இந்திய நாடாளுமன்றத்தில்…
26.11.2015 அன்று தொடங்கப்படும் நாடாளுமன்றக் கூட்டத்தொடரில், அண்ணல் அம்பேத்கர் தலைமையில் வரைவுக்குழுவினர் இந்திய அரசியல் சட்டத்தை உருவாக்கியளித்த நாளை (நவம்பர் 26ஆம் நாளை) அரசியல் சட்ட நாளாகக் கொண்டாடவுள்ள நிலையில், அதுபற்றி பள்ளி மாணவர்களுக்குக்கூட, அரசியல் சட்டம் உருவாக்கிய பாபாசாகேப் அம்பேத்கர் பெருமைகள், அரசியல் சட்ட பீடிகையான Preamble பற்றிய விளக்கம் எல்லாம் சுற்றறிக்கையாக மத்திய மனிதவள அமைச்சகம் அனுப்பியுள்ளதாக செய்திகள் வருகின்றன.
இவ்வாண்டு துவக்கத்தில் நடைபெற்ற ஜனவரி 26இல் குடியரசு நாளன்று, மத்திய அரசின் சார்பில் வெளியிடப்பட்ட விளம்பரத்தின் அரசியல் சட்ட பீடிகையில் உள்ள மதச்சார்பற்ற செக்யூலர் Secular என்ற வார்த்தைகளை நீக்கி _ வேண்டுமென்றே விட்டுவிட்டு, விளம்பரங் கொடுத்தவர் மீது எந்தக் கடுமையான நடவடிக்கையும் பாயவில்லை!
இப்படிப்பட்டவர்கள் தாங்கள் எடுத்துக்கொண்ட இந்திய அரசியல் சட்ட பிரமாணத்திற்கு எதிராக மத்திய (மோடி) ஆட்சி நடைபெற்றுக் கொண்டுள்ளதோ என்று எவரும் அச்சமும், அய்யமும் கொள்ளும் வகையில் நாடெங்கும் இந்துத்வா கோஷங்கள் _ இந்து ராஷ்டிரம் என்பது போன்ற பல ஆளுநர்கள், அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்களின் பேச்சு தங்குதடையின்றி நாடு முழுவதும் நடைபெறுகிறது.
எடுத்துக்காட்டாக, அண்மையில் அசாமில் அளுநராக உள்ள ஒருவர் (ஆர்.எஸ்.எஸ். காரர்களே கவர்னர்கள்) பேசுகிறார்.
இஸ்லாமியர்களுக்கு இந்த ஆட்சியில் இருக்க முடியவில்லை என்றால் அவர்கள் பாகிஸ்தானுக்கோ, பங்களாதேஷுக்கோ சென்று குடியறேலாம்!
_ பொறுப்புள்ள ஓர் (அசாம்) ஆளுநரின் பேச்சா இது? குடியரசுத் தலைவர் இவரை இப்பதவியிலிருந்து நீக்க வேண்டாமா?
இந்திய அரசியல் சட்டம் சிறுபான்மை-யினருக்கு அளிக்கும் பாதுகாப்பை கிழித்-தெறியும் அரசியல் சட்ட விரோதப் பேச்சல்லவா?
இந்திய அரசியல் சட்டம் சமூகநீதிக்கு விரோதமாக, ஆர்.எஸ்.எஸ். வகையறாக்கள் பேசி வருவதை பிரதமரும் அவர்களின் பி.ஜே.பி. அரசும் கண்டும் காணாததுபோல நடித்து வருகின்றனர். வெளிநாடுகளில் பேசும்போது மட்டும் வேற்றுமையில் ஒற்றுமை என்று இதோபதேசம் செய்வதும், இங்கே நவம்பர் 26அய் அரசியல் சட்ட நாளாகக் கொண்டாடுவது, அம்பேத்கர் நாமாவளி பாடுவது அசல் இரட்டை வேடம் அல்லவா!
சென்றமுறை இந்தியாவின் விருந்தினராக வந்த அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா நமக்கு அரசியல் சட்டத்தின் 25, 26 பிரிவுகளை நினைவூட்டிச் சென்றது நமக்குப் பெருமையா? சிறுமையா?
நமது குடியரசுத் தலைவர், துணைத் தலைவர் இவர்கள் நாட்டில் சகிப்புத்தன்மை குறைந்து வருவது பற்றிப் பேசியது, பிரதமர் மோடி தலைமையில் உள்ள ஆட்சிக்குப் பெருமையா?
டெல்லியில் 23.11.2015 அன்று இரவு நடந்த விழா ஒன்றில் பேசிய முன்னணி இந்தி நடிகர் அமீர்கான், நாட்டில் சகிப்பின்மை இல்லாத சூழல் நிலவுவதால் பாதுகாப்பற்ற உணர்வு பெருகி வருவதாகவும் இதன் காரணமாக இந்தியாவை விட்டு நாம் வெளியேறி விடலாமா என என் மனைவி கேட்டார் என்றும் கூறினார்.
இது நாடு முழுவதும் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், சகிப்பின்மை விவகாரத்தை தானும் எதிர்கொள்ள நேர்ந்தது என்று ஆஸ்கர் விருது பெற்ற இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானும் இப்பொழுது கருத்து தெரிவித்துள்ளார். கோவாவில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய ரகுமான், கடந்த சில மாதங்களுக்கு முன் ஈரானிய திரைப்படமான முகம்மது மெஸேஞ்சர் ஆப் காட் என்ற திரைப்படத்துக்கு இசை அமைத்ததற்காக தனக்கு எதிராக பத்வா விதிக்கப்பட்டதை குறிப்பிட்டார். அந்த நேரத்தில், தான் பங்கேற்க இருந்த இசை நிகழ்ச்சியை டெல்லி, உத்திரபிரதேச மாநில முதல் மந்திரி கடைசி நேரத்தில் ரத்து செய்ததாகவும் கூறிய ஏ.ஆர்.ரகுமான் எதுவும் வன்முறையாக இருக்கக் கூடாது. நாகரீக மக்களாகிய நாம், சிறந்த குடிமக்கள் என்பதை உலகுக்கு காண்பிக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
நமது அரசியல் சட்டம் அளித்துள்ள அடிப்படை உரிமைகளைப் பறிக்கும் வண்ணம், உண்ணும் உணவுகளைக்கூட இந்துத்துவா கொள்கை அடிப்படையில் மாட்டுக்கறி சாப்பிடாதே என்பது எவ்வகையில் நியாயம்?
மாட்டைக் காப்பாற்ற மனிதர்களைக் கொலை செய்வதும், பகுத்தறிவாளர்களை அவர்களது எழுத்து, பேச்சுகளுக்காக படுகொலை செய்வதும் அரசியல் சட்டத்தினைக் கொளுத்தியதைவிட பெரிய குற்றம் அல்லவா!
இந்திய அரசியல் சட்டத்தை அவமதித்தால் 3 ஆண்டு கடுங்காவல், அல்லது அபராதம் என்ற தனிச் சட்டம் ஹிந்து மதவெறித்தன சின்னங்களாகத் திகழும் இவர்கள் மீது பாய்ந்தால்தானே, இந்திய அரசியல் சட்டத்தை உண்மையிலேயே மதிப்பதாகப் பொருள் ஏற்படும்!
மொழிப் பிரச்சினையிலும் திணிப்பு, திணிப்பு!
பல்வேறு மாநில எம்.பி.க்கள் _ இந்தி பேசாத மாநில எம்.பி.க்கள் கூடும் ஆலோசனைக் கூட்டங்களில் மத்திய அரசின் முக்கிய செயலாளர்கள் பொறுப்பில் இருப்பவர்கள் கூட ஹிந்தியில் நடவடிக்கையை நடத்தும் கொடுமை அரசியல் சட்டம் வழங்கியுள்ள உரிமைக்கு விரோதம் அல்லவா!
இணைப்புமொழி ஆங்கிலம் இல்லையேல் இன்று இந்தியாவின் ஒற்றுமை, என்னவாகும்? ஒருபுறம் Make in India என்று பேசிக்கொண்டு, மறுபுறம் பாதுகாப்புத் துறையின் ஆயுத வழங்கல் போன்ற பல முக்கிய துறைகளில் 100க்கு 100 அந்நிய முதலீடு _ ஆக்கிரமிப்புக்கு வழி செய்வதாக ஆகாதா?
நம் இறையாண்மை (Sovereignty) என்னவாகும்? எனவே இது ஒரு நாடகமா? அல்லது உள்ளபடியே எண்ணித் துணிந்த கருமமா? என்று நிரூபிக்க வேண்டியது மத்திய அரசின் கடமையாகும்! அம்பேத்கர் வெறும் முகத்திரையாக்கப் படக்கூடாது.
– கி.வீரமணி ஆசிரியர்