தோழர்களே! இன்றைய தினம் நாம் எல்லாம் யார்?
25.08.73 அன்று சென்னை புதுவண்ணாரப்பேட்டை திராவிடர் கழக 22ஆம் ஆண்டு விழாவில் தந்தை பெரியார் அவர்கள் ஆற்றிய உரையின் தொடர்ச்சி :
தோழர்களே! நமது சமுதாயம், உலகத்திலே தாழ்த்தப்பட்ட இழிவான சமுதாயம். அரசியலின் பெயராலும், மதத்தின் பெயராலும் வயிறு வளர்ப்பவர்கள் பெருமையாக நாட்டையும், மொழியையும் பேசிக் கொள்ளலாம். நம்மிடம் உயர்வானது ஒன்றும் இல்லை. நம்முடைய மொழியினால் ஒரு காரியமும் நம்மால் செய்ய முடியாது. நமது இலக்கியங்கள் எல்லாம் 2000 வருடங்களுக்கு முந்தியவை. வள்ளுவன் காலம் காட்டுமிராண்டிக் காலம். அதே போல, கடவுளும் மனிதன் மடையனாக இருந்தபோது உற்பத்தி செய்யப்பட்டவை. இயேசுவும், அல்லாவும், ராமனும், கந்தனும், 2000,3000 ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்டவைகள்.
அந்தக் காலங்களில் 5 வருடம்கூட மனித ஆயுள் இல்லையே; இந்தக் கடவுளும் சாத்திரங்களும் ஒழித்து, அறிவு வளர்ந்த பிறகு ஆயுள் வளர்ந்துள்ளதே. இன்றைக்கு, சுயமரியாதை இயக்கம் வந்த பிறகு மனிதனின் சராசரி வயது 50 ஆக உயர்ந்தது. கடவுள் ஒழிந்து, அறிவு ஆதிக்கம் செலுத்தியதால் தான் இப்பொழுது மனிதன் வாழ்கிறான்–_வளர்கிறான்.
1952இல் சராசரி வயது 25. 1973 இல் சராசரி வயது 52. 27 வயது இந்த 21 ஆண்டில் உயர்ந்திருக்கிறோமே? அன்று கோயில் இல்லையா? கடவுள் இல்லையா? சங்கராச்சாரி இல்லையா? கிறிஸ்து பிறந்த முதல் ஆண்டில் உலக ஜனத்தொகை 20 கோடி. இன்று 350 கோடி. இந்தப் பாழாய்ப் போன கடவுள் இல்லாமல் இருந்தால் அன்றைக்கே மனிதன் உயர்ந்திருப்பான்.
நான் பந்தயம் கட்டுகிறேன். மேடைமீது வந்து சொல்லுங்கள். யாருக்காவது கடவுள் நம்பிக்கை இருக்கிறதா? சர்வசக்தி உள்ள கடவுள் இருக்கிறது என்று துணிவுடன் சொல்கிறாயா? கும்பிட்டால் கடவுள் நம்பிக்கையா? சாம்பல் அடித்துக்கொண்டால் கடவுள் நம்பிக்கையா? அவனே சம்பாதிக்கிறான், சண்டை போடுகிறான், வாழ்க்கையை வளர்க்கிறான். கடவுளை நம்பி எவன் உட்கார்ந்து கொண்டு இருக்கிறான்? என்னுடைய 15 வயதிலே கடவுளை இல்லை என்று சொன்னவன்தானே நான். இப்பவும் சொல்கிறேன். நீங்கள் 100,120 வருடம் சாகாமல் இருக்கப் போகிறீர்கள். 5 லட்சம் 3 லட்சம்பேர் இருக்கும் போது அக்காலத்தில் பல ஆயிரம் பேர் சாவார்கள். இப்போது 30, 40 லட்சம் பேர் இருக்கும்போது 4,5 பேர் தானே காலரா வந்து சாகிறார்கள்?
மனிதன் முட்டாளாவதற்கு, -உலகம் வளராமல் இருப்பதற்குக் காரணம் கடவுள்தானே? நமக்குப் பல்லாயிரக்கணக்கான கடவுள், கோயில் இத்தனைப் பேரும் இருந்து என்ன செய்தார்கள்? சாமிக்குக் கல்யாணம், கோயில் குளம் திருவிழா, ஒழுக்கக்கேடு இதைத்தானே செய்தார்கள். இன்று, மேல்நாட்டான் சந்திர மண்டலம் போகிறான், நீ, பி.ஏ., எம்.ஏ. படித்து, சந்திரனைப் பாம்பு விழுங்குகிறது என்கிறாயே? நீ படித்தவன்தானா? சர்வ சக்தி உள்ள சாமியை, ஒருவன் இல்லை என்று சொல்கிறான் என்றால், நீ உட்கார்ந்து கொண்டு அழலாமா? சர்வசக்தி உள்ள சாமி, இல்லை என்று ஏன் சொல்லவைக்க வேண்டும்? நான் இருக்கிறேன் என்று சொல்லவேண்டாமா? திராவிடர் கழகம் இல்லை என்றால், நீங்கள் இவ்வளவு உயர்ந்திருப்பீர்களா? சுயமரியாதை இயக்கம் தோன்றி கடவுளைச் செருப்பால் அடித்து நொறுக்கியதால்தானே நாம் எல்லாம் மனிதர் ஆனோம்.
1920, 1922 லே நீங்கள் ஏன் படிக்கவில்லை? சாத்திரத்திலே சூத்திரன் படிக்கக் கூடாது; படித்த சூத்திரனை நாட்டிலே வைக்கக் கூடாது என்று இருந்தது. நமது நாட்டுச் சேரன், சோழன் எல்லாம் பார்ப்பான் சொன்னதைக் கேட்டு ஆண்டவர்கள். அவன் பள்ளிக்கூடம் வைத்தது எல்லாம் பார்ப்பனனுக்குத்தான். அவர்களைத் தொடர்ந்து துலுக்கன், வெள்ளைக்காரன் எல்லாம் பார்ப்பானுக்கு ஆதரவாகவே இருந்தனர்.
சுயமரியாதை இயக்கம் தோன்றியது; கடவுள், மதம், காந்தி, பார்ப்பான், காங்கிரஸ் இவைகளை ஒழிக்க முற்பட்டது. காமராஜர் தாழ்ந்த ஜாதியில் பிறந்தவர்தான்; இருப்பினும் கடவுள், மதம், ஜாதி ஒழியவேண்டும் என்று சொல்லமுடியுமா? காரணம், காங்கிரசின் கொள்கையே இவைகளை ஆதரிப்பதுதானே. இந்திரா வந்தாலும் ஏதாவது செய்ய முடியுமா? அவரும் பார்ப்பனர்தானே. தி.மு.கவைத் தவிர வேறு யார் ஆண்டாலும் நாடே நாசமாகி விடும். இன்று தமிழ்நாட்டில் பார்ப்பான் எங்கேயும் இல்லையே. பார்ப்பனத் தலைவர்கள் எல்லாம், ராஜாஜி முதற்கொண்டு மறைந்துவிட்டனரே.
தோழர்களே, தமிழ்நாட்டிலே இருக்கிற 4 கோடி மக்கள் எதிலே குறைந்தவர்கள்? எந்த நாட்டுக்கு இளைத்தவர்கள்? வளம் இருந்தும்-செழிப்பு இருந்தும் இந்த நாடு அடிமை நாடாக இருப்பதா? நமது நாடு தனி சுதந்திர நாடாக இருக்க வேண்டும். சுதந்திரம் கேட்டால் ஏழு ஆண்டு ஜெயில் என்கிறான். இதற்குப் பெயர்தான் சுதந்திரமாம்.
தோழர்களே! கடவுளை உண்டாக்கியவன் என்ன சொன்னான்? கண்ணுக்குத் தெரியாது! கைக்குச் சிக்காது! புத்திக்கு எட்டாது என்கிறான். தமிழ் மகான்களே இதைத்தான் சொன்னார்கள். அறிந்து கொள்ள முடியாதவன்; ஒரு அணு அளவுகூடத் தெரிந்து கொள்ள முடியாதவன் என்று சொல்கிறான். நமது மடையர்களைத் தவிர, கடவுளுக்குப் பெண்டாட் டியும் வைப்பாட்டியும் குழந்தையும் இருக்கிறது என்று எவன் சொன்னான்? கருணையே வடிவான கடவுள் என்று சொல்லிக்கொண்டு, கொலைகாரனுக்கு வேண்டிய ஆயுதங்கள் எல்லாம் கடவுளுக்குக் கொடுத்திருக்கிறான். அன்பே உருவானவன் என்கிறான், ராட்சதர் களையும் மற்றவர்களையும் கொன்று கசாப்புக் கடை வேலை செய்கிறான். எந்தக் கடவுள் கொலை செய்யா தவன்? தேவர்களைக் காப்பாற்ற கடவுள் வந்தான் என்கின்றான். தேவர்கள் எல்லாம் பார்ப்பனர்கள் தானே. நாம் எல்லாம் அசுரர்கள். நம்மை அழிக்க, பார்ப்பானைக் காக்க கடவுள் வந்தான். கடவுள் உண்டாகிய காலத்தில் மனிதன் நாகரிகம் அடையவில்லை.
தோழர்களே! இன்றைய தினம் நாம் எல்லாம் யார்? சூத்திரர்கள்தானே! சூத்திரன் என்றால் பார்ப்பானின் தாசிமகன் என்று சட்டம் சொல்கிறது; சாஸ்திரம் சொல்கிறது. ஒரு நாட்டிலே பெரும்பாலான மக்கள் ஏன் இழிமக்களாக இருக்க வேண்டும்? இன்று நம்மை மற்றவன் சூத்திரன் என்று சொல்லமாட்டான்; சொல்ல முடியாது. ஆனால், நம்மை நாமே சூத்திரன் என்று ஒத்துக் கொள்கிறோம். நாம் சொல்கின்ற ஜாதிகள் எல்லாம் ஏது சாஸ்திரத்திலே? சட்டத்திலே? வைசியன் ஷத்திரியன்கூட கோர்ட்டிலே போய்விட்டது. பிராமணன், சூத்திரன்தான் இருந்து கொண்டு வருகிறது. மற்றவர்கள் எல்லாம் பேசிக் கொள்ளலாம். ஆனால், இந்தியாவிலே நாம் எல்லாம் சூத்திரர்கள் என்றுதானே இருக்கிறது.
இந்தியாவிலே உள்ள அத்தனைப் பேரும் இந்துக்கள். இந்துக்கள் என்றால் சூத்திரன், பிராமணன், நான் சொல்கிறேன், இந்த உலகம் உள்ளவரை நீங்கள் தாசி மக்கள்தான். இந்தியா என்றால் இந்து, இந்து என்றால் சூத்திரன்; சூத்திரன் என்றால் தாசி மகன். இது என்றைக்கு ஒழிவது? நாம் எல்லாம் இந்துக்கள் அல்லவென்று கெசட்டில் வெளியிட்டுவிட வேண்டும். நம் இழிவை ஒழிக்க வேண்டாமா? பணக்காரனாகிவிட்டால் போதுமா? மந்திரியாகி விட்டால் போதுமா? உத்தியோகம் வாங்கிவிட்டால் போதுமா?
இதையும் தவிர, நம்மை நாமே தீண்டத்தகாதவர்களாக ஆக்கிக்கொண்டிருக் கிறோம். கோயிலுக்குப் போகும் நீ, கர்ப்பக்கிரகம் வரை போகிறாயா? காரணம், சாமி தீட்டாகப் போய்விடும் என்று கூறுகிறாய். அப்படியானால், நீ தீண்டப்படாதவன் என்று ஒத்துக் கொள்கிறாயே! நம்மை நாமேதானே இழிவுப்படுத்திக் கொள்கிறோம். மற்றவன் இழிவைச் சொல்லவிடாமல் நாம் தடுத்துவிட்டோம். இனி, நமது இழிவை ஒழிக்க நாம்தான் மாறியாகவேண்டும். ஒவ்வொருவரும் சாம்பல் அடிக்கமாட்டேன், நாமம் போடமாட்டேன் என்று முன்வரவேண்டும். கோயிலுக்குப் போகிறவனைப் பார்த்துக் காரித் துப்பவேண்டும். சுதந்திரம் வந்து 26 ஆண்டுகள் ஆகியும், சூத்திரனாக இருக்கலாமா? நாம் வீணாய்ப் பதவிபெற போட்டி போட்டுக்கொண்டு இருக்கிறோமே தவிர, சமுதாய இழிவை ஒழிக்க வேண்டாமா?
கம்யூனிஸ்ட் எவனாவது ஜாதிபற்றிக் கூறுகிறானா? கடவுள்பற்றிப் பேசுகிறானா? உனது இழிவை ஒழிக்க இந்தக் கம்யூனிஸ்ட் செய்த காரியம் என்ன? நாளைக்கே காங்கிரஸ், காமராஜர், சுப்பிரமணியம் வந்து என்ன செய்வார்கள்? சூத்திரன் இல்லை என்பார்களா? சூத்திரனே கிடையாது என்று சட்டம் போடுவார்களா? பதவிக்கு வருவார்கள்; வாழ்க்கையை வசதியாக்கிக் கொள்வார்கள். 1952லே காங்கிரசுக்காரன் 2000 பள்ளிக்கூடத்தை மூடினானே! 1938 லும் பள்ளிக்கூடத்தை மூடினானே?
ஆகவே, தோழர்களே! கடவுள், மதம், சாஸ்திரம், சம்பிரதாயம், ஜாதி எல்லாம் காட்டுமிராண்டிக்கால அமைப்பு. இது தொடர்ந்து காப்பாற்றப்பட்டு வருகிறது. இது என்றைக்கு மாறுவது? எனவே, நான் இனி இந்து என்று சொல்லிக்கொள்வதில்லை; சாம்பல் அடிப்பதில்லை, கோயிலுக்குப் போவதில்லை என்று உறுதி எடுத்துக் கொள்ள வேண்டும். இந்த இழிவுக்குக் காரணம் நாம்தான். நாமே இழிவிலிருந்து நீங்க வேண்டும்; நாடு சுதந்திரம் பெறவேண்டும்; சிலபேர் ஜெயிலுக்குப் போவோமே- சில பேர்தான் சாவோமே, இந்த நாட்டிலேதானே இவ்வளவு பேதமும் இருக்கிறது. என்றைக்கு நாம் மனிதனாவது? என்று எடுத்துரைத்தார்கள். மேலும், நமது கடவுள் ஆபாசங்களையும், இன்றைய தனித் தமிழர் ஆட்சியைக் காக்கவேண்டிய அவசியத்தையும் எடுத்துரைத்தார்கள். இறுதிவரை கூட்டம் கலையாது தந்தை பெரியார் அவர்களது உரையைக் கேட்டது குறிப்பிடத்தக்கது.
மிரட்டலா? உண்மையா? தமிழக முதலமைச்சர் கலைஞர் அவர்களுடைய தஞ்சைப் பேச்சுபற்றி, வேண்டுமென்றே ஒரு விவகாரம் ஏற்படுத்த வேண்டும் என்று நம்நாட்டுக் காகிதப் புலிகளான சில ஏடுகள், இந்த சீசனுக்கு ஒரு சரக்கும் இல்லையே என்று ஏங்கித் தவித்த காமரேட் கல்யாணசுந்தரம் அவர்களும், பிரிவினை வாடை, குரல் அதில் கேட்கிறது என்றெல்லாம் ஏதேதோ கூறுகின்றனர்!
காங்கிரஸ் ஏடான நவசக்தி ஏடு பெரியாரைக் காட்டி டில்லியை மிரட்டுகிறார் கருணாநிதி என்று தலைப்பிட்டு, பச்சை வியாக்யானப்படுத்தியதுபற்றி நேற்று எழுதியிருந்தோம். இன்று வந்த இந்தியன் எக்ஸ்பிரஸ் ஏட்டில், திரு கல்யாண சுந்தரத்தின் கருத்து என்ற பேரால் ஒரு செய்திக் குறிப்பு வெளியாகியுள்ளது.
முதல்வர் பேச்சில் பிரிவினைக் குரல் கேட்பதால், நாட்டின் ஒருமைப்பாட்டிலும், அய்க்கியத்திலும் நம்பிக்கை உடைய அரசியல் கட்சிகள் ஒன்று திரள வேண்டும் என்றும், ஏகாதிபத்தியவாதிகளுக்கு இந்த நாட்டைச் சுரண்ட இது வாய்ப்பளித்துவிடும் என்றும், ஜனநாயக சக்திகளைப் பிளவுபடுத்தவே இம்முயற்சி என்றும் ஏதேதோ பாஷ்யங்கள் கூறியிருக்கிறார்!
பிரிவினை என்றால் ஏன் பூச்சாண்டிபோல பயப்படவேண்டும் என்பதுதான் நமது கேள்வி. ஏகாதிபத்தியத்தின் இரும்புப் பிடியிலிருந்து சுதந்திரம் பெறத்தானே நாம் பிரிவினை கோருகிறோம்? வடநாட்டுப் பார்ப்பன ஏகாதிபத்தியம் இந்தியத் துணைக் கண்டத்தைப் பிடித்து உலுக்கிக்கொண்டிருக்கிறது! அதற்கு ஒரு முற்றுப் புள்ளி வைக்கத்தான் திராவிடர் கழகமும், அதன் தலைவர் தந்தை பெரியார் அவர்களும் பிரிவினை வேண்டும் என்று கேட்கிறார்கள். கம்யூனிஸ்டுக் கட்சி பாகிஸ்தான் பிரிவினையின்போது அதை ஆதரித்ததே, அப்போது அய்க்கியம் எங்கே போயிற்று?
சர்வ தேசியம் என்பதுதானே கம்யூனிசத்தின் அடிப்படை. அப்படி இருக்கையில் தேசியம் பேசுவதே குறுகிய மனப்பான்மை அல்லவா? பிரிவினை மனப்பான்மை அல்லவா? உலகப் பாட்டாளிகளே ஒன்று சேருங்கள் என்று கோருகின்றனரே தவிர, அதற்காக அந்தந்த நாட்டின் எல்லைக் கோடுகளை அழித்துவிடுகின்றனரா? சீனத்துக்கும் ரஷ்யாவுக்கும் இடையே ஏன் கம்யூனிசத்தைப் பரப்புவதில் கருத்து வேறுபாடு இருக்கிறது? சீனர்களும் ரஷ்யர்களும் ஒருவரை ஒருவர் திரிபுவாதிகள் என்று ஏன் சொல்லிக் கொள்ள வேண்டும்?
தி.மு.க வைப் பொறுத்தவரை அவர்கள் பிரிவினை கோரவில்லை; அதிக அதிகாரங்கள் தரக்கூடிய மாநில சுய ஆட்சிதான் என்று எத்தனையோ மேடைகளில், (தஞ்சையில் முதல்வர் கலந்து கொண்டு பேசிய அந்த மேடை உட்பட) கூறிவிட்டார்கள்! என்றாலும், மீண்டும் மீண்டும் இப்படி ஒரு விஷமத்தைத் தி.மு.க. மீது தூற்றி விடுவதன் விளைவு என்னவாகும் தெரியுமா? கேட்டால்தான் என்ன என்று, அவர்களே ஒரு காலத்தில் சொல்லும்படியான வலுக்கட்டாயத்திற்கே கொண்டுபோய் விடக்கூடும். அப்படிப் பார்த்தால் அதிக அதிகாரம் வேண்டும் என்று கேட்கிற நம்பூதிரிபாட், அச்சுதமேனன்கள் எல்லாம் பிரிவினைவாதிகள்தான்! மாமியார் உடைத்தால் மண்குடம் மருமகள் உடைத்தால் அதுவே பொன்குடம் என்றாகிவிடுமா? தூங்குகிறவர் களைத்தான் எழுப்ப இயலும்; தூங்குவது மாதிரிப் பாசாங்கு செய்பவர்களை ஒருக்காலும் எழுப்பவே முடியாது! தி.மு.க. ஆளுங்கட்சி என்பதால்தானே இவ்வளவு மிரட்டுகின்றனர்! பதவிதான் அதற்குச் சமமா? அதன் வரலாறு, பதவிக்காகப் பிறந்த கட்சி என்று அதனை ஒரு போதும் காட்டாதே! யாரைப் பிடித்தாவது பதவிப் பிச்சை வாங்குவது; பிறகு ஜம்பம்பேசி, வரம் கொடுத்தவன் தலையிலேயே கையை வைப்பது என்ற வாடிக்கைதான் கல்யாண சுந்தரங்களுக்கு என்பது நாடறிந்த உண்மையாயிற்றே!
தி.மு.க. வுக்கு நாங்கள் வக்காலத்து வாங்கவேண்டிய அவசியமில்லை. தன்னைக் காப்பாற்றிக் கொள்வது எப்படி என்பது அதற்கு நன்றாகத் தெரியும்! அரசியல் வேட்டைக்காரர்களின் விஷமத்தின் விரிவு எவ்வளவு என்பதைச் சுட்டிக்காட்டவே இதனைக் குறிப்பிடு கின்றோம்.
கல்யாண சுந்தரங்களில், லட்சிய பூமியாகிய சோவியத் ரஷ்யாவின் அரசியல் சட்டத்தை அவர் மறுமுறை ஒருதரம் படிப்பது நல்லது. அதன் அரசியல் சட்டத்தின் 17-ஆவது விதி,
“The rightfreely to secede from the U.S.S.R. is reserved to every Union Republic” என்று இருக்கிறதா இல்லையா என்று பார்க்கட்டும்.
யூனியனிலிருந்து சுதந்திரமாகப் பிரிந்து செல்லும் உரிமை அதன் உறுப்புகளாகியுள்ள கூட்டாட்சிக் குடியரசுகளுக்கு உண்டு. இதுமாதிரி இந்திய அரசியல் சட்டத்தில் ஒரு வரி உண்டா?
“Each Union Republic has the right to enter into direct relations with foreign states and to conclude agreements and exchange diplomatic and consular representatives with them”
ஒவ்வொரு குடியரசும் வெளிநாடுகளுடன் நேரிடையாக உடன்படிக்கைகள் ஏற்படுத்திக்கொள்ளவும், ஸ்தானிகர்களையும் தூதுவர்களையும் வைத்துக்கொள்ளவும் உரிமை படைத்தவைகள் (Airticle 18a) என்று குறிப்பிடப்படுகிறது!
இது எவ்வளவு உரிமையின் அதிகபட்சம் பார்த்தீர்களா? பிரிந்து செல்லவேண்டும் என்று விரும்பினால் தடை இல்லை என்பதுதானே இதன் பொருள்? இங்கே அப்படி ஒன்றைக்கூட மாநில சுயாட்சி கோருவோர் கேட்கவில்லையே!
இந்துமதத்தில் எப்படி, கல்லானாலும் கணவன்; புல்லானாலும் புருஷன், கணவனே கண்கண்ட தெய்வம், அதுதான் பதிவிரதா லட்சணம் என்பது போல, டில்லியுடன் நாம் கட்டாயக் கல்யாணத்தில் அல்லவா ஈடுபட்டு இருக்க வேண்டியிருக்கிறது? இது கம்யூனிஸ்ட் கல்யாண சுந்தரங்களுக்குப் புரியவில்லையா? புரிந்தாலும் லாபமில்லை என்ற நினைப்பா?
பிரிவினை கோருவது ஆபத்து – தேச ஒருமைப்பாட்டுக்கு ஆபத்து என்றால், ரஷ்ய அரசியல் சட்டத்தின் 17, 18 A விதிகளை முதலில் திருத்தச் சொல்லிவிட்டு அல்லவா பிறகு இதோபதேசம் செய்ய வரவேண்டும் அரை வேக்காட்டு அரசியல்வாதிகளாகக் காட்சி அளிக்கும் காம்ரேடுகள். பூச்சாண்டி காட்ட வேண்டாம்! கடவுள், பேய், பூதம், பிசாசு இவைகளை நம்பாதவர்களிடம் இந்தப் பூச்சாண்டி பலிக்காது! பலிக்கவே பலிக்காது!!
நினைவுகள் நீளும்…