76 ஆம் சட்டத்திருத்த நாயகர் ஆசிரியர் கி.வீரமணி

டிசம்பர் 01-15

– கவிஞர் கலி.பூங்குன்றன்

சமூகநீதி திராவிடர் இயக்கத்தின் அடிப்படைக் கொள்கை நாதம். காங்கிரசில் இருந்தபோதும் தந்தை பெரியார் இதற்காகக் கர்ச்சனைக் குரல் கொடுத்தார். காங்கிரசை உதறித் தள்ளி வெளியேறியதற்கும் இதுதான் காரணம்.

நீதிக் கட்சியை ஆதரித்ததற்கும் இதுதான் காரணம்.

காங்கிரசைக் கடுமையாக எதிர்த்த தந்தை பெரியார் காமராசரை ஆதரித்ததற்கும் அதுதான் முக்கியக் காரணம்.

 

சென்னை மாகாணத்தில் நீதிக்கட்சி ஆட்சிக் காரணமாக நடைமுறையில் இருந்துவந்த இடஒதுக்கீட்டை உச்சநீதிமன்றம் வரை சென்று பார்ப்பனர்கள் ஒழித்துவிட்ட நிலையில் பூகம்பம் வெடித்தெழுந்ததுபோல், பார்ப்பனர் அல்லாத மக்களை அணிவகுக்கச் செய்து தந்தை பெரியார் ஆர்த்தெழுந்த காரணத்தால்தானே இந்திய அரசமைப்புச் சட்டத்தில் முதல் திருத்தம் கொண்டுவரப்பட்டது. (1951_நாள் 18.06.1951)

சமூகநீதி என்பது இந்தியத் துணைக் கண்டத்திற்கே வழிகாட்டி வெளிச்சம் தருவது தந்தை பெரியார் பிறந்த நீதிக்கட்சி அரசாண்ட தமிழ் நிலமே.

அந்தப் போராட்டத்தில் பல்கலைக்கழக மாணவராக இருந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்தான் இன்றைய திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் மானமிகு கி.வீரமணி. (14.08.1950)

1. தந்தை பெரியார் அவர்களின் மறைவிற்குப் பிறகு _ திராவிடர் இயக்கத்தின் அடிநாதக் கொள்கைக்கு திராவிட இயக்கத்திலிருந்தே உள்குத்து வரும் என்று எதிர்ப்பார்க்க-வில்லைதான்.

ஆனாலும் சினிமா நடிகராயிருந்து அரசியலில் நுழைந்து ஆட்சியைப் பிடித்த எம்.ஜி.ஆர். அவர்களால் அந்தத் தொல்லை வந்தது.

பிற்படுத்தப்பட்டவர்கள் இடஒதுக்கீட்டில் கைவைத்தார். ஆண்டுக்கு 9000 ரூபாய்க்கு மேல் வருமானமுள்ள பிற்படுத்தப்பட்ட குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கு இடஒதுக்கீடு கிடையாது என்பதுதான் அந்த ஆணை (தமிழ்நாடு அரசு ஆணை எண் 1156 சமூக நலத்துறை நாள் 02.07.1979)

ஏடுகளில் இந்தச் செய்தி வந்த மாத்திரத்திலேயே வெகுண்டெழுந்தார் அன்றைய திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.

பிற்படுத்தப்பட்டவர்கள் தலையில் பேரிடி விழுந்தது என்று உடனடியாக அறிக்கை வெளியிட்டு (விடுதலை 03.07.1979) ஒடுக்கப்பட்ட மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்திய-தோடு நிற்கவில்லை. உடனடியாக அனைத்துக் கட்சிகள், அனைத்து சமூக அமைப்புகள், சமூக நீதியைக் கோரும் ஜாதி அமைப்புகள் அனைத்தையும் சென்னைப் பெரியார் திடலில் கூட்டினார். (04.07.1979)

சென்னை, சேலம் நகரங்களில் திராவிடர் கழகத்தின் சார்பில் ஒத்த கருத்துள்ளவர்களை அழைத்து மாநாடுகள் நடத்தப்பட்டன.

தி.மு.க., காங்கிரஸ், ஜனதா தளம், இந்திய யூனியன் முஸ்லீம் லீக், இந்தியக் கம்யூனிஸ்டுக் கட்சி (சி.பி.எம். அல்ல) ஒடுக்கப்பட்ட சமூக அமைப்புகளின் தலைவர்கள் எல்லாம் மாநாட்டில் பங்கேற்று சமூகநீதிக்கு எதிரான ஆட்சி எம்.ஜி.ஆர். ஆட்சி என்று சங்கநாதம் செய்தனர். சமூக நீதியை மீட்காமல் ஓயமாட்டோம் என்று பெருங்குரல் கொடுத்தனர்.

வருமான வரம்பு ஆணை எரிக்கப்பட்டு அதன் சாம்பலை கோட்டைக்கு அனுப்புவோம் என்று சென்னை மாநாட்டில் (22.07.1979) எச்சரிக்கையும் _ அரசுக்கு ஒரு மாதம் அவகாசமும் கொடுக்கப்பட்டது.

இந்திய அரசமைப்புச் சட்டம் முடிவு செய்யப்பட்ட அந்த நவம்பர் 26ஆம் தேதியைத் தேர்ந்தெடுத்து தமிழ்நாடெங்கும் ஆணை எரிப்புப் போராட்டம் நடத்தப்பட்டது. (26.11.1979) சாம்பல் மூட்டைகள் கோட்டையில் குவிந்தன. இது முதற்கட்ட போராட்டம்தான். அடுத்து, தொடரும் என்றும் அறிவித்ததோடு மற்றுமொரு எச்சரிக்கையை முதல் அமைச்சருக்கு விடுத்தார் தலைவர் வீரமணி.

மக்களின் உணர்வுகள் நீறுபுத்த நெருப்பு என்பது வரும் நாடாளுமன்றத் தேர்தலிலேயே தமிழக ஆளுங்கட்சியான அ.இ.அ.தி.மு.க.வினர் தெளிவாகத் தெரிந்துகொள்ளக் கூடிய நிலை வெகுவேகமாக உருவாகிக் கொண்டுள்ளது என்று அக்கோடிட்டுக் குறிப்பிடத்தக்க அறிக்கையாக வெளியிட்டார். (விடுதலை 01-.12.1979).

சொன்னது போலவே தேர்தல் முடிவு ஆகிவிட்டது. தேர்தலில் தோல்வியை அதுவரை கற்பனையில்கூட கண்டறியாத எம்.ஜி.ஆரின் அ.இ.அ.தி.மு.க. தமிழ்நாட்டில் 39 மக்களவை இடங்களில் 37 இடங்களில் மண்ணைக் கவ்வியது. அதிர்ந்து போனார் எம்.ஜி.ஆர். (தோல்விக்குக் காரணம் இடஒதுக்கீட்டில் கை வைத்ததே என்பதை உணர்ந்தார்).

உடனடியாக அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டினார். (21.01.1980). அக்கூட்டத்தில் தலைவர் வீரமணி அவர்கள் எடுத்து வைத்த கருத்துகள் விவாதங்-களில் வெற்றி பெற்றன.

அனைத்துக் கட்சிக் கூட்ட முடிவில் நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் திராவிடர் கழகமும் வீரமணியும் செய்த பிரச்சாரம்தான் தமது தோல்விக்குக் காரணம் என்று ஒப்புக்கொண்டார். சமூகநீதிக்கு எதிரானது அ.இ.அ.தி.மு.க. என்று அவர்கள் பிரச்சாரம் செய்ததை மக்கள் ஏற்றுக்-கொண்டுவிட்டனர் என்று ஒப்புக்கொண்டார்.

உடனடியாக வருமான வரம்பு ஆணையை ரத்து செய்ததோடு, அதுவரை பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு 31 விழுக்காடாக இருந்த இடஒதுக்கீட்டின் அளவை 50 விழுக்காடாக உயர்த்தி உத்தரவு பிறப்பித்தார். (24.01.1980)

வெற்றி வெற்றி என்று நமது போராட்டத்திற்குக் கிடைத்திட்ட மகத்தான வெற்றி என்று குதியாட்டம் போடவில்லை. மாறாக முதல் அமைச்சருக்கு நன்றி அறிவிப்புப் பொதுக்கூட்டங்களை நடத்தச் செய்தார் _ தந்தை பெரியார் வழிவந்த தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி. (10.02.1980 முதல் 17.02.1980 முடிய நன்றி அறிவிப்புக் கூட்டங்கள்)

வீரமணி மட்டும் இல்லாதிருந்தால் சமூக நீதிக் கொள்கை அப்பொழுதே பளிங்குச் சமாதிக்குப் போயிருக்கும் என்று சிங்கப்பூர் தமிழ்முரசு அப்படியே படம் பிடித்துக் காட்டியது.

69 சதவீத பாதுகாப்பு நடவடிக்கை

எம்.ஜி.ஆர் அவர்களின் புதிய ஆணை-யினால் தமிழ்நாட்டின் இடஒதுக்கீடு பிற்படுத்தப்–பட்ட மக்களுக்கு 50, தாழ்த்தப்பட்ட மக்களுக்கு 18, அதன்பின் உச்சநீதிமன்ற ஆணையின் காரணமாக மலைவாழ் மக்களுக்கு தனியே ஒரு சதவீதம் என்று 69 சதவீத இடஒதுக்கீடு இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் மட்டும்தான் ஒளி வீசியது.

மண்டல்குழு பரிந்துரையைச் சமூக நீதிக்காவலர் பிரதமர் வி.பி.சிங் அவர்கள் செயலுக்குக் கொண்டு வந்தார். (நாடாளு-மன்றத்தில் அறிவிப்பு 07.08.1990)

அதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கில் ஒன்பது நீதிபதி-களைக் கொண்ட அமர்வு பிற்படுத்தப்-பட்டோருக்கு 27 சதவீத இடஒதுக்கீடு வேலைவாய்ப்பில் செல்லும் என்று கூறிய அந்த அமர்வு _ இடஒதுக்கீட்டின் அளவு 50 விழுக்காட்டைத் தாண்டக் கூடாது என்று தேவையில்லாமல் அரசமைப்புச் சட்டத்தில் எங்குமே சொல்லப்படாத ஓர் அளவைத் திணித்தது. (16.11.1992)

நாடே திகைப்பில் மூழ்கியது. அரசாங்கமோ செய்வதறியாது கையைப் பிசைந்தது. அந்த நேரத்திலே வாராது வந்த மாமணிபோல் சமூக நீதியைக் காப்பாற்ற வீரமணி தமிழ் மண்ணுக்குக் கிடைத்தார்.

இந்திய அரசமைப்புச் சட்டத்தில் 31_சி பிரிவின்கீழ் மாநில அரசே சட்டப் பேரவையில் சட்டமியற்றி நாடாளுமன்றத்தில் ஒப்புதலையும் பெற்று 9ஆவது அட்டவணையில் சேர்த்தால், அந்தச் சட்டத்தில் உச்சநீதிமன்றம் நினைத்தாலும் கைவைக்க முடியாது என்ற ஒரு திட்டத்தை வாயால் சொன்னது மட்டுமன்றி, அதற்கான சட்ட நகலைத் தயாரித்தும் கொடுத்தார்.

ஆசிரியர் அவர்களின் வேண்டுகோளை ஏற்று முதல் அமைச்சர் செல்வி ஜெயலலிதா அனைத்துக் கட்சிகளைக் கூட்டி அதற்கான ஒப்புதலையும் பெற்றார். அதன் பிறகே தமிழ்நாடு சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்டு, நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு குடியரசுத் தலைவர் ஒப்புதல் பெறப்பட்டு 9ஆவது அட்டவணையிலும் சேர்க்கப்பட்டது. (76ஆவது திருத்தம் -25.08.1994)

அரசமைப்புச் சட்டம் முதல் திருத்தம் தந்தை பெரியாரின் பெயரைச் சொல்லும் என்றால், இந்த 76ஆவது திருத்தம் மானமிகு ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் பெயரை என்றும் ஒலித்துக் கொண்டே இருக்கும் என்பதில் அய்யமில்லை.

முதல் அமைச்சர் ஜெயலலிதா, பிரதமர் பி.வி.நரசிம்மராவ், குடியரசுத் தலைவர் சங்கர் தயாள் சர்மா என்ற மூன்று பார்ப்பனர்களைப் பயன்படுத்தி இவ்வரும் பெரும் சாதனையைச் சாதித்துக் கொடுத்தார் தலைவர் வீரமணி.

9ஆவது அட்டவணையில் கையொப்பமிட்ட குடியரசுத் தலைவர் எப்படிப்பட்டவர்? Although the quota system might have taken away posts from brahmins, no one can take away the bramin’s brain (Indian Express Dated 29.09.1994)பார்ப்பனர்களிடமிருந்து இடஒதுக்கீட்டின் மூலம் இடங்களைக் கொண்டு செல்ல முடியுமே தவிர, அவர்களின் மூளையை எடுத்துச் செல்ல முடியாது என்று பார்ப்பனத் திமிரோடு சொன்னவரை 9ஆவது அட்டவணைக்குக் கையொப்பமிடச்  செய்யப்பட்டது என்பது சாதாரணமானதா?

இதனைச் சாதித்துக் கொடுத்த தமிழர் தலைவருக்கு ஒடுக்கப்பட்ட மக்கள் என்ன கைமாறு செய்ய முடியும்?

எடைக்கு எடை தங்கம் கொடுத்திருக்கலாம். (தஞ்சாவூர் 01-.02.1998) அதற்கும் விலை உண்டு. 69 சதவீத இடஒதுக்கீடு பாதுகாப்பு என்பது விலை மதிப்பிடவே முடியாத ஒடுக்கப்பட்ட மக்களுக்குக் கிடைத்திட்ட அரும்பெரும் அசையாச் சொத்தாயிற்றே!

3. மண்டல் குழுப் பரிந்துரை

இந்திய அரசமைப்புச் சட்டத்தின் 340ஆம் பிரிவு பிற்படுத்தப்பட்டோர் நலனுக்காக ஆணையம் அமைக்க வழி செய்தது. காகாகலேல்கர் தலைமையில் குழு ஒன்று ஜவகர்லால் நேரு அவர்கள் பிரதமராக இருந்தபோது அமைக்கப்பட்டது (29.01.1953). அக்குழு தன் அறிக்கையை மத்திய அரசிடம் 30.03.1955இல் அளித்தது. என்றாலும் அறிக்கை வெளியில் விடாமல் மூக்கைப் பிடித்து அழுத்தி பிணக் கொட்டகையில் வீசி எறியப்பட்டது.

இரண்டாவது ஆணையம், பிகார் மாநில முன்னாள் முதல் அமைச்சர் பிந்தேஸ்வரி பிரசாத் மண்டல் (பி.பி.மண்டல்) தலைமையில் குழு அமைக்கப்பட்டது. (20.12.1978) அக்குழுவின் அறிக்கையை குடியரசுத் தலைவர் நீலம் சஞ்சீவி ரெட்டியிடம் ஒப்படைக்கப்பட்டது.(31.12.1980) அந்தக் குழுவுக்குச் சென்னைப் பெரியார் திடலில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. (30.06.1979)

அக்கூட்டத்தில் பி.பி.மண்டல் பேசினார் நாங்கள் அறிக்கையைக் கொடுப்போம். எங்களால் செய்ய முடிந்தது அது-தான்; அதனைச் செயல்பட வைப்பது பெரியார் பிறந்த தமிழ்நாடாகத்தான் இருக்க முடியும். வீரமணி அவர்களே, உங்களின் உணர்ச்சிகரமான ஆங்கில உரையைச் செவிமடுத்து இன்புற்றேன். நீங்கள் வடபுலம் வந்து பெரியார் கருத்துக்களை எடுத்துக் கூற வேண்டும் என்று குறிப்பிட்டார். அந்நிகழ்வில்பேசிய தலைவர் வீரமணி அவர்கள் காகாகலேல்-கரின் முதல் அறிக்கையைப் போல இதனைத் தூங்க விட மாட்டோம். அதுவரை நாங்கள் தூங்கவும் மாட்டோம் என்ற எழுச்சியுரையை ஆற்றினார் _ அந்த உரைதான் பி.பி.மண்டல் அவர்களைக் கவர்ந்தது-.

பி.பி.மண்டல் அஞ்சியபடியே அறிக்கை அளிக்கப்பட்டதே தவிர _ நாடாளுமன்றத்தில்-கூட வைக்கப்படவில்லை; நாடாளுமன்றத்தில் வைத்து விவாதிக்கப்பட வேண்டும் என்-பதற்காகக் கூட திராவிடர் கழகம் போராட்டம் நடத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டது _ மாநாடு நடத்த வேண்டிய அவசியமும் ஏற்பட்டது.

மாநாட்டுக் குழுப் பரிந்துரைகளைச் செயல்படுத்த வேண்டும் என்பதற்காகத் திராவிடர் கழகத் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்களின் தலைமையில் 42 மாநாடுகளையும், 16 போராட்டங்களையும் திராவிடர் கழகம் நடத்தியது. நாடாளு-மன்றத்தின் முன்பும் மறியல் செய்யப்பட்டது. (01.10.1986 முதல் 07.10.1986 வரை ஏழு நாட்களில் 50 ஆயிரம் பேர் கைது). பிரதமர் இந்திராகாந்தி வீட்டு முன்பும் (09.08.1984) ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. அப்பொழுது டில்லி போட் கிளப் மைதானத்தில் தலைவர் வீரமணி அவர்கள் குறிப்பிட்டது குறிப்பிடத்தக்கது.

இங்குள்ள மக்களின் உணர்ச்சியை அலட்சியப்படுத்துவீர்களேயானால் மக்களுடைய ஓட் கிளப் உங்களுக்குத் தகுந்த பாடத்தைக் கற்பிக்கும் (விடுதலை 10.08.1984 பக்கம் 1) என்று எச்சரித்தார். அது வீண் போகவும் இல்லை. அந்த ஆர்ப்பாட்டத்தில் தலைவர் கி.வீரமணி, சந்திரஜித் யாதவ், பகுகுணா, பிரம்ம பிரகாஷ் ஆகிய தலைவர்களும் தொண்டர்களும் (தமிழ்-நாட்டிலிருந்து கருஞ்சட்டைத் தொண்டர்களும் சென்றிருந்தனர்) கைது செய்யப்பட்டனர்.

தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்களின் முழு முயற்சியின் வீரியம், திராவிடர் கழகத் தோழர்களின் அயராப் பணிகள் வீண்போக-வில்லை. காங்கிரஸ் ஆட்சி வீழ்ந்து தேசிய முன்னணியின் சார்பில் சமூகநீதிக் காவலர் மாண்புமிகு விசுவநாத் பிரதாப் சிங் (வி.பி.சிங்) பிரதமராக வந்தபோது மண்டல் குழுப் பரிந்துரைகளில் ஒன்றான பிற்படுத்தப்பட்டவர்-களுக்கு வேலைவாய்ப்பில் 27 சதவீத இடஒதுக்கீடு என்ற வரலாற்றுப் பிரகடனத்தை வெளியிட்டார். (07.08.1990)

தந்தை பெரியார், பாபாசாகேப் அம்பேத்கர், ராம் மனோகர் லோகியா ஆகிய பெருமக்களின் கனவுகள் நனவாயிற்று என்று நன்றிப் பெருக்கோடு அந்த அறிவிப்பில் குறிப்பிட்டார்.

அதுவரை வெளியிலிருந்து வி.பி.சிங் ஆட்சிக்கு ஆதரவு அளித்துவந்த பி.ஜே.பி. _ வி.பி.சிங் அவர்களின் இந்தச் சமூகநீதி அறிவிப்பின் காரணமாக ஆதரவை விலக்கிக் கொண்டு ஆட்சியைக் கவிழ்த்துவிட்டது.

வி.பி.சிங் அவர்கள் வெளியிட்ட அந்த இடஒதுக்கீட்டையும் எதிர்த்து உச்சநீதிமன்றம் சென்றது ஆதிக்கக் கூட்டம். அவற்றையெல்லாம் கூட எதிர்த்துத் திராவிடர் கழகத் தலைவர் வீரமணி அவர்களின் தலைமையில் தொடர்ந்து போராட்டங்களை நடத்தியதுண்டு. உச்ச நீதிமன்ற நீதிபதியின் கொடும்பாவி எரிப்பு வரை (01.09.1993) அந்தப் போராட்டம் உக்கிரம் பெற்றது.

என்றாலும் இன்று மத்திய அரசுத் துறைகளில் கல்வி, வேலைவாய்ப்புகளில் பிற்படுத்தப்பட்டோருக்கு 27 விழுக்காடு கிடைத்திருக்கிறது என்றால் அதற்கான ஆணிவேராக இருந்து அரும்பாடுபட்ட தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்தாம்.
தமிழ்நாட்டுக்கு மட்டுமல்ல இந்தப் பலாப்பலன்; இந்தியா முழுவதும் உள்ள கோடானுகோடி பிற்படுத்தப்பட்ட மக்களும் இந்தப் பலனை நுகரச் செய்தவர் தலைவர் வீரமணி! தந்தை பெரியாருக்குப் பின் இந்தச் சாதனை என்பது தந்தை பெரியார் போட்டுத் தந்த அஸ்திவாரத்தின் மீது நின்று பணியாற்றிய தலைவருக்குக் கிடைத்திட்ட மகத்தான வெற்றியாகும்.

4. நுழைவுத் தேர்வு

பார்ப்பன ஆதிக்கக்காரர்கள் எந்த வழியிலாவது உள்ளே புகுந்து இடஒதுக்கீட்டின் வேர்களை வீழ்த்துவதில் குறியாகவே இருந்து வந்துள்ளனர். அதில் ஒன்றுதான் நுழைவுத் தேர்வு என்ற சூழ்ச்சி!

நுழைவுத் தேர்வு என்ற விரியன் பாம்பையும் நுழைய விட்டவர் எம்.ஜி.ஆர்தான்! (தமிழ்நாடு அரசு செய்தி வெளியீடு எண்: 322 நாள்:30.05.1984) ஆரியத்தை வீரியத்துடன் அரவணைத்தவர் என்று பார்ப்பன சங்கத்தாரால் சுவரொட்டி ஒட்டப்பட்டவர் எம்.ஜி.ஆர் ஆவார்.

அதனை எதிர்த்துக் கடுமையாகப் போரிட்டது திராவிடர் கழகம்தான்.

23.06.1984 அன்று மாவட்டத் தலைநகரங்களில் திராவிடர் மாணவர் கழகம் இளைஞர்களின் நுழைவுத் தேர்வு ஆணையினை எரித்தனர்.

09.06.2006 அன்று நுழைவுத் தேர்வை ரத்து செய்து செல்வி ஜெயலலிதா தலைமையிலான அ.இ.அ.தி.மு.க. அரசின் ஆணை செல்லாது என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்புக் கூறியது (27.06.2005).

மீண்டும் நுழைவுத் தேர்வை ரத்து செய்து ஆணை பிறப்பிக்கப்பட்டது. அதுவும் சென்னை உயர்நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டது. (நீதிபதிகள் ஏ.பி.ஷா மற்றும் பிரபாஸ்ரீதேவன்).

நிபுணர் குழுவை அமைத்து அவர்களின் ஆலோசனையின் அடிப்படையில் நுழைவுத் தேர்வை ரத்து செய்தால், நீதிமன்றம் ஏற்றுக்-கொள்ளும் என்று எடுத்துக் கூறினார் திராவிடர் கழகத் தலைவர் கி.விரமணி அவர்கள் (16.01.2006). அதன்படி செயல்படாததால், நுழைவுத் தேர்வு ரத்து ஆணை செல்லாததாகிவிட்டது.

பின்னர் ஆட்சிக்கு வந்த தி-.மு.க. தலைவர் கலைஞர் அவர்கள், திராவிடர் கழகத் தலைவர் முன்பு சுட்டிக்காட்டியிருந்தபடி, நிபுணர் குழுவின் பரிந்துரை அடிப்படையில் நுழைவுத் தேர்வை ரத்து செய்தார் (24.05.2006).

உச்சநீதிமன்றம்வரை எதிர்த்து வழக்குப் போட்டனர்; ஆனாலும், முதல்வர் கலைஞர் பிறப்பித்த ஆணை செல்லுபடியாகிவிட்டது.

இப்பொழுது மத்திய அரசு மருத்துவக் கல்லூரி சேர்க்கைக்கு அகில இந்திய நுழைவுத் தேர்வை திணிக்க முயற்சிக்கிறது.

இதனை எதிர்த்து திராவிடர் கழகத்தின் சார்பில் மாவட்டத் தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.(22.10.2015) தி.மு.க. தலைவர் கலைஞர் அவர்களின் கருத்தும் இதில் தெளிவாகவே உள்ளது. தமிழக முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவும் இந்த நுழைவுத் தேர்வை எதிர்த்துள்ளார்.

நுழைவுத் தேர்வு ஒழிக்கப்பட்ட நிலையில், பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர் பயன் பெற்றுள்ளனர் என்பதற்கு இதோ ஓர் எடுத்துக்காட்டு.

2010ஆம் ஆண்டுக்கான தமிழ்நாட்டின் மருத்துவக் கல்லூரி சேர்க்கையின் புள்ளி விவரம்:

திறந்த போட்டிக்குரிய இடங்கள் 460
இதில் பிற்படுத்தப்பட்டோர்    300
மிகவும் பிற்படுத்தப்பட்டோர்    72
தாழ்த்தப்பட்டோர்    18
முசுலிம்கள்    16
உயர்ஜாதியினர்    54
இதில் 200க்கு 200 மதிப்பெண்    பெற்ற மாணவர்கள்    8
இதில் பிற்படுத்தப்பட்டோர்    7
மிகவும் பிற்படுத்தப்பட்டோர்    1    உயர் ஜாதியினர்    சுழி
கலைஞர் ஆட்சியில் நுழைவுத் தேர்வு ஒழிக்கப்பட்டதால் ஏற்பட்ட பலன் இது. இதனை அடித்து நொறுக்கவே மீண்டும் அகில இந்திய நுழைவுத் தேர்வு எனும் சதி முளைக்கப் பார்க்கிறது.

5. தனியார்த் துறைகளில் இடஒதுக்கீடு

தனியார்த் துறைகளில் இடஒதுக்கீடு தேவை என்பதைத் திராவிடர் கழகம் தொடர்ந்து வலியுறுத்திக் கொண்டே வந்திருக்கிறது.

01.01.1982 அன்று மதுரை ரீகன் திரையரங்கில் நடைபெற்ற மதுரை மாவட்ட திராவிடர் கழக இளைஞரணி மாநாட்டில் இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. (எண்.2)
தனியார்த் துறைகளில் இடஒதுக்கீடு தேவை என்பதை வலியுறுத்தி தமிழ்நாடெங்கும் மாவட்டத் தலைநகரங்களில் மத்திய அரசு அலுவலகங்களின் முன் ஆர்ப்பாட்டம் நடத்தியது திராவிடர் கழகம். (17.10.2003).

சென்னைவந்த நாடாளுமன்ற நிலைக்-குழுவிடம் தனியார்த் துறைகளில் இடஒதுக்கீட்டை வலியுறுத்தித் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் மனு ஒன்றினை அளித்தார். (28.09.2012) தொடர்ந்து கழகம் நடத்திய மாநாடுகளில் இது வலியுறுத்தப்பட்டும் வருகிறது. (2013 மே இராசபாளையம் மாநில இளைஞர் மாநாட்டுத் தீர்மானம் எண்:5)

பொதுத்துறைகள் சுருங்கி தனியார்த் துறைகள் விரிவடைந்துவரும் இக்கால கட்டத்தில் தனியார்த் துறைகளில் இடஒதுக்-கீட்டின் அவசியத்தைக் கீழ்க்காணும் புள்ளி விவரம் கண்டிப்பாகவே உணர்த்தக் கூடியது.

தனியார்த் துறைகளில் உள்ள இயக்குநர்களில் முன்னேறிய ஜாதியினர் 8387 (92.8%)
இதில் பார்ப்பனர் 4037 (44.6%)
வைசியர் 4167 (46%)
சத்திரியர் 46 (0.05%)
பிற முன்னேறிய வகுப்பினர் 137 (1.5%)
பிற்படுத்தப்பட்டோர் 346 (3.8%)
தாழ்த்தப்பட்டோர் மற்றும்
பழங்குடியினர் 319 (3.5%)

(Economic and Political Weekly 11.8.2012)

திராவிடர் கழகத்தின் அடுத்த இலக்கு தனியார்த் துறைகளில் இடஒதுக்கீடு என்பதைத் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் அறிவித்துள்ளது. முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.

பிற்படுத்தப்பட்டோர்கள் மீது திணிக்கப்பட்டுள்ள கிரீமிலேயர் (பொருளாதார அளவுகோல்) ஒழிப்பு, பதவி உயர்வுகளில் இடஒதுக்கீடு, 50 விழுக்காட்டுக்கு மேல் போகக் கூடாது என்ற தடைத் தகர்ப்பு, மக்கள் தொகைக்கு ஏற்ப தாழ்த்தப்பட்டவர்களுக்கான இடஒதுக்கீடு அதிகரிப்பு. (மானமிகு கி.வீரமணி அவர்களின் விடுதலை அறிக்கை 02.03.1981)

கிராம கல்வி நிலையங்களுக்கும் நகரக் கல்வி நிலையங்களுக்கிடையே உள்ள வசதி வாய்ப்புகளைச் சமன்படுத்துதல் _ அய்.அய்.டி. போன்ற உயர்கல்வி நிறுவனங்களிலும் இடஒதுக்கீடு, சிறப்பு மருத்துவங்களில் இடஒதுக்கீடு இல்லை என்ற நிலையை மாற்றியமைத்தல்.

நீதிபதிகள் நியமனத்திலும் இடஒதுக்கீடு (விடுதலை 22.09.1988)

விதிவிலக்கு இல்லாமல் அனைத்துத் துறைகளிலும் இடஒதுக்கீடு. மாநிலங்களிலிருந்து மருத்துவக் கல்லூரிக்கான இடங்களை மத்தியத் தொகுப்புக்குக் கொண்டு செல்லுதலைத் தடுத்தல், கல்வியை மீண்டும் மாநிலப் பட்டியலுக்குக் கொண்டு வருதல் உள்ளிட்ட சமூக நீதிப் பிரச்சினைகளில் திராவிடர் கழகத் தலைவர் தலைமையில் திராவிடர் கழகம் எதிர்கொள்ளவிருக்கிறது; மக்கள் மத்தியில் ஏற்படுத்தப்படும் விழிப்புணர்வு என்பதே முதற் கட்டமாகும். பிரச்சாரம், போராட்டம், சட்டரீதியான செயல்பாடுகளில் கழகம் தொடர்ந்து செயல்படும்.

தந்தை பெரியார் மறைந்த காலகட்டத்தில் திராவிடர் கழகத் தலைவர் சமூகநீதித் துறையில் சாதித்துக் காட்டியிருப்பவை அசாதாரண-மானவை.

வீரமணி அவர்களைப் பார்க்கும் பொழு தெல்லாம் சமூகநீதி உணர்வைப் பெறுகிறேன் என்றார் சமூகநீதிக் காவலர் மாண்புமிகு வி.பி.சிங். (23.12.1992 திருச்சியில்)

ஒரு முதலமைச்சர், ஒரு உள்துறை அமைச்சர் செய்வதற்கு மேலாக சமூகநீதித் துறையில் உங்கள் இயக்கமும், நீங்களும் செய்கிறீர்கள் – என்று தலைவர் வீரமணி அவர்களிடம் நேரிடையாகவே முன்னாள் குடியரசுத் தலைவர் கியானி ஜெயில்சிங் கூறியதையும் நினைத்துப் பார்க்க வேண்டும். (07.04.1994)

அரசமைப்புச் சட்டம் 9ஆவது அட்டவணை நீதிமன்றத்தின் அதிகார எல்லைக்கு அப்பாற்பட்ட ஒன்றாகும். அதிலும் தலையிட முடியும் என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ள நிலையில் மற்றொரு அட்டவணை ஒன்று உருவாக்கப்பட வேண்டும்; நாடாளுமன்றத்தில் தனிச் சட்டத் திருத்தம் கொண்டுவரப்பட வேண்டும் என்ற கருத்தினையும் தெரிவித்தார் திராவிடர் கழகத் தலைவர். (தமிழர் தலைவர் 75ஆம் ஆண்டு பிறந்த நாள் மலர் 02.12.2007 பக்கம் 186)

அடுத்த தேர்தலைப் பற்றிக் கவலைப்படாது, அடுத்த தலைமுறையைப் பற்றிக் கவலைப்பட்ட தந்தை பெரியாரின் தத்துவ வாரிசாக தலைவர் வீரமணி அவர்கள் பாடுபடுவதை யார்தான் மறுக்க முடியும்?

1936ஆம் ஆண்டிலேயே அறிவுலக ஆசான் பெரியார் சொன்னார்

வகுப்புவாரிப் பிரதிநிதித்துவத்துக்கு இவ்வளவு பலமும், செல்வாக்கும் ஏற்பட்டதெல்லாம் பார்ப்பனர்கள் அதை ஆட்சேபித்ததும், அவ்வுணர்ச்சியைக் கெடுக்க பலவித சூழ்ச்சிகள் செய்ததுமேயாகும்.

இனியும் கடைசியாக நாம் ஒன்று சொல்லுவோம். அதாவது, வகுப்புவாரிப் பிரதிநிதித்துவத்தை இனியும் பார்ப்பனர்கள் எதிர்ப்பார்களேயானால் கூடிய சீக்கிரத்தில் பார்ப்பனர்களே வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் கேட்கும்படியான நிலைமை வந்துவிடும். கட்டாயம் வந்துவிடும். இப்போதே சில இடங்களில் வந்துவிட்டது என்பதேயாகும். ஏனென்றால், ஆட்சேபிக்க _ ஆட்சேபிக்க  மக்கள் கவனம் அதிலேயே செலுத்தப்பட வேண்டியதாகி, உத்தியோகப் போட்டியே அரசியலாகி பெருங்கூட்டத்தார் காரியம் நிறைவேறிவிடும். பிரித்தாளும் சூழ்ச்சி இது விஷயத்தில் மாத்திரம் இனி செல்லாது. (குடிஅரசு 14.06.1936)

79 ஆண்டுகளுக்கு முன் அய்யா சொன்னது இன்று பலித்து விட்டதே! இப்பொழுது பார்ப்பனர்கள் மாநாடு போட்டு எங்களுக்கும் இடஒதுக்கீடு கொடுங்கள் என்று கெஞ்சும் நிலையல்லவா ஏற்பட்டு விட்டது (சென்னை அண்ணா நகரில் பார்ப்பனர் சங்க வெள்ளிவிழா மாநாடு -_ 24, 25.12.2005)

நடிகர் எஸ்.வி.சேகர் என்ற பார்ப்பனர் எங்களுக்கும் இடஒதுக்கீடு வேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவரை சென்னைப் பெரியார் திடலில் சந்தித்துக் கோரிக்கை வைத்ததுண்டே!

நீதிக்கட்சி ஆட்சியில் 16 சதவீதம் (12 இடங்கள் என்றால் இரண்டு இடங்கள் பார்ப்பனர்களுக்கு) பார்ப்பனர்களுக்குக் கொடுத்தார்களே அதனை எதிர்த்து நீதிமன்றம் சென்று கெடுத்துக் கொண்டவர்கள் நீங்கள் (பார்ப்பனர்கள்)தானே என்று சொன்னபோது, அப்படியா அது எங்களுக்குத் தெரியாது என்று அசடு வழிந்தாரே!

திராவிடர் இயக்கத்தின் சமூக நீதிக் கொள்கை இந்திய அரசியலிலேயே சுழன்று வீசிக்கொண்டு இருக்கிறது. இடஒதுக்கீட்டை மறுபரிசீலனை செய்ய வேண்டுமென்று ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத் உளறப் போய் (ஆர்.எஸ்.எஸ். ஏடான பஞ்சன்யா _ 20.09.2015) அதன் எதிர் விளைவை பீகாரில் வாங்கிக் கட்டிக்கொண்டது பி.–ஜ.பி.  சென்னையில் பெரியார் திடலில் (30.06.1979) பி.பி.மண்டல் அவர்கள் தலைவர் வீரமணி அவர்களைப் பார்த்து பெரியார் கருத்துக்களைப் பிரச்சாரம் செய்யப் பீகாருக்கு அழைத்தார். ஆம், பெரியார் பீகாரில் இப்பொழுது நுழைந்தேவிட்டார். வெற்றிக் கொடியை நாட்டினார்! வாழ்க பெரியார்! வெல்க சமூகநீதி!!

————-

இடஒதுக்கீட்டின் முக்கிய காரணம்!

சரி. தமிழ்நாடு எப்படி முதலிடத்தை வகிக்கிறது? மகாராஷ்ட்டிரா, குஜராத் போல பெரு வைசிய சமூகங்களின் மையமாக இல்லாத, கேரளா போல மணி ஆர்டர்களைச் சார்ந்திராத, பஞ்சாப் போல இயற்கையின் வரம் பெறாத, சுமார் நாற்பதாண்டுகாலம் எந்த அனைத்திந்திய கட்சியாலும் ஆளப்படாத, டிப்பிக்கலான இந்திய மாநிலமாக இல்லாத, இந்தி படிக்காத, பாலிவுட் படம் பார்க்காத தமிழ்நாடு எப்படி இந்த இடத்தை அடைந்தது? காரணங்கள் பலவாக இருந்தாலும் அதை மூன்றே விஷயங்களில் அடக்கலாம்:

1. மனிதவளத்தில் முதலீடு: மனிதவள மேம்பாட்டை வளர்ப்பதன்மூலம் முதலீடுகளை ஈர்க்கும் முறையே தமிழகத்தின் தனிசிறப்பு முறையாக இருந்தது. நிறுவனங்கள் தமிழ்நாட்டுக்கு வந்தது அதன் மிகப்பெரிய மனித வளத்துக்காகவே. அதாவது திராவிட இயக்கங்களின் மிகப்பெரிய சாதனையான இடஒதுக்கீடு தமிழகத்தின் மூலைமுடுக்குகளிலிருந்து உருவாக்கிய லட்சக்கணக்-கான பட்டதாரிகளே தமிழ்நாட்டில் பொருளாதாரத்தின் பிரதான எந்திரமாக இருக்கிறார்கள்.

2. பரவலாக்கப்பட்ட வளர்ச்சி: சில குறிப்பிட்ட இடங்களில் வளர்ச்சி பின்தங்கியிருந்தாலும், தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி பொதுவாக மாநிலம் தழுவியதாக இருந்தது. அதனால்தான் மும்பை -விதர்பா என்கிற எதிர் முரண்கள் இங்கே இல்லை. எல்லா மட்டங்களிலும் ஏற்பட்ட உள்கட்டமைப்பு வசதி மற்றும் படிப்பறிவு – வேலை சார்ந்த புலம்பெயர்தல் ஆகியவற்றால் நகர்மயமாதல் தவிர்க்க இயலாமல்  _ இந்தியாவிலேயே முதலிடத்துக்கு தமிழகம் வந்தது. இது எல்லாவிதமான சமூக, பொருளாதார காரணிகளும் பரவுவதற்கு காரணமாக இருந்தது. இடப்பெயர்ச்சி என்பது ஒரு சமூக மேம்பாட்டுக்கான கருவி என்றால், இடஒதுக்கீடு அதை சாதித்துத்தந்தது. 3. சமூக நல திட்டங்கள்: காமராசர் காலத்து மத்திய உணவில் தொடங்கி, எம்.ஜி.ஆர் காலத்து சத்துணவில் போஷாக்கு பெற்று, பிறகு கருணாநிதி, ஜெயலலிதா இருவராலும் அறிமுகப்படுத்தப்-பட்ட ஏகப்பட்ட சமூக நலன் மற்றும் “கைதூக்கிவிடும்” திட்டங்கள் காரணமாக, ஒப்பீட்டளவில் பாதுகாப்பு மிக்க, ஸ்திரமான சமூக நிலைகொண்ட மாநிலமாக தமிழகம் உருவானது. இது மக்களின் உபரியை கல்விக்காவும் தனிநபர் வளர்ச்சிக்காவும் செலவிடுவதற்கு உதவியது. இது இங்கொன்றும் அங்கொன்றுமாக அல்லாமல், தமிழகமெங்கும் மூன்று தலைமுறைகளாக நடந்துவருகிறது. இந்த மூன்றுமே பல்வேறு ஓட்டை உடைசல்களைக் கொண்ட, விமர்சனத்துக்கு தப்பாது. பாரபட்சமாக நடைமுறைப்படுத்தப்பட்ட (சமூக அல்லது புவியியல் ரீதியில்) அம்சங்களைக் கொண்டிருந்தாலும், இவை நடைமுறைப்படுத்தப்பட்டன என்பதே மிகவும் முக்கியமானதாகும். இடைநிலைச்சாதிகள் முன்னேறிவிட்டன, ஆனால் தலித்துகள் முன்னேறவில்லை என்று ஒரு முழக்கம் ஏற்படுகிறதென்றால், நாம் பாதித்தொலைவைக் கடந்திருக்கிறோம் என்று அர்த்தம். பாதி கடந்திருக்கிறோம், பாதி கடக்க வேண்டியுள்ளது. ஆனால் நம் பயணம் எப்போதோ தொடங்கிவிட்டது.

– செந்தில்நாதன் முகநூலிலிருந்து 01.10.2013

————-

2012-லும் இதுதான் சமூகநீதி நிலை

மத்திய அரசில் 149 உயர் அரசு செயலாளர்களில் ஒருவர்கூட தாழ்த்தப்பட்டவர் இல்லை
கூடுதல் செயலாளர்கள்    108
தாழ்த்தப்பட்டவர்    2
இணைச் செயலாளர்கள்    477
தாழ்த்தப்பட்டவர்    31 (6.5%)
மலைவாழ் மக்கள் 15 (3.1%)
இயக்குநர்கள்    590
தாழ்த்தப்பட்டவர்    17 (2.9%)
மலைவாழ் மக்கள்    7 (1.2%)
அய்.ஏ.எஸ். அதிகாரிகள்    3251
தாழ்த்தப்பட்டவர்    13.9%
மலைவாழ் மக்கள்    7.3%
பிற்படுத்தப்பட்டோர்    12.9%
காலி இடங்கள் 73 துறைகளில் தாழ்த்தப்பட்டோருக்கான காலி இடங்கள்    25037
குருப் ஏ
தாழ்த்தப்பட்டோர்    13%
மலைவாழ் மக்கள்    3.8%
இதர பிற்படுத்தப்பட்டோர்    5.4%
குரூப் பி
தாழ்த்தப்பட்டோர்    14.5%
மலைவாழ் மக்கள்    5.2%
இதர பிற்படுத்தப்பட்டோர்    4.2%
சுத்திகரிப்பாளர் (SWEEPER)
தாழ்த்தப்பட்டோர்    59.4%
(The Times of India 06.09.2012)

————-

தமிழர் தலைவர் பற்றி இந்து ஏட்டின் கணிப்பு

There is Justifiable euphoria in the AIADMK the Tamil Nadu Reservation Bill, which will now become an Act, but keen observers feel that the ordeals for the AIADMK  Government are not yet over, in securing the interests of the backward classes on a firm basis.

The General Secretary of the Dravidar Kazhagam, Mr.K.Veeramani alone, these observers say, seems to have sensed the imminent dangers which has made him stress the need to remain wary about the next moves of the anti-reservationists while all other parties had generally welcomed the Presidential assent, and urged for a constitutional amendment to get a permanent protection.

தமிழ்நாடு இடஒதுக்கீடு மசோதாவுக்குக் குடியரசுத் தலைவரின் ஒப்புதல் கிடைத்தது பற்றி அஇஅதிமுகவில் நியாயமான மனநிறை-வோடு கூடிய மகிழ்ச்சி நிலவுகிறது. இப்பொழுது அது சட்டமாகிறது. ஆனால், பிற்படுத்தப்பட்ட வகுப்பாரின் நலன்களைப் பெறுவதில், அ.இ.அ.தி.மு.க. அரசின் இடர்நிறைந்த முயற்சிகள் முடிந்துவிடவில்லை எனக் கூர்மையான நோக்கர்கள் கருதுகிறார்கள்.

மற்ற கட்சிகள் எல்லாம் பொது-வாகக் குடியரசுத் தலைவரின் ஒப்புதலை வரவேற்றுள்ள நிலையில், திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் திரு.கி.வீரமணி மட்டும் வரக்கூடிய ஆபத்தை உணர்ந்துள்ளார் என்றும், அதன் காரணமாக இடஒதுக்கீட்டிற்கு எதிரானவர்களின் அடுத்த நடவடிக்கை குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும், அதை முறியடித்து நிலையான பாதுகாப்புப் பெறுவதற்கு அரசமைப்புச் சட்டத் திருத்தம் ஒன்று கொண்டுவரவேண்டும் என்று வலியுறுத்துவதாகவும் இந்த நோக்கர்கள் கூறுகிறார்கள்.

நன்றி: தி இந்து, 23 ஜூலை 1994


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *