நீர்வழிப் போக்குவரத்தில் தமிழர்களுக்கு இருந்த வியக்க வைக்கும் ஆற்றல்
தமிழர்கள் கப்பற் கலையில் சிறந்து விளங்கியதை அவர்கள் தொன்றுதொட்டே மேலை நாடுகளுடனும், கீழை நாடுகளுடனும் கொண்டிருந்த கடல் வணிகத்தின் மூலம் அறிந்து கொள்ள முடிகின்றது.
பழந்தமிழ் இலக்கியங்கள், வெளிநாட்டுப் பயணிகளின் குறிப்புகள், வரலாற்றுச் சான்றுகள், கல்வெட்டு மற்றும் தொல்பொருள் சான்றுகள் நமக்கு இவ்வுண்மையை உறுதி செய்கின்றன.
தமிழ் நூல்களிலே மிகவும் பழையதும் பெருமை வாய்ந்ததுமாகிய தொல்காப்பியத்தில் நம் தமிழ் மக்கள் ஓரிடத்திலிருந்து வேறிடம் செல்ல இரண்டையும் பயன்படுத்தியதைத் தெரிவிக்கின்றது.
இருவகைப் பிரிவும் நிலைபெறத் தோன்றலும்
உரியதாகும் என்மனார் புலவர் – (தொல்)
பண்டைக் காலங்களில் மேலை நாட்டினராகிய கிரேக்கர், யவனர், பாபிலோனிய நாட்டுகோசியர்கள் ஆகியோர் தமிழகத்தோடு கடல் வணிகத் தொடர்பு கொண்டு இருந்தனர். யவனரைப் பற்றிய குறிப்பு தமிழிலக்கியத்தில் பத்து இடங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. மற்றும் இந்தியாவில் கிடைத்திருக்கும் உரோமானியக் காசுகளில் 80 விழுக்காடு தமிழ்நாட்டில் அதுவும் கொங்கு நாட்டில் கிடைத்திருப்பது இதற்கு ஒரு சான்றாகும்.
மேலை நாடுகளோடு கி.மு.7ஆம் நூற்றாண்டிலிருந்து வணிகம் தொடர்ந்து நடைபெற்றதாகவும், கிரேக்கர்கள் கி.மு. 5ஆம் நூற்றாண்டிலேயே வணிகத் தொடர்பு தமிழர்களோடு வைத்திருந்தனர்.
கீழை நாடுகளான சீனா, மலேசியா, சாவகம் ஆகியவற்றோடு தமிழர் பன்னெடுங்காலமாகவே வணிகம் செய்து வந்துள்ளனர். கி.மு.1000 அளவில் சீனத்தோடு தமிழர் வணிகத் தொடர்பு கொண்டிருந்தனர். கி.மு.7ஆம் நூற்றாண்டில் தமிழகத்திலிருந்து பொருள்கள் சீனாவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு அங்கு விற்கப்பட்டன. சீனத்துப் பட்டும், சர்க்கரையும் தமிழகத்துக்கு வந்தன.
படகுகளின் வரலாறு
தமிழ் இலக்கியத்தைப் பொருத்தமட்டில் 18 படகுகள் கூறப்பட்டுள்ளன. பொதுவாகப் படகுகளை மூன்று வகைகளாக வகைப்படுத்தலாம். (அ) கட்டு மரம் வகை (ஆ) தோணி வகை (இ) வள்ளம் வகை.
கட்டுமரம் வகை
ஒரு மரத்தோடு ஒரு மரத்தை இணைத்துக் கட்டுவதால் இதற்கு இணைக் கட்டுமரம் எனவும் பெயர் வழங்கலாயிற்று. இதனைக் கோலாமரம் எனவும் அழைத்தனர்.
மூன்று மரங்களால் இணைக்கப்படும் கட்டுமரத்தின் எடை சுமார் ஆறு முதல் எட்டு டன் வரை இருக்கும். இது பாய்மரம், பாய் ஆகியவற்றாலும் துடுப்பினாலும் செலுத்தப்-படும்.
நான்கு மரங்களை ஒன்றாக இணைத்து இறுக்குமரம் என்று ஒரு புதிய மரத்தைக் கண்டனர். இறுகக் கட்டப்பட்டதால் இறுக்குமரம் என்று கூறினர்போலும். நான்கு மரங்கள் அடுத்தடுத்து வைத்துக் கட்டப்-பட்டதால் இதனை நாலாட்டி மரம் எனவும் அழைக்கின்றனர்.
தேவைக்கேற்ப ஏழு மரங்களை இணைத்துக் கட்டிய வள்ளம் கட்டு வள்ளம் எனப்பட்டது. இம்மரமே கட்டுமரங்களி-லெல்லாம் மிக வசதியானது என்று கூறப்படுகிறது. இது தெப்பத்தைப் போலிருக்கும். கட்டு மரங்கள் பொதுவாக 23 அடி நீளம் 3 அடி அகலம் உள்ளதாக இருந்தன. பிற்காலத்தில் 20லு அடி நீளம் 2லு அடி அகலமுமாய்க் குறுகியது. கட்டு மரங்கள் பாண்டிய நாட்டில் ஒருவிதமாகவும், சோழ நாட்டில் ஒருவிதமாகவும் கேரள நாட்டில் வேறுவிதமாகவும் காணப்படுவதைக் கள ஆய்வின் மூலம் அறிய முடிகிறது.
அடுத்துக் கண்டுபிடிக்கப்பட்ட தெப்பம் என்னும் கலனும் கட்டு மரங்களின் தொடர்ந்த வளர்ச்சி நிலையாகும். ஏழு அல்லது எட்டுக்கு மேற்பட்ட மூங்கில் கழிகளையோ அல்லது சிறிய மரக் கம்புகளையோ வரிசையாக அடுக்கிக் குறுக்காக மூங்கில் அல்லது கம்புகளை வைத்துக் கயிறுகளால் பிணைத்துப் பலகை போல் தட்டையாகச் செய்யப்பட்டதுதான் தெப்பம் ஆகும்.
தெப்பங்களைவிட வசதியுள்ளதாகக் கட்டப்பட்டிருப்பது மிதவையாகும். மிதவை தெப்பத்தைப் போல் பல மரங்களை ஒன்றையொட்டி ஒன்றை வரிசையாக வைத்துக் கட்டித் தட்டையாக இருக்கும்படி கயிறுகளால் கட்டப்பட்டிருக்கும். வெயில், மழை, காற்று முதலியவை தாக்காவண்ணம் இருக்கவும், படுத்துக் கொள்ளவும், பண்டங்களை வைத்துக் கொள்ளவும், வண்டிக் கூண்டுகளைப் போல் அழகாகக் கட்டப்பட்டு இருக்கும். இன்றும் கேரளக் கடற்கரையில் இதனைக் காணலாம். புணை என்பதும் தெப்பமேயாகும்.
பரிசில் என்பதும் கட்டுமர வகையைச் சார்ந்ததாகும். காட்டுப் பிரம்புகளைக் கொண்டு பின்னிக் கட்டித் தோல் சேர்த்துத் தைக்கப்பட்ட வட்ட வடிவமான பரிசில் என்னும் சிற்றோடம், பிளினி காலம் வரை அதாவது முதலாவது நூற்றாண்டு வரை தமிழகத்தில் பயன்படுத்தப்-பட்டு வந்தது என்பதைப் பல மேனாட்டாசிரி-யர்கள் குறிப்பிட்டுள்ளனர். கட்டுமர வகைப் படகுகள் மீன் பிடித் தொழிலுக்கும் (அகநானூறு 280:7–_11) புனல் விளையாட்டுக்கும் (குறுந்தொகை 168:5, பரிபாடல் 6:3) பண்டைக் காலங்களில் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளன.
தோணி வகை
கட்டுமர வகைப் படகுகளில் போதிய பாதுகாப்பும் வசதியும் இல்லாததால் மனிதன் தனது வசதிக்கேற்ப நீண்ட பெரிய மரத்தில் நடுவில் குழித்து அரை வடிவச் சந்திரன் அமைப்பில் படகுகளைச் செய்திருக்கிறான். இவ்வகைப் படகுகளே தோணிவகைப் படகுகள் எனப்படும். மரங்களைத் தோண்டித் தோணி வகைப் படகுகள் உருவாக்கப்பட்டுள்ளன. பெரிய மரத்தின் நடுவில் நீளமாகப் பள்ளந்தோண்டி உருவாக்கப்படுவதே தோணியாகும். இத்தோணியில் மரப்பலகை-களைப் பொருத்தி உருவாக்கப்படும் கலம் படகு எனப்படும்.
தமிழ் இலக்கியத்தில் கூறப்பட்டிருக்கும் தோணி, படகு, சோங்கு, ஓடம், முடுகு, கைப்பரிசு ஆகியன தோணி வகைப் படகுகளாகும். இவை மீன் பிடிப்பதற்கும் (குறுந்தொகை 123:5, 6); புனல் விளையாட்டிற்கும் (பரிபாடல் 10:70, 71) கடல் கொள்ளைக்கும் மற்றும் கடற்போருக்கும் (புறநானூறு 126 : 14 _16) வகிணத்திற்கும் (பதிற்றுப்பத்து 52:3, 4) முத்துக் குளித்தலுக்கும் (அகநானூறு 350: 10-_15) பயன்படுத்தப்பட்டதாக இலக்கியங்கள் கூறுகின்றன.
வள்ளம் வகை
மேற்கூறப்பட்ட இருவகைக் கலங்களும் நீண்ட தூரக் கடற் பயணத்திற்கு ஏற்பக் காணப்படாததால் அதைவிட வசதியும் பாதுகாப்பும் பெரிதுமான கலங்களைச் செய்ய ஏரா எனும் அடிமரத்தின் மேல் இரு பக்கங்களிலும் பலகைகளை அடித்து இடைவெளியில் நீர்புகாதவாறு பஞ்சு மற்றும் தார் பூசிப்பெரிய கலங்களை உண்டு பண்ணினர். இதுவே வள்ளம் எனப்பட்டது.
இவ்வகைக் கலங்களைச் செய்ய வங்கு என்ற சட்டங்கள் மூலக்கருவாகப் பயன்படுத்தப்-படுகின்றன. அவை ஆங்கில எழுத்தாகிய ஹி வடிவில் இருக்கும். வங்கக் கால்களின் மீது வரிசையாகக் கட்டைகளைப் பொருத்தி மர ஆணிகளை வைத்து அடித்து இடைவெளிகளில் அதற்கென்று செய்யப்பட்ட மெழுகுகளைப் பூசிவிடுவர். வங்கு கால்களின் நீளம், அகலம், உயரம் நீரில் பாரங்களைத் தாங்கும் சக்தி ஆகியவற்றிற்கேற்ப வள்ளம் வகைக் கலங்கள் உருவாக்கப்படுகின்றன.
வள்ளம் வகைக் கலங்களின் முன்பாகமாகிய அணியம் யானை, குதிரை, சிங்கம் போன்ற விலங்குகளின் முகச்சாயலில் அழகூட்டும் முயற்சியில் உருவாக்கப் பட்டிருப்பதைச் சிலப்பதிகாரம் 13:176, 179 வரிகள் தெரிவிக்கின்றன.