கடவுள் மறுப்பில் பவுத்தம் சாங்கியத்தை விட எவ்விதத்திலும் குறைந்ததில்லை. சாங்கியம் பவுத்தத்துக்கு மிக முந்தையது என்பதில் எள்ளளவும் அய்யமில்லை.
கடவுள் இருக்கிறார் எனும் கொள்கைக்காகவே அவர் இருப்பதாக நம்புவதும், அறிவாராய்ச்சிக் கண் ணோட்டத்தில் அதற்காக வாதிடுவதுமான விசயங்களில் பவுத்தத்தை நிறுவியவருக்கு ஆர்வமில்லை, இவற்றை விவாதிப்பதில் அவருக்கு விருப்பமில்லை என்பதுடன் ஏனையோர் அவற்றால் ஈர்க்கப்படுவதையும் அவர் ஊக்குவிக்க வில்லை, எதார்த்தத்தின் இயல்பையும், இவ்வுலகின் இறுதிக் காரணியையும் பற்றிய விசாரணை ஒரு வீண் வேலை என்பது அவரின் கருத்து.
அவனியெங்கும் அவலமே நிறைந்திருப்பதை புத்தர் கண்டார். நோய், சிதைவு (அல்லது) நுவலம், இறப்பு போன்றவற்றைப் பற்றிய கருத்துதான் அவரிடம் மேலோங்கியிருந்தது. அவரைப் பொறுத்தவரை விடை காண வேண்டிய ஒரே கேள்வி சகித்திட முடியாத மனித குலத் துயரங்களைக் களைவது எப்படி என்பதுதான்; துயரின் ஆணிவேர் எங்கே இருக்கிறது? அதைக் கெல்லி எறியவே முடியாதா? முடியுமாயின் எவ்வாறு?
ஒவ்வொரு பிறவியிலும் விடாது நம்மை ஒட்டிக் கொண்டு தொடர்கிற உயிர்வாழ்தல் மீதான ஆசைதான் துன்பத்துக்குக் காரணம்; இங்குமங்கும், இப்படியும் அப்படியும் தீர்த்துக் கொள்கிற காம உணர்ச்சி அதன் உடன்பிறப்பு; உலக இன்பங்கள், உயிர் வாழ்க்கை, அதிகாரம் ஆகியவற்றின் மீதான அடங்காக் காதல்தான் துன்பக் கேணியின் ஊற்றுக்கண்.
துன்பத்தை அறவே அகற்றிட வல்ல புனித உண்மை இதோ! ஆசையை நம்மிடமிருந்து தானாக அகல அனுமதிப்பது அல்லது துரத்துவது அல்லது ஒருவன் அதனிடமிருந்து தன்னை முற்றிலுமாக விடுவித்துக் கொள்வது அல்லது அதற்கு இடங் கொடாமால் இருப்பது ஆகிய வழிகளில் ஏதேனும் ஒன்றின் மூலம் அதை ஒழித்திடின் அவனின் துன்பம் தொலைந்துபோம்!
துன்பம் தொலைய ஒருவன் பயணப்பட வேண்டிய எட்டுவகை புனிதப் பாதை இதோ! நன்னம்பிக்கை, நன்மை பயக்கும் துணிவு. நல்வாக்கு, நன்னடத்தை, நல்வாழ்க்கை, நன்முயற்சி, நற்சிந்தனை, நல்ல தன்னோக்கு இந்த எண்வகைப் பாதையில் பயணிக்கிறவன் துன்பக் கடலில் விழுவதில்லை வீடு பெறுகிறான்.
புத்தர் துன்பத்துக்கான காரணத்தையும் அதிலிருந்து மீள்வதற்கான வழிமுறை களையும் ஆராய்கிறபோது ஆண்டவனைப் பற்றி விதந்தோதுகின்றனரே அக்கடவுள் குறித்து கடுகளவும் சிந்திக்கவில்லை; அப்படியொன்று இருக்கலாம் என எள்ளளவும் எண்ணவில்லை! கடவுள் குறித்த அவரின் இந்த அலட்சியத்தை நாம் எவ்வாறு விளக்குவது? இதற்கு ஒரேயொரு விடைதான் இருக்க முடியும்; அது யாதெனில் கடவுள் இல்லை என்பதில் அவர் மிகவும் தெளிவுடன் இருந்தார் என்பதுதான்!
கடவுள் பொருண்மை சாராதது என்பதால் புத்தருக்கு அதில் நாட்டமில்லை. பொருண்மை சாராத எந்த ஒரு கேள்வியோ, விசாரணையோ அல்லது விசயமோ அவரிடம் வந்தால் அவர் அதைக் கண்டுகொள்ளார்.
நடைமுறை வாழ்க்கைக்கு உதவாத ஞானத்தைத் தன் சீடர்களுக்கு ஊட்டுவதை அவர் அறவே வெறுத்தார்; காரணம், அது மனித அறிவுக்கு அப்பாலுள்ள விசயங்களில் ஆர்வங்கொள்ள அவர்களைத் தூண்டும்.
அந்த தீர்க்கதரிசி தனக்கு முழுமையாக ஞானம் கை வரப் பெற்றதைத் தானே வெளிப்படுத்தியதைப் பார்க்கையில் அக்காலத்தில் ஆகப் பெரிய கேள்வியாக முன்னுக்கு வந்த உலகைப் படைத்துக் காப்பவர் எனும் பிரச்சினையில் அவருக்கு அய்யம் ஏற்பட்டிருக்கும் எனக் கருத இடமில்லை.
கடவுள் இருக்கிறார் என நம்பிக் கொண்டே அவருக்கும் மனித குலத்தின் தலை விதிக்கும் சம்பந்தமில்லை எனவும் கருதுவது ஒருக்காலும் சாத்தியமில்லை; சரியில்லை.
புத்தர் கபிலரைப் பின்பற்ற விரும்பினார். அத்துடன் கடவுள் வெறும் கற்பனை என எண்ணினார் என்பது நிரூபணமாகிறது.
வல்லீ பவ்சின் அவர்கள் சொல்வதுபோல் ஒரு தத்துவார்த்த அமைப்பு என்கிற வகையில் எல்லாவற்றுக்கும் மேலே ஒன்று _ அதாவது மேலை நாட்டார் பார்வையிலான கடவுள் ஒன்று _ இருப்பதாகக் கருதுவதை பவுத்தம் காட்டமாக மறுக்கிறது. இந்த வெறுப்புக்கான முக்கியக் காரணங்களில் ஒன்று. பவுத்தமும் சாங்கியத்தைப் போன்றே மனிதச் செயல்பாடுகளின் விளைவுகள் அவற்றிலேயே அடக்கம் ஆகையால் அவற்றுக்குப் புறத்தே உலக இரட்சகர் எனும் வேறொரு காரணி ஏதும் இருக்க முடியாது எனத் திடமாக நம்பியமைதான்.
மனிதரின் கடன் பேரேட்டைச் சரிபார்த்து கணக்கை நேர்செய்திட மேலே ஒருவன் இருக்கிறான் எனப் பிராமணிய ஆய்வுக் கட்டுரைகள் குறிப்பிடுகிற கருத்தை அறவே ஒதுக்கித் தள்ளுகிற அந்தத் தத்துவ அமைப்பு நாத்திக வயப்பட்டதாகத்தான் இருக்க முடியும்.
மனிதச் செயல்பாடுகள் அவற்றுக்கு ஏற்ற விளைவுகளை ஏற்படுத்தும் ஆற்றலைத் தமக்குள்ளேயே கொண்டிருக்கின்றன என்பதால் அவற்றுக்கு வெளியிலிருந்து எந்த சக்தியும் அவசியமில்லை எனும் கருத்து இந்திய நாத்திகத்தின் வலுவான தூண்களில் ஒன்றாக இருந்து வந்துள்ளது.
கடவுள் இருக்கிறார் எனும் வாதத்தின் பக்கம் அவர் கொஞ்சம் சாய்ந்திருந்தாலும் அவருடைய போதனைகளின் கருத்தியல் அடிப்படை அப்படியே நொறுங்கிப் போயிருக்கும்; துயரமே வாழ்க்கையின் மாபெரும் அடிப்படை உண்மை என்பது அவரின் அசைக்க முடியாத நம்பிக்கை; அறியாமை முதலான பன்னிரண்டு காரணங்கள்தாம் துன்பத்தின் தோற்றுவாய்; நன்னம்பிக்கை, நன்மை பயக்கும் துணிவு போன்ற எட்டு வழிகளைப் பயில்வதன் மூலம் அதை வெற்றி கொள்ள முடியும்.
கடவுள் என ஒருவர் _ அனைத்தையும் ஆக்குகிற, அனைத்தும் அறிந்த எல்லாம் வல்ல ஒருவர் _ இருந்திருந்தால்,
இவ்வுலகின் சகல நிகழ்வுகளும் அவரின் சித்தப்படிதான் நடந்தேறின என்றால், அவர் மட்டுமே நற்பண்புகளுக்கு நல்வரமும் குற்றங்களுக்குத் தண்டனையும் கொடுத்தவர் எனில், இவையனைத்தையும் உண்மையெனக் கொள்வோமாயின்,
இந்திய மனம் வழிவழியாய் நம்பி, வந்த இறைஞ்சுதல், பலி கொடுத்தல் அல்லது காணிக்கை அல்லது நேர்த்திக் கடன் செலுத்துதல் ஆகியனவற்றின் மூலம் அடையப் பெறுகிற அவரின் கருணை மட்டுமே மனித இடர்களுக்கான மாமருந்தாகும்; சுருங்கச் சொன்னால், இந்த வாதத்தை புத்தர் ஏற்றிருந்தால் துயரம் பற்றியும் அதைத் துடைத்தெறிவதற்கான வழிமுறைகள் குறித்தும் அவரால் மொழியப்பட்ட தத்துவம் தலைகீழாய்த் தொங்கியிருக்கும்; உண்மை என்னவென்றால், அவர் தனது நிலைப்பாட்டில் உறுதியுடன் இருந்ததால் இறைஞ்சுதல், பலி கொடுத்தல் அல்லது காணிக்கை அல்லது நேர்த்திக் கடன் செலுத்துதல் போன்றவைக்கும் ஏதோ கொஞ்சம் சக்தியுண்டு என்கிற கோணத்தில் கூட அவர் அவற்றைப் பரிந்துரைக்கவில்லை.
புத்தருடையன என அஸ்வகோசரால் கூறப்படும் ஆத்திக எதிர்ப்பு வாதங்களாவன:
இவ்வுலகம் கடவுளால் இயற்றப்பட்டது எனில் தூயதும், தூய்மையற்றதுமான எல்லாப் பொருட்களும் அவனிடமிருந்தே இங்கு வந்திருக் வேண்டும்; ஆமெனில், அவற்றில் மாற்றமோ, அழிவோ கூடாது; துன்பமோ, (இயற்கைப்) பேரிடரோ ஏற்படக் கூடாது; சரி, தவறு என எதுவும் இருக்க முடியாது.
இன்பமும், துன்பமும், விருப்பும், வெறுப்பும் எல்லா உயிர்களுக்கும் இறைவனின் கொடை எனில் அவனுக்கும் அவை உண்டு என்றாகின்றது; ஆமெனில், அவனைக் குணங்களற்றவன் (நிர்க்குணவான்) எனக் கூறுவதேது?
படைத்த கடவுளின் ஆணைக்குப் பணிவதைத் தவிர உயிர்களுக்கு வேறு வழியில்லை யெனில் நற்குணங்களைப் பேண வேண்டிய அவசியமென்ன? அனைத்தும் அவன் செயல் எனில் நல்லது, கெட்டது ஏது? மேலும் அவை அவனுக்கும் உரியவனன்றோ?
துன்ப துயரங்களுக்குப் பிறிதொன்றே காரணமெனில் அந்தப் பிறிதொன்றுக்கு ஆண்டவன் காரணமில்லை; ஆமெனில், இவ்வுலகிலுள்ள பிற எதற்குங்கூட அவன் காரணமாக இருக்க வேண்டியதில்லை அல்லவா?
படைத்தவர் கடவுளெனில் அவர் ஏதேனுமொரு நோக்கத்துடனோ அல்லது நோக்கம் ஏதுமின்றியோ இயங்குகிறார்; அவருக்குப் படைப்பில் நோக்கமுண்டு எனில் அதை நிறைவேற்றுவதில் அவர் மன நிறைவு காண வேண்டியதிருக்கும்; ஆமெனில், அவர் முழுமை (பூரணத்துவம்) பெற்றவர் ஆகார்; நோக்கமேதுமின்றி இயங்குகிறார் எனில் அவர் பைத்தியக்காரனாகவோ அல்லது பால் உறிஞ்சும் பச்சைக் குழந்தையாகவோ தான் இருக்க வேண்டும்.
படைத்தவர் கடவுளெனில் மானிடர் (எப்போதும்) அவருக்குப் பயபக்தியுடன் பணிந்திராமல் ஏதேனும் அவசியம் ஏற்ப்படுகிறபோது மட்டும் வேண்டுதல்கள் செய்வதேன்? ஒன்று போதாதென்று ஒன்றுக்கு மேற்பட்ட கடவுள்கள் ஏன்?
ஆகக், கடவுள் உண்டு எனும் கருத்து பொய்யானது என்கிறது பகுத்தறிவுக்குப் பொருந்துகிற வாதம்; அதற்கெதிரான வாதங்கள் முன்னுக்குப் பின் முரணானவை. அவர் காலத்திய ஆத்திக நம்பிக்கையின் எளிமைக்கு ஏற்ற விகிதத்தில் அவரின் நாத்திக வாதங்களும் அமைந்திருந்தன.