பெரியாரைப் பாடிய சிங்கைப் பெரியார்

அக்டோபர் 16-31

பெரியார் ஈ.வெ.இராமசாமி அவர்களின் 72-_ஆவது பிறந்த நாளை ஒட்டிச் செய்யாற்றன் பிறந்த நாள் என்னும் தலைப்பில் உள்ள வாழ்த்துப் பாடலின் இறுதிப் பாடலாக, இரதபந்தம் என்னும் சித்திரகவி இயற்றிய வித்தகர் புலவர் சின்னப்பனார். இவர் சிங்கைத் தமிழ்ப் பெரியார் எனப் போற்றப்பட்டவர். இவரைப் பற்றிய குறிப்பும் மலேசியத் தமிழ்க் கவிதைக் களஞ்சிய நூலில் இடம் பெற்றுள்ளது. (பக்.813). மேலும் இவர் பாடிய இரதபந்தம் படத்துடன் (பக்.515) இந்நூலில் இடம் பெற்றுள்ளது. இக்கவிதை 09.10.1949இல் பாடப் பெற்றதாக அடிக்குறிப்புக் கூறுகிறது.

 

இவர் 1948ஆம் ஆண்டில் உமறுப்புலவர் தமிழ்ப்பள்ளி வாழ்க என்னும் தலைப்பில் சிங்கப்பூரில் கடையநல்லூர் மக்கள் எழுப்பிய உமறுப்புலவர் தமிழ்ப் பள்ளியை வாழ்த்திப் பாடிய பாடல் ஒன்றும் இந்நூலில் (பாடல் எண் 90, பக்.313_314) இடம் பெற்றுள்ளது. எனவே சின்னப்பனார் 1950களில் வாழ்ந்தவர் என உணரலாம்.

 

தொகுப்பு நூல் (களஞ்சியம்) தரும் சின்னப்பனார் பற்றிய குறிப்பு வருமாறு:

சிங்கையில் வாழ்ந்து மறைந்த தமிழ்ப்பெரும் புலவர். தமிழ் இலக்கிய இலக்கண நூல்கள் பலவற்றை மனப்பாடம் செய்து, தம் கூரிய மூளையில் பதிய வைத்திருந்த அறிஞர்; திராவிட இயக்கத்தோடு நெருங்கிய தொடர்பும் அதன் பணிகளில் ஈடுபாடும் கொண்டிருந்தார். தமிழ்வேள் கோ.சாரங்கபாணி அவர்களிடம் பெருமதிப்பு வைத்து அவர்தம் பணிகளுக்குப் பேராதரவு நல்கி வந்தார். நல்ல பேச்சாளர் சிங்கைத் தமிழ்ப் பெரியார் எனப் போற்றப்பட்டார். தனிப் பாடல்களும் சில பிரபந்தங்களும் பாடியிருப்பதோடு சித்திரகவிகளும் தீட்டியுள்ளார். (பக்.813).

இவர் சி.ந.சதாசிவப் பண்டிதரைப் பின்பற்றி இரதபந்தம் ஒன்று பாடியுள்ளார். பண்டிதர் முருகனைப் பற்றிப் பாடியிருக்கச் சின்னப்பனாரோ தந்தை பெரியாரைப் பற்றிப் பாடியுள்ளார். இங்குள்ள பாடுபொருள் வேறுபாடு காலத்தின் கோலத்தைக் காட்டுவது ஆகும். சிங்கப்பூர்த் தமிழ் இலக்கியத்தில் இவர் காலக்கட்டத்தில் திராவிட இயக்கத்தின் தாக்கமும் சாயலும் படிந்துள்ள பாங்கினை இந்த இரதபந்தமும் புலப்படுத்துகிறது.

வேதியமா கேடொழிய வேதனையா வாழ்தமிழர் விழுமிதாக
மூதமிழக் குலசான்றோ ராயிரரும் முயன்றும் நொந்துழன்று
ஈதுயரா வேலறியா ஈனரானோர் – இழிவேக ஈரோட்டார்

மாதயவா லோயாபணி புரிபெரியார் இராமசாமி வாழியவே!

என்னும் பாடல்தான் இரதபந்தமாக _ தேர்வடிவச் சித்திரத்தில் இடம் பெற்றுள்ளது. ஆரிய வழக்கு அழியவும், துன்பத்தால் துயருறும் தமிழர் சிறக்கவும், உயர்ந்த தமிழ்ச் சான்றோர் ஆயிரவரும் உழைத்து வருந்தினாலும் உயர்வெய்தாது தாழ்ந்திடும் நிலை தொலையவும், ஓயாது தொண்டாற்றும் ஈரோட்டுப் பெரியார் இராமசாமி வாழ்க என்று வாழ்த்துகிறது இந்தப் பாடல்.

இரத வடிவத்தில் இந்தப் பாடல் கீழிருந்து வலமிடம், வலமிடமாகத் தொடர்ந்து மேல்நோக்கிச் சென்று உச்சியிலிருந்து நேர் செங்குத்தாய்க் கீழே வரும்படி படிப்பதற்கேற்ற வகையில் 85 கட்டங்களில் எழுத்துகள் தரப் பெற்றுள்ளன. நேர் செங்குத்தான கட்டங்கள் 13இலும் பெரியார் இராமசாமி வாழியவே என்னும் தொடர் தெளிவாகப் படிக்கும்படி உள்ளது. தேர்க்கொடியில் சசாசி, சிங்கை என்று இரண்டு வரிகளில் இருக்கக் காணலாம் சசாசி என்பது ச.சா.சின்னப்பனார் என்பதைக் குறிக்கும். தேரின் வல, இடப்புறங்களில் அழகுக்காகத் தொங்கும் குஞ்சங்களில் தமிழ், தமிழ்நாடு என்னும் தொடர்கள் உள்ளன. தேர்த்தட்டில் தமிழர் என்னும் சொல் உள்ளது. தமிழ், தமிழர், தமிழ்நாடு என்பனவற்றின் முன்னேற்றமே பெரியார் கொள்கை என்பதைக் காட்ட இவை அமைந்திருக்கலாம். எட்டு ஆரங்களைக் கொண்ட இரண்டு சக்கரங்கள் தேருக்குத் தரப்பட்டுள்ளன. இந்த ஆரங்களின் வாயிலாக இடப்புறச் சக்கரத்தில் கலைகளில் ஒன்று என்னும் தொடரும் வலப்புறச் சக்கரத்தில் கவிச் சித்திரம் என்னும் தொடரும் உள்ளன. கவிச்சித்திரம் கலைகளில் ஒன்று என்று இந்த இரண்டு தொடர்களையும் இணைத்து ஒரு வாக்கியமாகவும் கொள்ளலாம் அல்லது இவற்றைப் பிரித்துக் கவிச்சித்திரம் என்று ஒரு தொடராகவும் கலைகளில் ஒன்று (ஈடுபடுக) என்று ஒரு தொடராகவும் (தனித் தனியாகவும்) கொள்ளலாம்.

பண்டிதரின் இரதபந்தம் முருகனைப் பாடும் ஆத்திகப் பண்புடையது; சின்னப்பனாரின் இரதபந்தம் பெரியாரை வாழ்த்தும் நாத்திகப் பண்புடையது. பண்டிதர் பந்தம் பக்தி நலம் மிக்கது. சின்னப்பனார் பந்தம், தமிழ், தமிழர், தமிழ்நாடு, கலை சீர்திருத்தம் பற்றியது. பண்டிதர் பாட்டு வெண்பா யாப்பில் அமைந்துள்ளது. சின்னப்பனார் பாடல் ஆசிரிய விருத்தத்தில் உள்ளது. ஐஞ்சீர் விருத்தமாக உள்ளது. பண்டிதரின் ரத பந்தத்தில் செங்குத்தான கட்டவரிசையில் வெண்பாவின் ஈற்றடியாகிய சிங்கார வேலவனூர் தேர் என்பது இருக்கச் சின்னப்பனாரின் பந்தத்தில் பாடலின் ஈற்றுப் பகுதியாகிய பெரியார் இராமசாமி வாழியவே என்பது உள்ளது. பண்டிதர் அமைத்த தேரின் கொடி, குஞ்சங்கள் ஆகியவற்றில் எழுத்துகளோ சொற்களோ இல்லை. தேர்த்தட்டில் பாட்டின் பகுதியாகிய எழுத்து உள்ளது. சக்கரங்களிலும் ஆரங்கள் இல்லை. பாட்டின் பகுதியாகிய இரண்டு எழுத்துகள் இடம்பெற்றுள்ளன.

சின்னப்பனார் பற்றிய பாடம் ஒன்று சிங்கப்பூர் கல்வி அமைச்சின் பாடத்திட்ட வரைவுப் பிரிவினால் உருவாக்கப்பட்ட உயர்நிலைப் பாடப் புத்தகம் ஒன்றில் (உயர்நிலை வகுப்பு 3, வழக்கம், தொழில்நுட்பம் பாடம் 2) இடம் பெற்றுள்ளது. சின்னப்பனார் தமிழ்ப் பள்ளிகளின் மேற்பார்வையாளராக இருந்து, தமிழ்க் கல்விக்குத் தொண்டாற்றினார் என்றும் தமிழ்ப் பள்ளிகளுக்கு வள்ளுவர், வாசுகி, பாரதிதாசன், ஈ.வெ.ரா., நாகம்மையார், நீலாம்பிகை எனத் தமிழ்ச் சான்றோர்களின் பெயரிடக் காரணமாக இருந்தவர் என்றும், எப்போதும் வெள்ளாடை அணிந்திருப்பவர் என்றும் இப்பாடம் வாயிலாக அறிய முடிகின்றது. இவரது படமும் இப்பாடத்தில் இடம் பெற்றுள்ளது.

பெரியாரின் 72-_ஆம் ஆண்டுப் பிறந்த நாளை ஒட்டிச் சின்னப்பனார் செய்யாற்றன் பிறந்த நாள் என்னும் தலைப்பில் பாடிய வாழ்த்துப் பாக்களைக் கீழே காண்க:

செய்யாற்றன் பிறந்த நாள்

தண்ணெடுந் திராவிடத் தனிப்பெருந் தலைவனாம்
வெண்ணெடுந் தாடியன் வேங்கட்ட ராமனின்
எண்ணெடும் எழுபதும் இரண்டாண்டு பாடவே
பண்ணெடுந் தாய்மொழி பழந்தமிழ் போற்றுதும்!  (1)

பொன்மலை மீதொளிர் புரட்சிநல் விளக்கினன்;
தன்மதிப் பியக்கியே தமிழரை எழுப்பினன்;
நன்மதிக் கவிஞரை நாடெழப் பெருக்கினன்;
பொன்மொழி பிறந்தநாள் புனிதநாள் வாழ்கவே!  (2)
(தன்மதிப்பு – சுயமரியாதை)

கொட்டினன் முரசொலி கொண்டல்மின் னிடிப்பபோல்!
தட்டியே எழுப்பினன் தமிழரும் விழித்தனர்!
மட்டிலாக் கலைஞரும் மாணவர் குழுமினர்!
வெற்றியோன் பிறந்தநாள் விழாநாள் வாழ்கவே!  (3)

ஆண்டுபல் லாயிரம் ஆரியக் கொடுமையின்
தீண்டாமை நோயினால் செத்தவ ராயினோம்;
மீண்டுயிர் அடையவே வேண்டினன் மக்களை
ஈண்டவன் பிறந்தநாள் இனிதுகொண் டாடுவோம்!  (4)

ஆரியக் கொடுமையை ஆயிரங் காலமாய்
நேரிலே எதிர்த்துமுன் வெற்றியும் கண்டிலாப்
போரிலே ஒருவனாய்ப் பொருதுமே வென்றவன்!
சீரியன் பிறந்தநாள் சீர்பெற வாழ்கவே!   (5)

வேட்டுவப் பார்ப்பனர் விளைத்திடும் தீங்கினால்
நாட்டவர் நலிந்தனர் நடைப்பிண மாய்; இனக்
கேட்டதை ஒழிக்கவே கிளர்ந்தெழும் புரட்சியில்
தாட்டிகன் பிறந்தநாள் தமிழர்நாள் வாழ்கவே!
(வேட்டுவப் பார்ப்பனர்-வேள்வி-யாகம்-செய்யும் பிராமணர்)
அயோத்தி ராமனின் அவகதை அழிப்பவன்!
பொய்யேற்றும் பார்ப்பனப் புரோகிதம் ஒழிப்பவன்!
மெய்யேற்றும் தமிழவர் மேன்மையை விழைபவன்!
செய்யாற்றன் பிறந்தநாள் திருநாளும் வாழ்கவே!   (7)

அன்பர்தம் பணிக்கரும் ஆளாக ஆசையள்;
இன்பரும் தமிழன்பர் ஏற்குநேர் பணிநலாள்;
அன்பினாள் மணியமாள் அறிவியற் காதலின்
பண்பினோன் பிறந்தநாள் பாடரும் பெருநாளே!   (8)

கண்மணி போன் மணி நாடதைக் காண்பவள்;
பெண் மணி அம்மளை பெரும்பொதுப் பணியாளை
அண்மையிற் புரட்சியின் அறிவிலே வளர்மணத்
திண்மனோன் பிறந்தநாள் திருநாளும் வாழ்கவே!    (9)

பாழும்பொய் மதத்தினால் பாழ்படும் மக்களைச்
சூழுமாக் கேடுகள் துலக்கிய ராமனின்
ஏழுபத் திரண்டொடு இனியபல் ஆண்டுகள்
வாழுக பல்லாண்டு வாழ்த்துமின்! வாழ்த்துமின்!    (10)
– ச.சா.சின்னப்பனார்   9.10.1949-1980, திருவள்ளுவர் ஆண்டு

இந்த 10 பாடல்களில் முதல் ஏழு பாடல்களும் பத்தாம் பாடலும் ஆகிய எட்டுப் பாடல்கள் பெரியாரைப் பற்றியும் எட்டாம் ஒன்பதாம் பாடல்கள் இரண்டும் மணியம்மையாரைப் பற்றியும் பேசுகின்றன.

பெரியார், திராவிடக் கழகத் தனிப் பெரும் தலைவர், சுயமரியாதை இயக்கத்தைத் தோற்றுவித்தவர், வெண்தாடி வேந்தர், புரட்சிக் கருத்தால், தூங்கிக் கிடந்த தமிழ் மக்களைத் தட்டி எழுப்பியவர், அவர் இயக்கத்தால் கவிஞர்கள் பெருகினர். கலைஞர், மாணவர் பலர் கூடினர், பெரியார் ஆரியர் (பார்ப்பனர்) கொடுமையால் பல ஆண்டுகள் தீண்டாமை நோயில் சிக்கித் தவித்தவர்களை மீட்டெடுக்கத் தனி ஒருவராய் நின்று போராடி வெற்றிகண்டவர். இராமாயணத்தைப் பொய்க் கதை ஆக்கியவர் புரோகிதப் புரட்டினை ஒழித்தவர்; எப்போதும் தமிழர் நலத்தையே நாடுபவர் மதமெனும் பேய் பிடித்தலையும் மக்களைப் பகுத்தறிவின்வழி விளக்கம் காணச் செய்தவர். இவை சின்னப்பனார் பெரியாரைப் போற்றும் புகழ்மொழிகள். மணியம்மையார் அன்பிற் சிறந்தவர் தமிழர் இடும் பணிகளை நிறைவேற்றக் காத்திருப்பவர். கண்மணிபோல் மணி நாடு அழகிய நாட்டுநலம் -_ பேணிக் காக்கும் கருத்தினர். பொதுப்பணி செய்யும் விருப்பம் கொண்டவர் எனக்கூறி இத்தகைய-வரைப் புரட்சித் திருமணம் செய்து கொண்ட பெரியார் என மணியம்மையாரைப் புகழ்கிறார் சின்னப்பனார்.

பொன்மொழி பிறந்தநாள் புனிதநாள் வாழ்கவே     (2)
வெற்றியோன் பிறந்தநாள் விழாநாள் வாழ்கவே!    (3)
ஈண்டவன் பிறந்தநாள் இனிதுகொண்டாடுவோம்!  (4)

சீரியன் பிறந்தநாள் சீர்பெற வாழ்கவே!                            (5)

தாட்டிகன் பிறந்தநாள் தமிழர்நாள் வாழ்கவே!        (6)
செய்யாற்றன் பிறந்தநாள் திருநாளும் வாழ்கவே!  (7)
பண்பினோன் பிறந்தநாள் பாடரும் பெருநாளே!    (8)
திண்மனோன் பிறந்தநாள் திருநாளும் வாழ்கவே!   (9)

எனப் பெரியாரின் பிறந்த நாள் பெருமையை_புனித நாள், விழா நாள், தமிழர் நாள், திருநாள், பெருநாள் எனக் கூறிச் சீர்பெற ஈண்டுக் கொண்டாடுவோம் என்று பாடுகிறார் சின்னப்பனார்.

முதல் பாட்டில் பண்ணெடுந் தாய்மொழி பழந்தமிழ் போற்றுதும்!(1) அவர் தமிழைப் போற்றித் தொடங்குவதால் அவரின் தமிழ்ப்பற்று புலப்படுகிறது.

ராமனின், ஏழுபத் தரண்டொடு இனியபல் ஆண்டுகள்
வாழுக பல்லாண்டு வாழ்த்துமின்! வாழ்த்துமின்!    (10)

என இறுதிப் பாடல் பெரியாருக்குப் பல்லாண்டு பாடி வாழ்த்துகிறார்.

கொட்டினன் முரசொலி கொண்டல்மின் இடிப்பபோல்! என்னும் அடியில் உவமையும், பொன்மலை மீதொளிர் புரட்சி நல் விளக்கினன் என்னும் அடியில் உருவகமும் அணிகளாக வந்துள்ளன. பாடல்கள் நாற்சீர் விருத்த யாப்பில் அமைந்துள்ளன.

செய்யாற்றன் பிறந்த நாள் என்னும் தலைப்பில் வரும் செய்யாற்றன் என்னும் தொடர் செயற்கரிய செயல்களை ஆற்றிய செயல்வீரர் – செயலாற்றல் மிக்கவர் பெரியார் என்பதைக் குறிக்கிறது. செயற்கரிய செய்வார் பெரியார் என்பதைக் குறிக்கிறது. செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர் செயற்கரிய செய்கலா தார் என்பதுதானே திருவள்ளுவர் பெரியார்க்கு வகுத்த இலக்கணம்.

சித்திர கவியாலும் செந்தமிழ்ப் பாடல்-களாலும் தந்தை பெரியாரைச் சிறப்பித்துப் பாடிய சிங்கப்பூர்ப் பெரியார் சின்னப்பனார் புகழ் வாழ்க! சிகரம் நோக்கி பொன்விழாமலர்

நன்றி: சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் வெளியீட்டுக் கழகம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *