– சி.கே.பிருதிவிராஜ்
எதன் பொருட்டும் எந்நிலைக்கும் மயங்காது
இதன் பொருட்டு எதற்காக எனத் தயங்காது – கொள்கை
அதன் பொருட்டு எதுவரினும் அஞ்சாது
எடுத்த கடமை எதுவும் முடியாமல் மிஞ்சாது
சாதிக்கும் தன்னிகரில்லா தலைவன் நீ!
அஞ்சுவதோ கெஞ்சுவதோ ஆளுமையல்ல
தஞ்சமென வீழ்வது வீரமுமல்ல
விளைவறியா வினையேற்றல் விவேகமுமல்ல
தீரமும் வீரமும் மானமும் இல்லார் திராவிடருமல்ல! – என
அம்பொத்த சொற்களால் தெம்பூட்டிய பெரியார் வழி நீ!
பஞ்சம் பிழைக்க வந்த கூட்டத்திற்கு
தஞ்சம் அளித்த திராவிடர் திரளே – நமக்கு
கஞ்சியும் கழனியும் கூடமறுத்த வஞ்சகர்களை
கிஞ்சிற்றும் பொறுப்பதற்கில்லை கிளர்ந்துஎழு – என
தமிழர்க்கு தன்மானம் தந்த தந்தையின் தனையன் – நீ!
பகுத்தறிவு பரப்புரை கண்டு பகைப்போரும் உளர்
திராவிடர் முழுமையும் எழுச்சிபெற்று விடுவரோ என
மனத்திலே கிலிபிடித்து திகைப்போரும் உளர் – எஞ்ஞான்றும்
சூதுமதியாளர்களின் சூழ்ச்சிக் கடலைக் கடக்க
சூளுரைக்கும் கலங்கரை விளக்கம் நீ!
திராவிடருக்கு திசைகாட்டும் தீரமிகு வீரமணி!
அரசியல் திசைகாட்டி அணியமைப்பது உம் பணி!
எத்தர்களை எத்தித் தள்ளும் இணையில்லா தீர அணி!
கொத்தாக ஆரியத்தை கொய்திட்ட போர்ப் பரணி!
நித்தம் நீ காட்டும் வழிநடக்கும் எங்கள் அணி!