ஆசிரியர் பதில்கள்

நவம்பர் 01-15

கேள்வி : தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்படுவதும்,  பின்பு அவர்கள் விடுதலை செய்யப்படுவதும் வாடிக்கையாகிவிட்டது. தமிழக மீனவர் பிரச்சினைக்கு முடிவே கிடையாதா? – வ.க.கருப்பையா, பஞ்சம்பட்டி

பதில் : மனம் இருந்தால் மார்க்கமுண்டே! எம் இனம் அல்லாதவர்கள் இதில் நடிப்புச் சுதேசிகளாக இருந்து பிரச்சினைக்குத் தீர்வு காணத் துடிப்பவர்களைப் போல் நடிக்கிறார்கள்.

மத்திய அரசு இலங்கையைத் தட்டிக் கேட்க வேண்டும். நேப்பாளத்தினை மிரட்ட, பொருளாதாரத் தடையை இந்திய அரசு காட்டுகிறதே; அதை இலங்கைக்குச் செய்தால் அடுத்த வினாடி தீர்வு ஏற்படாதா?

முதல் அமைச்சர் இதுவரை எழுதிய கடிதம் 70 எண்ணிக்கையைத் தாண்டுமே!

அக்கடிதங்கள் எங்கு போய்ச் சேர்ந்து என்ன பதிலை _ என்ன நடவடிக்கையைப் பெறுகின்றன _ சிதம்பர ரகசியம் தானே? அந்தோ! மீனவ சகோதரர்களே! உங்கள் இரத்தமும், வியர்வையும், உயிரும் விளையாட்டுப் பொருள்களா?

கேள்வி : ஸ்டாலினின் நமக்கு நாமே மக்களை நேரடியாக சந்திக்கும் நிகழ்ச்சிகள் மக்களிடையே மிகுந்த எழுச்சியை ஏற்படுத்தி ஆட்சி மாற்றத்திற்கான அடித்தளம் அமைத்து வருகிறது என்ற கருத்து பலமாக பேசப்படுகிறதே? – நாத்திகன் சா.கோ., பெரம்பலூர்

பதில் : உண்மைதான். சில கட்சித் தலைவர்கள், சில ஊடகங்கள் வயிற்றிலும், வாயிலும் அடித்துக் கொள்கிறார்களே அதுவே ஒரு எடுத்துக்காட்டு தானே! கடுமையாக உழைக்கிறார்! நிச்சயம் அவரது உழைப்பு தக்க பலன்தரும்.

கேள்வி : தான் கைப்பட எழுதிய, பதிவு செய்யப்படாத உயில் செல்லுபடி ஆகும் என்றும், பதிவு செய்ய வேண்டிய அவசியம் இல்லை என்றும் ஒருசிலர் கூறுகிறார்களே… அது சரியா? தவறா? – தி.பொ.சண்முகசுந்தரம், திட்டக்குடி

பதில் : செல்லும் என்றாலும் சட்ட சிக்கலுக்கு ஆளாகும் என்பதால் பதிவு செய்வதே சாலச் சிறந்தது! பதிவுக்கு சட்ட வலிமை அதிகம். மறுக்க இயலாது.

கேள்வி : பேரண்டத்தைப் படைப்பதற்கு முன் உங்கள் கடவுள் எங்கே, என்ன செய்து கொண்டிருந்தார்? என ஒரு ஆன்மீகவாதியைக் கேட்டதற்குப் பதிலே இல்லை. தங்கள் கருத்து என்ன? – நெய்வேலி க.தியாகராசன், கொரநாட்டுக்கருப்பூர்

பதில் : பேன் குத்திக் கொண்டிருந்தார் என்று சொல்லாமல், மவுனஞ் சாதித்தாரே ஆன்மீகவாதி அவருக்குப் புன்சிரிப்புடன் ஒரு நன்றி கூறுங்கள்!

கேள்வி : மதச்சார்பின்மையைப் பாதுகாக்க முற்போக்கு சக்திகள் ஒன்று திரளவேண்டும் என்று பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளது பற்றி…
– சீ.இலட்சுமிபதி, தாம்பரம்

பதில் : முதலில் இவர் தயாரா? என்று அவரிடம் கேளுங்கள்! கருத்து வரவேற்கத்தக்கதே!

கேள்வி : கோட்ஸே நினைவு நாளை தியாக நாளாகக் கொண்டாடச் சொல்லும் இந்து மகா சபையின் துணிவுக்குக் காரணம் என்ன?
– க.சுப்பிரமணி, உத்திரமேரூர்

பதில் : மோடி அரசு மத்தியில் உள்ளது என்பதே காரணம் என்பது யாருக்குத்தான் தெரியாது?

கேள்வி : உயர்க்கல்வி பயிலும் (அய்.அய்.டி.) மாணவர்கள் தொடர்ச்சியாகத் தற்கொலை செய்துகொள்வது எதைக் காட்டுகிறது?
– வே.பார்வதி, வேளச்சேரி

பதில் : மிகுந்த மன உளைச்சல், மன அழுத்தம் கொடுக்கும் வகையில் அக்கிரகாரப் பிரஷர் அதிகமாகி, திட்டமிட்டு விரட்ட, அச்சுறுத்தப்படுகிறார்களோ என்ற அய்யம் ஏற்படுகிறது!

கேள்வி : விருதுகளைத் திருப்பித்தரும் எழுத்தாளர்களின் உணர்வுகளைப் புரிந்துகொள்ளாமல், உள்நோக்கம் கற்பிக்கும் ஆட்கள் எப்படிப்பட்டவர்கள்?
– ச.கருணாகரன், விழுப்புரம்

பதில் : தக்கைகள்; அறிவு சூனிய அரைவேக்காடுகள். இது அவர்களது அறவழிப் போராட்ட உணர்வு என்பதை, அவர்கள் காட்டுகிறார்கள் என்பதை ஏனோ புரிந்துகொள்ளத் தவறுகிறார்கள்?

கேள்வி : அ.தி.மு.க மாவட்டச் செயலர்கள்போல மாவட்ட ஆட்சியர்கள் செயல்படுவது பற்றி தங்கள் கருத்து என்ன?
– தொ.வேலப்பன், வேலூர்

கேள்வி : ஜனநாயகத்தில் ஆட்சிகள் மாறும்போது இவர்கள் பதில் கூற  குற்றவாளிக் கூண்டில் ஏறக்கூடும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *