”அறிவுக்கு வேலை கொடு! அறிவின்படியே நட!” என்றவர் அம்பேத்கர் – தந்தை பெரியார்

டிசம்பர் 01-15

காலஞ்சென்ற நண்பர் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் அவர்கள் அரிய முயற்சியால் இந்தக் கல்வி ஸ்தாபனங்கள் ஆரம்பிக்கப்பட்டு அவரே இவைகளை தனது ஆயுள் முழுவதும் முன்னின்று நடத்திக்கொண்டு வந்தார் என்பதைக் கேள்விப்பட்டு நான் பெரிதும் மகிழ்ச்சி அடைகிறேன்.

டாக்டர் அம்பேத்கர் அவர்கள் இந்தியாவிலேயே தலைசிறந்த அறிவாளிகள் என்று கருதப்படும் சிலரில் ஒருவர் ஆவார். அவர் தனது வாழ்நாள் முழுவதும் மக்களை அறிவைப் பயன்படுத்கிறவர்களாகவும் அறிவுக்கு முழுச்சுதந்திரம் கொடுப்பவர்களாகவும் ஆக்கவேண்டும் என்பதற்காகவே பாடுபட்டவரும் ஆவார். அவர் நம்மைப் போலவே சாதாரண மனிதர்களில் ஒருவர் ஆவார்.

சக்திக்கு மேற்பட்ட எந்தவித தெய்வீக சக்தி என்பதோ தன்மையோ ஏதும் அவரிடத்தில் கிடையாது. அவர் ஒரு மகானோ, மகாத்மாவோ, முனிவரோ, ரிஷியோ, தவசிரஷ்டரோ, வரப்பிரசாதியோ அல்ல. அவர் சித்தார்த்தர் எப்படி ஒரு சாதாரண மனிதராக இருந்து மனித சமுதாயத்திற்கு எப்படிப்பட்ட தொண்டு ஆற்றமுடியுமோ அப்படிப்பட்ட தொண்டாற்றி வந்தார்.

புத்தர் அரச குடும்பத்தினராகப் பிறந்தார். ஆனால் அம்பேத்கர் அவர்களோ அந்த மாதிரி பிறக்கும் போதே வசதியோடு பிறந்தவர் அல்ல, டாக்டர் மிகவும் வசதியில்லாத நிலையிலிருந்து, தன்னுடைய உழைப்பாலும், சுய அறிவினாலும் முயற்சியாலும், உயர்ந்த நிலைக்கு வந்து மக்களுக்கு பயன்படத்தக்க மாதிரியான வகையில் தொண்டாற்றினார்.

இந்தியாவில் எத்தனையோ மகாத்மாக்கள், ஆழ்வார்கள், நாயன்மார்கள், ரிஷிகள், தவிசிரேஷ்டர்கள், அவதாரங்கள் எல்லாம் தோன்றியிருக்கிறார்கள். ஏராளமாக ஆனால் அவர்களால் மக்கள் என்ன லாபம் பெற்றார்கள் என்று பார்த்தால், அந்த மகாத்மாக்கள் முதலியவர்கள் மோட்சத்திற்குப் போனார்கள், புகழ் பெற்றார்கள் என்பதைத்தவிர வேறு மக்களுக்கு எந்த வகையிலும் எந்தவித நன்மையும் ஏற்பட்டது கிடையாது. இந்த நாட்டில் மக்களைப் பார்த்து நீங்கள் உங்கள் அறிவுக்கு வேலைகொடுங்கள். அறிவின்படியே நடவுங்கள் என்று சொன்னவர்கள் 2500 வருஷங்களுக்கு முன் புத்தரும் அவருக்குப் பிறகு டாக்டர் அம்பேத்கரும்தான் காணப்படுகிறார்கள். வேறு யாரும் இல்லை என்றே சொல்லலாம்.

இந்த இரண்டு பேர்களும் தங்களது வாழ்நாள் பூராவிலும் பலமான எதிர்ப்பைக் கண்டார்கள். அவர்களது தொண்டிற்குப் பலத்த எதிர்ப்பு இருந்தது என்பது உண்மை என்றாலும் அவர்களது கொள்கைக்கு மக்களிடத்தில் நல்ல மரியாதையும் செல்வாக்கும் வளர ஆரம்பித்தன. இந்த நாட்டில் எந்த முட்டாளும் மகான் ஆகலாம். எந்த மடையனும் மகாத்மா ஆகிவிடலாம். ஆனால் அறிவுப்படி நடவுங்கள் என்று கூறிப் பிரசாரம் செய்ய ரொம்ப துணிவும், எதிர்பைத் தாங்க மாபெரும் அறிவு சக்தியும், உண்மையான மக்கள் பற்றும் வேண்டும்.

தொண்டுக்கு அளவுகோல்

இன்றைக்கு இருக்கும் பெருந்தலைவர்கள் எனப்படும் பலரும் விளம்பரத்தாலும் மற்றவர்களுடைய பாராட்டினாலும் பெரிய ஆட்கள் ஆனார்களே தவிர, தங்களது அறிவினாலோ, அனுபவ ஆராய்ச்சி காரண-மாகவோ, அல்லது மக்களுக்குப் பயன்படும் வகையில் தொண்டாற்றியமை காரணமாகவோ கிடையாது. அப்படி உண்மையான தொண்டு புரிபவர்களுக்கு மக்களிடத்தில் செல்வாக்கும் புகழும் கிடைப்பதற்குப் பதில் எதிர்ப்பும் வசவுகளும்தான் கிடைக்கும். உண்மையான பொதுத்தொண்டுக்குரிய அளவுகோல் அதுதான். அந்த முறையில் சமுதாயத்தில் எதற்காக 100க்கு 97 பேராக இருக்கிற மக்கள் கீழ்ஜாதி மக்களாகவும், அடிமைகளாகவும், தற்குறி-களாகவும், உடலுழைப்புக்கார மக்களாகவும், இருக்க வேண்டும் என்பதாக உணர்ந்து அதற்குக் காரணமானவற்றை ஒழித்து, மனிதத் தன்மையும் அறிவும் உண்டாகும்படி டாக்டர் அம்பேத்கர் அவர்கள் பாடுபட்டார்கள். மனித சமுதாயத்தின் நல்வாழ்வுக்குப் பாடுபட்டதன் காரணமாகத்தான் அவர் புகழ் ஓங்கவேண்டிய அளவுக்கு ஓங்கவில்லை.

– விடுதலை – 04.03.1959

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *