யாருக்கும் வளையாத கொள்கைகளை அள்ளித் தருபவர்

டிசம்பர் 01-15

– டாக்டர் கலைஞர்

இப்போது வயது நாற்பத்தி ஆறு; தோற்றம் வயதைத் தெரிவிக்காது என்றாலும் நன்கு முதிர்ச்சி பெற்ற கருத்துக்களை மேடைகளில் வாரி வழங்கிக் கொண்டிருக்கிறார். சற்றுக் குனிந்து வளைந்து ஆனால், யாருக்கும் வளையாத கொள்கைகளை அள்ளித் தருகிறார்.

கறுப்புச் சட்டை மேனியை அலங்கரிக்கிறது, கையிலே சொற்பொழிவுக்கான குறிப்புகள். அருகேயுள்ள மேஜையிலே அன்றைய பேச்சுக்கான ஆதாரங்களை எடுத்துக் கூறுவதற்கு வாய்ப்பான பெரிய பெரிய புத்தகங்கள். இங்கேதான் நீங்கள் முக்கியமாகக் கவனிக்க வேண்டும். அதுதான் முக்கியமானது; மிக முக்கியமானது என்ற சொற்றொடர், அடிக்கடி பேச்சினிடையே வந்து கொண்டிருக்கிறது. மணிக்கணக்கில் பேசுகிறார். யார் இவர்?

வேறு யாருமல்ல; தனது பத்தாவது வயதிலேயே திராவிடர் இயக்க மேடைகளில் பேச ஆரம்பித்தவர். இன்றைய திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் _ விடுதலை நாளிதழின் ஆசிரியர் _ வீரமணி அவர்களைத்தான் குறிப்பிடுகிறேன்.

பத்து வயது முதற்கொண்டே பெரியாருடன் பணிபுரிந்து கொண்டு _ பள்ளியிலும் பயின்று _ கல்லூரியிலும் பட்டம் பெற்று _ திராவிடர் கழகத்தின் ஓய்வறியாத் தொண்டராகவும், பெரியாரின் பேரன்பையும் நம்பிக்கையையும் பெற்றவராகவும் விளங்கிய வீரமணி, இளந்தளிர்ப் பருவத்திலே மேடையில் பேசுகிற வியப்புமிகு நிகழ்ச்சியைக் காணப் பெருங்கூட்டம் திரளும்.

(டாக்டர். கலைஞர் அவர்களின் பேசுங்கலை வளர்ப்போம் என்னும் நூலிலிருந்து)

————-

”வீரமணி எங்கிருந்தாலும் பெரியார் கொள்கைகளை விட்டுக்கொடுக்க மாட்டார்”

– டாக்டர் கலைஞர்

குமுதம்: சமூக சீர்திருத்தம், பெண்கள் உரிமை, பகுத்தறிவு வாதம் போன்ற முற்போக்கு சிந்தனையில் ஊறித் திளைத்த தந்தை பெரியாரின் கொள்கைகளைப் பரப்ப வேண்டும் என்ற நோக்கத்தில் தங்களுக்கும் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்களுக்கும் கருத்து வேறுபாடு இருப்பதாகத் தெரியவில்லை. பெரியாரின் கொள்கைகளுக்குச் சம்பந்தமில்லாமல் கி.வீரமணி, ஜெயலலிதா அணியில் இருக்கிறார் என்ற சிலரின் கருத்தை ஏற்கிறீர்களா? நீங்கள் இருவரும் இணைய வாய்ப்பே இல்லையா? தந்தை பெரியாரின் நினைவு நாளில், தாங்கள் பெரியார் திடலுக்கு அஞ்சலி செலுத்தப் போனால் புதிய திருப்பம் ஏற்படலாம் அல்லவா?

கலைஞர்: அவர் எங்கிருந்தாலும் பெரியார் கொள்கைகளை விட்டுக்கொடுக்க மாட்டார். பெரியார் திடலுக்கு நான் போகாவிட்டாலும் பெரியார் என் நெஞ்சத்தை விட்டுப் போகமாட்டார்.

நன்றி: குமுதம் 03.12.1998

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *