உயிர்க்காற்று மாசாவதைத் தடுக்க உடனே நடவடிக்கை வேண்டும்!

நவம்பர் 01-15

சென்னைக்கு வெளியூரில் இருந்து வந்து செல்பவர்கள், இங்கேயே தங்கி விட்ட வெளியூர்க்காரர்கள் சென்னைக்கு வந்த ஆரம்ப காலங்களில் சாலையோரம்  நீண்ட நேரம் நிற்க நேரும்போது உடலில் சிறு அரிப்பை உணர்ந்திருப்பார்கள். வீட்டிலிருந்து வெளியில் சென்று வீடுவந்து சேர்ந்ததும், அல்லது மாலையில் வீடு வந்து சேர்ந்ததும் முகத்தை ஒரு வெள்ளைத் துணியால், அல்லது பேப்பரால் அழுத்தித் துடைத்துப் பாருங்கள்.

துடைத்த இடத்தில் கறுப்புநிறம் திட்டாக இருக்கும். இது கண்ணுக்குத் தெரியாமல் காற்றில் கலந்திருக்கும் மாசு. இதுதான் மேலே சொன்ன அரிப்புக்குக் காரணம். நமக்கு பழகிப்போனதால் அந்த அரிப்பு தெரிவதில்லை. இது அப்படியே நம் சுவாசம், மூலம் நுரையீரலுக்குள் செல்கிறது. நுரையீரல் எவ்வளவு பாதிக்கப்படும் என்று கற்பனை செய்து பாருங்கள்.

காற்றில் கலந்திருக்கும் மாசு காரணமாக ஏற்பட்ட நோய்களால் கடந்த 10 ஆண்டுகளில் இந்தியாவில் 35,616 பேர் மரணம் அடைந்துள்ளனர். இது மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் நாடாளுமன்றத்திலேயே எழுத்துப்பூர்வமாகத் தெரிவித்த தகவல். இந்தப் புள்ளிவிவரப் பட்டியலுக்குள் வராமல் நிகழ்ந்த மரணங்கள் நிச்சயம் இன்னும் பல மடங்கு இருக்கும்.

புதுதில்லியில் மட்டும் செய்யப்பட்ட ஒர் ஆய்வு முடிவுப்படி ஒரு நாளைக்கு 80 பேர் தில்லியில் காற்று மாசு தொடர்பான நோய்களுக்குப் பலியாவதாகத் தெரிவிக்கிறது. இந்தியாவில் அதிக இறப்பை ஏற்படுத்தும் காரணங்களுள், அய்ந்தாவது இடத்தைப் பிடித்துள்ளது காற்று மாசு என்கிறது. இந்த ஆய்வு. தமிழகத்தில் அயந்து பேரில் ஒருவர் காற்று மாசுபாட்டால் இறக்கிறார்.

காற்றை மாசுபடுத்துவதில் வாகனப் புகையே அதிகப் பங்கு வகிக்கின்றது. குறிப்பாக, வாகனப் புகையில் வெளிப்படும் அதிகப்படியான கார்பன், காற்றை மாசுபடுத்தி மக்களுக்கு ஆரோக்கியக்கேட்டை ஏற்படுத்துகிறது.

வாகனங்களில் இருந்து கார்பன் மோனாக்சைடு, ஹைட்ரோகார்பன், நைட்ரஜன், மீத்தேன், ஆக்சிஜன் உள்ளிட்ட பல வாயுக்கள் வெளியேறுகின்றன. நான்கு சக்கரம், இரு சக்கரம் என வாகனத்தின் தன்மைக்கேற்ப ஒவ்வொரு வாகனப் புகையிலும் இவற்றின் அளவு எவ்வளவு இருக்க வேண்டும் என்று, காற்று மாசுத் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டுச் சட்டம் 1981 வரையறை செய்துள்ளது.

ஆனால், முறையான சோதனை மற்றும் சரியான பராமரிப்பு இல்லாததால் பெரும்பான்மை வாகனங்கள் இச்சட்டம் குறிப்பிடும் அளவைவிட அதிகமான கார்பனை கக்கிக்கொண்டே சுற்றி வருகின்றன. சரக்கு வாகனங்கள், 64 சதவிகிதம் கார்பன் மோனாக்சைடை வெளியிட்டுக் காற்றை மாசுபடுத்துதலில் முதலிடத்தில் இருக்கின்றன. வாகனப் புகையை அடுத்து நிலக்கரி எரிப்பு, கட்டுமானப் பணிகள், மழை வீழ்ச்சி உட்படப் பல்வேறு காரணிகள் காற்று மாசுபாட்டுக்குக் காரணமாக இருக்கின்றன.

காற்றில் கலந்துள்ள மாசு, மனித உடலுக்குள் சுவாசம் மூலம் புகுந்து, நுரையீரலைக் கடந்து ரத்த ஒட்ட மண்டலத்தை அடைகிறது. இதனால், மாசடைந்த காற்றை சுவாசிப்பவர்களுக்கு மூக்கு அரிப்பு, தலைவலி, தொண்டை எரிச்சல், கண் எரிச்சல், தலைமுடி உதிர்தல், தோல் அரிப்பு, வாந்தி, பித்தம் போன்ற சிறிய பாதிப்புகள் தொடங்கி இம்பஸிமா என்ற நுரையீரல் நோய், நுரையீரல் புற்றுநோய், கருத்தரிப்புக் கோளாறு, குறைப்பிரசவம், உருக்குலைந்த குழந்தை பிறப்பு. பார்வைக் கோளாறு, ஆஸ்துமா போன்ற பெரிய பாதிப்புகள் வரை பலவிதமான அபாயங்களுக்கு வழிவகுக்கும். வாகனப் புகை, துசு போன்ற மாசு நிறைந்த சூழலில் வளரும் குழந்தைகளுக்கு உடல் பருமன் அதிகரிக்கும் வாய்ப்பும், வளர்ந்ததும் பரம்பரை அல்லாத சர்க்கரை நோய் ஏற்படும் வாய்ப்பும் உள்ளது என்கிறது அமெரிக்க மருத்துவ ஆய்வு.

2012-ஆம் ஆண்டே, பெர்க்லி பல்கலைக்கழக விஞ்ஞானிகள் நடத்திய ஆய்வின் முடிவில், இந்தியாவில் வாகனப் புகையை அதிகம் சுவாசிக்கும் மக்கள் விகிதத்தில் கொல்கத்தா, டில்லிக்கு அடுத்தபடியாக சென்னையே இருக்கிறது எனச்சொல்லப்பட்டது. இந்த எச்சரிக்கைக்குப் பிறகு தமிழ்நாட்டில் அதற்குரிய நடவடிக்கையை அரசு மேற்கொள்ளவில்லை.

அந்த எச்சரிக்கையை அலட்சியப்-படுத்தியதால், இந்தியாவில் மாசு கலந்த மிக மோசமான காற்றுள்ள நகரங்களில் முதலிடத்தில் இருந்த டில்லியை பின்னுக்குத் தள்ளிவிட்டு, நமது சிங்காரச் சென்னை தற்போது நம்பர் 1 ஆகிவிட்டது. உலகளவிலும் மாசடைந்த நகரங்களின்பட்டியலில் சென்னை இடம் பிடித்துள்ளது.

காற்றில் மிதக்கும் துகள்களைக் கொண்டே காற்றின் தரம் அளவிடப்படுகிறது. 2.5 முதல் 10 மய்க்ரோ மீட்டர் வரை விட்டம் கொண்ட துகள்கள் பிஎம் 10 என்று அழைக்கப்-படுகின்றன. 25 மய்க்ரோமீட்டருக்கும் குறைவான அளவுகொண்ட துகள்கள் பிஎம் 2.5 என்று அழைக்கப்படுகின்றன. இவைதான் மிகவும் ஆபத்து விளைவிக்கக் கூடியவை. காற்றில் உள்ள துகள்களின் அனுமதிக்கப்பட்ட அளவு 100 பிஎம் 10.

ஆனால், சென்னையில் சில பகுதிகளில் சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் நுங்கம்-பாக்கத்தில் அதிகபட்சமாக 264 பிஎம் 10 பதிவானது. அண்ணாநகரில் 246, கீழ்ப்பாக்கத்தில் 147. தியாகராயநகரில் 143 என பிஎம் 10 அளவு பதிவாகியுள்ளது. தொழிற்சாலைகள் பெருகிய திருவொற்றியூர், மணலி, கத்திவாக்கம் பகுதிகளில் சராசரி இருக்க வேண்டிய காற்று மாசு அளவைவிட 2 மடங்கு முதல் 2.42 மடங்கு வரை அதிகமாக இருந்தது. இந்த நிலை தொடர்ந்து நீடித்தால் சென்னையில் வசிக்கும் அனைவரும் சுவாசக் கோளாறு அல்லது நுரையீரல் தொடர்பான நோய்க்கு ஆளாவது நிச்சயம்.

பாரதிதாசன் பல்கலைக்கழகம் அம்பத்தூர், கொளத்தூர், சைதாப்பேட்டை, எழும்பூர் ஆகிய பகுதிகளில் நடத்திய ஆய்வில் புற்றுநோயை ஏற்படுத்தக்கூடிய பாலி சைக்ளிக் அரோமாட்டிக் ஹைட்ரோ கார்பன், பென்சோ பைரீன் ஆகிய இரண்டும் காற்றில் அதிகம் உள்ளது கண்டுபிடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. டில்லியில் ஒரு நாளைக்கு 80 பேர் காற்று மாசு தொடர்பான நோய்களுக்குப் பலியாகிறார்கள் என மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் சொல்கிறார். அப்படியானால், தில்லியைவிடக் காற்று அதிகம் மாசடைந்த சென்னையின் நிலைமை எப்படியிருக்கும்? ஆய்வுகள் நடத்தப்படாததால் இழப்புகள் இல்லை என்று அர்த்தமாகிவிடாது. டில்லியில் நடத்தப்பட்டது போல் ஒர் ஆய்வு சென்னையில் நடத்தப்பட்டு இழப்புகளின் உண்மையைத் தெரிவிக்க வேண்டும்.
சென்னைக் காற்றில் கலந்திருக்கும் கார்பன் மோனாக்ஸைடு, கார்பன் டயாக்ஸைடு, பல்வேறு வகை நைட்ரஜன் ஆக்சைடு வாயுக்கள், ஹைட்ரோ கார்பன்கள் போன்ற வாயுக்-களுடன் புழுதி, ஈயம், பென்சீன் போன்ற விஷத்தன்மை கொண்ட வேதிப் பொருள்களும் சென்னை வாழ் மக்களுக்கே தெரியாமல் அவர்களை மெல்ல மெல்ல அழித்துக் கொண்டிருக்கின்றன. காரணம்: மக்கள் தொகைப் பெருக்கம், வாகனங்கள் எண்ணிக்கை அதிகரிப்பு, அதிக அளவிலான கட்டுமானப் பணிகள், மலைபோல குவியும் குப்பைகள் போன்றவற்றின் காரண-மாகவே சென்னைக் காற்று அதிக அளவில் மாசுபட்டு வருவதாக அறியப்-பட்டுள்ளது.

வடசென்ன தொழிற்சாலைகளால் மாசுபடுகிறது என்றால் தென்சென்னை கட்டுமானப் பணிகளாலும் போக்குவரத்து நெரிசலாலும் மாசடைகிறது.

சொன்னதைச் செய்யாத தமிழக அரசு

கடந்த ஆண்டு ஜூன் மாதம் நடந்த உலகச் சுற்றுச்சூழல் தின விழாவில் பேசிய அமைச்சர் தோப்பு என்.டி.வெங்கடாச்சலம், சென்னையில் 4 கோடி ரூபாய் செலவில் பெருங்குடி, கொடுங்கையூர் மற்றும் ராயபுரம் ஆகிய இடங்களில் தொடர் காற்றுக் கண்காணிப்பு நிலையங்களும் ஒரு நடமாடும் தொடர் காற்றுக் கண்காணிப்பு நிலையமும் விரைவில் அமைக்கப்படும். இதன்மூலம் சென்னை மாநகரக் காற்றின் தரம் உடனுக்குடன் கண்டறியப்படும் என்றார். அறிவிப்பு வெளியாகி ஒராண்டுக்கு மேல் ஆகிவிட்டது. இதுவரை அத் திட்டம் செயல்படுத்தப் படவில்லை.

தீர்ப்பு என்ன?

காற்று மாசடைவதைத் தவிர்க்க, நகரின் மொத்த நிலப்பரப்பில் 33.3 சதவிகிதம் நிலப்பரப்பு பசுமைப் போர்வையுடன் இருக்க வேண்டும். அதற்கு ஏற்றவாறு அனத்து மாநிலங்களும் பசுமைப் போர்வையின் அளவை உயர்த்த வேண்டும் என்று சமீபத்தில் மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம் அறிவுறுத்தியது. ஆனால், சென்னையில் கிட்டத்தட்ட 7 சதவிகிதம் மட்டுமே பசுமைப் போர்வை உள்ளது. எனவே. சென்னையின் பசுமைப் போர்வையை அதிகரிக்கும் விதமாக, ஒவ்வொரு வார்டிலும் குறைந்த அளவு தலா 5 கி.மீ. தொலைவு என 1,000 கி.மீ. தொலைவுக்குச் சாலையோரங்களில் 2 லட்சம் மரக்கன்றுகளை  நட மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை உடன் மேற்கொள்ள வேண்டும். ஏற்கெனவே உள்ள மரங்களைக் கணக்கெடுத்து என்.சி.சி., என்.எஸ்.எஸ். மாணவர்கள் மூலம் தொடர்ந்து பராமரிக்க வேண்டும். அரசியல்வாதிகளின் வழக்கமான அறிவிப்பாக இல்லாமல் மக்களின் உயிர்பிரச்சினையாக தீவிர கவனம் செலுத்த வேண்டும்.

தற்போது, காற்று மாசுபாட்டில் இருந்து தப்பிக்கவும் களைப்பைப் போக்கி உற்சாகம் பெறவும், மேலை நாடுகளில் ஆக்சிஜன் மய்யங்களுக்குச் சென்று சிறிது நேரம் தூய காற்றைச் சுவாசித்து வருகின்றனர். இந்தியாவிலும் இதுபோன்ற மய்யங்கள் வரத் தொடங்கிவிட்டன. சென்னையிலும் விரைவில் வரலாம்.

சிங்காரச் சென்னைக் காற்று சீர்கெட்டு-விட்டது என்பதை ஒர் அபாய அறிவிப்பாக எடுத்துக் கொண்டு திருச்சி, மதுரை, கோவை, திருநெல்வேலி போன்ற தமிழகத்தின் மற்ற நகரங்கள் உடனடியாக தவிர்ப்பு நடவடிக்கை-களை மேற்கொள்ள வேண்டும்.

மக்களிடையே காற்று மாசுபாடு பற்றிய விழிப்புணர்வு பரவ வேண்டும். காற்று மாசுத் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டுச் சட்டம் 1981, வாகனப் புகை சோதனை மய்யங்கள் இருந்தும் அதைக் கண்டு கொள்ளாதவர்கள்தான் பலர். ஹெல்மெட், லைசென்ஸ், இன்சூரன்ஸ் போன்றவற்றிற்கு நடத்தப்படும் சோதனை-களுடன் ஒப்பிடும் போது புகை மாசு சோதனை மிகக் குறைவுதான். ஆறு மாதங்களுக்கு ஒருமுறை வாகனங்கள் புகைச் சோதனைக்கு உள்ளாக்கப்பட வேண்டும் என்பது வல்லுநர்களின் பரிந்துரை.

இதுபோல் சில வருடங்களுக்கு முன்னால் தண்ணீர் மாசடைந்து வருவதைப் பற்றி விஞ்ஞானிகள் அறிவுறுத்தினார்கள். இவர்கள் வேறு, எப்பப் பார்த்தாலும் எதாவது பூச்சாண்டிக் காட்டிக்கொண்டே இருப்பார்கள் என அதை அலட்சியப்படுத்தினோம். அதன் விளைவு, இன்று எங்கு சென்றாலும் ஒரு தண்ணீர் பாட்டிலுடன் செல்ல வேண்டிய நிலை. காற்று மாசு குறித்த எச்சரிக்கையையும் அதுபோல் அலட்சியப்படுத்தினால், பள்ளிக்குச் செல்லும் குழந்தைகள் புத்தகப் பைகளை முதுகில் சுமந்து செல்வது போல, ஆக்சிஜன் உருளையை நாம் அனைவரும் சுமந்து செல்ல நேரிடும், காலம் விரைவில் வரும். எனவே அரசு உறுதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். மற்றவர்கள் ஒத்துழைப்புடன் நடந்து கொள்ள வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *