்ப்பனர் கஜேந்திர நாத் மிஸ்ரா என்பவர் உத்திர பிரதேச முதல்வரை கொலை செய்யும் நோக்கத்தோடு கத்தியால் குத்தினார். கடும் கண்டனத்தை தெரிவித்து மலாய் நாட்டில் வழங்கப்படும் சமூக நீதியான பூமிபுத்ரா எனப்படும் மண்ணின் மைந்தர்களுக்கான ஒதுக்கீட்டை பேசினேன்.

மலேசியா, சிங்கப்பூர் நாடுகளில் தந்தை பெரியார் நூற்றாண்டு விழாவில் கலந்து கொண்டு திரும்பிய உடன் விடுதலை இதழில் 23.02.1979 அன்று இரண்டாம் பக்கத்தில் பயணங்கள் குறித்தும் அங்கு அய்யா உருவாக்கிய கொள்கைக் குடும்பங்கள் பற்றியும் நீண்டதோர் தலையங்கம் திணறினேன்! திக்குமுக்காடினேன்!! என்று தலைப்பில் எழுதினேன். அதில்,
தோழர்களது அன்பு பொங்கிய வழியனுப்பைப் பெற்றுச் சென்றபிறகு, மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாட்டு கழகத் தோழர்கள், இன உணர்வும் பகுத்தறிவும் கொப்பளிக்கும் தமிழ்ப் பெருமக்கள் ஆகியவர்களது வரவேற்பு _ அவர்கள் காட்டிய எல்லையற்ற உற்சாகம் எளிதில் வார்த்தைகளால் வர்ணிக்க இயலாத அளவுக்கு அமைந்தது! திக்குமுக்காடச் செய்தது!!

ஏற்கனவே குறிப்பிட்டதுபோல, விமான தளத்திலிருந்து இறங்கியது முதல், என்னை முதல்முறை இரண்டாவது முறையாக சிங்கப்பூர் நாட்டிற்கு அனுப்பி வைக்கும்வரை, மலேசிய திராவிடர் கழகத் தலைவர் அருமைச் சகோதரர் செயல் மாவீரர் திரு கே.ஆர்.இராமசாமி அவர்களும், அவருடன் தோளோடு தோள் நின்று பணிபுரியும் முதுபெரும் இயக்க வீரர்களான சுயமரியாதை வீரர்கள் ஏ.மருதமுத்து, திராவிடமணி, நல்லதம்பி, பொருளாளர் வேலு ஆகியோர் முதல்துடிப்புமிக்க இளைஞர் பொதுச் செயலாளர் சகோதரர் ரெ.சு.முத்தையா அவரைப் போன்ற பல தலைமைப் பொறுப்பாளர்களும் எங்களிடம் நன்கு வேலை வாங்கினார்கள். ஆர்வம் பொங்கும் அன்பு கெழுமிய அவர்களது செயல் திறமைக்கு நாங்கள் கட்டுப்பட வேண்டியவர்கள் தானே?

தந்தை பெரியார் அவர்கள் உருவாக்கிய பெருங் கொள்கைக் குடும்பம் வீட்டு எல்லை, நாட்டு எல்லை எல்லாவற்றையும் கடந்தது அல்லவா?

நமது பகுத்தறிவு ஆசான் அய்யா அவர்களது இருமுறைப் பயணங்களும் பயன் விளைவித்தவை; பகுத்தறிவு இயக்கத்தைப் பார் அறியச் செய்ததோடு பலரும் அதில் ஈடுபாடு கொள்ள வைத்தன.

இன்றோ அங்கு புதிய தலைமுறைகள் உருவாகியுள்ளதால் தலைமுறை இடைவெளி (நிமீஸீமீக்ஷீணீவீஷீஸீ ரீணீஜீ) ஏற்பட்ட நிலையில், அய்யாவின் நூற்றாண்டு விழா அதனை நிரப்பப் பெரிதும் பயன்பட்டது என்றே கூறவேண்டும்.

தமிழ்நாட்டில்கூட இவ்வளவு முறையாக ஏற்பாடுகள் (நூற்றாண்டு விழா பிரச்சாரம்) இருக்குமா என்று வியக்கும் வண்ணம் கவியரங்கம், கருத்தரங்கம், இசையரங்கம் முதல் எல்லாமே மிகச் சிறப்புடன் நடைபெற்றன!

மலேசிய திராவிடர் கழகத்தால் அவை நடத்தப் பெற்றாலும், எல்லாத் துறைகளில் உள்ள தலைவர்களும், மலேசிய துணை அமைச்சர் பெருமக்கள் முதல், தேசிய தோட்டத் தொழிலாளர்கள், தலைவர்கள் முதல் யாவரும் மலேசிய திராவிடர் கழகத்தின் போற்றத்தக்க தொண்டைப் பாராட்டி வரவேற்று ஆதரவு காட்டவே செய்தனர்.

எட்டு அல்லது 10 கிளைகள் மட்டுமே இருந்த நிலைமாறி, இப்போது மலேசியா முழுதும் 89 கிளைகள் மலேசிய திராவிடர் கழகத்திற்கு அங்கே இருக்கின்றன.

மக்களின் ஆதரவால் 5 லட்சம் வெள்ளிகள் (சுமார் 20 லட்ச ரூபாய் மதிப்பு) செலவில் தலைநகர் கோலாலம்பூரில் வளரும் முக்கிய பகுதியில் ஓர் கட்டிடத்தையே மலேசிய தி.-க.வினர் திரு. கே.ஆர்.ஆர்., மற்றும் கழகப் பொறுப்பாளர்கள் அனைவரும் ஒத்துழைப்போடு வாங்கி ஒரு புதிய சரித்திரம் படைத்துள்ளனர்.

அய்யாவின் நூற்றாண்டில் அவர்கட்குக் காணிக்கையாக்குகிறோம் என்று அறிவித்தார் தலைவர். பெரியார் மாளிகை என்றே பெயர் சூட்டவும் அவர்கள் திட்டமிட்டுக் கொண்டுள்ளனர்.

இங்குள்ள மூடநம்பிக்கை, ஜாதிநோய் இப்போது அங்கும் ஏற்றுமதியாகிவிடும் நிலையில் தந்தை பெரியார் கொள்கை என்ற ஈரோட்டு மாமருந்து அவசியம் தேவை என்பதை அங்கு உணர்ந்து ஒப்புக்கொண்டனர்!

இயற்கை வளங்கொழிக்கும் மண்; அந்த மண், பகுத்தறிவு கொள்கைளும் வேர் பிடித்து பூத்துக் குலுங்கும் அரிய முயற்சியை அங்குள்ள மலேசிய தி.க. செய்கிறது!

அரசியல் இயக்கமாக இல்லாது அனைவரது ஆதரவும் (அதே நேரத்தில் கொள்கை அற்றவர்களுடன் சமரசம் செய்து கொள்ளாது) துணிவுடன் மலேசிய தி.க. தனது ஒவ்வொரு அடியையும் எடுத்து வைக்கின்றது!

சீரிய தலைமை, செயல் திறன்மிக்க தோழர்கள், அதன் முதல் சொத்தாகும்.

நிகழ்ச்சிகள் 50க்கு மேல்; அந்தந்த ஊர் தமிழர்களின் அன்போ கரை உடைந்த வெள்ளம் போன்றது; இளைஞர்களின் முற்றுகையோ எளிதில் மறக்க முடியாதது! தாய்மார்களது பண்போ எவரும் பின்பற்றத்தக்கது.

பத்தாங் பர்ஜிந்தை பெரியார் தொண்டரும் எனது இனிய சகோதரருமான கந்தசாமியின் பணி எப்போதும் மறக்க முடியாது.

தமிழ்நாட்டைப் பார்க்காது, தமிழர் தலைவர்களைச் சந்திக்காது, கருத்துக்களையும், கொள்கைகளையும், செய்திகளையும் மட்டுமே சந்தித்து அவ்வளவு அன்புக் கடலாக அவர்கள் இருக்கிறார்கள்!

மலேசிய இந்தியக் காங்கிரஸ் என்ற அரசியல் கட்சி மலேசியக் கூட்டணியில் (ஆளும் கட்சியில்) அங்கம் வகிக்கும் கட்சி. அது மலேசிய திராவிடர் கழகத்தைப் பெரிதும் மதிக்கிறது. தோழமையுடன் இருக்கிறது. தி.க.வின் சமுதாயத் தொண்டு இன்றியமையாதது என்று அதன் இளைய தலைமுறை நன்கு உணர்கிற நிலை உள்ளது.

சிங்கப்பூரிலும் நமது தோழர்கள் தமிழர் சீர்திருத்த சங்கத் தலைவர் திரு. விக்டர் அவர்களும் செயலாளர் திரு.முருகு.சீனுவாசன் மற்றும் நம் தோழர்கள் நாகரெத்தினம், மூர்த்தி, சந்திரன், (எழுத இயலாத அளவுக்கு இன்னும் எத்தனையோ இயக்க நண்பர்கள்) இவர்கள் தவிர்ந்த பொது நிலையில் வர்த்தகப் பிரமுகர்கள், தமிழ்ப் பெரு வணிகர்கள், காட்டிய பேரன்பும் எங்களை திக்குமுக்காடவே செய்தது!

சிங்கப்பூர் தொழிலாளர் மாநாட்டு மண்டப விருந்து வரவேற்பு கூட்டமும், தமிழர் சீர்திருத்த சங்கத்தில் நடைபெற்ற கூட்டமும் மிகச் சிறப்பான நிகழ்ச்சிகள். அய்யா நூற்றாண்டு விழாவை கண்காட்சியுடன் ஏற்பாடு செய்து (செப்டம்பரில்) நடத்தினார்கள் நண்பர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

விருந்துகள் எங்களைவிடவே இல்லை. கனிவான விசாரிப்புகளும், கொள்கை உணர்ச்சி பொங்கும் ஆர்வமும் சிங்கை தமிழர்கள் மத்தியில் என்றும் தணியாததாகவே இருக்கின்றன!

அங்கும் மூடத்தனம் பக்தி என்ற பேரால் தனது பொல்லாச் சிறகை விரித்து ஆட ஆரம்பித்து உள்ளது! பெரியார் என்ற மாமருந்துதான் அப்பிணிபோக்கும் மாமருந்து என்பதை உணர்த்தும் பொறுப்பை நமது தோழர்கள் நல்லவண்ணம் எடுத்துக் கொண்டுள்ளனர். அங்கு அவர்கள் காட்டிய அன்புப் புயலில் சிக்கினோம். மீண்டுவந்த நிலையில், இங்கு நமது கருஞ்சட்டை குடும்பத்தினர் தம் வரவேற்பு என்ற பூகம்பத்தில் அகப்பட்டோம்!

இவ்வளவு அன்பும் காட்டி நம்பிக்கை வைத்திருக்கிறார்களே நமது கழகக் குடும்பத்தினர்! இதற்கு ஏற்ப நாம் நடந்து, நமக்கு தகுதி இனியாவது உண்டாக்கிக் கொண்டு _ அதை நியாயப்படுத்த வேண்டுவது எப்படி என்பதே இப்போது பெருங் கவலையாகிவிட்டது.

சில ஆண்டுகட்கு முன்பு நம் அறிவு ஆசான் அய்யா அவர்கள் எழுதிய ஒரு குறிப்பு என்னைப் பொறுத்தவரையில் என்றும் நினைவில் கொள்ளத்தக்கதாக  மட்டுமல்ல; மறக்க இயலாத பாடமாகவும் ஆகிவிட்டது.

பெருமை, புகழ் என்பதைக் கண்டு மயங்கிவிடாது, அதற்கு பலியாகி விடாது, இழிவு, ஏச்சுப் பேச்சு மானக்கேடு ஏற்படும் எந்த சந்தர்ப்பத்திலும் சலிப்போ, விரக்தியோ கொள்ளாது பணிபுரிய இதுவே அய்யா நமக்கு தந்த ஆணை என்றும் கொண்டு, எனது பணி தொடருகிறேன்.

உண்மையான சமுதாயத் தொண்டன் என்பவன் சமுதாய நலனுக்குச் செய்யும் காரியங்களில் மானக்கேடு ஏற்பட நேர்ந்தால் அதை துணிவுடன் ஏற்க முன் வரவேண்டும். குடிநலத் தொண்டர்கள் மானம் பார்க்கில் கெடும் _ என்ன கெடும்? லட்சியம் கெடும் என்பது நமக்கு முன்னாலும் சொல்லப்பட்ட அறிவுரையாகும். அப்படி மானத்தைக் கருதாதவன் தான் லட்சியவாதி ஆவான், மற்றவன் சுயநலவாதியேயாவான் என்ற,
அய்யாவின் இந்தப் பாடம்தான் நம் அனைவருக்கும் பாலபாடமாக அமைய வேண்டும்.

அன்பு, கருணை, பாராட்டு இவைகளால்-தான் திணறுகிறோம், திக்குமுக்காடுகிறோம் என்பது பெரியார் தொண்டர்களுக்கு இருக்க வேண்டுமே தவிர, எதிர்ப்பு, ஏளனம், இழி குற்றச்சாட்டுகள், இவைகளால் ஒருபோதும் நாம் திணறவோ, திக்குமுக்காடுபவர்களாகவோ இருக்க மாட்டோம்! இருக்கக் கூடாது.

அய்யாவின் லட்சியங்கள் அகிலத்தின் வழிமுறைகளாகும் வரை அயராது பாடுபட அண்மையில் மேற்கொண்ட அயல் நாட்டுப் பயணம் ஓர் அச்சாரப் பயணமாக அமைந்தது என்று குறிப்பிட்டுள்ளேன்.
(நினைவுகள் நீளும்)

– கி.வீரமணி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *