உற்சாக சுற்றுலாத் தொடர் – 18

நவம்பர் 01-15

உல்லாசக்க்கப்பல்

ஆழ்கடல் கப்பலுள் அணி பிரிந்து போட்டி!

கடைசி ஒன்றரை நாட்கள் தொடர்ந்து கடலில் பயணம், திரும்பி வருவதற்கு. ஆனால் நேரம் போவதே தெரியாத மாதிரி நிகழ்ச்சிகளும், விளையாட்டுகளும் நடை பெற்றுக் கொண்டே இருக்கும். அதற்கு ஒரு குழுவே இயங்கிக் கொண்டிருக்கும். அந்தக் குழுவின் தலைவர் ஒரு பிலிப்பினோ நாட்டு இளைஞர்.

புன்னகையுடன் அங்கும் இங்கும் தொடர்ந்து செல்வதும், நிகழ்ச்சியாளர்களை அறிமுகப் படுத்துவதும் அனைத்துமே அனைவரையும் சிரிக்க வைத்துக் கொண்டே இருப்பார். வேலை செய்பவர்களில் பலரும் நிகழ்ச்சிகளில் பங்கேற்று சிறப்பிப்பார்கள். கப்பலின் தலைவர் வந்து கப்பலைப் பற்றிப் பேசி பல கேள்விகளுக்கும் பதிலளிக்கும் நிகழ்ச்சி.

அவருடன் நடத்துனர்களும் பங்கேற்பர். உணவுத்துறையின் தலைவர் ஒரு இந்தியர். அந்தக் கப்பல் எப்படிச் செயல் படுகிறது என்பதைப் பார்க்கப் பதிவு செய்து பார்க்கலாம். அனைத்தயும் காண்பிப்பார்கள். ஆனால் அதற்கு ஆறு மணி நேரம் ஒதுக்க வேண்டும், கட்டணமும் செலுத்த வேண்டும். உணவு தயாரிப்பது, துணி துவைப்பது, மாலுமிகள், இயந்திரங்கள் என்று அனைத்தயும் காண்பிப்பார்கள். நாங்கள் செல்லவில்லை.

பலர் முன் பின் அறிமுகமில்லாமல் வந்தவர்கள் நண்பர்களாகி விடுவார்கள். அங்கே நடக்கும் நிகழ்ச்சிகள் பெரும்பாலும் சிறு சிறு குழுக்களை அமைத்துப் போட்டிகள் நடப்பதால் விரைவில் நண்பர்கள் ஆகிவிடுவார்கள். ஒரு பெரிய அரங்கத்திலே மேடையிலே சிறு சிறு அணிகளாகப் பிரித்துப் போட்டி வைப்பார்கள். வேடிக்கையாக இருக்கும். அரங்கத்திலேயே ஒவ்வொரு குழுவும் நிகழ்ச்சி நடத்துபவர் சொல்லும் பொருள்களை விரைவில் மேடைக்குக் கொண்டு வரவேண்டும். பல் துலக்கும் பிரஷ், பொய்ப்பற்கள், ஆண்கள் விரைவில் சென்று  தெரிந்தவர்களிடம் பெண்கள் மேல், உள்ளாடை வாங்கி அணிந்து வர வேண்டும், மஞ்சள் காலணி, தலையில் அணியும் பொய் முடி (விக்) என்று பல பொருள்களைச் சொல்லி விரைவில் கொண்டு வரும் குழுவிற்கு மதிப்பெண்கள் கொடுத்து நல்ல பரிசுகள் கொடுத்த விளையாட்டு மிக்க வரவேற்பைப் பெற்றது. பார்வையாளர்களும் கேட்கும் பொருள்களைக் கொடுத்துப் பங்கேற்று உதவினர்.

நகைச்சுவை நிகழ்ச்சி நடத்திய பெண்மணி நல்ல சிரிப்பு  நிகழ்ச்சி ஒரு மணி நேரம் என்று மூன்று முறை நடத்தி மகிழ்ச்சியூட்டினார். அரங்கம் நிறைந்திருந்தது. பெரியவர்களுக்கான ஒரு தனி நிகழ்ச்சியும் வயது வந்தவர்களுக்கான நகைச்சுவை நிகழ்ச்சியாக நடத்தினார்.

தேனிலவிற்கு வந்தவர்கள், பிறந்தநாள், மணநாள் குடும்பங்கள் சேர்ந்து கொண்டாட்டம் என்று பல் வேறு வகையினரும் மகிழும் வண்ணம் நிகழ்ச்சிகள் நடக்கும். 65 வது மண விழா இணையர்கள், தேனிலவிற்கு வந்த இணையர்கள், 10, 25 மண விழாவினர் என்று இவர்களை அழைத்து அமரவைத்து கேள்விகளுக்கு இணையருக்குத் தெரியாமல் பதில் சொல்ல வைத்து இருவரும் ஒத்துப் போவதும், வெவ்வேறு பதில்களும் சொல்லி மாட்டிக் கொள்வதும் மிகவும் வேடிக்கையாகவும், இனிய வாழ்க்கைக்குப் பயனுள்ளதாகவும் இருக்கும்.

நகைகள், பல  நல்ல வரை படங்கள், கைக்கடிகாரங்கள், அரிய பொருட்கள் என்று தினமும் பல கடைகள் ஆடம்பரமாக வணிகம் செய்வார்கள். அவற்றை வேடிக்கைப் பார்ப்பதே ஒரு பொழுது போக்காக இருக்கும். வாங்குவோரும் பலருண்டு! நூலகமும், கணினி விளையாட்டுக் கூடமும் உண்டு!  தொழில் துறையில் உள்ளவர்களும், மற்றவர்களும் தொடர்ந்து வேலை செய்பவர்களுக்காக அலுவல் நிலையங்களும் இருக்கும். கப்பலில் இருந்து கொண்டே அவர்கள் தொழிலையுங் கவனித்துக் கொள்ளலாம்.

இந்த உல்லாசக் கப்பல் என்பது எப்போதோ ஒரு முறை, சில முக்கிய நாட்களைக் கொண்டாட என்பது போய், சிலர் பல முறைகளும், ஒரு சில செல்வந்தர்கள் ஆறு மாதம்- ஓராண்டு என்று வீடு போன்ற இரண்டு மூன்று அறைகள் உள்ள இடங்களை வாடகைக்கு எடுத்துப் பயணம் செய்யும் அளவிற்கு உள்ளது. ஆங்காங்கே பல ஊர்களையும் பார்ப்பது, பல வகையான உணவு, விளையாட்டுக்கள், வேடிக்கைகள் என்று வாழ்வின் வேறு பாடுகளாகவும் மகிழ்ச்சியடைகின்றார்கள். மக்கள் தொகை பெருக்கத்தில் பல மிதக்கும் நகரங்களே கூட உருவாகலாம் என்கின்றார்கள். தாய்லாண்டு போன்ற நாடுகளில் படகிலேயே வாழுங் குடும்பங்கள் பல உண்டு. அது பிழைப்பிற்காக! ஆனால் இது வாழ்வை அனுபவிப்பதற்காக!

பல உல்லாசக் கப்பல் நிறுவனங்கள் உள்ளன. டைட்டானிக் என்ற திரைப்படம் மூலம் பலரும் அறிந்திருப்பார்கள். அந்த அளவு ஆடம்பரம் உள்ள பெரிய கப்பல்கள் முதல், அன்டார்ட்டிக் செல்லும் பனியைக் கடக்கும் கப்பல் வரை பல் வேறு உல்லாசக் கப்பல்கள் உள்ளன. ராணி எலிசபெத் என்பது உலகம் சுற்றும் பெரிய கப்பல். குழந்தைகள் மிகவும் செல்வது டிஸ்னி கப்பல்களில். மிகவும் விரும்பிச் செல்லும் இடம் பஹாமா தீவுகள். ஆண்டிற்கு முப்பது பில்லியன் டாலர்கள் 2011ஆம் ஆண்டு கணக்குப் படி! அங்கே பல நாட்டினரும் வேலை செய்கின்றனர். ஆறு மாதம் வேலை, இரண்டு மாதம் விடுமுறை என்பது போல இருக்கும். பலர் வருவதால் இப்போதெல்லாம் நோய்கள் வராமல் தடுப்பதற்கு அவ்வளவு முயற்சிகளும் எடுத்துக் கொள்கின்றனர். ஆங்காங்கே பணியாளர்கள் கிருமிகளைக் கொல்லும் கைகழுவும் ஒட்டாத பசை போன்ற  நீரைக் கைகளில் கொடுப்பார்கள். கழிவறைகள், குளியலறைகள், துண்டுகள்,நீச்சல் குளம் எல்லாமே மிகவும் தூய்மையாக இருக்கும். கடல் பயணம் ஒத்துக் கொள்ளாதவர்களுக்கு வாந்தி, தலை சுற்றுதல் வராமல் இருக்க மருந்துகளும் தருவார்கள். கப்பலிலேயே தாதியர், மருத்துவர் உள்ளனர், ஆனால் பணந்தான் மிகுதியாக இருக்கும்.

அமெரிக்கர்களைப் பொறுத்தவரை பெரும்பாலானோர் செல்வந்தர்களாக இல்லாவிட்டாலும் விடுமுறைக்கென்றே வருமானத்தில் ஒரு பகுதியைச் சேர்த்து நன்கு திட்டமிட்டு அனுபவிப்பார்கள். ஆகவே உல்லாசக் கப்பல் செல்வந்தர்களுக்கு என்றில்லாமல் பலரும் வந்து அனுபவிக்கும் நிகழ்வாக இருக்கும்.

மருத்துவர் அனைத்து நண்பர்களிடமும் சொல்வார். வாழ்க்கையில் அனைவரும் கட்டாயம் உல்லாசக் கப்பலில் போக வேண்டும், ஹவாய்க்கும் ஒரு முறையாவது போக வேண்டும் என்று! அது உண்மையான மகிழ்ச்சியாகத்தான் இருக்கும்!
அடுத்த பயணம் பார்ப்போம்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *