ஆரிய ஆதிக்கத்தை அடித்து நொறுக்கியது அய்யாவின் கைத்தடிதான்!
13.01.1979 மாலை புறப்பட்டு விமானம் மூலம் மலேசியத் தலைநகர் கோலாலம்பூரை வந்தடைந்தோம். என்னுடன் கழகப் பொருளாளர் கா.மா.குப்புசாமி, வடஆற்காடு மாவட்டச் செயலாளர் ஏ.டி.கோபால் ஆகியோர் உடன் வந்தனர். அன்று இரவு 7.30 மணியளவில் கோலாலம்பூர் சென்றடைந்த எங்களை மலேசிய திராவிடர் கழக முக்கிய பொறுப்பாளர்களும் தோழர்களும் திரண்டு வரவேற்பளித்தனர்.
13.01.1979 அன்று மலேசியாவின் பூச்சோங் விழா நடைபெற்றது. விழாவில் கிளைக் கழகத் தலைவர் திரு.ராமன் அவர்கள் தலைமை தாங்கினார். விழா சிங்கை நாகரத்தினம், திருச்சுடர் கே.ஆர்.ராமசாமி அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது. எனக்கு மலேசியாவில் முதலாவது நிகழ்ச்சியும் இது என்பது குறிப்பிடத்தக்கது.
விழாவில், வடஆற்காடு மாவட்ட தி.க. செயலாளர் ஏ.டி.கோபால் அவர்கள் எனக்கு முன்பாக முன்னுரையை நிகழ்த்தினார். திராவிடர் கழகப் பொருளாளர் கா.மா.குப்புசாமி அவர்கள் அய்யா அவர்களின் மறைவிற்குப் பின் இந்த இயக்கம் எவ்வித தொய்வுமின்றி மிகத் துடிப்பாக நடத்திச் செல்லப்படுவதாகக் குறிப்பிட்டார்.
விழாவில், சிறப்புரையாக நான் பேசும்போது, தந்தை பெரியார் அவர்களின் நூற்றாண்டு விழாவினை உலகம் பூராவும் மிகச் சிறப்பாக தமிழர்கள் கொண்டாடிக் கொண்டிருக்-கின்றார்கள். இந்த மலேசிய நாட்டில் முன்பு நூற்றாண்டு விழாவினை மிகச் சிறப்பாக நடத்தினார்கள். இப்பொழுது தமிழ்நாட்டி-லிருந்து எங்களையெல்லாம் அழைத்து தொடர்ந்து நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்து நடத்துகிறார்கள் என்று குறிப்பிட்டு, விமானம் மூலம் வந்து சேர்ந்த சில மணித்துளிகளிலேயே, இந்தப் பூச்சோங் கிளையின் முதல் நிகழ்ச்சியிலே கலந்து கொள்ளுமளவுக்கு இங்குத் துடிப்பான இளைஞர்களும், மலேசிய திராவிடர் கழகத்தை உருவாக்கிய பெரியவர்களும் ஏற்பாடு செய்துள்ளார்கள் என்று குறிப்பிட்டேன்.
தந்தை பெரியார் அவர்கள் இறுதி மூச்சு அடங்கும் வரை தமிழர்களுக்காகப் பாடுபட்டார்கள். அறுபதாண்டு காலம் தமிழர்களின் விழிப்புணர்ச்சிக்காக மனிதனை மனிதனாக்க தன்மான உணர்ச்சி பெற தனது வாழ்வினை அர்ப்பணித்தார்கள்.
தனது வசதி வாய்ப்பான நிலையை அனுபவிக்காது இந்தச் சமுதாயத்தை மான உணர்ச்சி, பகுத்தறிவுணர்ச்சி உடையதாக்கப் பாடுபட்டார்கள் என்றால் என்ன காரணம்? அந்த அளவு தமிழகத்தில் அக்காலத்தில் தமிழர்களின் நிலைமை. நாய், பன்றியெல்லாம் செல்லக்கூடிய இடங்களில் மனிதன் செல்லக்கூடாது என்றிருந்த நிலைமையை மாற்ற கேரளத்திற்குச் சென்று வைக்கம் போராட்டத்தினை தனது தங்கை கண்ணம்மையார், தனது துணைவியார் நாகம்மையார் ஆகியோருடன் தொடர்ந்து ஓராண்டுக் காலம் நடத்தி வெற்றி கண்டார்கள்.
இந்திய வரலாற்றில் பெண்கள் சமுதாய உரிமைக்காகச் சிறைக்குச் சென்றார்கள் என்றால் அது தந்தை பெரியார் அவர்களின் தங்கையாரும், துணைவியாரும் என்பது வரலாற்றில் என்னதான் மறைத்தாலும் மறைக்க முடியாத உண்மையாகும்.
இன்று கேரளாவில் மட்டுமல்ல, தமிழகத்திலும் இந்த நிலை உண்டா? நீங்கள் நன்றாக சிந்தித்துப் பாருங்கள்; எந்த சமுதாயம் நம்மை அடிமைப்படுத்தி நாலாந்சாதியாக, இழி மக்களாக்கி வைத்திருந்ததோ அந்த, நிலை இப்போது எப்படி ஆகிவிட்டது என்பதைப் பார்த்தாலே நன்கு விளங்கும்.
தமிழகத்தில் மனிதனை நான்கு வர்ணமாக ஆக்கி, அதில் அவன் கடவுளின் நெற்றியில் பிறந்தவனாகவும், நம்மைக் காலில் பிறந்தவர்களாகவும் ஆக்கி அடிமைப்படுத்தி ஆட்டிப்படைத்த நிலையினை தந்தை பெரியார் அவர்களின் கைத்தடி ஒரே அடியாக அடித்துத் தாக்கி மனிதனில் மேல், கீழ் கிடையாது என்று ஆக்கி மனிதனை மனிதனாக சுயசிந்தனையுள்ள, முழுஉரிமை பெற்றவனாக மாற்றிச் சென்றுள்ளது. நம்மை மானமுள்ளவர்களாக்கிய பெருமை தந்தை பெரியார் அவர்களைத்தான் சாரும்.
மனிதனில் பணக்காரன் _ ஏழை என்ற பேதத்தைவிட சாதிபேதம்தான் பெரிதாக இருக்கிறது. அதை ஒழிக்கப் பாடுபட்டு வெற்றி கண்டவர்தான் தந்தை பெரியார் அவர்கள்.
மக்கள் கொடுக்கும் ஒவ்வொரு பைசாவையும் சேர்த்து சிக்கனமாக நடந்து காட்டியதுடன் இன்று தன்னுடைய சொத்துக்களையெல்லாம் பொது ஆக்கிவிட்டுச் சென்றுள்ள பேராளர் பெரியார் ஆவார். அவர்களுடைய நூற்றாண்டு விழாவில் கடல் கடந்து வாழும் தமிழர்களாகிய உங்களைப் பாராட்டி, ஏற்பாடு செய்த மலேசிய திராவிடர் கழகத்தவர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறி உரையை நிறைவு செய்தேன். விழாவில், தமிழர்களும், தமிழ் இன உணர்வாளர்களும் பெருந்திரளாக கலந்துகொண்டனர்.
அதன்பின், தொடர்ந்து அய்யா நூற்றாண்டு விழா நிகழ்ச்சிகள் ஒவ்வொரு நாளும் கழகப் பொறுப்பாளர்களுடன் சந்திப்பு _ அய்யா நூற்றாண்டு விழா முக்கிய பிரமுகர்களுடன் சந்திப்பு _ அரங்கக் கூட்டங்கள் என்று அலைஅலையாக நிகழ்ச்சிகள்.
எனது இந்தச் சுற்றுப் பயணத்தில் ஈப்போவில் உள்ள எனது மைத்துனர் வீட்டிற்குப் போய் சில நாட்கள் தங்க முடியவில்லை! அவ்வளவு இடைவிடாத சுற்றுப்பயணம்.
மலேசிய திராவிடர் கழகத் தலைவர் கே.ஆர்.இராமசாமி அவர்களிடம், எனது மைத்துனி மிசா காலத்தில்கூட எங்கள் குடும்பத்தினர் சிறையில் போய்ப் பார்க்க முடிந்தது. இங்கு அந்த வாய்ப்புக்கூட இல்லாத அளவிற்கு நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்துள்ளீர்களே என்று கேட்டார்.
எனவே, கொள்கைப் பிரச்சாரத்திலே ஒரு மாதம் முழுமையாய் கழிந்தது. ஒவ்வொரு நிகழ்ச்சி முடிவிலும் மீண்டும் எப்பொழுது வருவீர்கள்? என்று கேட்காதவர்களே இல்லை.
அய்யா அவர்களது நூற்றாண்டு விழாவில் அந்த நாட்டு அமைச்சர்கள் இருவர் கலந்து கொண்டதுடன், அவர்கள் எங்களையும் அழைத்து விருந்து வைத்தனர்.
எங்களுடைய சுற்றுப் பயணத்தில் ஹாங்காங் நாட்டிற்குச் செல்ல முடியாமல் போனது சிறிய வருத்தத்தைத் தந்தது. ஹாங்காங் நாட்டு தமிழ் பண்பாட்டுக் கழகம் தந்தை பெரியார் நூற்றாண்டு விழாவினை ஏற்பாடு செய்து அதில் நாங்களும் பங்கேற்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டது. அந்த நாட்டுச் சட்டப்படி (ஹாங்காங் சட்டப்படி). அங்கு குறைந்தது 20 நாட்கள் தங்க வேண்டும் என்ற நிலையிருந்ததால், இடையில் திருச்சியில் அய்யா நூற்றாண்டு விழா மிகப்பெரிய அளவில் ஏற்பாடு செய்து இருந்ததால் அந்த நிகழ்வினை தவிர்க்கும்படி நேரிட்டது. அவர்களிடம் தொலைப்பேசியில் பேசி வர இயலாமைக்கு வருத்தத்தைத் தெரிவித்தேன். பின்னர் நான் கிளம்பும்போது ஹாங்காங் தமிழர் பண்பாட்டுக் கழக நண்பர்களின் பிரதிநிதியாக ஒரு நண்பர் சிங்கப்பூர் வந்து வழியனுப்பி வைத்தார்.
சாய்பாபா சீடரின் சலசலப்பும் நமது பதிலடியும்
மலேசியாவில் போர்ட்கிளாங் (Port Klang) என்னும் கோலக்கிள்ளானில் தந்தை பெரியார் பிறந்த நாள் விழா நிகழ்ச்சியில் சாய்பாபாவின் பித்தலாட்டங்களைப் பற்றி பேசினேன். அந்தப் பகுதி சாய்பாபா பக்தர்கள் நிறைந்த பகுதி என்பது எனக்கு முதலில் தெரியாது. அந்த இடத்தில் சாய்பாபா பற்றிப் பேசியது பொருத்தமாகப் போய்விட்டது.
நான் பேசிக் கொண்டிருந்தபோது ஒரு துண்டு சீட்டு வந்தது. அதில் நீங்கள் பெரியார் பற்றி பேச வந்துள்ளீர்களா? சாய்பாபா பற்றிப் பேச வந்துள்ளீர்களா? என்று எழுதப்-பட்டிருந்தது.
நான் அதற்கு பதிலளிக்கும்போது நான் வெறும் பெரியாரின் புகழ்பாடி, பூசை செய்துவிட்டுப் போக இங்கு வரவில்லை. தந்தை பெரியார் அவர்களின் பகுத்தறிவு கொள்கைச் சுடரை ஏந்தி மூடநம்பிக்கையின் முதுகெலும்பை முறிப்பதுதான் எங்கள் முதல் பணி என்று குறிப்பிட்டு, நான் பேச திட்டமிட்டதைவிட சற்று விளக்கமாகப் பேசினேன். சாய்பாபாவின் சீக்கோ கடிகார மோசடிகளை எல்லாம் அவிழ்த்துவிட்டு, அம்பலப்படுத்தினேன். இந்நிகழ்ச்சி முடிந்து நான்கு நாட்களுக்குப் பிறகு மலேசிய சுற்றுப் பயணத்திலிருந்த எனக்கு ஒரு வக்கீல் நோட்டீஸ் வந்தது. அந்த நோட்டீசில் சாய்பாபா பற்றி நீங்கள் பேசியது இந்த நாட்டுச் சட்டப்படி தவறாகும். மத உணர்வுகளைப் புண்படுத்திப் பேசுவது இந்த நாட்டில் கூடாது. இனிமேலும் நீங்கள் சாய்பாபா பற்றி பேசுவீர்களேயானால் சட்டப்படி நாங்கள் நடவடிக்கை எடுக்க நேரிடும். நீங்கள் மலேசியா நாட்டில் இருப்பதை மறந்து விட்டு இந்தியாவில் இருப்பதாக நினைத்துக்கொண்டு பேசினீர்களா? என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
இதற்கு தக்க பதில் நோட்டீஸ் கொடுக்க, ஒரு வழக்குரைஞரை அணுகலாம் என்று நண்பர்கள் யோசனை தெரிவித்தனர். எதற்காக இன்னொரு வக்கீல்? நானே ஒரு வக்கீல்தானே என்று கூறி, அவசரமாக அங்கே ஒரு லட்டர் பேட் அச்சிட்டு அதில் தக்க பதிலும் கொடுத்தேன்.
அதில், சாய்பாபா பற்றி நான் பேசியது உண்மை. இனியும் சாய்பாபாவைப் பற்றி நான் பேசப் போவதும் உண்மை. உண்மையை நாடக்கூடிய உண்மை மனிதாபிமானிகள் நாங்கள். மோசடிகள், அக்கிரமங்கள் எங்கு நடந்தாலும் அவற்றை முறியடிப்பதுதான் பெரியார் தொண்டர்களின் பணி. சாய்பாபா பற்றிப் பேசக் கூடாது என்று கூற உங்களுக்கு உரிமை கிடையாது. வீணாக, எனது பேச்சுரிமையில் தலையிடுகிறீர்கள். நீங்கள் என்ன நினைக்கிறீர்களோ, அதை தாராளமாக செய்து கொள்ளலாம். நான் இந்தியாவில் இல்லை, மலேசியாவில் இருக்கிறேன் என்று கண்டுபிடித்துக் கூறியமைக்கு எனது நன்றி என்று குறிப்பிட்டு வழக்கறிஞர் என்ற முறையில் பதில் நோட்டீஸ் அனுப்பினேன். அதற்குப் பின்பு நடந்த எல்லா நிகழ்வுகளிலும் சாய்பாபா பற்றி விளக்கமாகப் பேசினேன்.
நான் அங்கு இருந்தபோது, இங்கே (ஜனவரி 26இல்) இந்தித் திணிப்பை எதிர்த்து கருப்புடைப் பேரணி _ போராட்டம் எழுச்சியோடு நடைபெற்றது. கலைஞர், பேராசிரியர் உள்ளிட்ட தலைவர்களும் தோழர்களும் கறுப்புடையுடன் காட்சியளித்தது குறித்து செய்திகளை அங்கிருந்தே அறிந்து கொண்டேன்.
இரண்டு ஆண்டுகள் கழித்து 1981 – இல் ராம், ரெய்ஸ், யாப் என்ற அந்த மூன்று வழக்கறிஞர்கள் இணைந்த ஒரு குழு. ஒருவர் ஈழத்தமிழர், மற்றொருவர் மலாய்க்காரர், வேறு ஒருவர் சீனர். அதிலே ராம் என்ற ஹரிராம் செயராம் பார்_-அட்_லா படித்தவர். அவரிடமிருந்து 8.1.1981_இல் ஒரு பதிவுத் தபால் நம்முடைய கழக முகவரிக்கு இங்கே வந்தது. மறுபடியும் அந்த வழக்கு சம்பந்தமாகத்தான் வந்திருக்கிறது. ஒரு நல்ல வாய்ப்பு, நாமும் அந்த வழக்கில் வாதாடலாம். என்று நினைத்த நேரத்தில், அவர் எழுதிய கடிதம் வேறு முக்கியம் உடையதாக இருந்தது.
என்ன அந்தக் கடிதம்?
(நினைவுகள் நீளும்)