– ஈரோடு தமிழன்பன்
காலவெளியைக்
கடந்து வந்த நதி!
இன்னும் காலவெளியைக்
கடந்து செல்லும் நதி!
பெரியார் என்னும்
பெருமலைச் சரிவில் பிறந்த நதி!
தமிழர் மனத்தில், நிலத்தில்
தவழ்ந்துவரும் கருப்பு நதி!
தமிழர் பகைவர்க்கு
வெப்ப நதி!
தமிழர் நலத்துக்கு ஈர நதி!
காயம்படினும்
இந்த நதி தமிழர் உளத்தில்தான்
களிம்பு தேடும்!
ஆறிய புண்ணின்
தழும்புகளும்
அய்யா கொள்கையை
உச்சரிக்கும்!
தடுக்கும்
பாறைகளை உடைத்தெறிந்து
தாவும் இந்த
நதியலைகள்
திறந்து வைத்த வரலாற்றுத்
திரவப் புத்தகப் பக்கங்கள்!
இந்தக்
கந்தக நதியின் உதடுகளில்
எங்கள்
தந்தையின் பாடல்கள்
தொட்டுத்
தமிழரை எழுப்பாமல்
தூங்கும் அவர்கள் தூக்கத்தைச்
சுட்டு எழுப்பும் எப்போதும்!
எழுபத்து நான்கு
கல்தாண்டி ஓடிவரும்
இளைய நதி!
இன்னும் கடக்கவேண்டும்
நூறு நூறு கல் தொலைவு!
களைப்போ சலிப்போ நேருமெனில்
நம்
கலைஞர் வீட்டுப் படியோரம்
கொஞ்சும் கவிதை கேட்டு
நடை தொடரும்
வீரமணியாம்
இந்த நதி
வெற்றி வாகை சூடட்டும்!