வீரமணி – நமக்கு கிடைக்க முடியாத ஒரு நல்வாய்ப்பு – தந்தை பெரியார்

டிசம்பர் 01-15

தோழர் வீரமணி அவர்கள், நான் உள்பட பலர் வேண்டுகோளுக்கும், விருப்பத்திற்கும் இணங்க, கழகத்திற்கு முழு நேரத் தொண்டராய் இருக்கத் துணிந்து பத்திரிகைத் தொண்டையும், பிரச்சாரத் தொண்டையும் தன்னால் கூடிய அளவு ஏற்றுக் கொண்டு தொண்டாற்ற ஒப்புக்கொண்டு குடும்பத்துடன் சென்னைக்கே வந்துவிட்டார்.

இது நமது கழகத்திற்கு கிடைக்க முடியாத ஒரு பெரும் நல்வாய்ப்பு என்றே கருதி, திரு.வீரமணி அவர்களை மனதார வரவேற்பதோடு கழகத் தோழர்களுக்கும் இந்த நற்செய்தியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.வீரமணி அவர்கள் வக்கீல் தொழிலில் ஈடுபட்ட சிறிது நாட்களுக்குள் மாதம் 1க்கு ரூ.200, ரூ.300 என்கிற கணக்கில் வருமானமும், அதிகாரிகளின் பாராட்டுதலும் மதிப்பும் பெறத்தக்க நிலையை அடைந்து விட்டார்.

அவரது இயக்க சம்பந்தமில்லாத நண்பர்களும், வக்கீல் தோழர்களும் அவருக்கு எவ்வளவோ ஆசை ஏற்படும்படியான எதிர்காலத்தைப் பற்றி சொல்லித் தடுத்தும், அதை ஏற்காமல் துணிந்து முழு நேரப் பொதுத் தொண்டுக்கு இசைந்து முன் வந்தது குறித்து நான் அதிசயத்தோடு அவரைப் பாராட்டி வரவேற்கிறேன்.

மனைவி, குழந்தை குட்டி இல்லாத வாலிபப் பருவத்தில் பொதுத் தொண்டு உற்சாகம் பலருக்கு ஏற்படுவது இயற்கை. ஆனால் மனைவி, குழந்தை, குடும்பப் பொறுப்பு, நல்ல எதிர்காலம், தொழில் ஆதரவு ஆகிய இவை உள்ள நிலையிலும், நாளைக்கும் அவர் (வீரமணி) ஒப்புக்கொள்வதானால் (எம்.ஏ., பி.எல்., என்பதானாலும், பரீட்சையில் உயர்ந்த மார்க்கு வாங்கி இருக்கும் தகுதியாலும்) மாதம் 1க்கு ரூ.250க்கு குறையாத சம்பளமுள்ள அரசாங்க அல்லது ஆசிரியர் பதவி அவருக்கு காத்திருந்து ஆசைக் காட்டிக் கொண்டிருக்கும் போதும், அவைகளைப் பற்றிய கவலையில்லாமல் முழு நேரப் பொதுத் தொண்டில் இறங்குவதென்றால் இது இயற்கையில் எப்படிப்பட்ட மனிதரிடமும் எளிதில் எதிர்பார்க்க முடியாத விஷயமாகும்.

உண்மையைச் சொல்கிறேன், தோழர் வீரமணி இந்த முழு நேரத் தொண்டிற்கு இசையாதிருந்தால் தினசரி விடுதலையை நிறுத்தி வாரப் பத்திரிகையாக திருச்சியில் அல்லது ஈரோட்டில் நடத்த முடிவு செய்திருந்தேன்.

– விடுதலை, 10.08.1962. (பெரியார் அவர்கள் எழுதிய தலையங்கத்திலிருந்து)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *