– தவத்திரு குன்றக்குடி அடிகளார்
உலகத்தின் தொன்மைமிக்க இனங்களுள் தமிழினமும் ஒன்று. வரலாற்றுக் காலத்துக்கு முன்பே தோன்றி வளர்ந்த இனம் தமிழினம். தமிழினம் மொழியால், நாகரிகத்தால் செழித்து வளர்ந்து வரலாற்றுச் சிறப்புடையதாக வாழ்ந்த காலம் இன்றைக்கு மூவாயிரம் ஆண்டுகளைக் கடந்து நிற்கிறது. இவ்வளவு பழைமையான காலத்தில் தமிழினத்தைப் போல் சிறப்புற்று வாழ்ந்த இனம் வேறு ஒன்றையும் வரலாற்றில் காணோம். தமிழ் இனத்தோடு ஒப்ப வைத்துப் பேசக் கூடிய நாட்டு மக்கள் கிரேக்கர், ரோமானியர், சீனர் எனலாம். இந்த மக்களின் நாகரிகங்களுக்கும் கூட, தமிழினம் வழங்கிய கொடை உண்டு.
தமிழர் நாகரிகத்தின் சிறப்பு
தமிழினத்தின் நாகரிகத்தில் சிறப்புடையன ஜாதி, இன, குலப் பிரிவினைகள் இல்லாமை; அறிவியல் சார்ந்த வாழ்க்கை நோக்கு; மக்களாட்சி முறை தழுவிய அரசுகள்; மனித உரிமைகளைப் பாதுகாத்துப் போற்றிய அரசுகள், வாழ்வியலைத் தழுவி வளர்த்த சமயம் ஆகியன. இவை சிறந்த நாகரிகத்தின் கோட்பாடுகள்.
தமிழினம் தாழக் காரணம்
இவ்வளவு சிறப்புற்று வாழ்ந்த தமிழினம் வரலாற்றுப் போக்கில் ஏய்ப்பு ஏற்பட்ட நிலையில் நாளையும் கோளையும் காட்டியும், மந்திர தந்திரங்களாலும் புறம்பான செயல்கள் வழியும் அயல்வழி ஊடுருவல்கள் நிகழ்ந்தன. தமிழினம் தன்நிலை இழந்தது; தாழ்ந்தது.
பெரியார் ஊட்டிய விழிப்புணர்வு
இந்தச் சூழ்நிலையில் தான் தலைவர் பெரியார் தோன்றித் தமிழினத்தைத் தன் நிலையில் நிறுத்த முயல்கின்றார். தமிழினம் விழித்தது.
இந்த இன எழுச்சிப் பணிமுற்றுப் பெறுவதற்கு முன்பே தலைவர் பெரியார் மறைந்து விட்டார். அந்தப் பணியை, பெரியார் தலைமுறையின் அடுத்த தூணாக நின்று செய்து வருபவர் அருமை நண்பர் கி.வீரமணி. சிந்தனைத் திறனும் செயல்திறனும் உடைய வீரமணி அவர்கள் தமிழின வரலாற்றை _ இனநலம் காக்கும் இனிய வரலாற்றைத் தொடர்ந்து ஆக்கம் செய்து வருகிறார்; அதற்குப் போராடி வருகிறார்; போராடிக் கொண்டிருக்கிறார். அவர்தம் போர்க்குணம் பாராட்டுதலுக்குரியது, பொன்விழாக் காணும் கி.வீரமணி அவர்கள் பல்லாண்டுகள் வாழ்க! அவர்தம் பணி வெல்க!