– உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன்
ஈரமணி நீர் விழியாள்
இனிய தமிழ் அன்னை
ஆர் எழுவார் அணி திரள்வார்
என அழும் நாள் இந்நாள்
போரின் மணி கேட்டெழுந்து
பொங்கும் அணி இடையே
வீரமணி நடத்தும் அணி
வெல்லும் அணியாகும்!
செந்தழலின் விழியுடையான்
சினவேங்கை நடையான்!
தந்தை பெரியார் அமைத்த
தனித் தமிழர் படையான்!
எந்தமிழர் மறவேங்கை
இனிய நினை விடையான்
சிந்துவன தமிழ்ப்பூக்கள்
அன்று! வெறிப்பாட்டே!
வெட்டுவதும் கொல்லுவதும்
பாவம் எனச் சொல்லி
கெட்டழிந்தார் தமிழினத்தார்!
கிடைத்த தெலாம் சாவே!
தொட்டவனைத் தொலைத்திடுதல்
வேண்டும்! எனத் தோள்கள்
தட்டியவன் வீரமணி
தனிப் பெருமை வாழ்க!
தென்னிலங்கையில் தமிழன்
தெருத் தெருவாய்ச் செத்தான்!
இந்நாட்டிலும் செத்தான்!
எங்கெங்கோ செத்தான்!
தன்மான வடிவத்தான்
தமிழ் பேசும் இனத்தான்
பொன்னெஞ்சன் வீரமணி
போரை அறிவித்தான்!
ஒலித்தது காண் திசை எட்டும்
வீரமணி ஓசை!
புலித் தமிழன் புயல் ஆனான்!
பொங்கிற்று வெள்ளம்!
பலித்தது செந் தமிழ் மண்ணில்
தமிழ்ப் புலவன் ஆணை!
சிலிர்த்ததடா தமிழ் மேனி!
சிவந்தது தென்னாடே!