செய்யக்கூடாதவை

நவம்பர் 01-15

குற்றம் குறைகளைச் சுட்டும்போது பலர் மத்தியில் சுட்டிக் காட்டக் கூடாது

உண்மையில் பிறர் நலம் விரும்பி நாம் குறைகளைக் குற்றங்களைச் சுட்டிக் காட்ட விரும்பினால், தனிமையில் பக்குவமாக, அவர் அதை உணரும்படியாகச் சுட்டிக் காட்ட வேண்டும். அது அவர் திருந்தவும், அக்குறை அல்லது குற்றம் நீங்கவும் வழி செய்யும். மாறாக, பல பேர் மத்தியில் சொன்னால், அதுவும் கடுமையாகச் சொன்னால், அவர் திருந்துவதற்கு மாறாய் வருந்தவே செய்வார். குற்றம் குறைகளை நீக்கிக் கொள்ள வேண்டும் என்ற எண்ணம் எழுவதற்கு மாறாக, பலர் மத்தியில் தன்னைக் கேவலப்படுத்தி விட்டாரே என்ற உணர்வே தொடர்ந்து எழும். அது சொன்னவர்மீது வெறுப்பை உருவாக்கி, எதிர்விளைவை ஏற்படுத்தும்.

ஒருவரை பெருமைப் படுத்தும்போதும், பாராட்டிச் சிறப்பிக்கும்போதும் பல பேர் மத்தியில் செய்ய வேண்டும்; கண்டிக்கும் போதும், திருத்தும்போதும் தனிமையில் செய்ய வேண்டும். அதுதான் நமது பெருந்தன்மை-யையும், பிறர் நலம் கருதிச் செயல்படும் நோக்கையும் வெளிப்படுத்தும். இல்லையெனில் நம்முடைய அற்பத்தனத்தையே அது காட்டும்.

சுற்றியுள்ளவர்களைப் பகைக்கக் கூடாது

நமக்குள்ளே கருத்து முரண்பாடுகளும் மோதல்களும் கட்டாயம் ஏற்படும் என்னும்-போது, சுற்றியுள்ளவர்களுடன், வாழ்வியல் முரண்பாடுகளுக்கிடையே, நல்லிணக்கம் பேணுவதில்தான் வாழ்வின் வெற்றியே அடங்கியுள்ளது. மாறுபட்ட மதங்களைப் பின்பற்றுபவர்கள், மாறுபட்ட அரசியல் கொள்கைகளைப் பின்பற்றுகிறவர்கள், மாறுபட்ட வாழ்க்கை நெறியுள்ளவர்கள் கொண்டதுதான் ஒரு குடும்பம், ஒரு தெரு, ஓர் ஊர், ஒரு நாடு. ஏன் இந்த உலகம்கூட அப்படித்தான்.

நம் கருத்தை, நம் பேச்சை, நம் செயலை எல்லோரும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று எதிர்பார்ப்பது அறியாமை மட்டுமல்ல, அது ஆதிக்கமனப்பான்மையுமாகும். அதேபோல், நாமும் அடுத்தவருடையதை ஏற்க வேண்டும் என்பதும் தேவையில்லை. அதேபோல் அடுத்தவர் சொல்லும், செயலும் நமக்கு ஏற்புடையதாக இருக்க வாய்ப்பில்லை. சில ஏற்புடையதாயும் சில முரண்பட்டதாயும், சில விரும்பக் கூடியதாயும் அமையும். நம்முடைய செயலும், சொல்லும் பிறருக்கும் அவ்வாறே அமையும். இது இயல்பு, இயற்கை, உலக நடைமுறை.உண்மை அப்படியிருக்க அவர் செய்வது பிடிக்கவில்லை, அவர் பேசுவது பிடிக்கவில்லையென்று சுற்றியுள்ளவர்களை எல்லாம் புறக்கணிக்கவோ, வெறுக்கவோ செய்தால், நம்மோடு யாருமே இருக்கமாட்டார்கள். அது நாம் தனிமைப்பட்டு, வேதனையடைவே வழிவகுக்கும்.எனவே, எல்லாவற்றிலும் சகிப்பும், விட்டுக் கொடுப்பதும், பிறர் உணர்வுகளை மதிப்பதும், பிறர் எண்ணங்களுக்கு வாய்ப்பளிப்பதும், நல்லுறவை, நட்பை, இணக்கத்தை ஏற்படுத்தும். நம் கருத்து சரியானதாயின் அதைப்பக்குவமாய் பிறருக்குச் சொல்ல வேண்டும்.

சுற்றியுள்ளவர்களைப் பகைத்து, வெறுத்து, விலக்கி வாழ்ந்தால் நம் வாழ்வு பாதுகாப்-பாற்றதாயும், தனிமைப்பட்டதாயும், நிம்மதியற்ற-தாயும் ஆகும். எனவே, அனைவருடனும் இணக்கம் காத்து, அனுசரித்து வாழ்ந்தால் அமைதியும், மகிழ்வும் ஏற்படும். கொள்கையில் தான் சமரசம் கூடாது. கூடிவாழ்வதில் சமரசம் தேவை.

எடுத்தேன் கவிழ்த்தேன் முடிவுகள் கூடாது

எந்தவொரு முடிவு மேற்கொண்டு செயல்பட்டாலும், அதனை நன்கு ஆய்வு செய்து விளைவுகள், செலவு, மனஉளச்சல், கால விரயம் போன்ற பலவற்றைப் பற்றிச் சிந்தித்து முடிவு மேற்கொண்டு அதனைத் திட்டமிட்டு, நிதானமாகச் செயற்படுத்த வேண்டும். மாறாக திடீர் முடிவுகள், உணர்ச்சிவயப்பட்ட செயல்பாடுகள், கடுஞ்சொற்கள் போன்றவை பெரும்பாதிப்பை, இழப்பை, அழிவை ஏற்படுத்தும், நிறைவான, நிம்மதியான வாழ்வுக்கு நிதானமான, பதற்றமில்லா ஆய்வுக்குட்பட்ட செயல்பாடுகளே வழிவகுக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *